உலோகம் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உலோகம் நாவலை நீண்ட நாட்களாக வாசிக்க எண்ணி, மனம் ஒன்றாமல் வாசிக்கவில்லை. அதற்கான காரணம் அது ஒரு ‘Thriller –Genre’ நாவல் என்று அறிந்தமையால் தான். என்னால் genre வைத்து வெறும் வாசிப்பின்பத்திற்காக எழுதப்பட்ட படைப்புகளை அணுக முடியாது. ஒரு படைப்பு வாழ்வின் சாராமான கேள்விகளையோ அல்லது அறிய முடியாத மனித ஆழங்களையோ சொன்னால் மட்டுமே எனக்கு திருப்தியாக இருக்கும். எனினும் ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகள் என்னை உலோகம் நாவலுக்கு அழைத்துச் சென்றது.
நாவலின் கதையோட்டம் நகரும் தோரும் கூர்மையாகி கொண்டே சென்று, இறுதியில் ஒரு புள்ளியில்மோதுகிறது. சார்லஸும் கதை நகர நகர சுருங்கி கூர்மையாகி கொண்டே சென்று இறுதியில் மோதும் அப்புள்ளி பொன்னம்பலத்தாரை கொள்ளும் இடம். அது கதையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டிருப்பினும் அங்கே சார்லஸ் எப்படி சென்று சேர்கிறான் என்பதையே ஈழ இயக்கங்கள் மற்றும் ரா போன்றஇந்திய அரசாங்க இயக்கங்களின் செயல்பாடுகளின் பின்னணியில் வைத்து விறுவிறுப்பான நடையில் சாகசங்கள் கலந்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கதை மேலெழுந்து வேறு ஒரு தளத்துக்கு சென்றது முடிவில் அவன், அவரது தலையை உதைக்கும் இடத்தில் தான். அது அவன் சுருங்கி, மோதி பின் வெடித்து சிதறும் இடம். அங்கு அவன் எப்படி வந்து சேர்ந்தான்? எது அவனை வெடிக்க வைத்தது? அதுவே நாவலின் மையம்.
நாவல் மனித மனங்களின் புரிந்து கொள்ள முடியாத ஆழங்களை, உயிர் வாழ்தலுக்கான மனிதர்களின்இச்சையை ஆராய்ந்து அதனை உலோகம் (துப்பாக்கி) என்ற படிமத்துடன் இணைத்து நம்பிக்கை, கொள்கை பிடிப்புகள் எப்படி ஒரு மனிதனை உணர்ச்சிகளற்ற உலோகமாக (துப்பாக்கி) மாற்றி வெடிக்க வைக்கிறது. சார்லஸ் துப்பாக்கி என்றால் அவனை வெடிக்க வைக்கும் விசை நம்பிக்கை மற்றும் கொள்கை பிடிப்பே என்று உணர்த்தி நின்று விடாமல் அங்கிருந்து மேலெழுந்து மனிதர்களை (துப்பாக்கிகளை) இயக்கும் விசை அனைவருக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆற்றல் . நாம் அதன் கைகளில் இருக்கும் பொம்மை துப்பாக்கிளே என்று வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத இயக்கத்தை தொட்டுக் காட்டுகிறது. இந்த அம்சமே உங்கள்படைப்புகளை அன்றி வேறு படைப்புகளை நோக்கி என்னை செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறது.
சார்லஸ் கதை நகர நகர அகத்தில் சுருங்கி கொண்டே செல்கிறான். ஆனால் விரிவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் தன் அகத்தே கொண்டவன் அவன். கவிதை, இலக்கியம், காதல் என கலையுள்ளம் கொண்டவனாக இருப்பினும் அவனை விரிய விடாமல் தடுத்து சுருங்கச் செய்வது இயக்கத்தின் மீது அவனுக்குஇருக்கும் பற்றுறுதியே ஆகும். அவன் மலர்வதற்கான தருணங்கள் வாய்க்கும் போதெல்லாம் அவனுள் தங்கியிருக்கும் உலோகம் (குண்டு) அவன் நினைவில் எழுந்து கீழே இழுத்து செல்கிறது. அவன் பொன்னம்பலத்தாரின் மகளுடன் ஏற்படும் உறவின் மூலம் இதிலிருந்து மேலெழுந்து விடலாம் என்று எண்ணுகிறான். ஆனால் அவளும் அவனுக்கு அந்த உலோகத்தையே (குண்டை) தொட்டுக் காட்டுகிறாள். இயற்கையால் வழங்கப்பட்ட அடிப்படை உணர்ச்சிகளான உயிர் வாழ்தலுக்கான இச்சையும், தன் குழ்ந்தையை வளர்க்கும் பொறுப்பையன்றி வேறொன்றும் அறியாத பேதை, அதற்காக அனைவரையும் பயன்படுத்தி அங்கிருந்து தப்ப விழையும் ஒருத்தி என்று உணர்கிறான். அங்கிருந்தே அவன் முழு இருளுக்குள் சென்று சேர்கிறான்.
இந்த நாவலில் வரும் அனைத்து மனிதர்களும் உயிர் வாழும் அடிப்படை இச்சையன்றி மேலான விழைவுகளுக்காக விதிக்கப் பட்டவர்கள் அல்ல. சார்லஸ் மட்டுமே அதனை கடந்த விழைவுகளுக்கான சாத்தியகூறுகளை உடையவன். ஒரு வகையில் அனைவருக்கும் மேலான ஒருவன். அதன் விளையாட்டில் அவனும் தோற்றுப் போகிறான்.
இந்த நாவலின் மையம் என்பது உலகளாவிய ஒன்று. கதை நடக்கும் களம் மட்டுமே இயக்கத்தை சேர்ந்த மனிதர்கள் மற்றும் இந்திய அரசியல். இந்த கதையை வேறு எந்த இயக்க மற்றும் வேறு நாடுகளின்அரசியல் பின்னணியில் வைத்து எழுதியிருந்தாலும் நாவல் உணர்த்தும் சாராம்சம் அப்படியே ஒத்துப் போகும். இந்த நாவல் எதன் பொருட்டு என்னை படிக்க ஈர்த்ததோ (ஆஃப்கானிஸ்தான் பிரச்சனை) அதற்கானஅடிப்படையை எனக்கு உணர்த்திவிட்டது. அரசியல் காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் மனிதர்களின் அடிப்படை மனநிலை உலகம் முழுவதும் ஒன்று தான். அது குறித்தே நாவல் பேசுகிறது.
நாவல் படித்து முடித்தவுடன், எனக்கு கன்னிநிலம் நாவலின் கதாநாயகன் நெல்லையப்பனுடன் சார்லஸை ஒப்பிட்டு பார்க்கத் தோண்றியது. நெல்லையப்பன் தன்னுள் எழுந்த பிரேமையால் அதிகாரம், நாடு, எல்லை என அனைத்தையும் கடந்து, உதறி, விரிந்து மேலெழுந்து மனிதனின் உச்ச விழுமியமான ‘ No man’s land’ க்கு செல்கிறான். சார்லஸோ சுருங்கிச் சுருங்கி இருளின் ஆழத்திற்குள் சென்று சேர்கிறான். ஒரு காதலோ, கவிதையோ அவனை காப்பாற்றியிருக்கும். ஆனால் அவன் அதற்காக விதிக்கப்படவில்லை. நெல்லையப்பன் ஷீராய் லில்லி போல மலர்வதும், சார்லஸ் உலோகமாவதும் நம் கையிலா உள்ளது?
நாம் அனைவரும் துப்பாக்கிகளே, அதனை அழுத்தும் ஆற்றல் அனைத்திற்கும் மேலான அதுவே.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி