ஒரு யுகசந்தி

காந்தி தன் ஆடையை துறந்த கூட்டம் நிகழ்ந்த இடம் மதுரை

மணல்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் ஒரு தியானநிலை எனக்குக் கைகூடுவதுண்டு. மேலிருக்கும் குடுவையில் இருந்து மணல் மெல்ல கொட்டிக்கொண்டே இருக்கும். கடைசித் துளி மணலும் விழுந்ததும் சட்டென்று குடுவைகள் தலைகீழாக திரும்பிக்கொள்ள, மேலிருக்கும் குடுவை கீழே வரும். இன்னொரு நாழிகை ஓடத் தொடங்கும். அந்தத் தருணம் ஓர் இனிய திடுக்கிடலை உருவாக்கும்.

வரலாற்றிலும் அவ்வாறு காலம் புரளும் கணங்கள் உண்டு. முந்தைய யுகம் முடிந்து அடுத்த யுகம் ஆரம்பிப்பதன் புள்ளி அது. அதை அடையாளம் காண்பதற்கு மொத்த வரலாற்றையும் கவனிக்கவேண்டும். அது நிகழ்வதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அத்தகைய ஒரு புள்ளி காந்தி தன் உடையை மாற்றிக்கொண்ட தருணம்.

நூறாண்டுகளாகின்றன அது நிகழ்ந்து. 22-09-1921. முந்தையநாள் இரவு நடந்த கூட்டத்தில் காந்தி இந்தியர் அனைவரும் உள்ளூரில் நெய்யப்பட்ட ஆடைகளை அணியவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் அவர் அப்போது அணிந்திருந்தது போன்று நீண்ட வேட்டியும் சட்டையும் மேலாடையும் தலைப்பாகையும் அணிவதற்கு தேவையான துணி இந்தியாவில் நெசவாகிறதா என்று கேட்கப்பட்டது. காந்தியின் சிந்தனைகளை நிலைகுலையச் செய்தது அக்கேள்வி.

மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்த காந்தி மறுநாள் காலையில் எளிய அரையாடை மட்டும் அணிந்தவராக தோன்றினார். அவருடைய தோற்றம் எப்போதைக்குமாக மாறியது. இன்று நம் கண்ணில் நின்றிருக்கும் காந்தியின் தோற்றம் அதுவே. அன்றிருந்த எளிய தமிழ் விவசாயியின் உடை அது. கத்தியவார் திவானின் மகனாகப்பிறந்த பாரிஸ்டர் காந்தி முற்றிலும் மறைந்தார். மகாத்மா என கோடிக்கணக்கானோர் அழைத்த இன்னொருவர் தோன்றினார்.

1921 மதுரையில் காந்தி

அது காந்தியின் ஆளுமையில் ஒரு திருப்புமுனை. ஒரு உயிர்த்தெழலின் தருணம். தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏறத்தாழ அதைப்போன்ற ஒரு தருணம் வாழ்க்கையில் அமைந்திருக்கும். நம்மை நாம் கண்டடையும் கணம் அது. ஆனால் முன்பிருந்த நாம் எச்சமில்லாமல் அழிந்து, முற்றிலும் புதிய ஒருவர் நம்மில் எழுவாரென்றால்தான் அது மறுபிறப்பு. மறுபிறப்பு எடுத்தவனுக்கு வாழ்க்கையில் குழப்பங்கள் இல்லை. அலைச்சல்களும் இல்லை. அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கும்.

காந்தியின் வாழ்க்கையில் அவ்வண்ணம் இரண்டு மறுபிறப்புத் தருணங்கள் உண்டு. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1893 ஜூன் ஏழாம் தேதி அவர் தென்னாப்ரிக்காவில் இருந்து பிரிட்டோரியாவுக்கு செல்லும்வழியில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட தருணம் முதலாவது. அன்று அந்த அநீதியை எதிர்த்தேயாக வேண்டும் என்று அவர் கொண்ட தன்னுறுதியில் இருந்தே அகிம்சைப்போர் என்னும் வழி நவீன அரசியலில் உருவானது. மதுரையில் நிகழ்ந்தது இரண்டாவது மறுபிறப்பு.

ஆனால் வரலாற்றுக்கு அதைவிடவும் முக்கியமானது அந்தத் தருணம். சாலார்ஜங் அருங்காட்சியகத்தில் ஹைதராபாத் நவாப் அணிந்த ஆடைகள் உள்ளன. எத்தனை அலங்காரமானவை, எவ்வளவு ஆடம்பரமானவை என்று பார்த்தால் திகைப்பு உருவாகும். அசல் தங்கநூல்களால் பின்னல்வேலை செய்யப்பட்டவை. வைரங்கள் பதிக்கப்பட்டவை. ஆகவே மிகுந்த எடைகொண்டவை. அவற்றை அணிந்துகொண்டு நடமாடவே முடியாது. அமர்ந்திருக்கவோ நிற்கவோதான் முடியும்.

அந்த ஆடையின் தேவை என்ன?  அந்த ஆடைதான் நம்மைப்போன்ற ஒரு மனிதரை நவாப் ஆக நமக்குக் காட்டுகிறது என்பதே அதன் பதில். அஜந்தா ஓவியங்களிலும், ஹொய்ச்சாலச் சிற்பங்களிலும் பழங்காலத்தைய அரசர்களின் ஆடைகளைக் காண்கிறோம். மூன்று அடுக்குகள் கொண்ட மணிமுடிகள். பொன்னாலான மார்புக்கவசங்கள். உடலில் நகைகள் இல்லாத இடமே இல்லை. அதே ஆடையும் அணிகளும்தான் தெய்வங்களுக்கும். அரசன் அந்த ஆடைகள் வழியாகத்தான் தெய்வத்துக்குச் சமானமானவனாக காட்டப்பட்டான்.

அதன்பின் டெல்லி சுல்தான்களின் ஆடம்பரமான அரச உடைகள் இங்கே வந்தன. சீனச் சக்கரவர்த்தியின் ஆடைகளை மாதிரியாகக் கொண்டு மங்கோலியச் சக்கரவர்த்திகள் அந்த ஆடைகளை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் மங்கோலியர்களின் வாரிசுகளான ஆப்கானியச் சுல்தான்கள் அந்த ஆடையை மேலும் அலங்காரமாக ஆக்கிக்கொண்டனர். அந்த ஆடையை இந்தியாவின் மற்ற அரசர்களும் அணிந்தனர். தஞ்சை சரபோஜி மன்னரின் ஆடை அதுதான். திருவிதாங்கூர் அரசர் அணிந்த ஆடையும் டெல்லி சுல்தான்களின் அரச உடைதான்.

பின்னர் அத்தனை ஜமீன்தார்களும் அரச ஆடைகளை அணியலாயினர். முகலாய ஆடையும் பிரிட்டிஷ் ஆடையும் கலந்த அரச ஆடைகள் அவை. அதிகாரம் என்பதே ஆடைதான். ராணுவச் சீருடைகளும் ஒருவகை அரச ஆடைகள்தான். இந்திய ராணுவத்தளபதி அணியும் ஆடை பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அரசகுடியினரின் ஆடை.

மன்னராட்சி யுகத்தில் உண்மையான அதிகாரம் இருந்தது ஆடையில்தான்.அரசரின் ஆடையை இன்னொருவர் அணியமுடியாது. அரசகுடியினரின் ஆடையை பிறர் அணியமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ற ஆடை இருந்தது. ஆதிக்க சாதிக்கு அவர்களுக்கான உடைமரபு உண்டு. ஒருவரின் உடையை இன்னொருவர் நகல் செய்வதே கடுமையான குற்றமாக கருதப்பட்டது.

சென்ற யுகத்தில் நடந்த உரிமைப் போராட்டங்களில் பெரும்பகுதி உடைக்காகத்தான். தலைப்பாகை அணியும் உரிமை, மேலாடை அணியும் உரிமை, தோளில் துண்டு போடும் உரிமை, கால்வரை வேட்டி அணியும் உரிமை ஆகியவற்றுக்கான பல போராட்டங்கள் நடந்துள்ளன. அரசர்கள் ஒரு குலத்தை அல்லது ஒரு மனிதரை அங்கீகரிப்பதே மேலாடை, தலைப்பாகை அணியும் உரிமையை அளிப்பதன் வழியாகத்தான். இன்றுவரை தொடரும் பொன்னாடை மரபு அவ்வாறு வந்ததுதான். ஒருவருக்கு மேலாடை அணிவிப்பதென்பது மிகப்பெரிய கௌரவமாக நினைக்கப்பட்டது.

அச்சூழலில் கோடிக்கணக்கானவர்களால் தலைவராக கருதப்படும் ஒருவர் தன் மேலாடையை களைவதற்கு என்ன பொருள்? மக்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு, தன்னை மேலே தூக்கிக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டு, ஆட்சிசெய்த அதிகாரத்தின் காலம் முடிவதன் குறியீடு அது. அதிகாரம் மக்களின் வடிவை மேற்கொள்வதன் சித்திரம் அது.

அது வேறுவகையான அதிகாரம். மக்களை ஒடுக்கி அவர்களை ஆளமுயல்வதில்லை அது. மக்களின் கூட்டான சக்தியின் மையமாக உருவாகி வருகிறது. மக்களின் ஏற்பே அதன் ஆற்றல். அது மக்களின் பிரதிநிதி மட்டுமே. அந்த மக்களதிகாரத்தின் உருவம்தான் மக்களைப்போல் உடையணிந்த காந்தி.

அந்த தோற்றம் மக்களிடம் சொல்வதென்ன? “நான் உங்களில் ஒருவன், உங்களை விட மேலிருப்பவன் அல்ல, உங்களுடன் இருப்பவன். உங்கள் குரலாக ஒலிப்பவன். அந்த ஏற்பை எனக்கு அளியுங்கள்”. அதை மக்கள் அவருக்கு அளித்தனர். மொத்த இந்தியாவே அவருக்குப்பின் அணிவகுத்தது. அத்தகைய ஆதரவு இந்தியாவில் அவருக்கு முன் எவருக்கும் கிடைத்ததில்லை. அக்பரோ அசோகரோகூட அப்படி முழு இந்தியாவையும் கட்டுப்படுத்தியதில்லை.

எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்புதான் எழுகிறது. இந்தியாவின் மன்னராட்சி எத்தனை தொன்மையானது. மகாபாரதத்தை வைத்துப்பார்த்தால் எப்படியும் நாலாயிரம் ஆண்டுகளாக அது இங்கே நிலைகொண்டிருக்கிறது. எத்தனை பேரரசர்கள், எத்தனை மாவீரர்கள். நாம் மன்னராட்சிக்கு மனம்பழகியவர்கள். அரசனை தெய்வமாக வழிபட்டவர்கள். இன்றுகூட தெய்வத்தை அரசனைப்போல வழிபடுபவர்கள்.

மன்னராட்சி இருந்த பிற நாடுகளில் படிப்படியாக பலவகையான போர்கள் மற்றும் வன்முறைகள் வழியாகத்தான் மன்னராட்சி அகற்றப்பட்டது. முதல் உலகப்போர் நிகழாவிட்டால் உலகில் மன்னராட்சி ஒழிந்திருக்காது என்பவர்கள் உண்டு. இன்னும்கூட உலகில் பாதிநாடுகளில் மன்னராட்சி நீடிக்கிறது. ஆனால் நாம் மிக இயல்பாக, எந்த வன்முறையும் இல்லாமல் மக்களாட்சிக்குரிய மனநிலைக்கு வந்தோம்.

பொன்னலங்காரம் கொண்ட ஆடையும் மணிமுடியும் அணிந்த அரசர்களை தலைவர்களாக கொண்டிருந்தவர்கள் நாம். அரையாடை அணிந்து, மேலாடை இல்லாமல் நின்றிருந்த ஒருவரை எந்த தயக்கமும் இல்லாமல் தலைவராக ஏற்றுக்கொண்டோம். கோடிக்கணக்கில் அவர்பின்னால் திரண்டோம். சத்தமே இல்லாமல், அலைகளே இல்லாமல், மன்னராட்சியுகம் முடிந்து மக்களாட்சி யுகம் தொடங்கியது.

அந்தக் கணம்தான் நூறாண்டுகளுக்கு முன்பு மதுரையில் காந்தி எளிய ஆடைக்கு தன்னை மாற்றிக்கொண்ட அந்த நிகழ்வு. வரலாற்றின் ஒரு திருப்புமுனைப் புள்ளி. ஒரு மகத்தான யுகசந்தி.

ஜூனியர் விகடன் செப்டெம்பர் 2021

முந்தைய கட்டுரைபழங்குடிகளுக்கான நீதி
அடுத்த கட்டுரைநூற்பு, தொடக்கம்