இடதுசாரிகளும் வலதுசாரிகளும்

Gheorghe Virtosu – Socialist Fraternal Kiss

இரு சொற்கள்

அன்புள்ள ஜெ..

உங்கள்  தளத்தில்  ஒரு வாசக சகோதரர் இப்படி எழுதி இருக்கிறார்.இரு சொற்கள்

“மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம் கூட வலதுசாரித்தனம் தான். அந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல என்பது பொருளியல் வலதுசாரித்தனம்.”

வலதுசாரி என்பதற்கு இந்த வரையறையை நீங்கள் ஏற்கிறீர்களா?

தீவிர இடதுசாரி எதிர்ப்பாளரான அயன் ராண்ட் ,   இனவாதம் நிறவாதம் போன்றவை  ஹிட்லரின் நாஜியிசத்துக்கும்  சோவியத் யூனியனின் கம்யூனிசத்துக்கும் பொதுவான அம்சம் என்கிறார்.நாஜி ஜெர்மனியில்  தாங்கள் பரம்பரை பரம்பரையாக தூய ஜெர்மானியர்கள் என நிரூபித்தாக வேண்டும் .  அதற்கேற்ப  கேள்விப்படிவம் அளிக்கப்படும்

சோவியத் யூனியனில் அதே போல பலதலைமுறைகளாக தாங்கள் பாட்டாளிகள், பரம்பரை பரம்பரையாக நிலமற்றவர்கள் என தமது ரத்த தூய்மையை நிரூபித்தாக வேண்டும். சில தலைமுறைகளாக கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடந்தால் ,  கம்யூனிசம் என்பது ஜீனில் கலந்து , அதன் பின் பிறக்கும் சோவியத் குழந்தை பிறக்கும்போதே கம்யூனிஸ்ட்டாக பிறக்கும் என சோவியத் கம்யூனிஸ்ட் தலைமை நம்புவதாக எழுதுகிறார்

சமத்துவம் , அனைவரும் சமம் போன்ற  கம்யூனிச கருத்துகளின் இன்னொரு வடிவம்தான்  இனவாதம் , நிறவாதம் போன்றவை என்கிறார் அவர்.மாற்று நம்பிக்கைகளை , கலாச்சாரத்தை அழிக்க முயலும் சீனா உட்பட  பல இடதுசாரி நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியை வைத்து இனவாதம் மதவாதம் போன்றவை இடதுசாரித்தனம் என சொல்லிவிட முடியாது.ஆக்கப்பூர்வமான  இடதுசாரிகளை வைத்துதான் இடதுசாரிக்கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டும்

இலக்கியத்தைப் பொருத்தவரை இடதுசாரி அழகியல்பற்றிப் பேசும் இக்கட்டுரை முக்கியமானது இடங்கை இலக்கியம்

ஆனால் வலதுசாரி என்பது , ஏன் அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் வரிகளை வைத்தும் வலதுசாரிகளில் இருக்கும் தவறான ஆளுமைகளை வைத்தும் வரையறை செய்யப்படுகிறது? குறைந்த பட்ச அல்லது பூஜ்ய அரசாங்கம் என்ற வலதுசாரிக்கருத்துகளை வலியுறுத்திய எம் எஸ் உதயமூர்த்தி ,  சோசலிஷப்பாதை இந்தியாவுக்கு என்றல்ல  எந்த நாட்டுக்குமே உதவாது என்று சொல்லி  , சுதந்திராகட்சி நடத்திய ராஜாஜியை ஏன் கருத்திக்ல்கொள்ளவில்லை..

கஷ்டப்பட்டு  ரிஸ்க் எடுத்து  என் அறிவை பயன்படுத்தி நான் செய்யும் தொழிலுக்கு நான் ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் ? எந்த  சமூக பங்களிப்பும் ஆற்றாமல் வெறுமனே எங்கள் உழைப்பை ருசிக்கும் சோம்பேறிகளிடம் வரி வாங்கி அரசு அல்லவா எங்களுக்கு ஊக்கத்தொகை  தர வேண்டும்?தகுதி இருப்பவன் சட்டத்துக்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விட்டுப் போகிறான் . அனைவருக்கும் சம வாயப்பு என்ற பெயரில் திறமைகளை ஏன் முடக்கப்பார்க்கிறீர்கள் ?   ஓட்டபந்தயத்தில் அனைவருக்கும்,சம வாய்ப்பு வழங்க இத்தனை வேகத்துக்கு மேல் யாரும் ஓடக்கூடாது என தடை போடுவீர்களா?-என்று எழுதிய அயன்ராண்ட் , இதே கருத்துகளை  வலியுறுத்தி , அரசுக்கு வரி கட்ட மறுத்து தன் கண்டுபிடிப்புகளை அழித்து ஒழித்த ஜிடி நாயுடு போன்ற வலதுசாரிகள் இனவாதம் , நிறவாதம் பேசுபவர்கள் அல்லவே?

ஜாதி அழிப்பு என்ற பெயரால் ஜாதித்தொழில் சார்ந்த குற்ற உணர்வால் நூற்றுக்கணக்கான நூல் நூற்பு முறைகள் , கட்டட தொழில் நுணுக்கங்கள் ,  உலோகவியல் என பலவற்றின் அரிய ஞானக்களஞ்சியங்களை நாம் இழந்து வருகிறோம் என்றும் குறைந்தபட்ச அரசு என்றும் பேசும் ஜக்கிவாசுதேவ் ஒரு வலதுசாரி என வைத்துக்கொண்டால் அவரும் இனவாதம் பேசுபவர்  இல்லையே?

அல்லது  வலதுசாரி என்பதே ஒரு எதிர்மறை வார்த்தைதானா ?  இனவாதம் பேசுவது வலதுசாரித்தனம் என்பதுதான் வரையறையா ? பிற்போக்கு என்பதற்கான இன்னொரு சொல்தான் வலதுசாரியா ?

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்

இன்றைய சூழலில் ஒருவர் வலதுசாரி, இடதுசாரி போன்ற சொற்களை திட்டவட்டமான வரையறைகளாகக் கொண்டு, வரலாற்றையும் அரசியலையும் பேசுவது பொருத்தமானதல்ல. பொதுவான அரட்டைகளில் அந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை நாம் அப்படியே எடுத்துக்கொள்கிறோம். அதை தவிர்த்தாகவேண்டும்.

இன்று அச்சொற்களை ஒரே அடிப்படையில்தான் பயன்படுத்தலாம். ஒரு சாரார் தங்களை இடதுசாரிகள், அல்லது வலதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டால், அவர்களைச் சுட்ட அதை பயன்படுத்தலாம். அது ஒரு பெயர்ச்சுட்டு மட்டுமே. அந்த அளவிலேயே நான் பயன்படுத்துகிறேன்.

ஏனென்றால் இந்த இடது வலது அல்லது நடு என்னும் பிரிவினைகள் காலந்தோறும் மாறுபடுபவை. ஹிட்லரின் நாஸி கட்சியின் பெயர் நேஷனல் சோசலிச கட்சி. அதன் நோக்கம் சோஷலிசம்தான். அது ஓர் இடதுசாரி அமைப்பாகவே தன்னைச் சொல்லிக் கொண்டது. ஆனால் இனவாதம் அதன் அடிப்படையாக இருந்தது. ஃபாஸிஸத்தின் சிற்பியான முஸோலினி இடதுசாரி அமைப்புக்களில் இருந்து வந்தவர், தன்னை இடதுசாரி என்றே சொல்லிக்கொண்டவர்.

பொதுவாக உலகமெங்கும் கம்யூனிஸ்டுகள் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லி தங்கள் எதிரிகளை வலதுசாரிகள் என்று சொல்வார்கள். இடதுசாரி அரசியல் என்பது மானுடவிடுதலைக்கும் மானுட சமத்துவத்துக்குமானது என்றும், வலதுசாரி அரசியல் அதற்கு எதிரானது என்றும் அவர்கள்தான் சொல்லி நிலைநாட்டியிருக்கிறார்கள். அரசியல்பிரச்சாரத்தின் விளைவாக உருவான ஒரு பொதுப்புத்திப்புரிதல் அது, அவ்வளவுதான்.

ருஷ்யாவின் கம்யூனிச ஆட்சியில் மைய ருஷ்யாவின் ஐரோப்பிய இனவாதம் ஆசிய இனங்களை ஒடுக்கியது. அவற்றின் பண்பாடுகளை ஒழித்தது. ஆகவேதான் சோவியத் ருஷ்யா உடைந்து சிதறி பலநாடுகளாகியது. சுதந்திரத்திற்குப் பின் ஒவ்வொரு நாடும் அதன் பண்பாட்டை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர்தான் அந்த ஒடுக்குமுறையே நமக்கு தெரியவந்தது. அதுவரை ரஷ்யாவின் மாபெரும் பிரச்சார இயந்திரமும் வாயை வாடகைக்குவிடும் இடதுசாரிகளின் கூச்சல்களுமே நம் சிந்தனைகளை வார்த்திருந்தன.

உக்ரேனின் தேசிய பண்பாட்டு தனித்தன்மை எப்படி ருஷ்யகம்யூனிஸ்ட் ஆட்சியால் அழிக்கப்பட்டது என்றும், அதன் தலைவர்கள் எப்படி உலகளாவிய தளத்தில் இழிந்தோராக இலக்கியம் வழியாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும், உக்ரேன் தனிநாடானபின் அந்த அடையாளங்கள் எப்படி மீட்கப்பட்டன என்றும், எப்படி அந்தத்தலைவர்கள் மீண்டும் வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள் என்றும் இணையத்தில் மிக விரிவாக வாசிக்கலாம். ஒரு சிறு குறிப்பில் நான் அதை எழுதியிருக்கிறேன். [உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது? ] 

அக்கட்டுரையைப்  படித்திப்பருங்கள், சைமோன் பெட்லியூராவுக்கு இழைக்கப்பட்டது எவ்வளவு பெரிய அநீதி என்று புரியும். அது கொலை மட்டுமல்ல, வரலாற்றில் இருந்தும் அழித்தொழிக்கும் மாபெரும் கருத்தியல் வன்முறையும்கூட. ஒவ்வொரு முறை எண்ணும்போது பெட்லியூராவுக்காக என் நெஞ்சு கொதிக்கிறது. எத்தனை லட்சம் கொசாக்குகள், எத்தனை மாபெரும் சிந்தனையாளர்கள், எத்தனை தலைவர்கள் அப்படி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரலாற்றை ஒரு நூறாண்டுக்காலம் வெள்ளைபூசியவர்கள் தங்களை இனவாதத்துக்கு எதிரான தரப்பினர் என்று எப்படிச் சொல்லமுடியும்?

சீனாவின் கம்யூனிச அரசு என்பது முழுக்க முழுக்க ஹான் சீன இனத்தின்  மேலாதிக்கம் கொண்டது. தென்மேற்கு உய்குர் இஸ்லாமியர்களும், வடமேற்கு மங்கோலியர்களும் கிழக்கின் மஞ்சூரியர்களும் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள். திட்டவட்டமான இனவாதம் இன்றும் இங்குள்ள கம்யூனிச கோஷங்களால் மறைக்கப்படுகிறது.

கம்போடியாவின் போல்பாட்  முதல் இன்று வடகொரியாவின் கிம் ஜோங் வரை மாபெரும் மானுடவிரோதிகள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து உருவானவர்களே. போல்பாட்டை கடைசிவரை சீனா ஆதரித்தது, உலகளாவிய இடதுசாரிகள் அவரை ஆதரித்தனர். இன்றும் கிம்மின் பின்னணிச் சக்தி சீனாதான் என்பதை மறக்கலாகாது.

உண்மையில் வரலாற்றில் எவர் இடதுசாரி என்று வரையறை செய்வது மிகக்கடினம். இடதுசாரிகள் என முன்வைக்கப்படுபவர்களின் இனவெறியும் அழித்தொழிப்பும் வெளிப்பட்டதுமே அவரை வலதுசாரி என்று அவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படி ஏராளமானவர்களை வரலாற்றில் பார்க்கலாம். கம்போடியாவின் போல்பாட்டும் கொரியாவின் கிம்மும் உதாரணங்கள். இடதுசாரிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுக்குள்ளேயே ஒரு சாரார் இன்னொரு சாராரை வலதுசாரிகள் என்று சுட்டிக்காட்டி எதிர்ப்பதைக் காணலாம்.

தமிழகத்தில் திமுகவை எந்த வகையில் சேர்ப்பீர்கள்? அது இனவாதத்தை, மொழிவாதத்தைப் பேசும் கட்சி. பழமைமீட்புக் கனவு கொண்டது. ஆனால் சோஷலிசக் கருத்துக்களையும் பேசுகிறது. சமூகநீதியை முன்வைக்கிறது. சமூகநீதியின்பொருட்டு உண்மையிலேயே போராடியுமுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் தன்னை சோஷலிசத்தை ஏற்றுக்கொண்ட இடதுசாரிக் கட்சியாகவே முன்வைத்தது. ஆனால் சோஷலிஸ்டுகள் அதை வலதுசாரிக் கட்சி என்றனர். கம்யூனிஸ்டுகள் காங்கிரஸையும் சோஷலிஸ்டுகளையும் வலதுசாரிக் கட்சிகள் என்றனர்.

சரி, வலதுசாரிகள் எனப்படுபவர்கள் அனைவரும் மானுடசமத்துவத்துக்கு எதிரான கருத்தையா முன்வைக்கிறார்கள்? நடைமுறை என்னவாக இருந்தாலும் பாரதிய ஜனதாக் கட்சி ‘வசுதைவ குடும்பகம்’ [உலகமே ஒரு குடும்பம்] என்னும் கருத்தைத்தானே முன்வைக்கிறது? இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இஸ்லாமை மானுடசமத்துவத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு என்று தானே முன்வைக்கிறார்கள்?

மிகத்தோராயமாக ஒரு விளக்கத்தை அடையலாம். இடதுசாரிகள் பொதுவாக இறந்தகாலத்தை நிராகரித்து எதிர்காலக் கனவு ஒன்றை முன்வைப்பவர்கள். வலதுசாரிகள் இறந்தகாலத்தின் மறுவரவையோ அல்லது இயல்பான நீட்சியையோ, அல்லது மேம்படுத்தப்பட்ட வடிவையோ முன்வைப்பவர்கள். ஆனால் இதுகூட அமெரிக்க,ஐரோப்பிய தாராளவாத அரசியல் கொண்டவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மரபை பொருட்படுத்துவதில்லை. ஆனால் இடதுசாரி அரசியலை ஏற்பதுமில்லை.

மற்றபடி இடதுசாரிகள் மானுடசமத்துவம் அல்லது விடுதலை பேசுபவர்கள் வலதுசாரிகள் அதற்கு எதிரானவர்கள் என்பதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் மட்டுமே. தேவைக்கேற்ப இந்த அடையாளங்கள் மாறுபடும்.

உண்மையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜனநாயகப் பண்புகளை தளராது முன்வைப்பவர்கள், மானுடசமத்துவத்திற்கும் மானுட உரிமைக்குகான அமைப்புகளை உருவாக்கி அவற்றை உலகமெங்கும் கொண்டுசென்றவர்கள், உலகமெங்கும் அப்பண்புகளை பரப்பி நிலைநாட்ட உழைப்பவர்கள் ஐரோப்பிய- அமெரிக்கத் தாராளவாதிகள்தான். அவர்கள் இடதுசாரிகளை ஏற்காதவர்கள். ஆகவே அவர்களை வலதுசாரிகள் என்றுதான் இடதுசாரிகள் முத்திரையிடுகின்றனர். ஆனால் இன்றும் உலகமெங்கும் வறுமை,சுரண்டல், ஒடுக்குமுறைக்கு எதிரான மெய்யான சக்தி அவர்களே.

அதே தாராளவாதிகள் இடதுசாரிப் பொருளியலை முழுமையாக நிராகரிப்பார்கள். சோஷலிசம் என்ற பெயரில் திறமையானவர்களையும் திறமையற்றவர்களையும் இணையாகக் கருதுவதும், திறமையானவனின் உழைப்பை சுரண்டி திறமையற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்று சொல்வதும் மோசடி என்பார்கள். அயன் ராண்ட் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் மானுடசமத்துவம், மானுட உரிமை, மானுட விடுதலைக்கான பெருங்கனவை விதைத்தவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள். அவர்கள் மரபின் நீட்சியாக எதிர்காலத்தை கண்டவர்கள், மரபின் மறு ஆக்கத்தை முன்வைத்தவர்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளால் வலதுசாரிகள் என முத்திரைகுத்தப்பட்டவர்கள்.

தனியுரிமையை ஏற்பவர்கள் வலதுசாரிகள் மறுப்பவர்கள் இடதுசாரிகள் என்பது மிக அபத்தமான ஒரு வரையறை. அப்படியென்றால் இன்று உலகில் இடதுசாரிகளே இல்லை என்று பொருள். சீனா உட்பட அத்தனைநாடுகளும் தனியுடைமையை ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகில் வாழும் அனைவருமே தனியுடைமை கொண்டவர்கள்தான்.

இந்த அடிப்படைகளின்படிப் பார்த்தால் முற்போக்கு- பிற்போக்கு என்பதும் அபத்தமான பிரிவினை. முற்போக்கு என்னும் சொல்லை நான் அவர்கள் அவ்வாறு தங்களைப்பற்றிச் சொல்லிக்கொள்வதனால் அவர்களைக் குறிக்கும் பெயர் என்ற அளவில் மட்டுமே கையாள்கிறேன். இயல்புகளின் அடிப்படையில் அல்ல.

ஒவ்வொரு தரப்புக்கும் அவர்கள் முற்போக்கு, எதிர்ப்பவர்கள் பிற்போக்கு, அவ்வளவுதான். இன்று ஒருவர் மார்க்ஸியர்கள் மொத்தப்பொருளியலையும் சமூகவியலையும் இருநூறாண்டுகள் பழைய மார்க்ஸியக் கொள்கைக்கு இழுத்துக்கொண்டுசெல்ல முயல்கிறார்கள், ஆகவே அவர்கள் பிற்போக்கினர் என்று சொல்லமுடியும் அல்லவா?

இந்தவகையான எளியபிரிவினைகளைச் செய்யாமலிருப்பது இன்றைய சிந்தனையின் அடிப்படை நெறிகளில் ஒன்று. இப்பிரிவினைகள் சென்ற நூற்றாண்டில் தோராயமாகச் செய்யப்பட்டவை. அந்த சொற்சூழலே இன்றில்லை.

ஜெ

https://www.virtosuart.com/blog/10-best-political-art-pieces-and-their-creators-you-must-know

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில் ஒருநாள்
அடுத்த கட்டுரைநாட்டார் தெய்வங்கள் – கடிதம்