தனிக்குரல்களின் வெளி
அன்புள்ள ஆசிரியர்க்கு,
மெயிலில் பதில் கண்டேன். தளத்தில் கடிதத்தை வெளியிட்டால் தான் பதில் போடுவேன் என்று எல்லாம் இல்லை. சில வேலைகள்.
இந்த பதிலை நேரம் கிடைக்கும்போதெல்லாம் இடையிடையே மீண்டும் மீண்டும் கடிதத்தை படித்து உள்வாங்கிவிட்டு எழுதிக்கொண்டுதான் இருந்தேன். இப்போது ஞாயிறு.. இதோ அனுப்பிவிட்டேன்.
உங்கள் பல கட்டுரைகளில் உள்ள, மதத்தை ஆன்மிகம், ஆசாரம், அமைப்பு என பகுத்துப்பார்க்கும் கருத்துச்சட்டகம் தான் என்னை இது பற்றி பேசும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. என் கடிதம் 80 சதவீதத்திற்கு மேல் உங்களின் தாக்கம் கொண்டது.
நீங்கள் சொல்வது போல் சராசரி இஸ்லாமியர்கள் மதஆசாரங்கள் மட்டுமே இஸ்லாம் என நினைக்கிறார்கள். அந்த பார்வையை மிக இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள். பள்ளிபருவம் வரையிலான என் நிலைப்பாடே சாட்சி. அந்த பார்வையை அச்சுறுத்தாமல் குணப்படுத்த வேண்டும்.
நேர்மறை அறிவியக்கம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நீங்கள் சொன்னது எனக்கு பெரும் உத்வேகம். அவ்வாறு உலகில் பல்வேறு இடங்களில் சிறுசிறு வட்டங்களில் நடக்கின்றன. நம்பிக்கையூட்டும் வகையில்.
நீங்கள் என் பெயரை போட காட்டிய தயக்கம், கடிதம் வெளியானதும் ஆனந்த் ஸ்வாமி அவர்கள்-இது போன்ற தேவையும் கூடவே ஆபத்தும் நிறைந்த கருத்துக்களை இலைமறை காயாக சொல்லவேண்டும் என சொல்லியதும் கடிதத்தை மீள்வாசிப்பு செய்தேன். சில வார்த்தைகளை இன்னும் நுட்பமாக சொல்லியிருக்கலாம் என தோன்றியது. ‘பழைய-நான்’ இந்த கடிதத்தை படித்திருந்தால் சில வரிகளுக்கு அதிலுள்ள உண்மைகளை கண்டு, ஒரு ஓரத்தில் கருத்தில் கொண்டாலும், கசப்படைந்திருப்பேன். படிக்கும்போதே ஒருவர் தனக்கே திரித்து எதிர்மறையாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதும் தெரிகிறது. கற்றுக்கொள்கிறேன்.
ஆனால் நீங்கள் தளத்தில் சொன்னதுபோல் முற்போக்காளர்களும் தூற்றுவார்கள் என கூறியதில் மிகச்சிறு மறுப்பு இருக்கிறது. பீஃப் அரசியல் குறித்த ஒரு யூடியூப் உரையாடலில் “நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்த மாமிசம் மாட்டிறைச்சியும் பன்றியிறைச்சியும் தான்”, “புர்கா ஒரு பெண்ணடிமைத்தனம்” என கூறிய ஒரு முஸ்லீம் திராவிட அரசியல் முகத்தையும், வடஇந்திய மசூதிகளின் இமாம்களிடம் நேரடியாக ‘பெண்கள் மசூதிகளுக்கு அனுமதிக்க படாதது’ குறித்து கிண்டல் தொனியில் பேட்டியெடுத்த இடதுசாரி முஸ்லீம் நிருபரையும் பார்த்துள்ளேன். அவர்கள் விமர்சனம் செய்பவர்கள் மட்டும் கிடையாது. நாத்திகர்களும் கூட தான். அவர்கள் முற்போக்கு தரப்பினர்தான். அவர்களை அத்தரப்பு ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போலி முற்போக்காளர் தரப்பு குறித்து என எடுத்துக்கொள்கிறேன்.
இஸ்லாம் குறித்த விமர்சனத்துக்கு நீங்கள் இன்று தளத்தில் குறிப்பிட்டது போல் இதை சிந்திக்கையில் பழைமைவாதம்×அடிப்படைவாதம் வேறுபாடும் கருத்தில் கொள்ளவேண்டியதன் தேவை புரிந்தது.இடையில் படித்த ‘முற்போக்கின் தோல்வி’ கட்டுரைகளில், என் இன்னொரு கேள்வியான உலகில் வலதுசாரி அரசியல் அடையும் வரவேற்பு குறித்தவைக்கு பதில்கள் கிடைத்தன.நான் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்..
நான் 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தான் நீங்கள் எனக்கு அறிமுகம். என்னை இதில் இவ்வளவு சிந்தனை செய்ய வைக்க முதல் பொறியாய் இருந்தது ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதை.மத பிடிமானத்துக்கும், மன பிளவுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்த தம்பியின் உரையாடல்…
ஒழுக்கம் சார்ந்த ஆசாரங்களை எப்படி ஒரு இரட்டைநிலையை எதிர்கொள்ள நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என அந்த கதை முன்வைத்த ஒரு கோணம்.. அப்போது நான் மதம் குறித்து கொண்டிருந்த ‘பஞ்சு போல் இதமான’ சிறு வட்ட பார்வை ஆடி போய்விட்டது. அந்த பார்வையின் வீச்சிலிருந்து மீள்வதற்குள், கதையின் முடிவில் மதம் எப்படி அழிக்க முடியாத ஒரு மனித மன கட்டமைப்பு, அதை தவிர்த்து அழிக்க முயன்றாலும் அந்த தவிர்த்தல் தானும் எப்படி மதமாகவே மீண்டுஎழுகிறது எனும் முடிவு..
அப்போது குளத்து புழு கடலை கண்டு திணறிய நிலைதான் எனக்கு. இப்போது கூட என் வாசிப்பில் பல அடுக்குகள் விடுபட்டிருக்கலாம். (ரொம்ப காலம் கழித்து நேற்று மீள்வாசிப்பு செய்தது..) நான் பல நேரம் உங்கள் படைப்புகளில் நான் கண்டுகொண்டதை கடிதமாக எழுத ஆரம்பித்து கைவிட்டுஇருக்கிறேன். இது குறித்தாவது எழுதினேனே :)
அன்புடன்,
சஃபீர்
***
அன்புள்ள ஜெ
தனிக்குரல்களின் வெளி ஒரு முக்கியமான கட்டுரை. நீங்கள் பலவாறாக சொல்லிவரும் விஷயங்கள்தான், மீண்டுமொருமுறை சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்த சிந்தனைகளை கொஞ்சம் தெளிவில்லாமல் பலரும் யோசித்திருக்கக் கூடும். ஆனால் இந்த சொற்கள் திட்டவட்டமாகச் சிந்திக்கவைக்கின்றன.
என்னையே எடுத்துக்கொள்வோம். என் அண்ணனின் ஊருக்குள் இருக்கும் சிவன்கோயிலுக்கு முன் சிவலிங்கத்தை குறுக்காக வெட்டி “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரில் இந்துக்கள் கொஞ்சபேர்தான். நான் அந்தப் பலகையைப் பார்த்ததுமே நினைத்த முதல் எண்ணம் அதனால் யாருக்கு லாபம் என்றுதான். இஸ்லாமியருக்கு எந்த லாபமும் இல்லை. இஸ்லாமியரில் சிவலிங்கத்தை வணங்குபவர் எவருமில்லை. அப்படியென்றால் யாருக்கு லாபம்? அன்று அண்னனிடம் பேசும்போது தெரிந்தது, யாருக்கு லாபம் என்று. அவர் திமுகக்காரர். அன்று அவர் பேசியது இந்துத்துவத்தின் மொழியை.
இந்த மூடத்தனம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. நாத்திகர்களை மேடையேற்றி இந்துமதத்தை இழிவுபடுத்தச் செய்து ரசிக்கும் மத அடிப்படைவாதிகள், நாத்திகமேடையில் சென்று பேசும் இஸ்லாமிய மதவாதிகள் முதலில் உதவுவது இந்துத்துவ அரசியலுக்கே. அதை வேண்டுமென்றேதான் செய்கிறார்கள். ஏனென்றால் இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்க்கும். இரு தரப்புமே இதைச் செய்கின்றன. இன்று தேவை நீங்கள் சொல்வதுபோல நடுவே ஒலிக்கும் தனிக்குரல்கள்தான்.
கணேஷ் மகாராஜன்
***
அன்புள்ள ஜெ,
அருமையான கட்டுரை. பல கோணங்களில் தெளிவை அளித்தது இன்று பேசப்படும் எல்லா கேள்விகளுக்கும் ஒரே கட்டுரையில் பதில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே இக்கட்டுரைக்குரிய மனநிலையை அடைந்தவர்களுக்கே இது பயனளிக்கும். மற்றவர்களுக்கு அல்ல. இக்கட்டுரையை இந்துத்துவரான நண்பர் ஒருவரிடம் காட்டினேன். “ஜெமோ இஸ்லாமிய ஆதரவுக்காக தாஜா பண்ணுகிறார்” என்றார். ஒரு முற்போக்கு நண்பரிடம் காட்டினேன். எங்கள் தொழிற்சங்க தலைவர். “இது இந்துத்துவப் பசப்பு. இஸ்லாமியர்களின் எதிர்ப்பை கரைத்து இல்லாமலாக்குவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி. இஸ்லாமியர் கவனமாக இருக்கவேண்டும்” என்றார். அவ்வளவுதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பீர்கள். வேறுவழியில்லை.
எம்.ராஜேந்திரன்