இந்து என்றிருப்பது – கடிதங்கள்

இந்து என உணர்தல்

மதத்தை அளித்தலின் வழிகள்.

அன்புள்ள ஜெ

நேரடியான கடுமையான நம்பிக்கையையோ அல்லது பாரம்பரியமாக வந்த ஆசாரசீலங்களையோ சாராமல் எப்படி மதநம்பிக்கையை கைக்கொள்வது ,எப்படி அதைப்பேணிக்கொள்வது என்பது இன்றைய தலைமுறையில் மிகப்பெரிய கேள்வி. அதைத்தான் இன்றைய ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இன்று மதம் பற்றிப் பேசுபவர்கள் மூன்று வகையானவர்கள். நவீன குருமார்கள் கடைசியாக அவர்களை வழிபடச்சொல்கிறார்கள். ‘cult’ களை உருவாக்குகிறார்கள். இன்னொரு சாரார் வழிவழியாக வந்த ஆசாரங்களை அப்படியே கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லி நம்மை அனாசாரவாதிகள் என்கிறார்கள். மூன்றாவது சாரார் மதம் என்றாலே கடைசியில் கட்சியரசியலும் கவர்மெண்டும்தான் என்கிறார்கள். இந்துமதத்தை காப்பாற்றுவதுதான் இந்து செய்யவேண்டிய ஒரே வேலை என்கிறார்கள்.

நான் கேட்பது ஏன் காப்பாற்றவேண்டும் என்றுதான். எனக்க்குத்தேவை என்னுடைய மனம் நிறைவடையும் ஒரு பதில்தான். அதை நான் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஒன்று புளித்துப்போன பழமைநம்பிக்கை. அல்லது நவீன சிந்தனை என்றபெயரில் சூடோ சயன்ஸ். இரண்டும்தான் கிடைக்கின்றன. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. என்னுடைய ஏமாற்றங்களைச் சொன்னேன்.

எனக்கு மிகத்தெளிவான ஒரு பதிலாக, ஆழமான திறப்பை அளிப்பதாக இருந்தது இந்துவாக இருத்தல் பற்றி எழுதப்பட்ட கட்டுரை. அதை நான் பலருக்கும் அனுப்பினேன். ஆனால் அதை பலரும் வாசிக்கத் தயங்குகிறார்கள். அவ்வளவு நீளமாக தமிழிலே வாசிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் அதன் உள்ளடக்கத்தைச் சொன்னால் மிக ஆர்வமாக கேட்டு பிரமிப்படைகிறார்கள். அதை நீங்கள் சிறிய உரைகளாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

அந்த முதல் கட்டுரை எனக்கு அடிப்படையான தெளிவை அளித்தது. மதம் ஏன் தேவை என்றால் மனிதன் சமகாலத்திலேயே சுருங்கிவிடாமலிருக்கத்தான். சமகாலத்தில்தான் நம் அன்றாட வாழ்க்கை உள்ளது. நம் அரசியலும் ideology யும்  உள்ளது. ஆனால் நம்முடைய உள்ளத்தின் ஆழம் சமகாலம் சார்ந்தது அல்ல. அது சிந்தனைகளைக் கடந்த இமேஜ்களால் ஆனது. அல்லது archetypes களால் ஆனது. அவை பல்லாயிரமாண்டுக்காலமாக மானுட உள்ளத்திலே நிலைகொண்டு கைமாறப்பட்டு வருபவை.

அந்த image களையும் archetypes களையும் அறிந்துகொள்ள புத்தகம் போதும். அவற்றை போட்டு ஆராய்ந்து பகுத்துப்பார்க்க அறிவு போதும். அவை நம் கனவாகவும் subconscious ஆகவும் ஆக நாம் அவற்றில் இருக்கவேண்டும். அவற்றை inherit செய்யவேண்டும்.அவையெல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அதற்குத்தான் மதம் தேவை. மதத்தை அந்த Traditon of insights என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதன் ஆசாரமும் நம்பிக்கையும் பெரிய விஷயமல்ல. அந்த insights தான் நம்மை கற்கால மனிதனில் இருந்து இன்றுவரைக்குமான ஒரே தொடர்ச்சி ஆக மாற்றுகிறது. நாம் நம்முடைய existence ஐ  எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியமானது. இங்கே தின்று தூங்கி போராடி வாழும் ஒரு அரசியல்ஜீவியாகவோ அல்லது consumer ஆகவோ நம் existence இருந்துவிட்டு போகலாமென்றால் மதம் தேவையில்லை. கலை இலக்கியம் ஒன்றும் தேவையில்லை. சரித்திரமே தேவையில்லை.

ஆனால் அதற்கு அப்பால் ஒரு “timeless existence” நமக்கு வேண்டுமென்றால் மதம் உருவாக்கும் ஆதாரமான images நமக்குத்தேவை. இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன். சிவனைப்பற்றிய அந்த age old  தொடர்ச்சி என்னை மலைக்க வைத்தது. அதன்பின் இப்போது கணேசா பற்றி எழுதியிருந்தது.

இதில் நான் காணும் ஒரு விஷயம் என்னவென்றால் தொன்மையான pagan மதங்களில் இவ்வளவு பெரிய imagery இருந்தது. பிரம்மாண்டமான archetyopes இருந்தன. அவையெல்லாம் கற்காலம் முதல் மனிதனின் மனதில் திரண்டு வந்தவை. நடுவே ஒரு இரண்டாயிரமாண்டுகாலமாக prophetic religion அந்த பெரிய தொகுப்பில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. ஒரு disconnection.

பிற்கால ஐரோப்பா தன்னுடைய சிந்தனைகள் கலைகள் எல்லாவற்றிலும் அந்த இடைவெளியை இல்லாமலாக்கவே முயல்கிறது. அவர்கள் இன்றைக்கு தங்கள் Celtic Norse  பாரம்பரியங்களை தேடிச்செல்வதே அதனால்தான். நமக்கு அதிருஷ்டவசமாக நம்முடைய அந்த தொன்மையான பாரம்பரியம் அறுபடாமல் கிடைக்கிறது. நாம் அதை வெளியே நின்று ஆராய்ந்து அறியவேண்டிய நிலையில் இல்லை. உள்ளே சென்று அதிலேயே இருந்துகொண்டிருக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. unconscious inheritance கிடைக்கிறது. அந்த வாய்ப்பு மனிதகுலத்திலேயே சில சமூகங்களுக்குத்தான் உள்ளது. நாம் அப்படிப்பட்ட நல்வாய்ப்பை தவறவிடக்கூடாது.

Prophetic religion உருவாக்கும் மனநிலையும் இன்றைய டெக்னாலஜி உருவாக்கக்கூடிய மனநிலையும் இந்த spiritual unconscious நிலைக்குச் சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கோ இருக்கும் தளங்கள். அவற்றைப் பேசுபவர்கள் நம்மை இந்த தொடர்ச்சியிலிருந்து வெட்டிவிடுகிறார்கள். நமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதேபோல வெறும் ஆசாரவாதமும் நம்பிக்கையும் பேசுபவர்கள் அந்த ஆழத்தை நாம் பார்க்கமுடியாமல் செய்துவிடுகிறார்கள். அவற்றை நாம் கடந்து செல்லவேண்டும். நாம் நம்மை ஒரு deep cultural subjectivity யாக நாம் உருவாக்கிக்கொள்ள இந்த புரிதல் மிக அவசியமானது. பலமுறை வாசித்த கட்டுரைகள் இவை. நன்றி.

என்.ஆர்.கார்த்திகேயன்

அன்புள்ள ஜெ,

இந்துவாக இருப்பது, மதத்தை அளிப்பது பற்றிய இரு கட்டுரைகளுமே மிக முக்கியமானவை. அவை இன்றைய ஒரு நவீன மனம் இந்துமதத்தை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்று சொல்கின்றன. வெறும் நம்பிக்கைகளை இன்றைய பகுத்தறிவுவாதம் உடைத்துவிடும். அந்நம்பிக்கைகள் செயல்படும் விதத்தையே அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தால் நாம் அந்த எளிமையான பகுத்தறிவுவாதத்தைக் கடந்துசெல்லலாம்.

ஆனால் நீங்கள் இவற்றைப் பேசும்போது இந்து மதத்தை வெறும் கலாச்சாரத் தொகுப்பாக மட்டுமே பார்க்கிறீர்களோ, கலாச்சாரவாதம் முன்வைக்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. கடவுள்களை எல்லாம் வெறும் குறியீடுகளாகப் பார்ப்பது இந்து மதத்தின் ஆன்மிக அம்சத்தை தவிர்த்துவிடுவதுதான்.

ஆனால் கட்டுரையில் இறுதியில் நீங்கள் அதையும் சொல்கிறீர்கள். அந்த விஷயத்தால்தான் இந்தக் கட்டுரை ஆன்மிகத்தை கலாச்சாரமாக குறுக்குவதில் இருந்து மேலே செல்கிறது. பிள்ளையார் ஒரு குறியீடுதான் என்றாலும் எதன் குறியீடு என்பது முக்கியம். அந்தக்குறியீடு வழியாக மட்டுமே சொல்லமுடிகிற ஒன்று உள்ளது. அதை அறிந்தவர் அக்குறியீடாக அதைச் சொன்னார்கள். அக்குறியீடு வழியாக அந்த குறிப்பீட்டுப் பொருளை நோக்கி நாம் செல்லமுடியும். அதுவே மதத்தின் உச்சகட்டமான நோக்கம்.

சிவ சிதம்பரநாதன்

இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.
இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்
இந்து என உணர்தல்- கடிதம்
இந்து என உணர்தல் – மறுப்பு
முந்தைய கட்டுரைகடவுள் என்பது…
அடுத்த கட்டுரை மயக்கும் மாயப்பொன்