நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்

நூற்பு – கைத்தறி நெசவுக்கான கூட்டுறவின் செயற்பயணத்தில் முக்கியமானதொரு நல்லசைவினைத் துவங்குகிறோம். காந்தி தன்னுடைய சத்திய சோதனை நூலில் கதரின் பிறப்பு அத்தியாயத்தில், “என் அறையில் ராட்டை சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. நான் நோயினின்றும் குணம் அடைவதற்கு அந்த கீதம் பெருமளவு துணை செய்தது என்று நான் கூறினால் அது மிகையாகாது. அதனால், உடலுக்கு ஏற்பட்ட நன்மையைவிட மனதிற்கு ஏற்பட்ட நற்பலன் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார். அப்படியானால் மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனதிற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆகவே, நானும் ராட்டையில் நூற்க ஆரம்பித்தேன்” எனத் தன்னுடைய அனுபவத்தை பதிவுசெய்திருப்பார்.

அவ்வகையில், கைத்தறியின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் அறத்தையும் இயன்றளவு நவகால பொதுச்சமூகத்தில் முயன்று கொண்டுசெல்வதே நூற்பு துவங்கப்பட்டதன் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. பொருளொன்றின் முழுசுழற்சியை ஒரு குழந்தை நேரிடையாக அறிந்துகொண்டால், அதன்பின் அக்குழந்தை எக்காலத்தும் தேவைக்கு அதிகமாக நுகராது; பூமியைப் பாழ்படுத்தும் நுகர்வுவெறியின் பெருங்கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்; உண்மையிலேயே ஒரு பொருள் ‘வீண்’ என்ற இறுதிநிலைக்கு வந்துவிட்டதா என மீளமீள தற்பகுப்பாய்வு செய்யும்.

நெசவின் ஒட்டுமொத்த உற்பத்திச் சுழற்சியினையும் குழந்தைகளுக்குள் ஆழப்பதியவைக்கும் முயற்சியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு நெசவின் பின்னார்ந்த தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கான கற்றல் பள்ளியாகவும் அமையுமாறு நூற்பு நெசவுப்பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகளைத் துவங்குகிறோம். காந்தி அரையாடை ஏற்று நூறு ஆண்டுகள் நிறைவுகொள்ளும் செப்டம்பர் 22 அன்று நூற்பு நெசவுப்பள்ளியில் குழந்தைகளுக்கான நெசவுக்கற்றல் துவங்குகிறது.

அகக்குரலுக்குச் செவிசாய்த்து நான் இந்தத் துறைக்குத் திரும்பி வாழ்வமைத்துக் கொண்டதன் பின்னனியில் உங்களுடைய படைப்புகளும், ஏராளமான அனுபவக் கட்டுரைகளும், நீங்கள் சுட்டிக்காட்டிய காந்தியர்களின் வாழ்வும் காரணமாக இருந்திருக்கின்றன. உங்களுடைய அம்மாவும் நூல் நூற்றதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள். என் மகள் புவியாழுக்கும் நான் அந்தத் தகவலை பலமுறை சொல்லியே வளர்த்து வருகிறேன். உங்கள் வழிகாட்டும் சொற்கள் எனக்கு என்றென்றைக்கும் ஆத்மபலம் நல்குவது.

ஈரோடு மருத்துவர் ஜீவா அவர்களால் துவங்கப்பட்டு, அவரது தங்கையான ஜெயபாரதி அவர்களால் நடத்தப்படும் சித்தார்த்தா பள்ளிக்கூடத்தின் இருபது குழந்தைகள் இக்கற்றலில் பங்கேற்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்குக் கைத்தறி நெசவைக் கற்பிப்பதனை முதற்படியாகக் கொண்டு நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம் கொள்கிறது. இந்தக் கற்றல்நிகழ்வை பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நதான் அவர்கள் தன்னுடைய ஆசிக்குரலால் அருட்பெருஞ்சோதி அகவல் துதிசொல்லி துவங்கிவைக்கிறார்.

நூற்பு உட்பட என்னுடைய எல்லா முயற்சிகளையும் உங்களிடம் அறியப்படுத்துகையில் என் நம்பிக்கையும் பொறுப்பும் பன்மடங்கு விரிவுகொள்வதாக நான் பொருள்கொள்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றிகளோடு,

சிவகுருநாதன். சி
நூற்பு நெசவுப்பள்ளி
[email protected]

முந்தைய கட்டுரைதனிக்குரல்களின் வெளி
அடுத்த கட்டுரைஆபரணம், கடிதங்கள்-3