இரு கேள்விகள்
இன்னொரு கேள்வி. இது கேள்வி அல்ல, பதில்தான். கேள்வி வடிவில் அனுப்பப்பட்டது. வழக்கம்போல வாசகி. இப்போது என்னை வாசிக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். இளம்பெண்கள் வாசிக்க விரும்பும் எதையும் நான் எழுதவில்லை என்பது என் எண்ணம். ஆனாலும் வாசிக்க வருகிறார்கள். பலர் நீலம் வழியாக வாசிக்க வந்திருக்கிறார்கள் என்பது ஒரு வியப்பு. நற்றுணை போன்ற கதைகள் வழியாக வாசிக்க வந்தவர்களும் பலர் உள்ளனர்.
அன்புள்ள ஜெ
உங்களைப் பற்றிய விமர்சனம் என்றபெயரில் கடுமையாக வசைபாடி எழுதப்பட்ட ஒரு நூலைப் பற்றிய செய்தியை என் நண்பன் எனக்கு அனுப்பினான். நான் உங்களை வாசிப்பதில் அவனுக்கு கோபம். நான் வாசிப்பது மட்டுமல்ல ஆராதிக்கவும் செய்கிறேன். அதில் தயக்கமே இல்லை. எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீலம் என்னை அப்படிப் புலம்ப வைத்துவிட்டது.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் முகநூலில் சமீபத்தில் பிடித்த பத்து தமிழ் ஆளுமைகள் என்று ஒரு கேள்விக்கு பலர் பதில் எழுதியிருந்தனர். அவர்களில் ஏராளமான இளைஞர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தது. எழுத்தாளர்களின் பட்டியல் அல்ல, பிடித்த ஆளுமைகள் அல்லது பிடித்த விஷயங்களின் பட்டியலில் எல்லாம் உங்கள் பெயர் இருந்தது. வேறு தமிழ் எழுத்தாளர்களின் பெயர் மிகக்குறைவாகவே இருந்தது. மழை பிடிக்கும், காந்தி பிடிக்கும் என்பவர்கள் அந்தவரிசையில் உங்கள் பெயரைச் சொல்லியிருந்தனர்.
நான் அதைப்பற்றி ஆச்சரியப்பட்டேன். இணையத்தை திறந்தாலே உங்களைப் பற்றிய அவதூறுகளும் வசைகளும்தான் உள்ளன. நான் உங்களைப்பற்றி தெரிந்துகொண்டதெல்லாம் தப்பான விஷயங்கள்தான். எவ்வளவு தப்பான திரிபுகள் என்று வாசிக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஆனால் உங்கள் முக்கியத்துவத்தை அது எந்தவகையிலும் குறைக்கவில்லை. உங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும், உங்களை தலைமேல் வைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
அப்படியென்றால் இவர்கள் எதை எண்ணி இந்த வசைகளை உருவாக்குகிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன?
திவ்யா ராஜ்
அன்புள்ள திவ்யா,
நான் இதைத் தலைகீழாகப் பார்க்கிறேன். அதை முன்னரும் சொல்லியிருக்கிறேன். என் சொற்களுக்கு இருக்கும் முக்கியத்துவமே அவற்றின்மேல் அத்தனை மூர்க்கமான தாக்குதல்களை நிகழ்த்தவைக்கிறது. எவ்வண்ணமேனும் அதை உடைத்தாகவேண்டும் என்னும் கட்டாயத்தை உருவாக்குகிறது. ஆகவேதான் திரிபுகள், அவதூறுகள் வந்துகொண்டிருக்கின்றன.
அத்தனை கூட்டான உழைப்பு அந்த எதிர்ப்பு வேலைக்கு அளிக்கப்படுகிறதென்பதே என் சொற்கள் எத்தனை முக்கியமானவை என்பதை காட்டவில்லையா? தமிழில் இதற்குமுன் வேறெந்த எழுத்தாளனின் சொற்களையாவது இத்தனை ஒருங்கிணைந்து ஆவேசமாக எதிர்த்திருக்கிறார்களா? அந்த நூல் எனக்கிருக்கும் முக்கியத்துவத்திற்கான மாபெரும் சான்று.
ஏன் அந்த எதிர்ப்பு? அரசியலியக்கங்களை பொறுத்தவரை அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்புக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும் அவர்கள் எதிர்த்து உடைத்தாக வேண்டும். கீழ்த்தர அரசியல் அதை அவதூறுகள், திரிபுகள் வழியாகவே செய்யும்.
அரசியலியக்கங்கள் சார்ந்த மனநிலைகொண்ட எழுத்தாளர்களும் அவ்வகைச் செயல்பாட்டுக்கு பழகிவிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட பொறாமையும் காழ்ப்பும் கொண்ட ‘சோட்டா’ எழுத்தாளர்களும், சில்லறை வம்பர்களும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். அரசியலாளர்களுக்கு தங்கள் தரப்பை முன்வைக்க இந்த மறுப்பை நிகழ்த்தியாகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. சோட்டா எழுத்தாளர்களும் வம்பர்களும் இதன்வழியாகவே ஏதேனும் இடத்தை இலக்கியத்தில் அடையமுடியும் என்னும் தேவை உள்ளது.
அவை சீரிய வாசகர்களை, என் எழுத்துக்களை வாசிப்பவர்களை நோக்கிப் பேசப்படுவன அல்ல. வாசிப்பவர்களுக்கு உடனே அந்த வசையும் அவதூறும் எத்தனை அபத்தமானவை என்று தெரிந்துவிடும் என அவற்றை எழுதுபவர்களுக்கே தெரியும். அவை ஏற்கனவே அவர்களின் தரப்பில் இருப்பவர்களை, ஓர் அணியாகத் திரண்டவர்களை நோக்கித்தான் பேசுகின்றன. அல்லது புதிய வாசகர்களை நோக்கி.
புதியவாசகர்கள் இரு வகை. யாராவது ஏதாவது ஆவேசமாகவோ தர்க்கபூர்வமாகவோ சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்று பேசிக்கொண்டிருப்பவர்கள் முதல்வகை. அவர்களில் பாதிப்பேர் ஏற்கனவே ஓர் அரசியல்சார்பு கொண்டிருப்பார்கள். அச்சார்பு பெரும்பாலும் அவர்களின் சாதி, மதம் சார்ந்ததாகவே இருக்கும்.
இந்தத் தரப்பினர் அச்சார்பை ஒட்டி மட்டுமே வாசிப்பார்கள். எந்நிலையிலும் அதைப்பேணிக்கொள்ளவே முயல்வார்கள். புனைகதைகளை வாசிக்கும் கற்பனை இவர்களுக்கு இருப்பதில்லை. புனைவை வெறும் செய்தித்தொகுப்பாகவும் கருத்துநிலைபாடாகவும் மட்டுமே இவர்களால் அணுகமுடியும்.
இன்னொரு சாரார் எதையும் தாங்களே வாசிக்க, சுயமாக மதிப்பிட முயல்பவர்கள். பொதுவாக புனைகதைகளை கற்பனையுடன் வாசிப்பவர்கள், அதை வாழ்வனுபவமாக ஆக்கிக்கொள்வார்கள் இவர்கள். வாழ்க்கை என்பது வெறும் அரசியல் அல்ல, அது வாழ்க்கையின் நுண்பொருள்தளங்களால் ஆனது என அறிந்திருப்பார்கள். அதைத்தேடி வாசிப்பார்கள். அதிலிருந்து மேலே சிந்திப்பார்கள்.
எனக்கு தேவை இரண்டாவது வகை வாசகர்கள். அவர்கள் மட்டும் என்னை வாசித்தால்போதும். மற்றவர்களை ஆரம்பத்திலேயே இந்த அவதூறு, திரிபு, வசையாளர்கள் சல்லடையாக நின்று நிறுத்திவிடுவார்கள் என்றால் அது நல்லதுதான். எஞ்சியோரிடம் நான் ஆழமாக உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதையே நீங்கள் காண்கிறீர்கள்.
ஜெ