ஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்

அன்புள்ள ஜெ,

வழக்கம்போல விருது செலவுகளுக்காக ரூபாய் 50 ஆயிரம் அனுப்பியுள்ளேன்;  விழா நடக்கவில்லை  என்றாலும் மற்ற செலவுகள் இருக்கும் என நினைக்கிறேன், அப்படி இல்லாவிட்டால் கோவிட் காலத்தில் நம் வாசகர் வட்டம் செய்த உதவிகளுக்கான செலவில் என் பங்காக இதை வரவு வைத்துக் கொள்வோம்.

இந்த வருட ஆரம்பத்தில் உங்களிடம் எழுதத் துவங்குகிறேன் என சொல்லியிருந்தேன். உங்கள் கதைகளுக்கு ரசனை குறிப்பு எழுதியது போக நினைத்த அளவுக்கு எழுத முடியவில்லை; குடும்பத்தில் எதிர்பாராத மரணம் அதன் விளைவாக என் தாயாரை தனியாக(தற்காலிகமாக) இந்தியாவில் இருக்க விட வேண்டிய கட்டாயம் என்று நெருக்கடியான நிலை, கோவிட் பற்றி எரிந்த மே மாதம் முழுவதும் கோவையில் தான் இருந்தேன், மருத்துவமனை, பிணவறை, இடுகாடு என டார்த்தீனியம் நாட்கள்,  எந்த இலக்கியத்தையும் விட வாழ்க்கை தீவிரமாக இருந்த நாட்கள். அந்த நாட்களில் தான் கதாநாயகி வந்துகொண்டிருந்தது வாசித்தாலும் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ண எண்ணக் குறைவது கதையை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன், எழுதத் துவங்க வேண்டும், இதை மீண்டு வருதல் என நினைக்கவில்லை வாழ்க்கையில் அப்படி ‘மீண்டு வருதல்’ ஏதும் இல்லை என்று தான் நினைக்கிறேன்,  வாழ்க்கையில்  வெற்றிகளும் மகிழ்ச்சியும் நிறையும் போது மீண்டு வருவதை பற்றி சிந்திக்கவில்லை என்றால் துயரத்தின் போது மீட்சியை பற்றி நினைக்கும் உரிமை இல்லை என்று எனக்கு சொல்லிக்கொள்கிறேன்.

வண்ணக்கடலில் பீமனும் துரியனுக்கும் இடையிலான அன்பு விஷமேறி பகையாக மாறும் தருணங்களை வாத்துக்கொண்டிருக்கிறேன்.

வெண்முரசை வாசிக்கும்போது திடுக்கிட வைக்கும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன,

‘கொதி’ சிறுகதை வாசிக்கும் போது “பசியை பசி உண்டு பிரபஞ்சம் பல்கி பெருகுகிறது” என்ற வாக்கியம் என்னுள் எழுந்தது அதை கடிதத்தில் எழுதினேன், அப்போது மழைப்பாடல் வசித்து முடிக்கவில்லை ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பிறகு  “ஒவ்வொரு அன்னமும் பிற அன்னத்தை உண்டு தன்னுள் வாழும் அனலுக்கு அவியாக்குவதற்கே முயல்கிறது.”  என பலாஹாஸ்வரின் சொற்களை கண்டபோது திகைத்துவிட்டேன்.

உங்கள் எழுத்துகளில் தோய்ந்த உள்ளங்கள் நீங்கள் சொல்லப் போவதை கூட கொஞ்சம் முன்னே அனுமானிக்க முடியுமா?

என் மனைவி பூதனை கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்,  பூதனை ஒரு அரக்கி, வில்லன் என்றெல்லாம் வழக்கமான கதை சொல்லல், என்னிடம் கேட்டபோது நான் கதையை மாற்றி பூதனை எப்படி தாய்மைக்கான ஏக்கத்தில் இருந்தாள் அந்த ஏக்கம் எப்படி அவளை அனைவரும் வெறுக்க கூடியவளாக மாற்றியது , குழந்தை கண்ணன் எப்படி அந்த ஏக்கத்தை தீர்த்து அவளுக்கு முக்தி வழங்கினார் என்றெல்லாம் சம்பவங்கள் சேர்த்து விரிவாக சொன்னேன், அப்படி சொல்லும் போது நீங்கள் இப்படி தான் இந்த கதையை விவரித்திருப்பீர்கள் என்று கற்பனை செய்தபடியே தான் சொன்னேன். குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு பரபரவென பூதனையை நீலத்தில் தேடினேன்,  நான் கிட்டத்தட்ட நீங்கள் எழுதியது போல தான் சொல்லியிருக்கிறேன். மறுபடியும் திகைத்து விட்டேன்.

அன்பும் வணக்கங்களும்

சங்கர் பிரதாப்

***

அன்புள்ள சங்கர்,

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விழாவை கோவையில் வழக்கம்போல நடத்தவே எண்ணியிருக்கிறோம். இன்றுவரை கூட்டம் சம்பந்தமான கட்டுப்பாடுகளில் மறு ஆணை வரவில்லை. வருமென எண்ணுகிறோம். அக்டோபரில் மூன்றாம் அலை வரும் என ஓர் எச்சரிக்கை இருந்தது. அதையும் பார்த்துவிட்டே ஆணையிடுவார்கள் என நினைக்கிறேன்.

என்னுடைய பல வாசகர்கள் நீங்கள் எழுதுவதைப்போல எழுதியிருக்கிறார்கள். நீங்கள் கவனித்திருக்கலாம். வெண்முரசு வெளிவந்துகொண்டிருந்தபோது பலசமயம் பல வாசகர்கள் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எப்படி இருக்குமென எழுதியிருக்கிறார்கள். நானே வாசகர்களை எழுதவிடலாமோ என கேலியாக எழுதியிருக்கிறேன். சில வாசகர்கள் வரப்போகும் அத்தியாயங்களை அப்படியே கனவு கண்டிருக்கிறார்கள்.சிலருடைய கனவுகளில் நான் எழுதாதவை வந்திருக்கின்றன. அவை நாவலில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு தேடி பிறகு அவை கனவே என அறிந்திருக்கிறார்கள்.

இது ஏன் என்பது எளிதில் சொல்லக்கூடியதுதான். வெண்முரசுக்கு ஒரு மையத்தரிசனம் உள்ளது. அதை நான் ‘உலகியலாக கனிந்த வேதாந்தம்’ என்று சொல்வேன். வேதாந்தத்தின் அடிப்படை மெய்மை அன்றாடத்தின் அத்தனை தளங்களிலும் எவ்வண்ணம் செயல்படுகிறது என்பதே வெண்முரசு காட்டுவது. அதை தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட வெண்முரசின் வாசகர்கள் இயல்பாக அந்த ஞானத்தை அதன் வாசிப்பினூடாக அறிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் கதைகளை அந்த தரிசனத்தின் அடிப்படையில் விரித்தெடுக்கிறார்கள்.

உண்மையில் வெண்முரசின் வாசகனும் வெண்முரசை புனைந்துகொண்டிருக்கிறான். சொற்களில் இருந்து ஓர் நிகர்மெய்யுலகைப் புனைந்துகொள்வதுதான் வாசிப்பு. வெண்முரசு மிகப்பெரிய நாவல். அதை வாசிப்பவர்களுக்கு அதை புனைவதில் பல்லாண்டுக்கால பயிற்சி அமைந்துவிடுகிறது. ஆகவே அவர்கள் நாவலுடன் ஓடிவருகிறார்கள். அவ்வப்போது கடந்து முன்னாலும் சென்றுவிடுகிறார்கள். நாவலின் வெற்றி அது.

அடிப்படைத் துயர்கள் நம்மைக் கடந்தவை. நாம் ஒன்றும் செய்யமுடியாதவை. ஆகவே அவற்றுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதும், அவற்றிலிருந்து முடிந்தவரை விரைவாக மீள்வதுமே நாம் செய்யக்கூடுவது. இங்கே நம்மைச்சூழ்ந்துள்ள வாழ்க்கை என்பது நமக்கு விடுக்கும் செய்தி இன்றே முதன்மையானது, வாழ்வென்பது ’இன்று’ மட்டும்தான் என்பதே. துன்பங்கள் உடனடியாக நேற்று என ஆகிவிடுகின்றன என்பதே நமக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. அவற்றை நம்மால் காலம் வழியாக கடந்துசெல்ல முடிகிறது.

இங்கிருக்கும் இந்நாட்கள் மிகக்குறுகியவை. சிறியவற்றுக்காகச் செலவிட எவருக்கும் பொழுதில்லை. துயருற்றிருக்க எவருக்கும் இயற்கையின் ஒப்புதலும் இல்லை. சற்றே கைநழுவ விட்டால் ஒரு நாள், ஒரு ஆண்டு ,ஒரு காலகட்டமே அப்படியே நம்மை கடந்துசென்றுவிடும். அந்த தன்னுணர்ச்சி இருந்தால் நாம் தொடர்ச்சியாக நம்மை விடுவித்துக்கொண்டே இருப்போம்.

நீங்கள் குறிப்பிட்டதுபோன்ற துயர்களில் உள்ள மையமான சிக்கல் என்பது நம் உள்ளத்தின் அரற்றல்தான். ’நான் என்ன தவறு செய்தேன்? ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?’ ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ ஆகிய மூன்று கேள்விகளும் முந்நூறாயிரம்கோடி கேள்விகளாக பெருகி மண்டையை நிறைப்பதையே நாம் உண்மையில் துயர் என்கிறோம்.

அந்த கேள்விகள் அனைத்தும் எழுவது ‘நான்’ என்னும் ஆணவநிலையில் இருந்து. இப்பிரபஞ்சத்தின் செயல்முறை எனக்கு புரிகிறவகையில் தெளிவடைந்து எனக்கு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதற்குப்பின்னால் உள்ளது. ஏனென்றால்  ‘நான் – பிரபஞ்சம்’ என ஒர் இருமையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம்மை பிரபஞ்சம் அளவுக்கு பெரிதாக ஊதிப்பெருக்கி வைத்திருக்கிறோம்.

இந்தவகையான துயர்களை ஆதிதெய்வீகம் என மரபு வரையறை செய்கிறது. தெய்வச்செயலான துயர்கள். அதில் மானுடர் செய்வதற்கேதுமில்லை. மானுடர் அதைப்புரிந்துகொள்ளவும் இயலாது. தெய்வம் அல்லது அறியமுடியா பிரபஞ்சப்பெருநியதிக்கு அதை அப்படியே விட்டுவிடுதலையே ஒப்புக்கொடுத்தல் என்கிறேன்.

இவை வெறும் சொற்களாகவே தோன்றும். ஆனால் இச்சொற்கள் நம்முள் இருந்தால் சிலசமயம் நம் உளப்பெருக்கின் தீவிரக்கணத்தில் இவை சட்டென்று அனுபவ உண்மையாகவும் ஆகிவிடும். அப்போது நமக்குரிய தெளிவை நாமே கண்டடைவோம்.

ஜெ

***

பிகு

நிதியுதவிக்கு நன்றி. விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பலருக்கும் உதவிகள் செய்வதனாலும் வேறுநிகழ்ச்சிகளாலும் நிதி தொடர்ந்து தேவைப்படுகிறது.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

[email protected]

நன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைநேருவின் வாழ்க்கை வரலாறு- கடிதம்
அடுத்த கட்டுரைசாத்தானைச் சந்திக்க வந்தவர்