இரு கேள்விகள். இரண்டுமே பெண்களிடமிருந்து. அதுவும் இளையதலைமுறைப் பெண்கள். அவர்களுக்குத்தான் இந்தவகையான சந்தேகங்கள் வருகின்றன
அ. இப்போதெல்லாம் ஏன் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிகிறீர்கள்? அதை என் ’ஸ்டேண்டேர்ட்’ ஆடையாக ஆக்கிக் கொள்கிறீர்களா? அது நன்றாக இருக்கிறது என்பது வேறுவிஷயம்…
முதலில் சொல்லவேண்டியது, அந்த ஆடைகளை நான் வாங்கவில்லை. நூற்பு சிவகுருநாதன் மற்றும் நண்பர்கள் எனக்குப் பரிசளித்தவை அவை. அணிவதற்கு வசதியானவை. வேட்டியை அணியும்போது கொஞ்சம் அன்னியமாக இருக்கும். ஆனால் வேட்டி கட்டி கொஞ்சம் பழகிவிட்டால் இந்தியத் தட்பவெப்பத்திற்கு பிற ஆடைகள் அசௌகரியமானவை என்று தோன்றும். அவை காலைக் கவ்விக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.
நம் ஆடைகளை எப்படி தெரிவுசெய்கிறோம்? யோசித்துப்பாருங்கள். திருநங்கையர் ஆணாக பிறக்கிறார்கள். தங்கள் உடலிலும் உள்ளத்திலும் மாறுதல்களை உணர்ந்ததுமே பெண்ணுடை அணிய ஆரம்பிக்கிறார்கள். அவமதிப்புகள், குடும்ப உறவுகளை இழப்பது என மொத்த வாழ்க்கையே மாறிவிடுகிறது. வேலை கிடைக்காது. பிச்சை எடுக்கவேண்டும். ஆணுடை அணிந்து ரகசியமாக இருந்துகொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. உள்ளே மாறிவிட்ட பின் ஒருவர் வெளியே மாறாமலிருக்க முடியாது. வெளியே இன்னொரு ஆடையை அணிவது வேடம் போட்டுக்கொண்டு, எடையைச் சுமந்துகொண்டு அலைவதுபோல தோன்றும்.
நமக்கு அகத்தே எவ்வளவு வயதோ அந்த ஆடையை தேர்வுசெய்கிறோம். சிலர் அறுபது வயதில் தலைச்சாயம் அடித்து இளமையான ஆடைகள் அணிகிறார்கள் என்றால் அவர்கள் அதையே உள்ளூர உணர்கிறார்கள் என்று பொருள். அதில் பிழை ஏதும் இல்லை. என் சிக்கல் என்னவென்றால் நான் எங்கும் ஒரே வயதை உணர்வதில்லை. ஒரு மலையேற்றத்தில், ஒரு சினிமா வேலையில் இளமையாகவே உணர்கிறேன். ஒரு திருமணவிருந்தில், சில மேடைகளில், சில சந்திப்புகளில் முதியவராக உணர்கிறேன். ஆடை அதற்கேற்ப மாறுகிறது.
இன்னொன்றையும் கவனித்தேன். எவராக இருந்தாலும் அரசுசார் வேலையில் இருந்தால் அறுபது வயதில் ‘முதிய’ மனநிலை வந்துவிடுகிறது. அது அதிகாரபூர்வ ஓய்வுபெறும் வயது. நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னரே பணியிலிருந்து விலகினாலும்கூட மானசீகமாக அரசு வேலையில்தான் இருக்கிறோம். ஒரு கடை வைத்திருப்பவருக்கு இப்படி தோன்றாது என நினைக்கிறேன். நான் வேலையை விட்டபின்னரும் அரசுவிடுமுறையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து ‘லாங் ஹாலிடே’ வருமென்றால் மகிழ்ச்சி அடைவதுண்டு. இதேபோலத்தான். இது நான் பிஎஸ்என்எல்லில் இருந்திருந்தால் ஓய்வுபெறும் வயது. 2022 ஏப்ரல் 22 அன்று.
ஜெ
ஆ. சிலர் இணையதளங்களில் மிகமிகக் கடுமையாக உங்களைத் தாக்குகிறார்கள். ஒருமையில் வாடபோடா என்று பேசுவது, கெட்டவார்த்தைகள் சொல்வது. இதெல்லாம் வாசிக்கையில் தமிழில் எழுதுவதனாலேயே ஓர் எழுத்தாளர் இதைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. தமிழில் வேறெந்த எழுத்தாளரையும் இப்படி வசைபாடுவதில்லை.
எதிர்வினையாற்ற வேண்டும் என்று தோன்றினாலும் அவர்கள் ஏங்குவதே அப்படி சில எதிர்வினைகள் வந்து கவனிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் என்றும் தோன்றுகிறது. இவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அப்படி வசைபாடுபவர்களில் ஒருவர் அவ்வாறு மிகக்கேவலமாக வசைபாடுவதற்குச் சொன்ன காரணம் நான் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பது. எழுத்தாளர்களை மதிக்கவேண்டும் என்ற கொள்கையால் கெட்டவார்த்தை சொல்கிறார்கள் என்றால் அதில் ஒரு முரண்பாடு இருந்தாலும் உயர்ந்த கொள்கைதானே?
கொள்கை, இலக்கியம் என பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலும் அது அவர்களின் மனச்சிக்கல். அப்படி ஒரு கசப்புநிலையிலேயே ஒருவர் இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பெரிய நரகம். அனுதாபம்தான் உள்ளது, மெய்யாகவே.
சிலர் தொழில்முறையாக வசைபாடுபவர்கள். அவ்வாறு வசைபாடியபின் அதேபோல என்மேல் காழ்ப்போ பொறாமையோ கொண்டவர்களிடமிருந்து பணம் கேட்டுப்பெற்றுக் கொள்கிறார்கள். அது ஒரு வாழ்வாதாரம். அதுவும் அனுதாபத்திற்குரியதே.
அவர்கள்மேல் பரிவுதான், வேறெந்த உணர்வும் இல்லை. நான் அப்படிச் சொல்லிக் கேட்கும்போது ஒரு அரசியல்நாகரீகம் கருதிப் பொய்யாகச் சொல்கிறேன் என்று தோன்றும். நீங்கள் உங்களால் மகத்தானது என நம்பப்படும் ஒரு பணியைச் செய்துவிட்டீர்கள் என்றால் மெய்யாகவே அந்த மனநிலை வந்துவிடும். அது நம்மை ஏராளமான சிறுமைகளில் இருந்து விடுவிக்கும். மானுடவாழ்க்கையின் மிகப்பெரிய விடுதலை அதுதான்.
ஜெ