புதியகாலம், ஒரு மதிப்புரை

ஜெயமோகன் தனது சமகால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நிறைகளையும், எல்லைகளையும் மதிப்பிடும் ஆகச்சிறந்த இலக்கிய அறிமுக நூல். அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசும் போக்கிலேயே இலக்கிய உத்திகள் (techniques / isms), உலகளாவிய இலக்கிய போக்குகள் (trends), இந்திய அளவில் ஏனைய மொழிகளில் பெரும் எழுத்தாளர்கள், தமிழின் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியோருடன் இவ்வெழுத்தாளர்கள் இணையும் புள்ளி, வேறுபடும் புள்ளி என எல்லாத் தளங்களிலும் ஜெமோவின் விமர்சனம் பயணிக்கிறது.
எஸ்.ரா மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோரின் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளில் தொடங்கி பரவலாக அறியப்பட்ட சு.வெங்கடேன், ஜோ டி குரூஸ், சாரு நிவேதிதா என நீண்டு, அந்தளவு கவனம் பெறாத எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் ஆகியோரின் படைப்புலகம், படைப்பூக்க பின்புலம் என மிக விரிவாகப் பேசுகின்றன ஒவ்வொரு கட்டுரையும்.
கடைசி அத்தியாயத்தில், நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெமோ தான் செயல்படாத கவிதைத் தளத்தை பற்றி, மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் பற்றி விரிவாக எழுதியிருப்பது சுவாரஸ்யமான ஒரு திருப்பம்.
சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தை படிப்பது ஒரு பேரனுபவம் என்றால், ஜெமோவின் காவல்கோட்டம் பற்றிய விமர்சனத்தை படிப்பது அலாதியான அனுபவம். நாவலின் முக்கிய உச்சங்களாக அமைந்த பகுதியை அவர் தொகுத்தும் விரித்தும் சொல்லிச் செல்வது, கடலறிந்த கடலோடியுடன் சிறுவன் முதன்முதலாக கப்பலில் பயணிப்பது போன்ற பிரமையை உண்டாக்க வல்லது.
உண்மையில் இந்நூல் தீவிர வாசிப்பைக் கோருவது. வாசிப்பதில் நன்கு பழக்கமுள்ள வாசகனுக்கும், ஒரே அமர்வில் ஒரு முழு கட்டுரையை சிதறாத கவனத்துடன் வாசிப்பது பெரும் சவால். ஏனெனில் உள்ளடக்கம் அத்தனை அடர்த்தியும் செறிவும் உடையது.
வழக்கம் போல் ஜெமோவின் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய மதிப்பீட்டில் அனாவசியமாக நுழைந்து துருத்தித் தெரிகின்றன. அதையும் தாண்டி இது ஒரு முக்கியமான நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மோ.மணிகண்டன்
முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்