அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால் நம்பியும் எழுதியிருக்கிறார். பிற கவிஞர்களையும் கண்டு எழுதும் பண்பு அவருக்கும் உண்டு. தமிழில் இது அரிதான ஒரு பண்பே. ஷங்கர், சபரி நாதன், ஸ்ரீ நேசன், ஆகியோர் ஓரிரு கட்டுரைகள் என்னுடைய கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். முந்தைய தலைமுறை தமிழ்க் கவிகளிடத்தே இந்த பழக்கம் சுத்தமாக இல்லை. பிற கவிகள் பற்றி தேவதேவன் என்ன எழுதியிருக்கிறார்? தேவதச்சன் என்ன எழுதியிருக்கிறார்? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. ஆனால் டி.எஸ் .எலியட் பற்றி இவர்களிடம் நிறைய பேச முடியும்.
சிலர் தனிபட்ட முறையில் பாராட்டுவார்கள். அவை எடுத்துக் கொள்ள தகுந்தனவாக பெரும்பாலும் இருப்பதில்லை. எழுத்தில் என்று வரும்போது அவனும் வாழ்ந்தான் என்கிற உடனிருப்பே இருக்காது. இதனை குறையாகச் சொல்லவில்லை. சொல்கிறேன் அவ்வளவுதான். கல்யாணியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும் வழக்கம் இருக்கிறது. கலாப்ரியா நாலாந்தரமானவர்களுக்கு முன்னுரைகளை வாரி வழங்கக் கூடியவர். முன்னுரைகளை வாரி வழங்குதல் சுயநலன் தொடர்புடையது என்பதே அனுபவம். ஞானக்கூத்தன் பாரதிபேரில் கொண்டிருந்த கசங்கல் என்பது திருவல்லிக்கேணியில் அவருக்கு இணையாக அவரும் இருந்தார் என்பதாலும் என விளங்கிக் கொள்ள வேண்டியது துரதிர்ஷ்டமானதும் அல்லவா ?
கவிதை என்றில்லை புனைவு பற்றியும் அதிகம் எழுத்தில்லை. மூச்சில்லை. பிறர் பற்றி எழுதுவதில் தயக்கம் கொண்ட வேறு சமூகங்கள் உலகில் தமிழ் போலும் உண்டா? இருப்பே உணரப்படாதது போல கடக்கும் சமூகங்கள்? நானும் என் அளவிற்கு பிறர் பற்றி குறைவாக என்றாலும் கூட எழுதுகிறேன். அதனை பண்பாக கடைபிடிக்க முயல்கிறேண். ஒருவேளை சுரா பள்ளியில் இருந்து வந்ததால் அடைந்த பண்பா இது ? ஒரு வாரத்திற்குள்ளாகவே முகுந்த் நாகராஜன், ஆனந்த்குமார், போகன் சங்கர் மேலும் என்னை என எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கவிதைகள் அனைத்துமே முக்கியமானவை. ஆனந்த்குமாரின் கவிதைகளின் அறிந்து கடக்கும் கால்களை அதிசயித்துப் பார்க்கிறேன். அடுத்து வரும் தலைமுறையின் நகர்வு, முக்கிய வரவு.
உங்களிடம் ஐந்திற்கும் அதிகமான முகங்களைக் கண்டு வருகிறேன். அதில் ஒன்று உங்களுக்குள் இருக்கும் கவிஞனின் முகம். கவியின் அகநெருக்கடிகளை ஒத்ததாக உங்கள் உரைநடை எழுதப்படுகிறது. சமீபத்தில் வெண்முரசில் யுத்தம் பற்றிய பகுதிகளை எழுதுகையில் அதிகம் போர்னோ பார்த்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். முதலில் திகைப்பாகவும், பிறகு அதில் அமைந்த உண்மை கவிஞனின் அகத்திற்கு நெருக்கமானது என்றும் தோன்றியது. நான் வீடுகட்டும் போது அதிகம் போர்னோ பார்த்தேன். ஏகதேசம் என்னைப் போன்ற ஒருவர் வீடு கட்டுவது ஒரு யுத்தமிடுதலுக்கு நிகரான ஒன்றே. சுரா எழுதுகிறவன் நேரடியாக வீடு கட்டும் வேலையில் ஈடுபடக் கூடாது என்றது ஏன் என்பது விளங்கியது. ஆள் வைத்தே செய்தேன். எனினும் மனம் கொந்தளித்து நுரைத்துத் தள்ளிற்று. போரிடத் தெரிந்தவனுக்கு விரோதிகள் இல்லை என்பதையும் அந்தகாலகட்டத்தில் பட்டறிந்தேன்.
நீங்களும் பல சமயங்களில் கவிஞனைப் போலவே உள்ளிலும், புறத்திலும், புனைவிலும் இருக்கிறீர்கள். ஆனால் கவிஞனிலிருந்து ஒட்டு மொத்தப்பார்வையால் விலகவும் செய்கிறீர்கள். எனக்கு உங்கள் படைப்புகளில் பரவச உணர்வை தருபவையாக கவிதையும், தத்துவக் கண்ணோட்டமும் என்பதைக் கண்டிருக்கிறேன். இது போல இன்னும் சில வேறுபட்ட முகங்கள் உங்களிடம் உண்டு. அடிப்படையில் நீங்கள் ஆழமான ஒரு கவி, ஆழுள்ளம் நிரம்பித் ததும்பும் கவி என்றே தோன்றுகிறது
என்னைப் பற்றி என்றில்லை தமிழ் நவீன கவிதையின் மொத்த உருவத்தையும் உங்கள் தளத்தை பின் தொடரும் ஒருவர் அறிந்து விட முடியும். நவீன கவிதையின் ஆகச்சிறந்த தொகுப்பாக வருமளவிற்கு சிறந்த கவிதைகளின் தொகுப்பு உங்கள்தளத்தில் உள்ளது. போகன் கவிதைகள் சமீபத்தில் நீங்கள் குறிப்பிட்ட கவிதைகளில் அடைந்துள்ள மாற்றத்தையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். கவிதைகளை நெருங்கிப் பின் தொடராமல் இதனை அவதானிப்பது சாத்தியமே இல்லை.
என்னுடைய கவிதைகளை பற்றி நீங்கள் எழுதுகையில் அவை வாசகர்களிடம் விரைந்து சென்றுவிடுகின்றன. நேற்று இரவிலேயே தளத்தில் பார்த்துவிட்டு ஒரு வாசகர் எழுப்பி விட்டார். அப்படி நிகழ்வது எனக்கென்றில்லை எந்த கவிஞனுக்கும் முக்கியமானதே. அது எழுப்பும் ஊக்கம் அவன் தொடர துணைநிற்கக் கூடியது. பொக்கிஷம் போன்றது.
உங்களுக்கு எப்போதும் என் அன்பு,
-லக்ஷ்மி மணிவண்ணன்
சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி
தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்
முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்
க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்
சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு
கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா
பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்
கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்
கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்
வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்
சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்
ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி
விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா
கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்
மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)