கதையின் மாந்தர்கள் யாவரும் வளர்ந்து பாசப்பிணைப்புகளுக்குள் வலுவாக அமைந்து உணர்வுகள் பொங்கி நெகிழும் தருணங்கள் அதிகம் வாய்க்கப்பட்டு அமைகிறது பிரயாகை நாவல். காதலும், ரத்தபாசமும் அதைவிட மேலாக நட்புத் தருணங்களுமென அன்பு நிரம்பித் ததும்புகிறது. உறவுகளுக்குள் ஏற்படும் பொறாமைகளும் பூசல்களும் நிகழ்ந்து ஒரு தூரம் உருவாகும்போது எங்கோ ஒரு தருணத்தில் யாவும் முன்பிருந்தது போலவே சரியாகிவிடாதா என்று மறைந்து கிடக்கும் குழந்தை மனம் ஒன்று கேட்டுக் கொள்ளாமல் இல்லை.
ஆனால் அந்த தருணங்களையெல்லாம் கடந்து காலம் முன்நகர்ந்து ஆறா வடுக்களை சுமந்து வந்து அதன் சாத்தியத்தைக் குலைக்கிறது. துரியன் எங்கோ ஒரு புள்ளியில் பீமனுடன் கரம் சேர்த்து விளையாடிய அந்தத் தருணத்திற்கு ஏங்காமல் இல்லை. பீமனும் அதை எண்ணும்போதெல்லாம் கனிந்து பூரிப்படையாமலில்லை. எல்லாம் ஏதோவகையில் சரியாகிவிடாதா என்று தவிப்பவர்களாக திருதிராஷ்டிரர், விதுரர், தருமன். இந்த ஆடலில் சிக்கி சித்தமிழக்கும் குண்டாசி. அதை கேள்விகளோடே அணுகும் அர்ஜூனன். நீர்வழிப்படும் புனைபோல பீமன். ஆனால் இவற்றிலெல்லாம் சிந்தையைச் செலுத்தாமல் தான் பிறந்த நோக்கத்தை முற்றுணர்ந்து செயல் தீவிரம் கொண்டவர்களாக கண்ணனும், திரெளபதியும்.
அஸ்தினாபுரி எனும் மாபெரும் அரசைச் சுற்றி சுழலும் உறவுகளுக்குள் விழைவுகள் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். நாடோடியாக இருந்து ஒரு நிலையான இடத்தில் அமைந்து வாழத்தொடங்கிய காலத்தினின்றே மனிதனைத் தொற்றிக் கொண்ட விழைவு இந்த மண் விழைவு. இந்த நாவலில் சற்றும் எதிர்பாராது விதுரருக்குக் கூட அந்த விழைவு இருப்பதை நான் கண்டு கொண்ட தருணத்தில் தான் விழைவின் சுவடை அனைவரிலும் தேட ஆரம்பித்தேன்.
சத்யவதிக்கும், அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் சிவைக்கும் இருந்த விழைவுகள் கடத்தப்பட்டு பாண்டுவிலும் திருதிராஷ்டிரரிலும் விதுரரிலும் அது நிறைந்து குந்திக்கும், காந்தாரிக்கும், சகுனிக்கும் இருந்த விழைவுகளுடன் இணைந்து பெருகி நூற்றுவரிலும், பாண்டவரிலும் இருப்பதைக் கண்டேன். விதுரரின் மகனே கூட பெருவிழைவு கொண்டு துவாரகையை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த கண்ணனுடன் இணைகிறான். விழைவுகள் உறவுகளிடையே விரிசலுறச் செய்து பகையாக்குகிறது. ஒவ்வொருவரும் தனக்கான ஆட்டத்தில் தன் பக்கம் நிற்க வேண்டியவர்களை அடையாளம் காணுகிறார்கள். அது நோக்கி புதிய உறவை நகர்த்துகிறார்கள். ஆட்டத்தை ஒருக்குவதற்கான ஆளான கிருஷ்ணன் நிலைபெயரா துருவன் போல இந்த உறவுச் சிக்கல்களின் தீவிரத்தில் நுழைந்து விடாது செயல் செயல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
சற்றே தெளிவாக தீமையின் பக்கமென சகுனியைச் சொல்லிவிடுமளவு நரியால் கடிக்கப்பட்டு உடலும் மனமும் மாறுபட்டு பொழுதும் தன் அருகிலேயே தீமையின் குறியீடான கணிகரை அருகில் வைத்துக் கொள்ளும் போது மனம் பதற்றமடைந்தது. சகோதரப்பாசம் கொண்டவனாக, மதியூகியாக, பீஷ்மர் அணைத்து ஆறுதல் சொல்லிய அந்த சகுனியை இழந்த வருத்தம் என்னை சூழ்ந்து கொண்டது. அங்கிருந்து இனி எப்போதும் மீள முடியாத ஒரு இடத்தில் சகுனி அமைகிறான். அறமற்ற மதியூகமாக கணிகரின் திட்டத்தில் பாண்டவர்களை எரியாக்கும் சதித்திட்டதில் சகுனியும், திருதிராஷ்டிரரும், துரியனும் பங்கு கொள்வது ஊழ் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்.
ஏழு ஆண்டுகளாக அந்த அறச்சிக்கலிலேயே திருதிராஷ்டிரனும், துரியனும் வீழ்ந்து பலமற்றுப்போவது என கீழ்மையை நோக்கிச் செல்லும் போது மனம் கனக்கிறது. அந்த ஒட்டுமொத்த கனத்தையும் குண்டாசியின் வழி கண்டு கலங்கி நின்றேன். ஒரு பிழையின் வழி அறமற்ற ஒரு தரப்பை பிரயாகை உருவாக்கிவிட்டது. அதனாலேயே அதற்கு இணையான அறத்தின் தரப்பாக பாண்டவர்களை எழுப்பிக் கொள்ள மக்கள் தலைப்பட்டாக வேண்டும். இதற்கு நடுவில் நின்று கொண்டு தத்தளிக்கும் விதுரரைப் போல மனம் கலங்குகிறது.
இவற்றையெல்லாம் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் கம்பராமாயணத்தின் இந்த வரி கோர்த்தது ஜெ. “ஒன்றாய் விரி இருல் இரண்டு கூறாய் வெகுண்டன”. இரு எருமைகள் சண்டை போடும் சித்திரத்தை ஒரு இருள் இரண்டு கூராய் விரிந்து வெகுண்டன என்று கூறியது. ஆம்! ஒரே இருள் தான். அதுவே இரண்டு கூராய் பிளந்து நின்று போர்புரிகிறது. அதை வியந்து கொண்டிருக்கும்போதே நண்பர் சக்திவேல் இந்த வரியை பிரம்மத்துடன் ஒப்பு நோக்கினார். பிரம்மம் ஒன்று என்பதை இங்கும் ஒப்பு நோக்குகிறேன். பிரம்மம் தன்னைத்தானே பிளந்து இரு கூராக்கிக் கொண்டு ஆட்டகளத்திற்கு தயாராகிவிட்டது என்று கண்டேன். வெற்றியோ தோல்வியோ; உயிர் தப்பிப் பிழைக்கப்போவதோ உயிர் மாயப்போவதோ யாவும் ஒன்று எனக் கண்டேன்.
இந்த அரசியலையும், விழைவையும் விலக்கி இதில் ஊடாடும் அன்பையும் பாசத்தையும் கண்டு உருகி நிற்கிறேன். எத்துனை உணர்வுத் தருணங்கள்! எத்துனை நெகிழ்ச்சித் தருணங்கள்! எத்துனை காதல்கள்! யாவும் கலங்கடித்து விட்டன ஜெ.
பீமனும் கடோத்கஜனும்: பீமனுக்கும் கடோத்கஜனுக்குமான தந்தை-மகன் உறவை நீங்கள் சொல்லும் இடம் தோறும் மெல்லிய புன்னகையோடே பயணித்துக் கொண்டிருந்தேன். “மண்டையா” என்பது எத்துனை பாசமான விளிச்சொல்! ”திருதிராஷ்டிரன்!” என்று அவன் முதன் முதலில் மழலைச் சொல்லோடு எதிர்பாராத விதமாகச் சொல்லும் போது அவன் சொல்லிய விதமும், பீமனுக்கு தன் பெரிய தந்தை மீதுள்ள அன்பையும் கண்ணோக்கி நெகிழ்ந்தே போனேன். கட்டற்ற ஆற்றலுடையவனாக வளரும் கடோத்கஜனை பீமன் மனதார சங்சலம் கொள்ளும் ஒரு தருணம் அமையப்பெறுகிறது. ஆற்றலின் உச்சமான பீமனே சலனம் கொள்ளுமளவான ஆற்றல் கடோத்கஜனிடம் இருப்பதை உணரமுடிந்தது.
தந்தையின் அத்துனை உணர்வுகளையும் அணுவணுவாக உணரக் கூடியவனாக கடோத்கஜன் இருக்கிறான். பீமனின் நிலைகொள்ளாமையைக் கண்டு ”தந்தையே, நீங்கள் யாரையாவது அஞ்சுகிறீர்களா?” எனும் போது அவன் கர்ணன் தன் கனவில் வருவதாகக் கூறுகிறான். ஒரு வகையில் வண்ணக் கடலிலிருந்தே அவன் கர்ணனை அஞ்சுவதனால் தான் எதிர்த்தான் என்றும், அவமானப்படுத்தினான் என்றும் தோன்றியது. என்றாவது ஒரு நாள் அவன் தன் தமையனுக்கு எதிராக களத்தில் நிற்கக்கூடும் என அஞ்சியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். தான் கர்ணனை கொல்கிறேன் என்ற கடோத்கஜனிடம் “வேண்டாம்… நீ அவனை கொல்லக்கூடாது” என்ற வரியால் மேனி புல்லரித்துக் கொண்டது. கர்ணனின் மேல் அவன் வைத்திருந்த மதிப்பும் கடோத்கஜனின் மேல் வைத்திருந்த பாசமும் ஒன்றாக புலப்பட்ட வார்த்தை “நீ கொல்லலாகாது” என்பது.
திருதிராஷ்டிரரும் தருமனும்: இடும்பவனத்தில் பீமனின் திருமணத்தின் போது “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்று தருமன் ஒரு கல்லை எடுத்து வந்து வைக்கிறார். குந்தி வெறுத்துக் கூறியும் ”குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்தல் முறையல்ல.” என்கிறார். ”அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் பிழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்று கூறி தன் நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறார். நீண்ட நேரம் கழித்து அவனுடைய செய்கையை உணர்ந்தவளாக குந்தி “குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்… உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.” என்று மொழிகிறாள். தருமனில் பாண்டு-திருதிராஷ்டிரர் அன்பையும், தேவாபி-பால்ஹிகர் அன்பையும் ஊற்றி நிறைத்து நெகிழ்ந்தேன்.
ஏழு வருடங்களாக பாண்டவர்களின் இறப்பு செய்தியில் மூழ்கிப் போய் உடைந்திருந்த திருதிராஷ்டிரர் அவர்கள் இறக்கவில்லை எனும்போது பெருமகிழ்வு கொள்கிறார். இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வதன் சங்கடம் அவருக்கு இருக்கிறது. அதை உடைத்தெறிந்தது தருமனின் கடிதம் தான். “எந்தையே, இப்புவியில் பாண்டவர்களாகிய எங்களுக்கு இன்றிருக்கும் வாழும் மூதாதை நீங்கள் மட்டுமே. தங்கள் நல்வாழ்த்துக்கள் இன்றி நாங்கள் முழுமானுடராக வாழமுடியாது. தேவர்களுக்கும் விண்ணவர்க்கும் நீத்தாருக்கும் அறத்திற்கும் எங்களை கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர் தாங்களே. பாண்டவர்களாகிய நாங்கள் தங்கள் பாதங்களில் சிரம் வைத்து வாழ்த்துக்களை நாடுகிறோம்.” என்று ஆரம்பித்து ”என்றும் எங்கள் பெருமை உங்கள் உதிரத்துக்குரியவர்கள் என்பதே. வேழம் மானுடனாக வந்து அமர்ந்திருந்த பெருமையை ஹஸ்தி வழியாக பெற்றது நம்குலம். இன்றும் அது நீடிக்கிறது. என்றும் அது நீடிக்கும். வேழங்கள் கடந்துசெல்லும் எளிய பாதையே நான் என்று அறிகிறேன். என் பிழைபொறுத்து என்னையும் என் இளையோரையும் வாழ்த்துங்கள்!” என்று முடிந்த கடிதத்தில் கலங்கியது திருதிராஷ்டிரருடைய கண்கள் மட்டுமல்ல. பெருமிதத்தோடே சிவந்தது என் கண்களும் தான். தருமனுடைய அந்த முதிர்ச்சியான வார்த்தைகளும் செயல்களும் என்னை பிரமிக்க வைத்தன.
விதுரரும் குண்டாசியும்: விதுரருக்கும் குண்டாசிக்கும் இடையே நிகழும் உரையாடல் தந்தை மகன் பாசத்தை உணர்த்தக் கூடியது. கௌரவர்களில் குண்டாசி மட்டுமே அவரை தந்தையே என்று அழைத்தான் எனும் போதே அந்த உறவு புலப்படுகிறது. பாண்டவர்களின் இறப்பு செய்திக்குப் பின் குண்டாசி குடித்தே காலத்தைக் கழிக்கிறான். அவனை நீண்ட நாள் கழித்து விதுரர் சந்திக்கும் ஒரு தருணம் சொல்லப்படுகிறது. அப்போது விதுரர், “உன்னை மண்ணில் வந்த தேவருலகக் குழந்தைபோல பார்த்தவன் நான். கௌரவர்களிலும் பாண்டவர்களிலும் நான் உனக்களித்த முத்தங்களை எவருக்குமே அளித்ததில்லை. உனக்காக தனிமையில் நான் விட்ட கண்ணீரை உன் அன்னையும் விட்டிருக்க மாட்டார்.” என்று மனம் உருகுகிறார். பாண்டவர்கள் உயிரோடு இருக்கும் செய்தி அறிந்தபின்னும் பீமன் அவனை ஏற்றுக் கொள்வானா என்று ஐயம் கொள்ளும் குண்டாசியிடம் “மைந்தர் உள்ளங்களில் மூதாதையர் வந்தமரும் கணங்கள் உண்டு மைந்தா. மூதாதையரை வேண்டிக்கொள். நாம் அவர்களின் குருதி. அவர்களின் கனவுகளின் நுனி. அவர்கள் விண்ணுலகில் இருந்து நம்மை கனிந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அவர்கள் கைவிட மாட்டார்கள்” என்று ஆற்றுப்படுத்துகிறார். விதுரரின் வாஞ்சையான கனிவான அந்தப் பேச்சாலும் குண்டாசியின் மரியாதையும் அன்பும் கலந்த மொழியாலும் பாசஉணர்வு மனத்தை நிறைத்துவிட்டது.
குண்டாசியும் பீமனும்: பீமன் குண்டாசியை அடையாளம் கண்டுகொண்ட நொடியில் அவனைக் கண்டு முதலில் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடு சாய்த்து “குடிக்கிறாயா? குடிக்கிறாய் அல்லவா? மூடா. இனி ஒரு சொட்டு உன் வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன்” என்று கண்டித்துக் கூறி மறுகணமே அள்ளி அணைத்துக் கொள்கிறான். ஏற்கனவே விதுரரிடம் பீமன் தன்னை ஏற்றுக் கொண்டால் தான் குடிக்காமல் இருப்பேன் என்று கூறியிருப்பான். இந்த நிகழ்வுக்குப் பின் விதுரர் ஆறுதல் அடைந்து குண்டாசியைப் பார்க்க “தந்தையே,. அவரது ஆன்மா என்னை முழுமையாக ஏற்றுத்தழுவியது இப்போது… ஆனால் அவர் உடல் என்னை ஏற்கவில்லை. அது இனி ஒருபோதும் எங்களை ஏற்காது.” என்று உணர்கிறான். “ஒருநாள் அவர் கையால் என் தலை உடைந்து தெறிக்கும் தந்தையே. சற்று முன் அதை அத்தனை அருகே உணர்ந்தேன்” என்று அவன் கூறும்போது உள்ளம் கலங்குகிறது. சேரவியலாத ஒரு விளக்கம் உறவுகளுக்குள் நிகழ்ந்து விட்டதை உணர்ந்து மனம் கனக்கிறது.
கர்ணனும் துரியனும்: வண்ணக்கடலில் துரியன் கர்ணனுக்கு அங்க நாட்டை அளித்து அரசனாக்கி அவமானத்திலிருந்து மீட்ட தருணம் உணர்வுப்பூர்வமானது. பிரயாகையின் கர்ணன் மேலும் தன் வித்தையைக் கூராக்கிக் கொள்ளும் பொருட்டு பரசுராமனிடம் சென்றிருப்பதாக நாவலில் பிறர் சொல்லிக் கேட்டு மகிழ்வடைந்தேன்.
கர்ணன் தன்னை அங்க நாட்டு அரசனாக மணிமுடி சூட்டிய அந்தத் தருணத்தை நெகிழ்ச்சியோடு துரியனிடம் நினைவுகூர்கிறான். “அது வரை நான் என்னை தனியனாக சூதனாக மட்டுமே எண்ணியிருந்தேன். நான் வில்திறன் கொண்டது என் இயல்பினாலும் என் தன்மதிப்பை எங்கும் இழந்துவிடக்கூடாதே என்பதனாலும் மட்டும்தான்.” என்ற கர்ணனிடம் ”என் வாழ்வும் இறப்பும் உனக்காகத்தான் என்பதனால்… நான் விழைவது அந்த நட்பை மட்டுமே” என்று துரியன் கூறும்போது சிலிர்க்கிறது.
”அன்று அக்களத்தில் அறிந்தேன். என்றோ ஒருநாள் பெரும்போர் ஒன்றில் நான் பாண்டவர்களுக்கு எதிராக படைநிற்கப் போகிறேன். உங்களுக்காக, உங்கள் தம்பியருக்காக அதில் நான் வென்றாகவேண்டும்.” அந்தக் காரணத்திற்காகவே பர்சுராமரிடம் சென்றதாக கர்ணன் கூறுகிறான். பரசுராமரிடம் ஷத்ரியர்களுக்கு போரில் துணை நிற்பதில்லை என்ற வாக்குறுதியை அளித்திருந்தால் கர்ணனுடைய வாழ்வு மாறியிருக்கும். இந்த செய்தியை அறிந்து துரியோதனன் விசனப்பட்டு “நீ அந்த வாக்குறுதியை அளித்திருக்கவேண்டும். உனக்கு தென்னகத்தில் ஒரு பேரரசை உன் ஆசிரியர் அமைத்துத் தந்திருப்பார். கர்ணா, நீ அடைந்த அனைத்து இழிவுக்கும் அதுவல்லவா விடை? என்ன மூடத்தனம் செய்துவிட்டாய்? இனிமேல் உன் ஆசிரியரை சந்திக்க முடியுமா? அவ்வாக்குறுதியை அளிக்கமுடியுமா? சிந்தித்துப்பார், அங்கநாட்டை நான் உனக்களித்ததே நீ அடைந்த குல இழிவை சற்றேனும் போக்கத்தான். அதற்குக் கைமாறாக அவ்விழிவை முற்றிலும் அகற்றும் ஒரு பெருவாய்ப்பை தவறவிட்டாய் என்றால்… ஒருபோதும் நீ செய்திருக்கக் கூடாது” என்கிறான். இந்த வரிகளில் துரியனின் நட்பை எண்ணி வியந்தேன். ”எளிய சூதன் என்றாலும் கர்ணன் ஒருபோதும் கொடுத்ததை திரும்ப வாங்குவதில்லை. உங்கள் பொருட்டு களத்தில் நிற்பது என் கடன். எதிரே பரசுராமரே வில்லேந்தி வந்து நின்றாலும்கூட.” என்று கர்ணன் சொல்லி நிறைவு செய்த அந்தத் தருணம் ஏக்கம் நிறைந்த அழுகையில் மூழ்கிப்போனேன்.
கர்ணன் திரெளபதியைக் காணும் முதல் பார்வையில் காதல் வயப்படுகிறான். அதை துருவன் கண்டுகொள்கிறான். ”பாரதவர்ஷத்திலேயே யாதவ கிருஷ்ணனை தவிர்த்தால் அவர்தான் பேரழகன் பெருவீரன் என்கிறார்கள். ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.” என திரெளபதியை மணம் முடிப்பதற்கான அத்தனை பொருத்தங்களும் கர்ணன் கொண்டிலங்குகிறான். ஆனால் வெறுமே அங்க நாட்டு அரசனாக அந்த விழைவை கைக்கொள்ள இயலாது என்ற நடைமுறைச் சிக்கலும் உள்ளது. திரெளபதியை விரும்பியவனாகவும், அவளை மணம் முடித்துச் செல்லவும் வந்திருந்த துரியன் கர்ணனிடம் ”ஆணும் பெண்ணும் கண்டுகொள்வதை கந்தர்வ கணம் என்கின்றன நூல்கள். அது நிகழ்ந்ததை நான் கண்டேன். உன் விழிகளை நான் நோக்கினேன். அவை கந்தர்வனின் விழிகள். அவள் விழிகளும்தான்.” என்று கூறி “அவளை வென்று துணை கொள்ளப்போவதும் நீயே” எனும்போது மேலும் கண்கள் கலங்கி விட்டது. துரியன் என் மனதில் நின்றுவிட்டான ஜெ. அவன் போரில் வீழ்ந்து இறந்து படும் கணம் ஒன்று உண்டாயின் அந்தத் தருணத்தில் அவன் கர்ணனின் மேல் கொண்ட தீரா அன்பிற்காகவே அழுவேன்.
இந்த நாவலில் வரும் பெரும்பாலான பாசப்பிணைப்புகள் ரத்த பந்தத்தால் வருவன. ஆனால் கர்ணனும் துரியனும் கொண்டிருப்பது அதுவல்லாத ஒன்று. துரியனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு துரியனும் கிடைத்தற்கரிய பேறு என்று தான் சொல்ல வேண்டும். ஒன்றுக்கு ஒன்று சலைத்ததல்லாத நட்பைப் பெறுவதன் பேறு அளப்பறியது. அதை வியக்கிறேன்!
பிரயாகையின் காதல் தருணங்கள்
“பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்து வாரும்.” என்ற கம்பனின் வரிகளைப் போலவே பொருந்தும் காதல் தருணங்களைக் கண்டு நாவலில் சிலாகித்திருந்தேன் ஜெ. பொருந்தும் காதலோ திருமணமோ இரண்டையுமே கந்தர்வத் தருணம் எனலாம். சத்யவதி சித்ராங்கதனுக்கு ஏங்கியது போல, குந்தி தன் காதலையெல்லாம் கொட்டித்தீர்த்து சிறுமியாகிவிட எங்கியது போல என ஒரு இணையை நோக்கி மானுட மனம் காதல் கொண்டு கொண்டே தான் இருக்கிறது. தான் அடைய முடியாத இடத்தில் இருப்பினும் அந்த இணையை நோக்கி அது வாஞ்சை கொள்ளாமல் கடந்துவிடுவதில்லை. அங்ஙனம் மானுடர் அனைவருக்கும் சாத்தியமானதல்ல என்பதனாலேயே அது நிகழும் தருணங்களை நோக்கி மனம் இனிமையோடு பயணிக்கிறது. அப்படியான இணை தருணத்தை நாவலில் ரசித்திருந்தேன்.
இடும்பி-பீமன்: மலை போன்று உடலையும், வெளிப்படையான உள்ளத்தையும் கொண்டிலங்கும் பீமனுக்கு இணையானவளாக இடும்பி காணப்படுகிறாள். குந்தி தன் முதல் பார்வையில் இடும்பியையும் பீமனையும் பார்த்து பொறாமை தான் கொள்கிறாள். நகரத்துப் பெண்களின் செயற்கையான அழகை இடும்பியுடன் ஒப்பு நோக்கும் ஒரு தருணத்தில் இடும்பியின் இயல்பான அழகை பீமன் விரும்புகிறான். நிகழ்வுகளுக்கேற்ப, ஆட்களுக்கேற்ப நடிக்கத் தெரியாத இடும்பி அதே இயல்பு கொண்ட பீமனுக்கு பொருத்தமான இணை. இனிமையான உரையாடல்களோ மெல்லிய உரசல்களோ இல்லாத காட்டுத்தனமான காட்டின் மகளுடைய காதல் பீமனுக்கேற்றது. அவளுக்கு இணையான வீரம் கொண்டதால் பீமன் அவளுக்கு ஏற்றவன். கரு வேங்கை பூத்தது போல இருக்கும் இடும்பிக்கும் காற்றின் மகனான பீமனுக்கும் இடையேயான காதலின் விளைவாக பூத்த கடோத்கஜனையும் அதனால் விரும்பலானேன்.
அர்ஜுனனும் கண்ணனும்: தான் வியந்து கண்டோரெல்லாம் சிறியோரக் கண்டு மனம் வருந்தும் அர்ஜுனன் மேல் சற்றே பரிதாபம் கொள்ளாமல் மனம் அமையவில்லை. அன்னையின் தொட்டணைப்பை உணராதவன்; தந்தையின் அருகமைவைக் கொள்ளாதவன் முதன் முதலில் காதல் கொண்டது தன் ஆசிரியர் துரோணரிடம் தான். அவர் நிமித்தம் அவரின் மகனான அஸ்வத்தாமனையே வெறுத்தவன். கர்ணனின் அருகமைவை விரும்பாதவன். அவனின் முதல் மன உடைவு தன் ஆசிரியருக்காக வெற்றி கொண்ட துருபதனை அவர் எதிர்கொண்ட விதத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த மன விலக்கத்தினால் பித்து கொண்டு தீவிரமான விற்பயிற்சியில் ஈடுபடுகிறான். பெண்களின் மேலான காதலை அறிவதற்கு முன்னர் தன் உடலால், காமத்தின் துணை கொண்டு எதையோ தேடித்திழைக்கிறான்.
அர்ஜுனன் கிருஷ்ணனைக் கண்டும் கேட்டும் வியக்கிறான். கிருஷ்ணனின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து நோக்குகிறான். ரசிக்கிறான். கிருஷ்ணனின் அந்தப் புன்னகையை வாய்ப்பு கிடைக்குந்தோறும் சந்திக்கிறான். போரின் போது சக்கரத்தட்டு கொண்டு போர் புரியும் கண்ணனை வியக்கிறான். அவன் கண்ணசைவிற்காக காத்து நின்று திரெளபதியை மணம் முடிக்கிறான். காமத்தினால் ஒரு போதும் அமைந்துவிடாத அர்ஜூனனுக்கு பெருங்காதலாக அமையப்போவது கண்ணனாக மட்டுமே இருக்க முடியும் என்று கண்டேன்.
திரெளபதி-கர்ணன்: அரக்கு நிறப்பட்டாடையில் அழகு மிகுந்திருந்த திரெளபதி தன் முதல் பார்வையில் கர்ணனை சந்திக்கும்போது நடந்தது திகைப்பு தான். கர்ணனின் பொன்னிற கவசகுண்டலத்தை உணர்ந்த மிகச் சிலருள் ஒருவளாக திரெளபதியும் காணக்கிடக்கிறாள். “நிமிர்வும் உடலின் சமநிலையும் ஒன்றா என்ன? ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.” என்று அந்த நிகழ்வை காணும் துரியன் அவர்கள் இருவரைப்பற்றியும் நினைத்துக் கொள்கிறான். திரெளபதி தன் தோழியான மாயையிடம் யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை கேட்டபோது “கர்ணன் முன் நீங்கள் பேதைக்காதலியாக ஆனீர்கள். அவ்வண்ணமே அவர் முன் முழுவாழ்நாளையும் கழிக்க முடியும் என்றால் உங்களுக்குரியவர் அவரே!” என்கிறாள். பிறக்கும்போதே சக்கரவர்த்தினியாகப் பிறந்து பாரதவர்ஷத்தையே ஆழும் விதியைக் கொண்டு மண் அமைந்த திரெளபதி கர்ணனுக்கானவள் அல்ல என்பதை நான் எப்போதோ முடிவு செய்திருந்தேன். வெறுமே பேதைக் காதலியாக மட்டும் அமைந்துவிடக்கூடியவள் அல்ல அவள். “கர்ணா நமக்கு அவள் வேண்டாம்டா!” என்று அவனிடம் சென்று சொல்லத்தோன்றியது. ஒருவேளை குந்தி தன் மகனாக அவனை முன்னரே அறிவித்திருந்தால் பாண்டவர்களில் ஒருவராக இருந்து திரெளபதியை மணம் முடித்திருக்கக் கூடும். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்தாலும் தீராக் காதல் கொண்டிருப்பவனின் காதலை பிற ஐவருடன் பகிர்ந்திருக்க அவனால் முடியாது என்றும் நினைத்தேன். ஆட்டுவிப்பவையெல்லாம் முறையாக ஒருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கண்டேன். ஆனாலும் எல்லா வகையிலும் பொருந்தி அமையும் இருவரது முதல் காதல் மனதை நிறத்துக் கொள்கிறது.
வெண்முரசு எனும் தொடர் நாவல் வரிசையில் பிரயாகை எனும் ஒப்பற்ற நாவலுக்காக நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.