அன்புள்ள ஜெ வணக்கம்…
கையறு நிலையில் இதை எழுதுகிறேன். நெடுநாட்களாக பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவந்தது. இந்த விழிப்புணர்வை தமிழகம் தழுவி ஏற்படுத்தியவர் நீங்கள்தான் உங்களிடமே இதைக் கொண்டு வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வனப்பயணங்கள் மேற்கொண்டு வருகிறேன். அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் மாதத்தில் குறைந்தது ஒரிரு நாளாவது சென்று கொண்டிருக்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது நிலைமை பல மடங்கு மோசமாக விட்டதை கண்கூடாக பார்க்கிறேன்.
நேற்று ஆனைகட்டி அருகே ஒரு சிறு மலையேற்றம் சென்றேன். கோவையில் இருந்து செல்லும் வழியில் மாங்கரையை அடுத்த அடர்வனம் துவங்கும் இடத்தில் சேம்புக்கரை தூமனூர் என்ற ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் பிரிவு ஒன்று உண்டு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கர்நாடக நீலகிரி மலைப்பகுதிகளில் இருந்து யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளியங்கிரி சிறுவாணி வனப்பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான வலசை பாதைகளில் ஒன்று இது.
பத்துமுறை இவ்விடத்தை கடந்தால் இரண்டு முறையாவது யானைகளயோ காட்டெருமைகளயோ இங்கே பார்க்க முடியும்.
எப்பொழுதும் அங்கே சிறிது நேரம் நின்று நகரத்திலிருந்து வனத்திற்குள் நுழைந்த பின் நிகழும் ஒலி மாறுபாடுகளை சூழ்ந்தழுத்தும் அமைதியை பறவைகளின் ஓசையை ரசித்துச் செல்வது எனது வழக்கம். நேற்று அங்கே காரை நிறுத்தியவடன் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த யானை லத்தியை கண்டேன். அதன் மேலேயும் சுற்றியும் ஏராளமான உடைந்த மது குப்பிகள் இருந்தன. கட்டிட கழிவுகளும் அருகே இருந்தன.
என்னால் முடிந்த உடைந்த பாட்டில்களை சேகரித்தேன். அரை கிலோ மீட்டர் சுற்றளவிலேயே சில சாக்குகள் நிரம்பும் அளவு குடித்துவிட்டு எறிந்த உடைந்த பாட்டில்கள். மேலும் நடக்க நடக்க அதிர்ச்சியில் உறைந்தேன். ஒரு லாரியே கொள்ளுமளவிற்கு அத்தனை பாட்டில்கள் சாலையோரம் கிடந்தன.
இந்த ஒரு ஆண்டில் மட்டுமே மர்மமான முறையில் பல யானைகள் கோவை மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் இறந்துள்ளன. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிக்கும் அளவு அதீதமாக உயர்ந்து இருக்கிறது.
இங்கு மட்டுமல்ல சென்ற வாரம் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே ஒரு மலையேற்றம் சென்றேன் அங்கும் இதே நிலைதான் வரைமுறையின்றி குடித்து நொறுக்கப்பட்டு வனமெங்கும் கண்ணிவெடிகளை போல் யானைகளின் கால் நோக்கி காத்திருக்கின்றன.
நான் பார்த்தவரையில் கர்நாடக தெலுங்கானா கேரள வனங்களில் நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.
மு.கதிர் முருகன்
கோவை