இனிய ஜெயம்
நோய் முடக்க சூழலுக்குப் பிறகு புதுச்சேரி வெண்முரசு கூடுகை இனிதே மீண்டும் துவங்கியது. சிறப்பு வருகை, வாசகர் சென்னை புத்தகக்கடை செந்தில் அவர்கள். அவரைக் கண்ட கணமே ஓடிச்சென்று இறுக அணைத்துக் கொண்டேன். அறிமுகமான முதல் வார்தையிலேயே வெண்முரசு உரையாடல் துவங்கி விட்டது.
நீண்ட நாட்கள் கழித்த நட்பு கூடல், வெண்முரசுக்கான புதிய வாசகர் வருகை எல்லாம் கூட ஹரிக்ரிஷ்ணன் மிகுந்த உற்சாகம் அடைந்தார். வழமை போல இரவு 8.30 வரை தடத்தைவிட்டு எங்கும் விலகாமல் விவாதம் நிகழ்ந்தது. செந்தில் பேசுகையில் இரண்டு அத்தியாயங்களிலும் நிகழும் பல்வேறு உணர்ச்சிமிக்க தருணங்களை அணுகி பேசினார். அதன் தொடர்சி வெண்முரசு நெடுக எந்தெந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு வருகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்றெல்லாம் உற்சாகமாக பேசினார்.
திருதுராஷ்டிரரின் பெருந்தன்மை வெளிப்படும் தருணம் பேசப்படும் போது, எல்லோருமே உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்தோம். நிகழ்ச்சி நிறைகையில் ஹரிக்ரிஷ்னன் அவர்கள் செந்திலுக்கு சிறிய பரிசு ஒன்று வழங்கினார். எல்லாம் இனிதே முடிந்து கலைகையில், செந்தில் ஹரிக்ரிஷ்ணன் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்.
செந்தில் தனது டூ வீலரிலேயே சென்னையிலிருந்து வந்திருந்தார். ஆகவே இரவுப் பயணம் தேவையில்லை, அருகே திருவாண்டார்கோயில் தான் தாமரைக்கண்ணன் வீடு தங்கி காலை கிளம்புங்கள் என்று நண்பர்கள் மட்டுருத்த, செந்தில், சிதம்பரம் அதியன், நான், மூவரும் (அவர் வீட்டுக்காரம்மா அம்மா வீடு போயிருக்கிறார்) தாமரை வீட்டில் இரவு தங்கினோம்.
இரவு 2.30 வரை அரட்டை. கொஞ்ச நேரம் சாண்டில்யன், மிச்ச நேரம் வெண்முரசு. இடையே நான் எதற்கோ ‘ஜெ என்ன சொல்வாருன்னா’ என்று துவங்க, சார்…ஜெ சார் அப்படி சொல்லுங்க என்று திருத்தினார் செந்தில். சரிதான் என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.
தாமரை வித விதமான கேள்விகள் வழியே செந்திலை தொடர்ந்து பேச வைத்துக்கொண்டே இருந்தார். செந்திலை மதம் மாற்ற இருவேறு மத அமைப்புகளை சேர்ந்த போதகர்கள் அவ்வப்போது வந்து எவ்வாறெல்லாம் தொடர்ந்து பேசி அவரை கேன்வாஸ் செய்வார்கள் என்பதை கிட்டத்தட்ட மோனோ ஆக்ட்போல சென்னைத் தமிழில் செய்து காட்டினார்.
அவருக்கு பிடித்த நடிகர்கள் இருவரில் அடுத்தவர் கமல், முதல்வர் சிவாஜி. அதில் பிடித்த படம் படித்தால் மட்டும் போதுமா. “நெசோ தெரியசோலோ அவ்ளோதான்… சிவாஜிக்கு பேஜாரா பூடும்” என்ற ரீதியில் சென்னை ஸ்லாங் இல் அவர் பேசிக்கொண்டே போனதை கேட்டது தனி இன்பம்.
இரவு இரண்டரைக்கு தூங்கி, அதிகாலை ஐந்து முப்பதுக்கு விழித்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் உரையாடலை தொடர்ந்தோம். குறிப்பாக அஜிதனை ஜெ யின் மகன் என்று தெரியாமல் உங்க பேர் ஜெயமோகன் எழுதின விஷ்ணுபுரம் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பேருங்க என்று அஜிக்கே அவர் அறிமுகம் செய்து வைத்த தருணத்தை சொல்கையில் சிரித்துத் தளர்ந்தோம்.
அப்படியே காலை தேநீர் அருந்திவிட்டு சிரிக்க சிரிக்கப் பேசியபடியே ஒரு காலை நடை. புதுவை அருகே உள்ள திருபுவனை ஊரில் சும்மா பேச்சுக்கு முக்கோணம் என வரைந்தால். ஒரு முனை திருவாண்டார் கோயில். மறு முனை வீர நாராயண விண்ணகரம் எனும் தோதாத்ரிநாதர் கோயில். கீழ் முனை குந்தங்குடி மகாதேவர் கோயில். நடுவே மிகப்பெரிய ஏரி (கோக்கிழாரடி பேரேரி).
இந்த திருபுவனை நகரின் முந்திய பெயர் திருபுவனமகாதேவி சதுர்வேதி மங்கலம். முதலாம் பராந்தக சோழன் அவர் முதல் மனைவி பெயரில் அமைத்த ஊர். அவரது இரண்டாம் மனைவி (கோக்கிழாரடி) வெட்டிய ஏரி. மூன்று அழகிய சோழக் கலை மேன்மைகள் மத்தியில் இன்றும் வாழும் சோழக் கொடையாக அந்த ஏரி.
தாமரை வீட்டிலிருந்து நடை தொலைவில் திருவாண்டார் கோயில். காலை நடை கோயில் வாசலில் முடிந்தது. ஊருக்கு கோயிலுக்கு வடுகூர் என்ற பெயரும் உண்டு. மூலவர் வடுகூர் நாதர், அல்லது பஞ்சனதீஸ்வரர். இறைவி திரிபுர சுந்தரி. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்.
ராஜகோபுரம் அற்ற வாயில் கடந்தால் வலதுபுறம் சிறிய வடிவில் வடுக பைரவர் சந்நிதி. கோவிலை சுற்றி வர, வெளிப் பிரகாரத்தின் இடதுபுறம் வலம்புரி விநாயகர் சந்நிதி. அது நிற்கும் தளத்தில் கல்வெட்டில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் எனும் பெயரை தாமரை வாசித்துக் காட்டினார்.விமானத்தில் வியாசர் சொல்ல சொல்ல பாரதம் எழுதும் விநாயகர் படிமை.
கோயில் மையமாக தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றதே ஆன சிறிய சுதை விமானம், அரிய வடிவிலான துர்க்கை படிமைகளை கண்டேன். பிரகாரம் சுற்றி வர வலது புறம் முருகன் சந்நிதி. வடுகூர் கந்தன் மீது அருணகிரிநாதர் பாடிய கவியை தாமரை மிக அழகாக பாடினார். கோயிலில் முதல் பூஜைக்கான ஏற்பாடுகளில் இளம் அர்ச்சகர் சமஸ்க்ருத ஸ்லோகங்களை உரத்து முழங்கியபடி ஈடுபட்டிருந்தார்.
அவர் சற்றே ஓய்ந்த தருணம், சுவரில் கண்ட, இந்த தல இறைவன் மீது திருஞானசம்பந்தர் பாடிய தேவார பதிகத்தை செந்தில் உரக்க வாசித்தார். முதல் சுடராட்டின் வழியே இறைவன் இறைவி அருள் பெற்று வெளியேறி மீண்டும் கோயிலை சுற்றி வந்தோம்.
குறைவான ஆனால் மிக அழகிய சிற்பங்கள். அழகிய பிட்சாடனர். நண்பர் பிட்சாடனர் தோளில் ஏதோ மூட்டை தொங்குதே அது என்ன என்றார். பிட்சாடனரும் கங்காளரும் பார்க்க ஒரே போல இருந்தாலும் கங்காளர் கையில் கங்காளம் இருக்கும். பிட்சாடனர் இடது மேல் கையில் எலும்பில் செய்த கட்வாங்கம் இருக்கும். அதை தோளில் போட்டிருப்பார். அதன் முனையில் தொங்கும் மூட்டை உரிக்கப்பட்ட விஷ்வக்சேனர்.
அழகிய தட்சிணா மூர்த்தியை கடந்து லிங்கோத்பவர் படிமத்தை காட்டி செந்திலுக்கு அப்படிமத்தின் கதை சொன்னேன். ”வெண்முரசுல வருதுங்க இதுவும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.
துர்கை கோஷ்டத்தின் இரு புறமும் இடது புறம் சிவன் உமையுடன் நிற்கும் ரிஷபநாதர். வலது புறம் சிவன் உமையுடன் கலந்து நிற்கும் அர்த்தனாரி ரிஷபநாதர். இவை போக, பிட்சாடனர், காலாந்தகர், யோகீஸ்வரர், ராவணனை தன் வால் கொண்டு கட்டிப்போட்டுவிட்டு சிவ பூஜை செய்யும் வாலி என ஆங்காங்கே கோயில் தள ஆதிட்டான பட்டி நெடுக கையளவேயான அழகிய புடைப்பு சிற்பங்களின் வரிசை. சுற்றிச் சுற்றி வந்தோம்.
வெளியேறி தேநீர் கடை வாசலில் அரட்டை தொடர, நெடு நேரம் ஆகிவிட்டதால் செந்தில் விடைபெற்றுக் கிளம்பினார். ஒவ்வொருவராக கட்டி அணைத்து விடை (தாமரைக்கு கூடுதலாக ஒரு முத்தம்) பெற்றார். அவர் தூரம் சென்று மறைகயில் அவரது கள்ளமின்மையின் நறுமணம் எங்களுடன் தங்கிவிட்டது போலும் ஒரு மகிழ்ச்சி.
அதியனும் சிதம்பரம் நோக்கி பேருந்து ஏற, இடைவெளியில் காளான் சிறுகதை புகழ் விஷ்ணுவும் திருமாவளவனும் வந்து இணைந்து கொள்ள, நேரம் உச்சி வெயில் நோக்கி நெருங்கி கொண்டிருக்க, எங்கள் அடுத்த இலக்கான தோதாத்ரிநாதர் கோயில் நோக்கி விரைந்தோம். கதவை பூட்டுவதற்காக இழுத்த நிர்வாகியை குறுக்கே விழுந்து தடுத்தோம்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்தான், எனினும் இப்போது கொரானா அரசு வழிகாட்டு விதிகளின்படியே கோயில் செயல்பாடுகள் நிகழ்கிறது என்பதால் உரிமை கொண்டு எதையும் கேட்க முடியாது. நிர்வாகி “தப்பா எடுத்துக்காதீங்க ஐஞ்சே நிமிஷம்தான்” என்றபடி மூன்றடி அகலம் மட்டும் கதவை திறந்து விட்டார்.
தாமரை என் பின்னாலேயே வாங்க என்றபடி, கோயில் சுற்றிலும் இருந்த கையளவேயான ராமாயண கதை பட வரிசையை, பாகவத கதை வரிசையை ஒவ்வொன்றாக காட்டினார். புருஷாமிருகம் புடைப்பு சிற்பம் அருகே உள்ளங்கை அகல விமான புடைப்பு சிற்பம் ஒன்றை காட்டி இதை நியாபகம் வெச்சிக்கங்க என்றுவிட்டு, வர மங்கை நாயகி சமேத தோதாத்ரிநாதர் சன்னதி நோக்கி உயரும் படிக்கட்டை காட்டினார்.
யானைக் கொட்டட்டியில் யானைகள் செய்யும் களேபரம். ஒரு யானையின் அரைக்குள் ஒருவன் தலை சிக்கிக்கொள்ள, சுற்றிலும் நடன மங்கைகள் ஆட்டம் உறைய அதை சிரித்தபடி நோக்கி நிற்கிறார்கள். முதலாம் பராந்தகன் எடுப்பித்த மிக அழகிய சோழர் கோயிலை நேரமே இன்றி மின்னல் வேகத்தில் சுற்றி வந்தோம். அதை விட வேகத்தில் பெருமாளை சேவித்து விட்டு, கோயிலை பிரிய மனமின்றி வெளியேறினோம்.
குந்தங்குடி மகாதேவர் கோயில் மூடி இருந்தாலும் வெளியே இருந்து பார்ப்போம் என்ற முடிவுடன் சென்றோம். வழியில் வாழ்வில் முதன் முறையாக நடுத்தெரு நாராயணனை கண்டேன். வெறுமனே தெரு முனையில் ஒரு கூரையின் கீழ், கம்பி கூண்டுக்குள், ஒரு 10 அடி நீள அரங்கர் படுத்திருந்தார். கால் மாட்டில் 7 அடி உயர கருடாழ்வார் நின்றிருந்தார். பாம்பணை அற்று வெறுந்தரையில் ஒருக்களித்துப் படுத்திருந்தால் அப்படி பெருமாளை பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக இருக்கும் என்று இன்றுதான் அறிந்தேன். சரி விடு உனக்கு ஒரு காலம் வராமலா போகும் என்று ஆறுதல் சொன்னேன். கரியவன் சூடிய மயிற்பீலி “வந்துட்டாலும்” என்று முனகியது.
கிளம்பி குந்தங்குடி சென்றோம். தொல்லியல் களம்தான் எனினும் எண்ணியவாறே பூட்டி இருந்தது. தாமரை பார்த்து வைத்துக் கொள்ள சொன்ன கையளவு விமான புடைப்புசிற்பம் இங்கே கோயிலாக எழுந்திருந்தது. அழகிய கருங்கல் கோயில். விஷ்ணு “வேலி தாண்டி குதிச்சிடுவோமா” என்றார். “அவ்ளோ கலை தாகம் வேண்டாம் இன்னொருநாள் வருவோம்” என்று தாமரை முடித்து வைக்க, புறப்பட்டோம்.
வழியில் தாமரைத் தடாகம் ஒன்று கண்டோம். அங்கிருந்து (அருகே சோழர் கால நவ கண்ட சிற்பம் அடங்கிய சப்த மாதா கோயிலொன்று பூட்டிக் கிடந்தது) சற்று நேரம் உரையாடினோம். வெளியேறி ஐஸ்க்ரீம் உண்டு அங்கேயே நின்று நீண்ட நேரம் உரையாடி விட்டு, பிரிய மனமே இன்றி அவரவரும் அவரவர் இல்லம் மீண்டோம். கடந்தன தேனில் தோய்ந்த இரு தினங்கள். அடுத்த சனி ஞாயிறு கோவை. நண்பர்கள். வெண்முரசு.பயணம். வரும் இனிமைகள் காத்திருக்கின்றன.
கடலூர் சீனு