பிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

அன்பான ஜெ,

வணக்கம்.

நீங்கள் பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதி நிகழ்விற்குச் சென்று கலந்து கொண்டதை நானே நேரில் சென்று நின்றதைப்போல உணர்ந்தேன். அவருடைய இறுதிப் பயணம் நிராதரவாக அமைந்து விடக் கூடாது என்ற உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். ஒரு தந்தையாக, மூத்த சகோதரனாக, இனிய தோழனாக நீங்கள் அங்கே கிருபாவுடன் நின்றீர்கள். போகனும் லஷ்மி மணிவண்ணனும் சாம்ராஜூம் கூட நின்றது மேலும் ஆறுதலாக இருந்தது.

எப்பொழுதும் இந்த மாதிரித் தனித்த வாழ்க்கையை தேர்வு செய்கின்ற எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஏற்படுகின்ற அவலத்தையும் கைவிடல்களையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை ஒரு சமூகக் குற்றமாகப் பின்னர் பேசியும் வருகிறோம். ஆனால் நாமே இந்தக் குற்றத்தின் நிஜமாகவும் நிழலாகவும் இருக்கிறோம் என்பதை மறந்தும் மறைத்தும் கொள்கிறோம். இதை, இந்தக் கடப்பாட்டினை உங்களுடைய இன்றைய பிரான்ஸிஸ் கிருபாவைப் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

உண்மையில் இவ்வாறான சூழலில் நாம் உடனிருப்பதே அவசியமானது. இது ஒரு பண்பாடாக உருவாக வேண்டும் என நானும் சாம்ராஜூம் இன்று பேசினோம். எப்பொழுதும் துயரடைந்தவர்கள், நிராதரவானவர்களோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சான்று. எல்லாவற்றுக்கும் அப்பாலான உணர்வும் பேரன்பின் அடையாளமும் இது. மிக்க நன்றி.

நிறைந்த அன்புடன்,

கருணாகரன்

இலங்கை

அன்புள்ள கருணாகரன்,

பிரான்ஸிஸ் கிருபாவின் இறப்பின் உணர்வலைகள் முடிந்தபின் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது, நம் சூழலில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

அவருடைய மறைவை ஒட்டி பலவகையான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலும் அந்நேரத்திய எதிர்வினைகள். அவரை இதுவரை எவ்வகையிலும் கவனிக்காதவர்களின் கருத்துக்கள். சில அவரை மேலோட்டமாக அறிந்து, அவருடைய வேறுபட்ட வாழ்க்கையை மட்டுமே வைத்து அவரை மதிப்பிடுபவர்களின் விதந்தோதல்கள். சில அவருடைய நண்பர்கள் எழுதியவை. அவரைப் போன்ற ஒருவரின் இறப்பு உங்களைப்போல சிலரிடம் உண்மையான ஒரு குற்றவுணர்ச்சியையும் உருவாக்குகிறது.

முதலில் சொல்லவேண்டியது இதுதான், பிரான்ஸிஸ் ’அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர் விரும்பியபடி வாழ்ந்தார்’ என்பது உண்மையல்ல. அது எவ்வகையிலும் அவருடைய தெரிவு அல்ல. இளமையிலேயே வலிப்புநோய் கொண்டவர். அந்த சிகிச்சையினாலோ என்னவோ மூளைப்பாதிப்படைந்து கடுமையான உளநோயாளியாக இருந்தவர். அவரை மரபார்ந்த சிகிழ்ச்சைமையம் ஒன்றில் சிலகாலம் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்.

அவர் குணமாவதற்கு உறவில் தமக்கை முறையான ஒருவர் எடுத்த முயற்சிகள் காரணம். குணமானபின் சென்னை வந்தார். சென்னையில் இருந்த தொடக்ககாலமே அவருடைய சிறந்த காலகட்டம். அப்போதுதான் முக்கியமான கவிதைகளை எழுதினார். தமிழினி வசந்தகுமாருக்கு அணுக்கமானவரானார். கன்னி நாவலை எழுதினார். அப்போது அவர் போதை அடிமை அல்ல.

பிரான்ஸிஸ் சினிமாக்கள் சிலவற்றில் வேலைபார்த்திருக்கிறார். குடிப்பழக்கம் அவரைப்போன்ற உளச்சிக்கல் கொண்ட ஒருவருக்கு மிக அபாயகரமானது. ஆனால் அச்சூழல் அவரை இழுத்துச் சென்றது. அது சினிமாவின் அடிமட்டத்தில் மிகச்சாதாரணமாக காணக்கிடைப்பது. அவரைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. அது அவருடைய பிழை அல்ல. கற்பனையும் உணர்வுநெகிழ்ச்சியும் கொண்ட எவருக்கும் குடியை கட்டுப்படுத்துவது மிகமிகக் கடினமானது. அவர்களின் மூளை ரசாயனங்களின் இயல்பு அத்தகையது.

குடிப்பவர்களுக்கு தேவை ஆலோசனை அல்ல. சிகிழ்ச்சை. அதுகூட சிலருக்கு சாத்தியமே அல்ல. ஏற்கனவே மூளைநரம்புகளில் சிக்கலுள்ளவர்கள் குடியை கட்டுப்படுத்தும் சிகிழ்ச்சைக்கு ஆளாக முடியாது. கட்டுப்பாடான குடி என்பது பெரும்பாலும் கணக்குவழக்கு கொண்ட, கறாரான மூளைக்காரர்களுக்கே சரிவரும். குடி சிலரை மிகச்சீக்கிரத்திலேயே அடிமையாக்கும். சிலரை அடிமையாக ஆக்கவே ஆக்காது. அது அவருடைய தெரிவோ அவருடைய தனிதிறமையோ அல்ல. அது மூளைரசாயனங்களின் விளைவு. பெரும்பாலும் பாரம்பரியம் சார்ந்தது.[நமக்குள் இருக்கும் பேய் ]

எனக்கு எந்த உடற்சிக்கலும், மூளைநரம்புப் பிரச்சினையும் இல்லை. இன்றுவரை முற்றிலும் ஆரோக்கியமானவன். ஆனால் புனைவிலக்கியம் எழுதுவதிலுள்ள உளக்கொந்தளிப்புகள் என்னை தற்கொலைமுனை வரை கொண்டுசென்றிருக்கின்றன. பைத்தியம் போல் அலைய வைத்திருக்கின்றன. அப்படி இருக்கையில் மெய்யாகவே நரம்புச்சிக்கல் கொண்ட ஒருவர், புனைவுத்தீவிரம் கொண்டிருப்பதும், கூடவே குடிப்பழக்கமும் எத்தனை அபாயகரமான பொறி என்று சொல்லவேண்டியதில்லை. வெளிவரவே இயலாத சுழி அது.

பிரான்ஸிஸ் வெளிவரவே விரும்பினார். நான் அவரைச் சந்தித்த போதெல்லாம் “இப்ப விட்டுட்டேன்” என்றோ “உடனே விட்டுடணும்” என்றோதான் சொல்வார். கண்ணீர் விடுவார். பலமுறை அவருடைய நண்பர்கள் அவரை மதுஅடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயன்றுள்ளனர். அவரே விரும்பி வருவார். பாதியில் தப்பிச் செல்வார். அவர் எந்த குடிநோயாளிகளையும் போல தீராத அலைக்கழிப்பிலேயே இருந்தார். மருத்துவர் ஜீவா அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் மீள்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை, அவர் மூளையின் சிதைவு அவ்வாறு என்றார். அவருக்கு எப்போதுமே வலிப்புநோய் இருந்தது.

இது ஒரு தனிப்பட்ட துயரம், அவ்வளவுதான். இது அவருடைய வாழ்க்கைப் பார்வை அல்ல. அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்ல. அவருடைய கொள்கைப்பிரகடனம் அல்ல. இதற்கு தத்துவ விளக்கமோ, தரிசன விளக்கமோ அளிக்க வேண்டியதில்லை. இதன்பொருட்டு அவரை கொண்டாடுபவர்கள், இதை அவருடைய அடையாளமாக ஆக்குபவர்கள், மிகப்பெரிய அவமதிப்பையே அவருக்கு இழைக்கிறார்கள்.

’சமூகம் அவரை கைவிட்டது, ஆதரிப்பாரின்றி வறுமையில் இறந்தார்’ என்று சொல்வது அவரை வாழ்நாளெல்லாம் பேணிய நண்பர்களையும் வாசகர்களையும் அவமதிப்பது. அவரை அனைவரும் பேணினர். அவர்தான் மேலும்மேலும் தொலைந்து கொண்டிருந்தார். பல ஆண்டுகள் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் மறைந்தார். மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவரை கண்டடைந்தனர். அவருக்கு வாடகை வீடு எடுத்து அளிக்கப்பட்டது. அவரால் அங்கே தங்க முடியவில்லை. முழுநேரமும் குடி, அவ்வப்போது வரும் வலிப்பு, பிற சிக்கல்கள்.

அவர் கடைசியில் சிக்கிய சிக்கலைப்போல சிலவற்றில் முன்னரும் சிக்கியிருக்கிறார். அவருக்கு அவ்வப்போது இனம்புரியாத அச்சமும் வன்முறைவெறியும் உருவாவதுண்டு. அப்போது உடனிருப்போர் பாதிக்கப்படுவதுண்டு. எல்லாவற்றிலிருந்தும் நண்பர்களே அவரை காத்தனர். எவராலும் அவரை மீட்க முடியாது. அவர் அவ்வளவேனும் மீண்டு வந்து எழுதியதே ஒரு அற்புதம்தான்.

அவருக்கு பணம் அளித்தோர் பலர். நான் குடிக்கு பணம் கொடுப்பதில்லை என்னும் கொள்கை கொண்டவன். ஆனால் கொடுக்காமலிருக்க முடிந்ததும் இல்லை. கொடுக்கும் பணம் அவரை மேலும் அழிக்கிறது என்று தெரியும். அது சார்ந்த குற்றவுணர்வு உண்டு. ஆனால் கொடுத்துவிட்டு நகர்வது ஒன்றே நான் செய்யக்கூடுவது. நான்கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு பார்வதிபுரம் சந்திப்பில் அவர் கிடப்பதை நானே காண்பதெல்லாம் ஆழமான பழியுணர்ச்சியை அளிப்பவை. ஆனால் அனைவருக்கும் அது ஒன்றே வழி.

இந்த தவிர்க்கமுடியாத சிக்கலில் இருந்து கொண்டு அவருடைய ஆழம் மீட்புக்காக, ஒளிக்காக ஏங்கியதை அவருடைய கவிதைகள் காட்டுகின்றன. ஆகவேதான் அவர் முக்கியமான கவிஞர். குடித்தமையால், அலைந்தமையால் அவர் கவிஞர் அல்ல. கவிதையில் வெளிப்பட்ட ஒளியால் அவர் கவிஞர். கவிதையின் பொருட்டு அவர் குடிக்கவும் அலையவும் இல்லை. அந்தக் குடியை, அதன் விளைவாக அவர் வாழநேர்ந்த வாழ்க்கைச் சூழலை, மிகைப்படுத்தி கற்பனாவாதத்தை பூசி கொண்டாட வேண்டாம்.

அவ்வாறு கொண்டாடுவது என்ன விளைவை உருவாக்குகிறது என்றால், அவரைப் போலவே குடித்து அலைந்தால் கவிஞர் என்னும் படிமம் கிடைக்கும் என இளையவர்களை எண்ணச் செய்கிறது. குடியும் அலைச்சலும் கலகம் என்றும், புரட்சி என்றும், சுதந்திரம் என்றும் எண்ணிக் கொள்ளச் செய்கிறது. அதைப்போல அபத்தம் வேறில்லை. அது வேடம்போட்டு ஆடுதல் மட்டுமே. ஆனால் இந்த வேடம் கலைக்க முடியாதது. சிக்கிக்கொண்டால் உள்ளே இழுத்துவிடுவது. பிரான்ஸிஸுக்காவது கவிதைகள் எஞ்சுகின்றன. மிகப்பலருக்கு ஒன்றுமே இல்லை. முற்றிலும் வீணான வாழ்க்கைகள் அவை.

நான் இந்த வயதில்  இவர்களுடன் அல்ல, இவர்களின் தந்தையருடன் மட்டுமே என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். கவிஞன் என நடித்துச் சாகும் ஒருவன் என் மகன் என்றே அகம் பதறுகிறது. அவர்களை குடிக்க வைத்து, முச்சந்தியில் விழச்செய்து தங்கள் ரகசியக்கிளுகிளுப்புகளை கொண்டாடிக்கொள்ளும் நடுத்தரவர்க்க அற்பர்கள்மேல் சீற்றமே எழுகிறது.

கவிதைக்கு போதை தேவையில்லை. கவிஞன் செயற்கையாக தன்னை சமூகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளவும் வேண்டியதில்லை. உண்மையான கவிஞனுக்கு இயல்பான உன்மத்தம் உண்டு. அவன் அன்றாடத்தில் இசைந்து வாழும்போதுகூட அவனுக்குள் கவிதையின் கனவு நுரைத்துக்கொண்டிருக்க முடியும். அக்கனவால் அவன் தன்னிச்சையாகவே சமூகத்திலிருந்து விலகியவனாக, அயலவனாக இருப்பான்.

உண்மையில் மதுவின் போதை அந்த இயல்பான கனவை, பித்தை மறைத்து வெறும் போதையை மட்டுமே எஞ்சவிடுகிறது. அது படைப்புரீதியாகப் பேரிழப்பு. மூளைமேல் எந்த மயக்கத்தையும் படியவிடாமலிருப்பது படைப்பிலக்கியவாதியின் கட்டாயத் தேவைகளில் ஒன்று. எல்லாமே அனுபவங்கள்தான். எதையும் இழக்கலாகாது. ஆகவே போதைப்பொருளை மட்டுமல்ல தூக்கமாத்திரைகளைக்கூட தவிர்ப்பதே நல்லது.

நான் வலிமரப்பு மாத்திரைகளைக்கூட தவிர்த்துவிடுவேன். வலிமரப்பு இல்லாமலேயே கையில் சிறிய அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்திருக்கிறேன். துடிக்கவைக்கும் வலியில்கூட அதை உற்றுநோக்கவே முயல்வேன். எனக்கு நிகழ்கின்ற எல்லாமே எனக்குரிய அகஅனுபவங்கள், எனக்குரிய செய்திகள் என்பதே என் எண்ணம். மூளை மிகமிகச் சிக்கலான ஒரு உறுப்பு. அதை மழுங்கடித்துக்கொண்டு படைப்பிலக்கியத்தை அடையமுடியாது. அதைக் கூராக்கிக்கொண்டே அடையமுடியும்.

கூராக்கிக்கொள்ளுந்தோறும் துயர் மிகுகிறது. வலி கூடுகிறது. அவற்றைவிட மேலாக அர்த்தமில்லாத சோர்வும் சலிப்பும் பெருகுகிறது. ஆனால் அதெல்லாம்தான் மானுட அனுபவம். படைப்பியக்கத்தின் கச்சாப்பொருளே அவைதான். அவற்றை அறிவதனூடாக நாம் அடையும் உன்மத்தநிலை ஒன்று உண்டு. அவற்றை கடந்துசெல்லும் மாபெரும் உன்மத்தநிலையும் உண்டு.

ஒரு படைப்பூக்கம் கொண்ட மனம் தனிமை நிலவொளியில், மலைமுகட்டில் அடையும் பெரும் பித்தை எந்தப் போதையிலும் அடைய முடியாது. போதை அந்த மெய்யான பித்தை மறைத்துவிடுகிறது. தியானத்தில் அடையப்பெறும் உளச்சிதறல் அனுபவம், உளத்திரிபுநிலைகள், உளக்குவிதல் நிலைகள் எந்த உச்சகட்டப் போதைப்பொருளாலும் அமைவன அல்ல. உண்மையில் போதைப்பொருட்கள் கற்பனைத்திறனும் நுண்ணுணர்வும் இல்லாத சாமானியர்களுக்கானவை.

சாமானியர்களுக்கு தற்பிடித்தங்கள் இருக்கும். உளத்தடைகள் பல இருக்கும். போதை அளிக்கும் சிறிய சுதந்திரம் வழியாக அவற்றை மீறி கொஞ்சம் களியாட்டமிடுகிறார்கள். சாமானியர் அவ்வப்போது கொஞ்சம் குடிப்பது நல்லது என்பதே என் எண்ணம். அது அவர்களை அன்றாட லௌகீக விஷயங்களுக்கு அப்பால் களியாட்டம் என ஒன்று உண்டு என உணரச்செய்யும். அது அவர்களுக்கு நல்லது.

ஆனால் கற்பனையும் படைப்பூக்கமும் கொண்டவர்களுக்கு குடியோ போதையோ எந்தவகையிலும் தேவையில்லை என்பதுடன் மெய்யாகவே அவர்கள் அடையவேண்டிய உச்சகட்ட உன்மத்த நிலைகளை அந்த சின்னப்போதை இல்லாமலாக்கிவிடுகிறது என்பதே என்னுடைய எண்ணம்.

‘உளம்கடந்து செல்லும்’ ஒரு நிலை உண்டு. நம்மை இங்கே நிலைநிறுத்தும் எல்லா தர்க்கங்களையும் கடந்துசெல்வது அது. ஊழ்கத்தில் அதைத்தான் ‘மது’ என்கிறார்கள். அந்த மதுவை அடைந்தவர்களுக்கு இந்த மது வெறும் திரவம். என்றேனும் அந்த அக மதுவை அருந்த வாய்ப்புள்ளவர்கள் எல்லா படைப்பாளிகளும். சிலர் அந்த வாசலை எளிய மது வழியாக எப்போதைக்குமாக மூடிவிடுகிறார்கள்.

தமிழின் தலைசிறந்த கவிஞரான தேவதேவன் குடிப்பவரோ அலைபவரோ அல்ல. ஆனால் அவர் தனக்கே உரிய உன்மத்த நிலையில்தான் எந்நேரத்திலும் இருந்துகொண்டிருக்கிறார். தேவதச்சன் நகர்மையத்தில் நகை வியாபாரம் செய்பவர்தான். அபி கல்லூரி ஆசிரியர்தான். பிரான்ஸிஸ் கிருபாவைவிட மிக மேலான கவிஞர்கள் அவர்கள். பிரான்ஸிஸ் கிருபா சென்றடைந்த உன்மத்த நிலைகளைவிட அரிய பித்துநிலைகளை சொல் வழியாகவே சென்றடைந்தவர்கள்.

அவர்களை அறிந்தவர்கள் ஆச்சரியத்துடன் நினைவுகூரலாம். ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் இணையும் விதமே, அல்லது ஒரு இறகு மெல்ல விழும் அசைவே தேவதேவனை பித்தெழுந்து மெய்ப்பு கொள்ளச் செய்வதை கண்டிருக்கிறேன். வெறும் அந்தியே அபியை உயர்மயக்க நிலைக்கு இட்டுச்செல்கிறது. உச்சிவெயில் போல உச்சகட்ட போதை வேறில்லை என்று தேவதச்சன் ஒருமுறை சொன்னார். அதுதான் கவிஞனின் போதை. எந்தக்குடிகாரனும் அருந்தும் அந்த மது அல்ல இது. இது கலைஞனின் மது. யோகியின் மதுவுக்கு பலவகையிலும் நிகரானது.

[இந்த வேறுபாட்டை பாரதி ஒரு கவிதையாகவே எழுதியிருக்கிறார். அவர் இரண்டு மதுவையும் அறிந்தவர்.பாரதியாரின் தனிப்பாடல்கள்/14. மது .பச்சை முந்திரிப் பழம்கொண்டு உருவாக்கும் மதுவை அருந்திக் களிக்கும் போகிகளை நோக்கி யோகி இன்னொரு மகத்தான மதுவைப்பற்றிச் சொல்கிறார்.]

பிரான்ஸிஸ் இயல்பாகவே கவிஞர். எப்படியும் அவர் அவ்வண்ணமே வெளிப்பட்டிருப்பார். அவர் கவிதை எழுதியது உளநோயும் குடியும் இணைந்த அந்த வாழ்க்கைச்சூழலை கடந்தும் மீறியும்தானே ஒழிய, அந்த வாழ்க்கைச்சூழலின் விளைவால் அல்ல. குடிக்காமலிருக்க முடிந்திருந்தால் அவர் இன்னும் முழுமையாக வெளிப்பட்டிருப்பார். அவர் சிறப்பான படைப்புகளை எழுதிய காலகட்டத்தில் குடிநோயாளியாக இல்லை என்பதை நண்பர்கள் அறிவார்கள். குடி அவரை படைப்பியக்கத்திலிருந்தே விலக்கிக் கொண்டுசென்றது என்பதுதான் உண்மை.

அவருடைய குடியை, அலைச்சலைக் கொண்டாடுபவர் எவர்? நம் நடுத்தரவர்க்கத்தின் ரகசியக் கிளுகிளுப்பே அவருடைய அவ்வாழ்க்கையை கொண்டாடச் செய்கிறது. முச்சந்தியில் கம்பிவளையத்தில் நுழையும் கழைக்கூத்தாடிபோல நம் நடுத்தரவர்க்க லௌகீகர் கவிஞனைப் பார்க்கிறார்கள். தங்களை மகிழ்விக்க, தங்களால் இயலாத ஒன்றைச் செய்துகாட்டுகிறவன் அவன் என நினைக்கிறார்கள். அவன் தங்களைவிட கீழான நிலையில் இருந்தால் அவர்களுக்குள் ஒரு நிறைவு ஏற்படுகிறது, அதை மறைத்துக்கொண்டு உச் உச் கொட்டுகிறார்கள். அவன் தேவதச்சன்போல நன்றாக, நிறைவாக இருந்து மேலும் சிறப்பாக எழுதியிருந்தால்கூட அவரை கண்டுகொள்ளாமலேயே விட்டிருப்பார்கள்.

கவிஞன் மேல் இரக்கத்துடன் பேசப்படும் சொற்கள் பெரும் ஒவ்வாமையையே அளிக்கின்றன. எந்நிலையிலும் கவிஞனை வாசகன் குனிந்து பார்க்கக்கூடாது. அவன் மேல் அனுதாபம் கொள்வதைப்போல அவமதிப்பு வேறில்லை. அவன் யாராக இருந்தாலும் ஒரு சமூகத்தின் ஆசிரியனே. அவனுடைய சிக்கல்களை வைத்து அவனை மதிப்பிடலாகாது.அவன் தன் எல்லைகளைக் கடந்து வெளிப்படும் கவிதைகளை வைத்தே அவனை மதிப்பிடவேண்டும். பிரான்ஸிஸ் அவருடைய கவிதைகளால் மட்டுமே நினைக்கப்பட வேண்டும்.

ஜெ

ஜெ,

பிரான்சிஸ் கிருபாவின் மரணம் பற்றிய கட்டுரை படிப்பதற்கே மனதுக்கு மிக வேதனையாக உள்ளது. நாம் நேரில் சென்றிருந்தாலும், இவ்வளவு மனம் வருந்தியிருக்குமா என்பது சந்தேகம் தான் மிக உருக்கமாக உண்மையாக சொன்னார் எப்பொழுதுமே நம்மவர்களுக்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் உயிரோடிருக்கும் கொண்டாட மாட்டார்கள், மனமில்லையா, பெருந்தன்மை இல்லையா, அறிவில்லையா, என்ன இல்லை என்றே தெரியவில்லை, இருக்கின்ற போது நாலு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சொல்ல மிக மிக தயங்குகிறார்கள் நிறைய யோசிக்கிறார்கள்

நடிகர்களுக்கு பாடகர்களுக்கு, இசை அமைப்பாளர்களுக்கு, ரசிகர் கூட்டம் உள்ளது போல் இவர்களுக்கு  வரவும் தயங்குகிறார்கள் இதுவுமு ஒரு குறைதான், நமக்காக நம் சமூக நலனுக்காக எழுதும் இவருகளையும் கொண்டாட வேண்டும், கொண்டு செல்லும் போது நாமும் உடன் சென்று அஞ்சலி செய்ய வேண்டும், இனி வரும் காலத்திலாவது, நடக்கும் என நம்புவோம் நல்ல கவிஞனை இழந்து விட்டோம் இனி இருப்பவர்களையாவது கொண்டாடி மகிழ்வோம்

வேலுமணி

கோவை

அன்புள்ள வேலுமணி,

உண்மைதான். இங்கே ‘செய்திக்கு’த்தான் எதிர்வினை. படைப்புகளுக்கு அல்ல. ஒரு படைப்பைப் படித்துவிட்டு இங்குள்ள கும்பல் ஏதேனும் சொல்வது அரிதினும் அரிது. எந்தப்படைப்பைப் பற்றியும் இங்கே பேச்சுக்கள் மிகக்குறைவு. இவர்களைப் பொறுத்தவரை பிரான்ஸிஸின் மரணம் ஒரு செய்தி. அச்செய்திக்குத்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். இன்றும் தமிழில் வாசிக்கப்படாத, பேசப்படாத கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒரு நான்கு வரியேனும் எழுதவேண்டும் என இவர்கள் நினைத்தாலே நம் சூழல் மாறிவிடும். ஆனால் ஒரே நாளில் பிரான்ஸிஸையே மறந்துவிடுவார்கள். அடுத்த செய்தி வந்துவிடும். இந்தக் குறிப்புகள் நாலைந்து நாட்கள் கழித்து வெளியாகும்போது பிரான்ஸிஸ் பற்றி பேச்சே இருக்காது, கவனியுங்கள்.

பிரான்ஸிஸின் உடல்நிலை அவருடன் பிறந்து வந்த ஒன்று. அதற்கு அவரோ நாமோ ஒன்றும் செய்துவிடமுடியாது. அவருடைய அந்நிலையைக் கடந்து அவர் எழுதியதனால் அவரை முக்கியமான கவிஞர் என்கிறோம். அக்கவித்துவம் இல்லாதவர்கள் அவருடைய உடல்நிலை கொண்டிருந்தால் பிறர் அறியாமல் மறைந்திருப்பார்கள்.

அவருடைய படைப்புலகம் அவருடைய அந்த கொந்தளிப்பான நிலையின் சாதக அம்சங்களும் பாதக அம்சங்களும் கொண்டது. அவருடைய படைப்புகளை வாசிக்க, உள்வாங்க முயல்வோம். அதுவே நாம் அவருக்குச் செய்யக்கூடுவது. எந்நிலையிலும் கவிஞனிடம் நாம் அனுதாபமோ பரிதாபமோ கொள்ளலாகாது. அது ஒருவகை அவமதிப்பு

ஜெ

முந்தைய கட்டுரைஅரசமரத்தின் நிமிர்வு
அடுத்த கட்டுரை26 ஆம் தேதியின் நிகழ்வுகள்