1977 ல் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. 44 வருடங்கள் ஓடிவிட்டன. அதாவது நாஞ்சில் நாடன் அவர்கள் அவரது.28-30 வயதிற்குட்பட்ட காலத்தில் இந்நாவலை எழுதியிருக்க வேண்டும் என்றாகிறது. அந்த வயதிலேயே எப்படியொரு எழுத்து அவருக்குக் கைவந்திருக்கிறது என்று பிரமிக்கிறது நம் மனம்.
எழுபது எண்பதுகளில் மிகத் தரமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்த மதிப்புமிக்க பதிப்பகம் சிவகங்கை அன்னம் பதிப்பகம் தான். கவிஞர் மீரா அவர்கள் திறமையான எழுத்தாளர்களை அடையாளம் கண்டு இதைச் செய்தார். இந்நாவல் அன்னம் மீரா வெளியீடு.
மதுரை சென்ட்ரல் சினிமா பின்பக்க சந்து போன்ற குறுகிய கல் பதித்த தெருவில் ஒரு வீட்டு மாடியில்தான் அன்னம் புத்தக விற்பனை நிலையம் இருந்தது. (இந்த சந்தில்தான் விஜயகாந்த் வீடும்) பார்க்கப் பார்க்க அத்தனை புத்தகங்களையும் வாங்கிவிட மாட்டோமா என்று மனம் ஏங்கும்.
தனது முப்பது வயதுக்குட்பட்ட காலத்தில் நாஞ்சிலார் எத்தனை இறுக்கமான, கட்டுக் கோப்பான நாவலைக் கொடுத்திருக்கிறார்? உரையாடல்கள், பேச்சு மொழி, இயல்பாக நகரும் கதைச் சம்பவங்கள், அன்றைய காலகட்டத்திலான பொருத்தமான மனநிலை, ஊர் உலகங்களின் எதிர்பார்ப்பு, நடப்பு என நாவல் நிதானமாக, அதே சமயம் அழுத்தமாகப் பயணிக்கிறது.
பாதி படித்து மூடி வைக்கத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கச் செய்கிறது. சுய கௌரவம் மிகுந்த, பொறுப்பான சிந்தனையுள்ள, நல்ல கதாபாத்திரமாக வளைய வரும் சிவதாணு-சார்பாகத்தான் நம் இரக்கம் படிகிறது. நடப்பியல் அவனை எப்படியெல்லாம் அலைக்கழித்து விடுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் நாஞ்சிலாரின்-முதிர்ந்த எழுத்து நம்மை வியக்க வைக்கிறது.
மதிப்புறச் செய்து, அடுத்தடுத்து அவரது புத்தகங்களைத் தேட வைக்கிறது. ஒரு ரௌன்ட் முடித்து விடு என்று விரட்டுகிறது..
கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? சோற்றுக்கு வழியில்லாமல் அலைந்திருக்கிறீர்களா? கடன் வாங்க அஞ்சியிருக்கிறீர்களா? கடன் வாங்கப் போய் கேவலப்பட்டிருக்கிறீர்களா? திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்திருக்கிறீர்களா? கடன் கொடுத்தவரை எதிர்கொண்டிருக்கிறீர்களா? அவரது ஏசலை வாங்கியிருக்கிறீர்களா?
வேலை கிடைக்கவில்லையே என்று வெட்டியாய் அலைந்திருக்கிறீர்களா? அதற்காக வேதனைப் பட்டிருக்கிறீர்களா? குடும்பத்துக்கு உபயோகமில்லாமல் தண்டச் சோறாக இருக்கிறோமே என்று புழுங்கியிருக்கிறீர்களா? அதை வெளியில் சொல்லவும் முடியாமல், வெளிப்படையாய் அழவும் முடியாமல் மனதுக்குள்ளேயே போட்டு அமுக்கி, குமைந்திருக்கிறீர்களா? அதனால் உண்டாகும் கோபத்தை அர்த்தம் பொருத்தமில்லாமல் வீட்டில் காண்பித்து, அமைதியைக் குலைத்து, சண்டையிட்டு, பாத்திரத்தை விட்டெறிந்து, விருட்டென்று வெளியேறி,சாப்பிடாமல் படுத்து, தாய் தந்தையரை வேதனைப் படுத்தி, தன் நிம்மதியையும் குலைத்துக் கொண்டு-இந்த மாதிரி அனுபவங்களெல்லாம் ஏற்பட்டிருக்கிறதா? தனிமையை நாடி, அமைதியை நாடி எங்கோ தனித்துப் போய் இருந்து, நேரத்துக்கு வீடு திரும்பாமல் எங்கே போனானோ என்று பதறியடித்து மனம் வேதனைப்படும் பெற்றோர்களை எதிர்நோக்கியிருக்கிறீர்களா?
இந்தத் துன்பங்களுக்கெல்லாம் என்றுதான் தீர்வு என்று தனக்கு ஒரு வேலை கிடைத்து, சம்பாதித்து, தங்கைகள் திருமணத்திற்கும், தன் குடும்பத்திற்கும் உபயோகமாய் என்று இருக்கப்போகிறோம் என்று நடைபிணமாய் நாட்களை நகர்த்திய அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
சோற்றுக்கே வழியில்லை…இதிலென்ன கோயில் வேண்டிக்கிடக்கிறது, என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது? தான் இருப்பதற்கு, தன் இருப்பிற்கு ஏதேனும் அர்த்தம் வேண்டாமா? – என்று பார்ப்பதிலெல்லாம் ஒரு வெறுப்பு தோன்ற, இந்த உலகமே நரகமாகி விட்டதாய், தனக்கு எதிராக எல்லாமே இயங்குவதாய்…மனம் நொந்து, தன் குடும்பத்திற்கு தான் இப்படி ஒரு பாரமாகி நிற்கிறோமே என்று உங்களுக்குள்ளேயே அழுதிருக்கிறீர்களா?
தெருவையும், ஊரையும், வெட்டியாய் சுற்றி வருகையில், ஊர்க்காரர்கள், கண்ணில் படுவதும், அவர்களின் கேலிப் பேச்சும், மறைமுகக் கிண்டலும், வெறும்பய…இவனோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்று விலகிப் போகுதலும், இவற்றிலிருந்தெல்லாம் என்று விடுதலை என்று திக்கு தெரியாமல் கலங்கிய நிலை ஏற்பட்டிருக்கிறதா?
வெட்டிப் பயலுக்கு என்ன கல்யாணச் சாப்பாடு என்று உட்கார்ந்த இலையிலிருந்து எழுப்பி விடப் பட்டிருக்கிறீர்களா? பந்திக்குப் பொருத்தமில்லாத கசங்கிய உடையோடு, கலைந்த தலையோடு இருந்து…தம்பி…கொஞ்சம் எழுந்திரிப்பா…என்று எழ வைத்து விலக்கி விட்டு, அங்கே ஒரு முக்கியஸ்தரை அமர்த்தி, பிறகு அந்தக் கேவலம் நினைத்து, அப்படியேனும் வயிற்றை நிரப்பித்தான் ஆக வேண்டுமா என்று சாப்பிடாமல் வந்த அனுபவம் உண்டா?
இப்படி எண்ணற்ற வேதனைகளை அனுபவிக்கிறான் இந்தக் கதையின் நாயகன் சிவதாணு. அவன்பால் நம் மனம் ஒன்றிப் போய் இவனுக்கு எப்படியாவது ஒரு நல்லது செய்துவிட வேண்டும் என்றும், இவனை ஒரு நல்ல இடத்தில் உட்கார்த்தி அழகு பார்க்க வேண்டும் என்றும், இத்தனை பொறுப்புள்ள சிந்தனை உடைய ஒருவனுக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் காண்பித்தால் மேலேறி வந்து விடுவானே என்றும் நம் மனம் நாயகனின் தள்ளாடும் வாழ்க்கை மீது அனுதாபம் கொள்கிறது.
நாம் வைக்கும் குறி-ஒரு செல்வந்தரின் கண்ணுக்குப்பட, நம் வியாபாரத்திற்கு, அதனைப் பொறுப்பாய்ப் பார்த்துக் கொள்வதற்கு, அதனை முன்னேற்றுவதற்கு, அடங்கிய பிள்ளையாய் இவன் இருப்பான் என்று முடிவு செய்து கண்ணி வைத்துப் பிடித்து விடுகிறார் நாயகியின் தந்தை.
சிவதாணு பார்வதியைக் கைப்பற்றுவதும், திருமண பந்தத்திற்கு ஆட்படுவதும், அதன் பிறகும் அவனது சுய கௌரவம் கூடவே அவனுடன் விடாது பயணித்து, கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நிலையில் அவன் செயல்பாடுகள் தொடர்வதும்…..அதனால் ஏற்படும் மனப்புழுக்கமும், மனைவியுடன் ஏற்படும் பிணக்கும், மாமனாருடன் ஏற்படும் சண்டையும் சச்சரவும்…என நாவல் முழுவதும் சிவதாணு வியாபித்து நம் நெஞ்சை நிறைத்துக் கொள்கிறான்.
திருமணமான ஒரு இருபத்து மூன்று வயது இளைஞனின் மன அவசங்களை இதில் பிரதானப்படுத்தியிருக்கிறேன். அவன் உணர்ச்சிகளை முழுமையாகக் கொண்டுவர முயன்றிருக்கிறேன். அதில் நான் வென்றாலும் தோற்றாலும், அது முடிந்து போன கதை என்கிறார் நாஞ்சில் நாடன்.
அவர் தனது முதல் நாவலிலேயே வெற்றி பெற்று விட்டார் என்று அழுத்தமாய்ச் சொல்லத் தோன்றுகிறது நமக்கு.
உஷா தீபன்