தேவதேவனுடனான உரையாடல்கள் ஒருவகையான பரிபாஷைகள். அவர் என்ன சொல்கிறார் என்று உண்மையிலேயே அவருக்குத் தெரியாது, அவர் கவிதைகளை அறிந்தவர்களுக்குப் புரியும்.
ஒருமுறை அவர் சொன்னார். “அசைவில்லாம இருக்கிறத அப்டியே பாத்துட்டே இருக்கலாம் ஜெயமோகன். ஒண்ணுமே ஆகாது. அப்டியே இருந்திடலாம்.சட்டுன்னு ஒரு சின்ன அசைவு. அப்டியே ஒரு அதிர்ச்சி வரும்ல, அதான் கவிதை”
”கவிதை ஒரு பெரிய பல்லின்னு சொல்றீங்க. அசைஞ்சாத்தான் எதையும் அதனாலே பாக்கமுடியும், இல்ல?”என்றேன் கேலியாக.
”அப்டியா சொன்னேன்?”என்று மேலும் குழப்பமாக கேட்டார். எதையாவது சொல்ல வரும்போது அவரிடமிருக்கும் அந்த திணறல் அச்சு அசலாக அப்படியே இளையராஜாவிடமும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
‘அசைவு’தான் கவிதையாகிறது என்று நான் நினைக்கிறேன். உள்ளே நிகழும் ஓர் அசைவு வெளியே இருக்கும் அனைத்துமடங்கிய பெரும்பரப்பை திரைச்சீலையென அலைப்பரப்பென நெளியச் செய்துவிடுகிறது. முற்றிலும் இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது. நாமறிந்த அனைத்தையும் நாமறியாதபடி மாற்றிக்காட்டுவதே கவிதை என்பது.
ஆனந்த்குமாரின் இக்கவிதைகளில் நாம் நன்கறிந்த ஒன்று என்னவாக உருமாறுகிறது என்று பார்க்கிறேன். சுழன்று வேகமிழந்து சரிந்து மையம்நோக்கிச் செல்வதே முதுமை. சட்டென்று கிளையிலிருந்து பறந்து எழுந்துவிடுதலா சாவு? விலகிச்செல்வதன் வழியாக மேலும் தெளிவடைவதா? அல்லது ஒரு பெயரென இங்கே எஞ்சி மிச்சமெல்லாம் அக்கரையில் திரண்டிருப்பதா?
அம்மா இப்போதெல்லாம்
அவளின் அம்மாவைப்போல்
ஆகிவிட்டாள்
தன் மகளின் உயரத்தினும்
சுருங்கிவிட்டாள்.
எதையும் கையில் எடுப்பதில்லை
தொட்டுத்தான் பார்க்கிறாள்.
நடப்பாள் ஆனால்
ஒரு பக்கம்
சரிந்த நடை
கோவிலைச் சுற்றும்போது
கோவிலைச் சுற்றவென்றே
சரித்த நடைபோல.
சுற்றி முடியப் போகும்
ஒரு நாணயத்தைப்போல
அவள் சுற்றுகிறாள்.
விட்டத்தை
குறைத்துக் குறைத்து
அவள்
நடுவிற்கு வருகிறாள்
கிளையினின்று மறைந்தவர்
அந்த ஊருக்கு
இந்த ஒருவழிதான் என்றார்
அழைத்துச் சென்றவர்.
அந்த வழி ஒரு
அடிமரம்போல் இருந்தது.
திரும்பி வரும்முன் அந்த வழியை
யாராவது அழித்துவிட்டால்
என்ன செய்வது
என பயந்தபடிதான் சென்றேன்.
ஊருக்குள் நுழைந்ததும்
அது கிளைகளாகப் பிரிந்தது.
சரியாக வழிபிடித்து
தெருமூலையில் இருந்த
வீட்டிற்கு சென்றோம்.
எங்களை வரச்சொன்னவரோ
அங்கு இல்லை.
அந்த ஒற்றை வழியிலும்
அவர் வந்திருக்கவில்லை.
அது ஒரு ஆச்சரியம்தான்.
இந்த நுனியில் இருந்து
அவர் பறந்திருக்க மட்டும்தான்
முடியும் இல்லையா.
அவளின் சாயல்
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
அப்படியே அல்ல
ஒரு பக்கம்.
ஒரு பக்கமல்ல
ஒரு பக்கத்தின் ஓரம்.
அதுவும் கொஞ்சம்
திரும்பி நின்றால்
கண்களைத்
தழைத்துக்கொண்டால்
புறக்கணித்தால்.
மாலை ஒளியில்
அல்ல
நிழல் விழும்பக்கம்
முகம்
முகத்தின் கோடுகள்கூட அல்ல
விழிகள் மீது
இமைகளில் வளைந்து
மேலேறிச் சுழலும் மயிர்களோ
அல்ல அதுவல்ல
நடையல்ல குரலல்ல
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
கொஞ்சம் விலகிச்சென்றால்
மிதக்கும் முகவரி
நீ இருந்த இடத்தில்
இப்போது உன்
முகவரி மட்டும் இருக்கிறது.
உன் பெயர்தான்
இந்த முகவரியை இன்னும்
இளமையாய் வைத்திருக்கிறது.
நம்மை ஏற்றிச்சென்ற
படகென
இந்த இரவின் ஒளியில்
அது மிதக்கிறது.
மிதந்து மிதந்து
தனியே வழிகண்டு
இப்போது
காத்திருக்கிறது அக்கரையில்.