இணையத்தில் தமிழில் எழுத…

அன்புள்ள திரு ஜெயமோகன்,
தங்களுடைய வலைப் பூவை(blog வலைப் பூ  தானே?) தொப்பி சர்சை தொடங்கி படித்து வருகிறேன் (நான் தங்களுடைய நெடுநாளைய வாசகன் தான் என்றாலும், தங்களுக்கு ஒரு வலைப்பூ உள்ளது விகடன் மூலமாகவே எனக்குத் தெரிய வந்தது – நன்றி விகடன்). தங்களுடைய பல கட்டுரைகளுக்கு எதிர்வினைகள்(உண்மை சொல்ல வேண்டுமென்றால் ஒத்தவினைகள்) எழுத ஆசைப்பட்டு, மனதுக்குள்ளேயே எழுதியும் வைத்து, செயல் வடிவம் கொடுக்காமலேயே வைத்திருக்கிறேன். இந்த அஞ்சல் கூட, ‘அப்பாவின் தாஜ்மாஹாலு’க்கு(நான்இன்னும் படிக்கவில்லை) திரு குமார் அவர்களின், கடிததுக்கு தாங்கள் எழுதிய பதிலில், www.suratha.com/reader.htm வலைப்பக்கம் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்தது பற்றித்தான்.  தமிழில் மிக எளிமையாக தட்டச்சு செய்ய அதைக்காட்டிலும் எளிய வழிகள் உள்ளன. Windows பயன்பாட்டாளர்கள் NHMWriter உபயோகப்படுத்தினால் மிக எளிமையாக எந்த ஒரு editor(local document/web)லும் தமிழில் தட்டச்சு செய்யலாம். Linux பயன்பாட்டாளர்கள், SCIM உபயோகப்படுத்தினால், அதே போன்று மிக எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யலாம் (‘தட்டச்சு செய்தல்’ – இதற்கு ஒரே வினைச் சொல் இல்லையா?). இணைய இணைப்பு கூடத் தேவையில்லை.

உங்களுக்கு இந்த வழிகள் முன்னமே தெரிந்து வேறு காரணங்களுக்காக ‘சுரதா’ இணையப் பக்கத்தை  பரிந்துரைத்திருந்தீர்களென்றால் மன்னிக்கவும்.

இது பற்றி மேலும் தெரிய வேண்டுமென்றால் எனக்குத் தெரியப்படுத்தவும். நான் விபரமாக Windows, Linux தமிழ் தட்டச்சு முறைகளை  விளக்கித் தங்களுக்கு அஞ்சல் செய்கிறேன்.

தங்கள் எழுத்துப் பணி என்றென்றும் சிறந்திருக்க வாழ்த்துக்கள்

அன்புள்ள
ஸ்ரீனிவாசன்

 

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

 

எனக்கு பிற முறைகளைப்பற்றி தெரியாது. என் நண்பர் சுரதாவை எனக்கு அறிமுகம்செய்தார். இதைப்பற்றி விரிவாகவே எழுதுங்கள்.
ஜெ

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

 

 

 

இந்த அஞ்சலுடன் Windows தளத்தில் தமிழில் தட்டச்சிடும் முறை பற்றி முடிந்த அளவு விளக்கி (அல்லது குழப்பி) ஒரு ஆவணம் இணைத்திருக்கிறேன்.

 

 

பொதுவாக, சில ஆண்டுகள் முன்பு வரை மிகச் சரளமாக தமிழில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இந்த ஆவணம் தயாரிக்க மிகவும் கடினமாக இருந்தது. மிகத் தீவிரமாக அலுவல் பார்க்க ஆரம்பித்த பிறகு எனது படிக்கும் பழக்கம், குறிப்பாகத் தமிழில்,  குறைந்து விட்டது (கடைசியாகப் படித்த நெடுங்கதை `பின் தொடரும் நிழலின் குரல்`), அலுவல் சம்பந்தமாக அனைவருடனும் ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொண்டு கொண்டிருக்கிறேன். மேலும் தொழில்நுட்பம் சம்பந்தமான கலைச்சொற்கள் அவ்வளவு வெளிப்படையாக எங்கும் காணப்படவில்லை. எனவே கலைச்சொற்களுக்கு மிகவும் திண்டாட வேண்டியிருந்தது. ஆனால் இது எனக்கு, எனக்குத் தெரிந்தவற்றை தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுத்தது. இந்த முறை Windows தளத்திற்கு மட்டும் எழுதியிருக்கிறேன். Linux தளத்திற்கு கொஞ்சம் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். ஓரிரு வாரங்களில் அதையும் அனுப்புகிறேன்.

இந்த ஆவணத்தில் கண்டுள்ள உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அடுத்த ஆவணதின் அமைப்பில் சொற் பிரயோகத்தில் எதுவும் மாற்ற வேண்டுமென்றாலும், எனக்கு அறிவுறுத்தவும்.
அன்புள்ள
ஸ்ரீனிவாசன்

 

முன்னுரை
இந்தக் கட்டுரை, Windows தளத்தில், NHM Writer மென்பொருளைப் பயன்படுத்தி, தமிழில் தட்டச்சிடுவதை விளக்கும் கட்டுரையாகும்.

NHM Writer தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

இந்தக் கட்டுரை தமிழ் தட்டச்சை முக்கியமாக விளக்கினாலும், சிறிய மாற்றங்களுடன் பெரும்பாலான இந்திய மொழிகளில் NHM Writer பயன்படுத்தி தட்டச்சிட முடியும்.
இந்தக் கட்டுரை ஒலிப்பு முறை சார்ந்த(phonetic) தமிழ் தட்டச்சிடும் முறைய விளக்குகிறது. இந்த முறையை பயன்படுத்தினால் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை; ஆங்கிலத் தட்டச்சு தெரிந்திருந்தாலே போதும். ஆயினும், NHM Writer மற்ற தட்டச்சு முறைகளையும் ஆதரிக்கிறது.

மென்பொருள் பயன்பாடு


1. தரவிறக்கம் செய்த  NHM Writer  மென்பொருளை ஏற்றமைத்துக்கொள்ளவும் (installation). ஏற்றமைப்புத் தருணத்தில் முக்கிய மொழி என்ன என்பதைத் தெரிவு செய்து கொள்ளவும்(இந்தக் கட்டுரையின்படி தமிழைத் தெரிவு செய்து கொள்ளவும்; ஆனாலும் மற்ற மொழிகளிலும் தட்டச்சு செய்யும் வசதி இந்த மென் பொருள் கொண்டிருக்கும். அது பின்னால் விளக்கப்பட்டிருக்கிறது). ஏற்றமைத்து முடிந்தவுடன் Systray பகுதியில் ஒரு சிறு மணி பிம்பம் தோன்றும் (பார்க்க படம்): 
 

2. எலி(mouse)யின் ஏவலை(cursor) அதன் மேல் நிறுத்தினால் கீழே காட்டப்பட்டிருப்பது போல் சிறு தகவல் தோன்றும்
 

இயல்பிருப்பாக(by default), (ஆங்கிலம் தவிர்த்த) மாற்றுமொழி தட்டச்சு செயலிழந்திருக்கும்.

3. தட்டச்சிட வேண்டிய செயலியைத் திறக்கவும்(உம் – Notepad, MS Word, Email, browser). “Alt+2” விசை இணைவுப் பொருத்தத்தை (key combination) அழுத்தவும். இது NHM மென்பொருளை, தமிழ் ஒலிப்புமுறைத் தட்டச்சுக்காக முடுக்கி விடும்; அப்போது மேலே குறிப்பிடப்பட்ட மணி மஞ்சள் நிறத்துக்கு மாறும் (பார்க்க படம் – இது மென்பொருள் முடுக்கி விடப்பட்டு விட்ட்தற்கான அடையாளம்). 
 

4. இப்போது தமிழில் தட்டச்சிட ஆரம்பிக்கலாம்.

5. இப்போது மீண்டும் ஆங்கிலத் தட்டச்சிற்கு மாறுவதற்கு, அதே “Alt+2” விசை இணையை அழுத்தவும். (மணி பிம்பம் மீண்டும் வெள்ளை நிறத்துக்கு மாறி விடும்). இந்த விசை இணையைப் பயன்படுத்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து தட்டச்சிடலாம்.

சுறுக்கு வழி விசைகள் (Shortcut keys)
மேலே குறிப்பிட்டுள்ளது போல் “Alt+2”, (ஏற்றமைக்கும்போது முக்கிய மொழியாகத் தமிழைத் தெரிவு செய்திருந்தால்) ஒலிப்புமுறைத்(phonetic) தமிழ் தட்டச்சிற்கு மென்பொருள் இயல்பிருப்பாகும். ஆனால், இதனை நமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு “Alt+1” தமிழ் ஒலிமுறைத் தட்டச்சிற்கும், “Alt+2” மலையாள ஒலிமுறைத் தட்டச்சிற்கும் வைத் துக்கொள்ளலாம். இதனைச் செய்வதற்கு, எலியின் ஏவலை மணி பிம்பத்தின் மீது நிறுத்தி எலியின் வலது பொத்தானை அழுத்தவும். கீழே காட்டியிருப்பது போல் ஒரு மேல் மீட்புப் பட்டியல்(popup menu) தோன்றும்.
 

அதிலிருந்து ‘Settings’ உருப்படியைத் தெரிவு செய்யவும். இப்போது கீழே காட்டப்பட்டுள்ளது போன்ற ஒரு செயலி தோன்றும்(இங்கு நான் தமிழ் ஒலிப்புமுறை, ஹிந்தி ஒலிப்புமுறை மற்றும் தமிழ்99 தட்டச்சுகளுக்கு முறையே “Alt+1”, “Alt+2”, “Alt+3” என்றவாறு அமைத்திருக்கிறேன்) .
 

தேவையான மொழி வரிசையில் “Tooggle key” களத்தில் எலியின் இடது பொத்தானை அழுத்தினால் கீழே காட்டப்பட்டுள்ள மேல் மீட்புப்பட்டியல் தோன்றும்:
 

இந்தப் பட்டியலில் இருந்து தேவைப்பட்ட விசை இணையைத் தேர்வு செய்து கொள்ளலாம். “None” தேர்வு செய்தால், ஏற்கனவே முடிவு செய்திருந்த விசை இணையை அழித்து விடும்.

மற்ற மொழிகளில் தட்டச்சிட

இதற்கு முந்தைய பகுதியில் காட்டப்பட்டிருக்கும் செயலியில் சரியான விசை இணையைத் தெரிவு செய்வதன் மூலம் மற்ற இந்திய மொழிகளில் தட்டச்சிடலாம்.
விசைப்பலகை வரைபடம்(keyboard layout)

தேர்வு செய்த தட்டச்சு முறையின் அல்லது மொழியின் தட்டச்சு வரைபட்த்தை பார்க்க, தேவைப்பட்ட தட்டச்சு முறையைத் தெரிவு செய்து கொண்டு, படம் 4-ல் குறிப்பிட்டுள்ள மேல் மீட்புப் பட்டியலிலிருந்து “On-Screen Keyboard” உருப்படியைத் தெரிவு செய்யவும் 
 

இதன் மூலம் தெரிவு செய்த தட்டச்சு முறையில், எந்தெந்த எழுத்துக்கு எந்தெந்த விசை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 
விசை முன்னோட்டம் (key preview)
தட்டச்சிட்டுக் கொண்டிருக்கும் போதே சாத்தியமுள்ள விசை இணைப் பொருத்தங்களைக் காண படம்-4ல் காட்டப்பட்டுள்ள மேல் மீட்புப் பட்டியலில் “Key preiview” என்ற உருப்படியைத் தெரிவு செய்யவும். தெரிவு செய்த உடன் கீழ்க்கண்ட பிம்பம் திரையின் உச்சியில் தோன்றும்
 
உதாரணத்திற்கு, மேலே காட்டப்பட்டுள்ள படத்தில்  “t” விசை அழுத்தப்பட்டவுடன் அடுத்து எந்த விசையை அழுத்தினால் என்ன எழுத்து வரும் என்ற அட்டவணை காட்டப்பட்டுள்ளது. அட்டவணையின் கீழ்வலது கோடியில் அமைந்துள்ள   பொத்தான் இணையைப் பயன்படுத்தி மேற்கொண்டு உள்ள சாத்தியக்கூறுகளைக் காணலாம்.

முடிவுரை

தமிழ் மட்டுமே, அதுவும் ஒலிப்பு முறை மட்டுமே தேவையெனில், NHM Writer மென்பொருளை ஏற்றமைத்தவுடன், எந்த ஒரு செயலியையும் திறந்து “Alt+2” விசையிணையை அழுத்தி தமிழில் தட்டச்சிட ஆரம்பித்து விடலாம். வேறெந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.

மேலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி கணினியிலுள்ள கோப்புக்கள் அனைத்திற்கும் தமிழிலேயே பெயரிடலாம்.

அன்புள்ள
ஸ்ரீனிவாசன்

 

 

ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்

முந்தைய கட்டுரைமுஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்
அடுத்த கட்டுரைஆர்.கே.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள்