அன்புநிறை ஜெ,
சனிக்கிழமை அன்று சிரவணபெலகொலா சென்று வரலாம் என்று தோன்றியது. பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் கோமதீஸ்வரா எக்ஸ்பிரஸ்-ல் இரண்டுமணி நேரப் பயணம். இந்த ரயிலில்தான் சமீபத்தில் எழிலான நிலக்காட்சிகளையும் மேற்குத்தொடர்ச்சி மலைகளையும் காணும் வண்ணம் ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் காண்பது போல அகன்ற ஜன்னல்களும், மேற்கூரையிலும் சாளரங்களும் கொண்ட பெட்டி (vistadome). அதில் ஒருமுறை மங்களூர் வரை செல்ல வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.
உடன் தோழியும் அவரது மகனும் இணைந்துகொண்டனர். உள்ளே நிலவும் மனநிலையை எவ்விதத்திலும் குலைக்காதவர்களின் அருகாமை பயணத்தை எளிதாக்குகிறது. ரயில் காலை ஏழுமணிக்குக் கிளம்பி ஒன்பது மணிக்கு சிரவணபெலகொலா சென்றடைந்தது. இதுவே நான் இங்கு வரும் முதல் முறை, மனம் எதிர்பார்ப்பின் முனையில் நின்று கொண்டிருந்தது. ஏரிகளுக்கும் தென்னந்தோப்புகளுக்கும் மேலே நீல வானில் கோமதீஸ்வரரின் முகம் தொலைவிலேயே தெரியத் துவங்கியது.
அந்தத் தலங்களுக்கு வரும் கூட்டம் மட்டுமே அந்த நிலையத்தில் இறங்கியதால் அவ்விடம் உடனே ஆளொழிந்து அமைதியானது. அழகான ரயில் நிலையம். அங்கிருந்த பதினைந்து பேரை ஏற்றிக்கொண்ட ஆட்டோவில் வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும், இடைஇடையே பச்சைபோர்த்திய ஏரிகளும் குளங்களுமாக அழகிய சிறு பயணம். பாகுபலி பெயர் கொண்ட கலை, அறிவியல் கல்லூரிகள், பின்னர் தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரி வளாகங்கள். கல்வி வளர்க்க அருகர்களின் பெயரை விட சிறந்தது எது!.
விந்தியகிரி அடிவாரத்தில் இறங்கிக்கொண்டு, படியேறத் தொடங்கினோம். காலை வெயில் தொடங்கிவிட்டிருந்தாலும் செப்டம்பரின் காற்றில் வெம்மை ஏறவில்லை. படிக்கட்டுகளின் ஒரு பகுதி செங்குத்தாக இருந்தாலும் முற்றிலும் கைப்பிடி கம்பிகள் போடப்பட்டிருப்பதால் சிரமம் ஏதுமில்லை. தொலைவில் இருந்தே தெரிந்து கொண்டிருந்த பாகுபலியின் முகம் அருகே சென்றதும் வேறொன்றாயிற்று. இடையில் இருந்த திரைகள், மறைப்புகள் அனைத்தும் அகன்று விட தோன்றும் நிர்மால்யம். வானின் பின்னணியில் தெரிந்த கள்ளமற்ற அவ்வுருவம் எண்ணங்களை அமைதி கொள்ளச்செய்தது. பேருருவனை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
காலடியில் உள்ள அனைத்தையும் சிறிதாக்கி விண் தொட எழுந்த உருவம். மண்ணில் பிறந்து விண்ணோக்கி எழுந்துவிட்ட அவரைப் போல, இப்புவி தன்னையும் எழுப்பிக் கொள்ள கொடிக்கரங்களை நீட்டுவது போலிருந்தது. நோக்கியிருக்கவே நோக்கற்ற அவ்விழிகளின் வெறுமையில் ஒரு புன்னகை தோன்றியது. மீண்டு வந்தேன். ஓரிருவர் நடந்து வந்துகொண்டிருக்க பெரும்பாலும் அமைதி. மஞ்சள் காவியுடை அணிந்த இரண்டு அர்ச்சகர்கள் கோமதேஸ்வரரின் பாதங்களில் நீர் விட்டு பூஜை செய்தனர். பாதங்களன்றி பிற அனைத்தும் வேறெங்கோ இருக்கின்றன. அனுதினம் வணங்கவும் அருகிலே அமையவும் மண்ணில் பதிந்திருக்கும் பாதங்களே எளிய உயிர்கள் மீது கருணை மிக்கதாய் தோன்றுகிறது.
வெளியே வந்து நிற்க, சுற்றிலும் விரிந்த நிலப்பரப்பைக் காண முடிந்தது. எல்லா திசைகளிலும் கண்ணுக்கெட்டியவரை பச்சை சமவெளி, ஆங்காகே விழிகள் என மின்னும் நீர்நிலைகள். வட்டங்களால் ஆன வானத்தை வரைந்து சென்றன பருந்துகள். விரிவெளி என்பதை கட்புலனால் உணர்ந்து கொள்ள இது மிகச்சிறந்த இடம். இதுபோன்ற இடங்களைப் பார்ப்பதற்கு அதிகாலையும் அந்தியும் சிறந்த தருணங்கள் எனத் தாங்கள் எழுதியதை எண்ணிக் கொண்டேன். இங்கு மீண்டும் மீண்டும் வருவேன் எனத் தோன்றுகிறது. அது இருஒளி இணையும் பொழுதுகளாய் அமையட்டும் என எண்ணிக் கொண்டேன்.
அடுத்ததாக சந்திரகிரி. ஏறுவதற்கு எளிதான மலை. காண்பதற்கு பல பஸதிகள். குளிர் நின்ற இளவெயிலை மேகம் மேலும் வடிகட்டி அனுப்பியது. பார்ஸ்வநாதரையும் ஆதிநாதரையும் நேமிநாதரையும் தவிர சுபர்ஸ்வநாதர், சந்திரப்ரபர் என மேலும் பல தீர்த்தங்கரர்களின் கருவறைகள். நண்பகலிலும் இருள் குளுமையென்றாகி நின்ற கருவறைகளில் தியான நிலைகளில் அமர்ந்த, நின்ற அருகர்கள். வாசலில் கூஷ்மாண்டினி, அம்பிகை என யக்ஷிகளும் சர்வாகன யக்ஷனும். சவுண்டராய பஸதி சோழர்களின் ஆலய அமைப்பது ஒத்திருக்கிறது. இதன் கருங்கல் கட்டுமானம் கங்கர்கள் காலத்தை சேர்ந்தது என்றும், உள்ளே கருவறையில் இருக்கும் நேமிநாதர் ஹொய்ச்சாளர் காலத்தில் அமைக்கப்பட்டு சுற்றிலும் ஆலயம் பின்னர் 12ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அங்கே படிகள் என்றே சொல்ல முடியாத அளவு மிகக் குறுகலான செதுக்குகள் வழியாக மேலேறிச் சென்றால் மேலே ஒரு பஸதி. நாகம் குடைபிடித்த பார்ஸ்வநாதரைச் சுற்றிலும் பல குளவிகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. தம்புராவின் சுருதி போல சுழன்று கொண்டே இருக்கும் அவற்றின் ஓசைக்கிணங்க நீலவெளியில் வட்டமிடும் பருந்துகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒன்றாகி அந்த வெளியைப் பார்ப்பது போல ஒருகணம் தோன்றியது. தொலைவில் எங்கோ மயில் அகவியது. வெளியேறினேன்.
ஒவ்வொன்றிலும் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு சந்திரகுப்த பஸதி வந்து அமர்ந்தேன். பேரரசர் சந்திரகுப்த மௌரியர் அருகர் நெறி தழுவி அரசை துறந்து அவரது குரு பத்ரபாகுவுடன் இங்கு வந்து சல்லேகனை இருந்து உயிர்துறந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸதியில் கூஷ்மாண்டினி யக்ஷியின் வாயிலில் இரு கல்திரைகள் அதிநுட்பமான செதுக்குகளோடு கண்ணப்படுகிறது. சின்னஞ்சிறு செவ்வகங்களில் சந்திரகுப்த மௌரியர், பத்ரபாகு இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் சிற்பங்கள். தாங்கள் எழுதிய கல்லை மரம் போல செதுக்கும் ஹொய்ச்சால கலைவெளி என்றெண்ணிக்கொண்டேன்.
அங்கிருந்த பத்துப் பன்னிரண்டு கோவில்களில் அந்த உச்சி வேளையில் யாரும் இல்லை. காற்று சுழன்றாடி ஒவ்வொரு கோவிலிலும் உட்புகுந்து வந்தது. தடைகளின்றி விரிந்து பரவிய நாற்திசையில் வான் நோக்கி குவிந்தெழுந்த இரண்டு கல்குன்றுகள். அதில் பதிந்த எண்ணற்ற கால்தடங்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மெய்மை உசாவியர்கள் நின்ற இடம். திசைநோக்கி நின்ற அத்தனை விழிகள் முன்னே நிற்கும் உணர்வு. பல நூறு கல்வெட்டுகள் இந்த மலையில் கிடைத்திருக்கின்றன. பலவற்றை அங்கேயே பாதுகாத்து, ஆங்கிலத்திலும் அது குறித்து பொறித்து வைத்திருக்கிறார்கள். குந்தகுந்தரின் திருவடியையும் பத்ரபாகு தவம் செய்த குகையையும் பார்த்துவிட்டு படி இறங்கி ஊருக்குள் சென்று உணவருந்தினோம்.
மாலை ஐந்து மணிக்கு ஹாசனில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். நோய்த்தொற்று காலம் ஆதலால் முன்பதிவற்ற பயணங்கள் இல்லை. இன்னும் நேரம் இருந்தது. அருகே உள்ள பல கோவில்கள் குறித்து வாசித்திருந்தேன். எனவே மிக அருகே எந்த ஆலயம் வருகிறது எனத் தேடி கிக்கேரி பிரம்மேஸ்வரர் ஆலயத்தை அறிந்தேன்.
முதலில் தளத்தில் இக்கோவில் குறித்து இருக்கிறதா எனத் தேடியபோது கிட்டவில்லை. வீடு திரும்பிய பின்னர் ஹொய்ச்சால கலைவெளியில்-6 ஆம் பகுதியில் கண்டுபிடித்தேன். ஆட்டோ ஓட்டுனரிடம் அவ்வாலயத்தை குறித்து கேட்டபோது அதே ஊரில் வேறொரு அம்மன் ஆலயம் இருப்பதாக சொன்னார், இக்கோவில் அவர் அறிந்திருக்கவில்லை. கிக்கேரி ஏரிக்கு அருகே இருப்பதாக அடையாளம் கூறி சென்றோம்.
வழியெங்கும் வயல்கள், மீண்டும் அனைத்திலிருந்தும் அகன்று மேலே தெரியும் பாகுபலி. நான் காலையில் வெகுநேரம் அவரை அரிஷ்டநேமியோடு சேர்த்தே எண்ணிக்கொண்டிருந்தேன். அரச உரிமையின் பொருட்டு சகோதரனோடு நிகழும் தனிப்போர், அதில் வெற்றி பெற்ற பின்னரும் அனைத்தையும் துறந்து வெளியேறுவது என மனது இரண்டையும் இணைத்து வைத்திருக்கிறது.
அந்த சிற்றூர் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள். எண்ணெய்க்கு வெயிலில் காயும் கொப்பரைகள். குவிக்கப்பட்ட தேங்காய் மட்டைகள். சில கிலோமீட்டர் முன்னதாகவே பரந்து விரிந்த கிக்கேரி ஏரி தொடங்கி விட்டது. வெயில் தெரியாத பசுமை. பசுமைக்கு நடுவே ஒரு செம்மண் கீற்று போல செம்போத்து பறந்து சென்றது.
ஊருக்குள் நுழைந்து ஓரிருவரைக் கேட்டு கோவிலை சென்றடைந்தோம். கோவில் பூட்டி இருந்தது. ஓட்டுநர் அர்ச்சகரை அழைத்து வரச் சென்றார். ஏரி நிச்சலனமாக வானை ஏந்தியிருந்தது. மறுகரையில் தென்னை வரிசை நீரில் மேகங்களுக்கு அருகே நின்றது. ஒரு வயதான பெண் அமர்ந்து துணி துவைத்தது கூட நீரில் பெரும் சலனங்களை ஏற்படுத்தவில்லை.
கோவில் திறந்ததும்தான் அது ஒரு கலைப் பொக்கிஷம் எனத்தெரிந்தது. ஹொய்ச்சாலர்களின் நுண்செதுக்குகளால் ஆன நகை போல வெயிலில் ஒளிர்ந்தது ஆலயம். திரிகுடாச்சல அமைப்பு, கிழக்கு நோக்கிய ஆலயம். பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. முதலில் கண்ணில் பட்டது பிற ஆலயங்கள் போல ஜகதி என்னும் சுற்றி நடந்து வரும்படியான உயர்ந்த அடித்தளம் இன்றி நேரடியாக தரைத்தளத்தில் ஆலயம் அமைந்திருந்தது.
வாயிலில் நேர் எதிரே நர்த்தன கணபதி. அருகிலேயே மீன்பொறியை நோக்கி வில்லுயர்த்திய அர்ஜுனன். சரஸ்வதியை மடியில் அமர்த்திய பிரம்மதேவர். பிரம்மனை வைத்தே சிலையை அடையாளம் கண்டேன், சரஸ்வதி மின்படை ஏந்தியிருப்பாள் என்று தாங்கள் எழுதியிருந்ததை பிறகுதான் மீண்டும் வாசித்ததும் நினைவு கூர்ந்தேன்.
இக்கோவிலில் திருமகளை மடியில் அமர்த்திய பெருமாள், உமையை மடியில் அமர்த்திய சிவன் என முப்பெரும் தெய்வங்களும் இணையோடு அமர்ந்த அழகிய சிற்பங்கள். விஸ்மயம் காட்டி, அக்ஷமாலை ஏந்தி, யானை மீது நிருத்ய நிலையில் நின்ற சிவனின் காலருகே சிவ குமாரர்கள் இருவரும் நிற்பது அழகு. சூரியநாராயணர், மஹிஷாஸுரமர்தனி, கோவர்தனகிரிதாரி, உக்ரநரசிம்மர் என அழகிய சிற்பங்களின் அணிவரிசை.
கோவிலின் முன் புறம் அமைந்திருக்கும் சுகநாசியில் கருவறைக்கு எதிரே மிக அழகிய நந்தி. நந்திக்கு பின்புறம் சூரியநாராயணர் சிற்பம். சப்தமாத்ரிகைகளுடன் வீணை ஏந்திய சிவனும், கணபதியும். கருவறையில் சிவலிங்கம், மேலே வாயிலில் மேலே பிரம்மன் செதுக்கப்பட்டிருப்பதால் பிரம்மேஸ்வரர் என்ற பெயர் என்றார் அர்ச்சகர். மையக் கருவறையில் பிரம்மேஸ்வரர் லிங்கரூபம். வலப்புறம் சென்னகேசவர், இடப்புறம் மற்றொரு லிங்கம். மாமயூரம் மீதிலேறிய முருகன், மேலே சிறு செதுக்காய் குழல்வாய்அழகன்.
நேரமாகிவிட்டது என ஆட்டோ ஓட்டுநர் வந்து நினைவுறுத்திச் சென்றார். கருவறைக்கு முன்னே உள்ள மண்டபத்தின் கூரையில் எண்திசை நாயகர்கள் நடுவே சிவம். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் நடன அசைவுகளில் பேரழகு கொண்ட மதனிகைகளின் சிற்பங்கள். கரிய பேரழகிகள்.
வாயிலின் வலப்புறம் தனியே ஒரு நான்கடி உயர காலபைரவர், அரியதொரு சிற்பம். கையில் ஏந்திய வெட்டுண்ட சிரத்தில் வழியும் குருதியை எம்பி உண்ணும் நாயின் பற்களில் குருதியின் சுவை தெரிகிறது. உடலில் துவளும் மண்டையோட்டு மாலை, உடுக்கை, சூலம் என உக்கிரத்தின் பேரழகு. ஆனால் சமீபத்தில் ஏதோ தூய்மைப்பணியில் எண்ணெய் பூசி, அதை நீக்குவதற்காக ஏதோ சோப்பில் ஊறவைத்ததில் வெண்மை ஆங்காங்கே திட்டுத்திட்டாய் படிந்து கல் பாழாகிவிட்டது, எனில் சிற்பம் அதன் உயிர்ப்போடு எஞ்சுகிறது.
இக்கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள அனேகமான சிற்பங்கள் எதற்கும் முகம் தெளிவாக இல்லை. ஆனால் அதுவரை விழிகள், நாசி, உதடு என எதுவுமே இல்லாத முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த உணர்வே இல்லை. ஒவ்வொரு சிற்பமும் பேசிக்கொண்டிருப்பதாகவே நினைவு. திருவை அணைத்த விஷ்ணுவின் கை அமைப்பில், அவன் மடியில் அமர்ந்து அவனைக் காதலோடு நோக்கும் திருமகளின் உடல் அமைப்பில், கோவர்தன மலையை இலையென எளிதாகத் தூக்கும் கண்ணனின் இடை ஓசிவில், கொற்றவையின் காலின் அழுத்தத்தில் என சிற்பங்கள் உயிர்ப்போடு பேசுகின்றன.
முகம் என்பதே ஒருவிதத்தில் திரைதானோ, முகம் மறைக்கும் அகத்தை உடல் வெளிப்படுத்திவிடக்கூடும் என்று தோன்றியது. சுற்றி நடக்க நடக்க அனைத்து சிற்பங்களும் ஒன்றாகி மீண்டும் ஒரு மாபெரும் நகையாகி அமைந்தது ஆலயம். அத்தனை உணர்வுகளும் பின்னகர்ந்து அமைதியான நிலை கூடியது.
ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு உணர்ச்சி நிலையில் உறைந்த சிலைகளும் ஒட்டுமொத்த நோக்கில் மனதை அமைதிகொள்ளச் செய்கின்றன. உடலை முற்றாகத் திறந்து அனைத்தையும் துறந்து நின்ற அருகர்களின் முன்னரும் சிந்தை ஒழிகிறது. உடல் என்பதும் உணர்ச்சி வெளிப்பாடு என்பதும் கல்லில் என நிலைத்துவிடும் போது அகம் உணரும் அமைதியா அது? நரசிம்மரின் சினத்தையும் தேவியின் கனிவையும் மலரின் மென்மையயும் யானையின் வலிமையையும் கல்லில் வடித்த மானுடன் அசைவை, உயிர்ப்பை காலமின்மையில் நிறுத்துவதன் வாயிலாக யோகநிலையை அடைகிறானா?
சரவணபெலகொலாவில் இருந்து திரும்பி வரும்போது அந்திச் சூரியன் கிணறுகளில், குளங்களில், ஏரிகளில் மிதந்து உடன் வந்தது. விழிமூட காலை முதல் கண்டதனைத்தும் தெளிந்து மேலெழுந்து வந்தது. திசையை ஆடையென அணிந்து வான்கீழ் நிற்கும் அருகர்களின் விரித்த விழிகளின் பார்வை கடந்த விழியின்மையும், கிக்கேரியின் முகமும் விழியுமற்ற தெய்வங்களின் கூர்த்த விரிநோக்கும் என அகம் நிறைந்திருந்தது. கணம் விலகா கல்விழிப்பார்வைகள். பார்வை விழிகள் சார்ந்தது என யார் சொன்னது!
மிக்க அன்புடன்,
சுபா