நூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்

நூறுநாற்காலிகள் வாங்க

அன்புடையீர்,

வணக்கம்.

நான், பேராசிரியர் அ வெங்கடேஸ்வரன். ஒய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர். வயது 77.

தங்கள் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன். புதினங்கள், கதைகள் படித்துள்ளேன். தங்கள் புலமையைக் கண்டு மலைத்துள்ளேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம்.

தங்களின் நூறு நாற்காலிகள் கதையைப் படித்தபின் என் மனதில் தோன்றிய எண்ணங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்  என்ற உந்துதலின் வெளிப்பாடே இம்மடல்.

நூறு நாற்காலிகள் கதையில் ஒரு ST IAS அதிகாரியின் அனுபவங்களைப் பல்வேறு கோணங்களில் பதிந்துள்ளீர்கள்.

அவ்வளவு உயர் கல்வி படித்து, IAS தேர்ச்சி பெரும் அளவிற்கு அறிவாளியான திறமை மிக்க ஒருவர் ஆளுமை மிக்கவராக இல்லாதிருப்பது போல சித்தரிக்கப் பட்டுள்ளார். அவர் படித்த படிப்பிற்கு, வகிக்கும் பதவிக்கு நிலைமைகளை வேறு விதமாக, தனக்கும் தன தாயாருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, கையாண்டிக்கலாமோ  என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மடல் வரைகிறேன்.   மேலும் அவரது தாயார் பாத்திரம் கதையின் துவக்கத்திலிருந்தே ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமானதாகவே இருக்கிறது. எவ்வளவுதான் தாழ்த்தப்பட்ட ஒரு வகுப்பைச் சார்ந்தவராக, தனது வகுப்பிற்கான பழக்க வழக்கங்களைப் பெற்றவராக இருந்தபோதிலும், தனது மகன் உயர் நிலைகளுக்குச் செல்லும்போது தனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களா?

கதா நாயகன் ஒரு அழுத்தமிக்க சூழலிலேயே இருப்பதாகக் காட்டியுள்ளீர்கள். 64 ஆண்டுகள் ( தாங்கள் கதை எழுதிய காலத்தில்) அரசியலமைப்புப் பாதுகாப்புகள் தரப்பட்டிருந்தும், அவற்றினால் அரவணைத்துக் கொண்டு வரப்பட்ட பின்னரும் அவர்களால் இயல்பு நிலைக்கு, பிற சமூகத்தினருடன் சம நிலைக்கு வரவில்லை, வர இயலவில்லை என்பதை நிலை நாட்டியுள்ளீர்கள். உண்மை நிலை அவ்வாறுதான் உள்ளதா? ஆமெனில், எவ்வளவு விழுக்காடு?

கதை மாந்தர்களின் போக்கு கதையால் நிர்ணயிக்கப் படுகிறது (வாசகரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அல்ல) என்ற திரு ஜெயகாந்தனின் கூற்று நினைவிற்கு வருகிறது.

இருப்பினும்,

தங்களைப் போன்ற ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் நேர்மறைக் கருத்துக்களைப் பதிப்பித்தால் இளைஞர்கள் பயனடைவார்கள் அல்லவா?

வரும் காலங்களில்  அது போன்ற, நேர்மறைக் கருத்துக்களைக் கொண்ட, கொடூரமான, அழுத்தும் சூழல்களை, தான் அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மூலம் பெற்ற, கற்ற கல்வி மூலமாகவும், வளர்த்துக் கொண்ட பண்புகள் மூலமாகவும் எவ்வாறு வெற்றிகரமாக, கதை மாந்தர்கள் சமாளித்தார்கள், சமாளித்து வெற்றி கண்டார்கள்  என்பதை வெளிப்படுத்தும் வகையிலான கதைகளைப் படைத்தளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஏ.வெங்கடேஸ்வரன்

***

அன்புள்ள வெங்கடேஸ்வரன்,

அந்தக்கதை அறம் தொகுதியிலுள்ளது. அத்தொகுதியின் எல்லா கதைகளுமே உண்மையான மனிதர்களின் கதைகள். அவை ‘உண்மை மனிதர்களின் கதைகள்’ என்ற பேரில்தான் வெளியாயின. அக்கதை வெளியான பிறகு என் நண்பர் வே.அலெக்ஸ் அக்கதையை தனிநூலாக வெளியிட்டார். அதில் சில உயரதிகாரிகளின் கருத்தை கேட்டு வெளியிட்டிருந்தார். அவற்றில் அவர்கள் அச்சூழல் இன்றும் நிலவுவதையே பதிவுசெய்திருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுப்பிரியா என்னும் போலீஸ் அதிகாரி இங்கே தற்கொலை செய்துகொண்டார். அவர் தலித். அவருடைய தற்கொலைக்கான காரணம் மேலதிகாரிகளால் இழிவுசெய்யப்பட்டதுதான். அவர்கள அவரை ’ஏப்’ குரங்கு என பொதுவெளியிலேயே அழைத்தனர் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது. என்ன ஆயிற்று அந்த வழக்கு? அந்த மரணம் அப்படியே வசதியாக மறக்கப்பட்டது.

இங்கே நாம் வசதியாக பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையில் மெய்யான சாதிவெறியை மறைத்துக் கொண்டிருக்கிறோம். மெய்யான சாதிஅடக்குமுறைக்கு எதிராக இங்கே எவருமே பேசமுடியாது. அடக்குமுறையை நிகழ்த்துபவர்கள் அவர்களே சமூகநீதி பேசிக்கொண்டு பொதுவெளியில் திரிகிறார்கள்.

இத்தகையச் சிக்கல்கள் சமூகப்பிரச்சினைகள், அவற்றை தனிமனிதன் வெல்வது அரிதாக நிகழலாம். ஆனால் அது உதாரணம் அல்ல. சமூகப்பிரச்சினைகளை கதைகள் சுட்டிக்காட்டுவதே அப்பிரச்சினைகளின் தீர்வை நோக்கி பொதுவான சிந்தனைத்தளம் நகர்வதற்கான வழி. வெல்லும் கதைகளையும் எழுதியிருக்கிறேன். வணங்கான் போல. ஆனால் தலித்துக்கள் இன்னும் வெல்லவில்லை.

ஜெ 

***

அன்புள்ள ஜெ,

தங்கள் மடலின் கடைசி வரிவரி மனதை மிகவும் புண் படுத்துகிறது. நான் பணி புரிந்த கல்லுரி ஒரு அரசினர் கல்லுரி. அடித்தட்டு மாணவர்கள் அதிகம் படித்த கல்லுரி. நான் என்.சி.சி-யிலும் அதிகாரியாகப் பணி புரிந்துள்ளேன். என் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தேன்.

என்னிடம் படித்த ஏராளமான அடித்தட்டு மாணவர்கள் தற்போது நடுத்தர மனிதர்களாகவும் மேல்தட்டு மனிதர்களாகவும் நல்ல நிலையிலேயே உள்ளனர். தலித் இன மக்களைக் கழிவிரக்க உணர்விலிருந்து மீட்டெடுத்தாலே அவர்களின் பல சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன். நகரச் சூழலில் இருப்பதால் கிராமச் சூழல் தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் வாசகர்களை, தங்கள் எழுத்துக்கள் மூலம்  நல்வழிப் படுத்தும் பணி தொடரட்டும்.

ஏ.வெங்கடேஸ்வரன்

***

அன்புள்ள வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு,

ஆம், எழுத்தின் நோக்கம் அதுதான். வணங்கான் கதைபோல அவர்கள் வென்றெழும் தருணத்தை எழுதும் வாய்ப்பும் அமையுமென்றால் அதுவே எழுத்தின் வெற்றி. அதற்கான ஊக்கத்தை அளிப்பதே எழுதின் கடமை.

பேசாதவர்கள் போன்ற கதையில் உள்ளது அந்த எழுச்சியின் சித்திரம் [பேசாதவர்கள்[சிறுகதை] ]

ஜெ.

முந்தைய கட்டுரைபுதியகாலம், ஒரு மதிப்புரை
அடுத்த கட்டுரைகோவை கவிதைவிவாதம் – கடிதம்