இந்திய முகங்கள்

அன்புள்ள ஜெ,

இரவில் மட்டும் நாம் உணரக்கூடிய அல்லது கேட்க கூடிய சப்தங்களை எழுப்பும் பறவைகள் என்ன? அவற்றின் பெயர்கள் குறித்த ஆவணங்கள் ஏதும் கிட்டுமா என Google செய்தபோது தவறுதலாக கிடைத்த வரைபடத்தொகுப்பு.  உங்கள் பார்வைக்கு.

 https://collections.library.yale.edu/catalog/2039774

1837 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளக்கப்படம் இந்தியாவில் மதுரையில் காணப்பட்ட பல்வேறு சாதி மற்றும் மத மற்றும் இனக்குழுக்களின் ஆண்கள் மற்றும் பெண்களின் 72 முழு வண்ண படங்கள் உள்ளன. இவை அனைத்தும் கையால் வரையப்பட்டவை ஆகும். மீண்டும் மீண்டும் சொல்லி, உணர முடியாத சில உண்மைகளை இந்த படங்கள் சத்தமின்றி சொல்வதாக உணர்கிறேன். ஒவ்வொருவரைபடமும் மைக்காவில் செய்யப்பட்டது, இது ஒரு கையெழுத்து பிரதி என்ற குறிப்பு உள்ளது.

நீங்கள் எப்போதும் சொல்வது போல உண்மையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்ற கொடை ஒன்று உண்டெனில் அது நிர்வாகத்திறனும், ஆவணப்படுத்தும் திறனும் எனலாம். டேனியல் புவர் என்பவரால் வில்லியம் ட்வின்னிங் என்பவருக்கு பரிசளிக்கப்பட்ட படத்தொகுதி. அது கீழ்கண்ட தலைப்புடன், அதிக பொறுப்புடன் பரிசளிக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.

Seventy two specimens of castes in India : “All people, nations and languages shall serve Him. … presented to the Revd. William Twining as a token of obligation by his … friend Daniel Poor …

லெக்ஷ்மி  நாராயணன்
திருநெல்வேலி

அன்புள்ள லெக்ஷ்மிநாராயணன்,

ஆவணப்படுத்துதல், அடுக்கி முறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஐரோப்பியர் மிகத்தேர்ந்தவர்கள் என்ற நிலையிலேயே இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவின்மேல் அவர்கள் முழுமையான ஆதிக்கம் கொள்ள அந்த அறிவுப்பயிற்சி முக்கியமான காரணம். அவர்களிலேயே பிரிட்டிஷார் ஒரு படி மேலானவர்கள்.

பிரிட்டிஷாரின் ஆவணப்படுத்தலே இந்தியாவில் நவீன ஆட்சிமுறை உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்தது. ஆனால் அந்த ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளில் இருந்து அவர்கள் உருவாக்கிய கொள்கைகளைப் பற்றி மட்டும் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

அக்காலத்தில் ஐரோப்பியர்களிடம் சில முன்கொள்கைகள் ஆதிக்கம் செலுத்தின. அவை பெரும்பாலும் இனவாத அடிப்படை கொண்டவை. அவற்றின் அடிப்படையில் அவர்கள் உருவாக்கிய கொள்கைகள் அவர்கள் சென்ற இடங்களில் புதிய இனவாதங்களை உருவாக்கின. அவர்கள் சென்ற இடங்களில் நவீனக்கல்வி, நவீன செய்தித்தொடர்பு ஆகியவற்றையும் கொண்டுசென்றார்கள். ஆகவே அந்தப் புதிய இனவாதங்கள் சட்டென்று தொற்றுநோய் போலப் பரவின.

அவர்கள் காலகட்டத்தில் உலகமெங்கும் உருவான நவீன ஜனநாயகம் என்னும் அரசியல்நிகழ்வில் அந்த இனவாதக் கொள்கைகள் ஊடுருவின. ஆகவே புதிய விளக்கங்கள் பெற்றன. இன்றும் ஐரோப்பியர் ஆட்சி செய்த எல்லா நாடுகளிலும் அவர்கள் உருவாக்கிய  புதிய இனவாதங்கள் பெரிய அரசியல்சக்திகளாக நீடிக்கின்றன. சமூகப்பிளவுகள், பிரிவினைவாதங்களை உருவாக்கி நிலைகொள்கின்றன. பல இடங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் உருவாக்கியிருக்கின்றன. இந்தியாவில் அவர்கள் உருவாக்கிய புதிய இனவாதமே திராவிட -ஆரிய கொள்கை.

ரத்தினச் சுருக்கமாக அவர்களிடமிருந்த முன்கொள்கைகள் என சிலவற்றைச் சொல்லலாம்.

அ. மேய்ச்சல்நில மக்களுக்கும் வேளாண்நில மக்களுக்குமான முடிவில்லாத போராட்டமே மானுட வரலாறின் அடிப்படைச் சட்டகம்.

ஆ. பெரும்பாலான நாடுகளில் அங்கே வாழ்ந்த மக்கள் தேங்கிய பண்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். வெளியே இருந்து அங்கே வரும் மேம்பட்டதும் தீவிரமானதுமான இன்னொரு இனம் அவர்களை வென்று அங்கே தங்கள் பண்பாட்டை நிலைநிறுத்தும். அதுவே அங்கிருக்கும் முதன்மைப் பண்பாடாகத் திகழும். அங்குள்ள பண்பாட்டில் இந்த இரு அம்சங்களின் போராட்டம் இருந்துகொண்டிருக்கும்.

இ. தேக்கநிலைப் பண்பாடு கொண்ட இனத்தவர் பொதுவாக கரியவர்கள். பரந்த மூக்கும் பெரிய பற்களும் கொண்டவர்கள்.

Edgar Thurston

இந்த நம்பிக்கையில்தான் ‘தென்னிந்திய சாதிகளும் குலங்களும்’ போன்ற பெருநூல்களை இயற்றிய எட்கார் தர்ட்ஸ்டன் போன்றவர்கள் எல்லா குடிகளிலும் மூக்குநீளத்தை அளந்து ஆவணப்படுத்தவும் அதனடிப்படையில் கொள்கைகளை வகுக்கவும் முயன்றனர். இந்த இனக்குழு இந்த நிறம் கொண்டது, இன்னின்ன இயல்பு கொண்டது என எளிமையாக அடையாளப்படுத்த முயன்றனர்.

தர்ஸ்டனின் நூல் மாபெரும் ஆவணமதிப்பு கொண்டது என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆவணங்கள் பெரிய அறிவுச்சேகரிப்புகள். ஆனால் அவர்களிடமிருந்த இந்த இனவாத அடிப்படைகளை கருத்தில்கொண்டே அவர்களின் கொள்கைகளை நாம் பரிசீலிக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் தரவுகளிலும் இந்த முன்முடிவுகள் ஊடுருவியிருக்கின்றனவா என்னும் கவனமும் நமக்குத்தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைஇமையத்தின் கோவேறு கழுதைகள், வெங்கி
அடுத்த கட்டுரைநாம் சுதந்திரமானவர்களா?