மத்தகம் (குறுநாவல்) : 2

கேசவன் என்னைவிட இருபத்திரண்டு வருடம் மூத்தவன். ஆசானைவிட பத்து வருடம் இளையவன். ஆசான் அவரது அப்பா ராமன் நாயருடன் ஒருநாள் ஆனைக்கடவுக்கு வந்த போது முக்குருணி மலையில் வாரிக்குழியில் விழுந்த பெண்யானை ஒன்று உள்ளேயே பிரசவித்து விட்டது என்ற தகவல் வந்தது. அப்பாவும் மூன்று பாகர்களும் காட்டுக்கு விரைந்ததை ஆசான் பலமுறை சொல்லியிருக்கிறார். அங்கே குழியைச் சுற்றி நூற்றுக்கணக்கான காட்டுயானைகள் கூடி மரங்களை சாய்த்தும் கொம்புகளால் மண்ணைக் குத்திக் கிளறியும் வெறியில் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டும் பெரும் ரகளை செய்திருக்கின்றன. ஊரில் இருந்து தலைச்சுமையாக நிறைய கரிமருந்து கொண்டுவந்து வெடிக்க வைத்து யானைக்கூட்டங்களை விரட்டியிருக்கிறார்கள். வாரிக்குழியில் பெண்யானை செத்துக்கிடந்தது. கொம்பன் குட்டி அந்தப் பிணத்திலிருந்து பால் குடித்து மேலேயே ஏறி சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தது.

குட்டியைப் பதினாறு நாள் காட்டில் வைத்து பசும்பாலும் கதலிப்பழமும் கொடுத்து வளர்த்தார்கள். யானை வைத்தியர் சொன்னதன்படி தினமும் ஒரு நாழி தேனும் ஊட்டப்பட்டது. தேறும் என்று உறுதியாக வைத்தியர் கூறிய பிறகு வைக்கோல் பரப்பிய வண்டியில் ஏற்றி அதை திருவட்டாறுக்குக் கொண்டு வந்தார்கள். அப்போது சிறிய தம்புரான் அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜா திருவட்டாறு கொட்டாரத்தில் ஒரு மண்டலம் ‘குளிச்சுதொழலு’க்காக வந்து தங்கியிருந்தார். அவருக்கு அப்போது பன்னிரண்டு வயது. கடுமையான இழுவைநோயும் வயிற்றுக் கடுப்பும் இருந்தது. சிறு குழந்தையாக இருக்கும் போது யாரோ விஷம் கொடுத்து கொல்லப் பார்த்ததன் விளைவு. மூத்த வைத்தியர் பாகலூர் அச்சுதன் கர்த்தா கூடவே வந்து தங்கியிருந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். இளைய தம்மபுரான் அப்போது பெரும்பாலும் படுக்கையில்தான் இருப்பார். படுக்கையோடு தூக்கிக் கொண்டுவந்து திண்ணையில் வெளியிலில் காயவைப்பார்கள். அவருடைய மெல்லிய உடல் கூட்டில் மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருக்க கண்கள் அங்குமிங்கும் உருளும். பிறகு மீண்டும் அறைக்குள் கொண்டுபோய் வைப்பார்கள். அடுத்து கிரீட அவகாசி என்று இளையதம்புரான் சொல்லப்பட்டாலும் பெரிய தம்புரான் சதயம் திருநாள் மகாராஜா ராமவர்ம தம்புரான் திருமனசு நாடு நீங்கும்வரைக்கூட இளையதம்புரான் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றே அரண்மனையிலும் ஆசிரிதர் வட்டாரத்திலும் பேசப்பட்டது.

கொம்பன் குட்டியை நேரடியாக அரண்மனைக்கே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. கோயில் வட்டத்தில் ஏராளமானவர்கள் வந்தும் போயும் இருப்பதனால் கொம்பனுக்கு கண்படக்கூடும் என்று அந்த ஏற்பாடு. அரண்மனையில் ஏழு யானைக் கொட்டில்கள் காலியாகத்தான் கிடந்தன. அங்கே பெரியதம்புரான் வந்து தங்குவதே இல்லை. கோயிலுக்கு ஆறாட்டுக்குக் குளித்து தொழ வரும்போது நேராக கேசவபுரம் அச்சி வீட்டுக்குப் போய் அங்கிருந்து வருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். கேசவபுரம் அச்சிவீடு பெரிய அரண்மனையாக, கோட்டையும் கொடியும் ஆனைக்கொட்டிலும் குதிரை லாயமும் பட்டு மஞ்சலும் பரிவட்டமுமாகப் பொலிந்தது. இளையராஜா வந்த அன்று அம்மவீட்டுக் காரணவர் கொச்சு கிருஷ்ணபிள்ளை ஒரு மரியாதைக்காக வந்து பார்த்துவிட்டுப் போனதுடன் சரி. அதற்கு முக்கியமான காரணம் பேஷ்கார் திவாகரன் தம்பி இளைய தம்புரானையும் அரண்மனையையும் கவனித்துக் கொண்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றிருந்த திவாகரன் தம்பிக்கு சம்பந்தக் குடும்பங்கள் அந்த எல்லையை மீறக்கூடாது என்ற உறுதியான எண்ணம் இருந்தது.

யானைக் கொட்டிலில் நன்றாகப் பனம்தட்டி கட்டி மூடிய அறையில் குட்டிக் கொம்பன் விடப்பட்டான். நெற்றியால் எதிர்ப்படும் அனைத்தையும் முட்டித்தள்ளியபடி பன்றி போல வால் சுழற்றி குறுகுறுவென்று நீளமுக்கு நீட்டி அலைந்த குட்டிக்கொம்பனை பேஷ்கார் திவாகரன் தம்பி மார்போடு அணைத்துக் கொண்டு “இப்பம் நோக்கிக்கோடா, இது ஐஸ்வரியத்தின்டெ வரவாணு. இவன் வந்நிட்டுள்ளது லட்சுமியும் கொண்டாணு” என்றார். கொம்பனைப் பார்த்துக்கொள்ள ஒரு யானை வைத்தியரும் எட்டுப் பாகர்களும் நியமிக்கப்பட்டார்கள் இரவும்பகலும் கூடவே ஆள் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

மேலும் இருபது நாளில் கொம்பன்குட்டி நன்றாகத் தேறி பாய்த்தட்டியை பிய்த்துக் கொண்டு வெளியேறி அரண்மனை முற்றத்தில் உருண்டு உருண்டு ஓடி எல்லா மரங்களையும் முட்டிப் பார்த்து, நின்ற இடத்திலேயே திரும்பி, அரண்மனைக் கற்படிகளில் ஏறி உள்ளே வர முயன்று முடியாமல் அமறல் ஒலி எழுப்பியது. வடக்கு முற்றத்தில் அப்போது இளைய தம்புரானுக்கு வைத்தியர்கள் நவரஸ உழிச்சில் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நாலைந்து வெண்கல உருளிகளைத் தட்டித்தள்ளிவிட்டு உற்சாகமாகப் பாய்ந்து வந்த கொம்பன் வைத்தியர் பார்கவக் கைமளை பின்னாலிருந்து முட்டி எண்ணை மேல் விழ வைத்துவிட்டு முற்றத்தில் திகைத்து நின்று மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தது.

“கணியாரே… இது எந்தா?” என்றார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து உடல் நடுங்கிய இளையதம்புரான்.

நாட்கணக்கில் இளையதம்புரான் பேசுவதில்லையாதலால் அவரது குரலே வைத்தியர்களை திடுக்கிடச் செய்தது. ஒருவர் யானைக்குட்டியை துரத்த ஓட இன்னொருவர் “அடியன், தம்புரான் மாப்பாக்கணும்” என்றார்.

“இது எந்தா மிருகம்?” என்றார் இளைய தம்புரான் பதற்றத்தால் மூச்சிளைப்புடன்.

“அடியன். தம்புரானே இது ஆனை… ஆனைக்குட்டி”

“ஆனையோ?” என்றதுமே இளையதம்பைரானுக்கு சிரிப்பு வெடித்து அவரால் அடக்கவே முடியவில்லை. சிரித்துச் சிரித்து சிரிப்பு புரைக்கேறியது. அதற்குள் கொம்பன்குட்டி ஒரு குட்டுவத்திற்குள் தலையை விட்டு, உள்ளே புக முயன்று இரு கால்களையும் மேலே தூக்கியமையால் சமநிலை இழந்து குட்டுவத்துடன் உருண்டது. தம்புரான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து கண்ணீர் வழிந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் உடல் முழுக்க சந்தனாதி தைலத்துடன் நின்ற கொம்பன் குட்டி எண்ணை சிதறித் தெறிக்க ஓடி திரும்பி நின்று தன்னைப் பார்த்துச் சிரித்த தம்புரானைப் பார்த்தது.

குட்டியை விரட்டப்போன வைத்தியரை தடுத்த பேஷ்கார் ஒரு கதளிப்பழம் கொண்டுவந்து இளைய மகாராஜா கையில் கொடுத்து குட்டிக்கு நீட்டச் சொன்னார். பழத்தைப் பார்த்ததுமே ஆவலுடன் பாய்ந்து வந்து கட்டிலை நெருங்கி குட்டி மூக்கை விலக்கி வாய் பிளந்து சிவந்த உட்பகுதியை காட்டி ஊட்டி விடப்படுவதற்காக நின்றது கொம்பன். ஊட்டப்பட்டதும் மேலும் பழம் கேட்டு உறுமியது. இளையதம்புரான் ஏழெட்டுப் பழங்களை ஊட்டினார். கொம்பனின் நெற்றி, மயிரடர்ந்த பிடரி எல்லாவற்றையும் தடவிக் கொடுத்தார். அவரது கட்டிலுக்குக் கீழே போனால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ள கொம்பன் முயன்றபோது இளையதம்புரான் கவிழ்ந்து கீழே விழுந்தார். பேஷ்கார் பிடிக்க வந்தபோது கையசைத்து உரக்கச் சிரித்தார். அன்று பகல் முழுக்க தம்புரான் அங்கேயே இருந்தார்.

அதன்பின் காலையில் கண்விழிப்பது முதல் இரவு தூங்குவதுவரை இளையதம்புரான் கொம்பனின் அருகிலேயே இருந்தார். கொம்பன் குட்டிக்கு தங்கத்தில் மணிமாலையும் காதுகளில் தங்கக் குண்டலங்களும் போடப்பட்டன. அரண்மனைக்குள் கொம்பன் குட்டி ஏறிச்செல்ல மரத்தால் சரிவுப்பாதை அமைக்கப்பட்டது. அரண்மனையின் அறைகளில் ஓடி தூண்களையும் சுவரையும் முட்டி உள் அறைகளில் எல்லாம் பிண்டம் போட்டு மூத்திரம் பெய்து அதகளம் செய்தது கொம்பன். இளையதம்புரானின் கட்டிலுக்கு அருகேயே கவிழ்த்த இரும்புக்குண்டான் போல படுத்து கண்வளரும். விழித்த மறுகணமே பால் கேட்டு ஒரு கதறல் விடுக்கும். அரண்மனையின் எல்லா மூலைகளில் இருந்தும் பால் குடத்துடன் அதை நோக்கி சேவகர்கள் ஓடுவார்கள். கதளிப்பழத்தை தோல் உரித்து தின்னக்கூடிய ஒரே யானை அதுதான் என்றார்கள். வெல்லம் போடாவிட்டால் சோறு சாப்பிடாதாம்.

இரண்டே மாதத்தில் யானை மீதேறி தோட்டத்தில் உலவும் அளவுக்கு இளைய தம்புரான் தேறினார். அதன்பின் அவர் திருவனந்தபுரம் போனபோது கூடவே கேசவனையும் கூட்டிச் சென்றார். கேசவன் என்று பெயரிட்டதும் அவர்தான். யானைக்கு பத்து வயதாகும் வரை திருவனந்தபுரம் அரண்மனையில்தான் அது வளர்ந்தது. மகாராஜாவும் அதுவும் இணைபிரியாத தோழர்களாக இருந்தார்கள். கொம்பனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாரோ கிளப்பிய கிண்டல் கிராமங்களில் பரவி பலரும் அதை நம்பினார்களாம். “குட்டிக்கொம்பன் பாலும் பழமும் திந்நு கொட்டாரத்தில் சயன கிருஹத்தில் சப்பரமஞ்சத்தில உறங்கும் எந்நாக்கும் டே அந்நுள்ள பேச்சு” என்றார் ஆசான்.

கொம்பு கனத்து தலையெடுப்பு வந்தபோது கேசவனின் ஜாதகத்தை வைத்து பலன் பார்த்து அவனைத் திருவட்டாறு ஆதிகேசவனுக்கே நடைக்கு இருத்துவதாக முடிவெடுத்தார்கள். அப்போது மகாராஜா காசிக்கு பெரிய படிப்பு படிப்பதற்காகச் சென்றிருந்தார். அதன்பின்பு அவர் திரும்பி வந்தபோது முதலில் கேட்ட கேள்வியே “கேசவன் எவிடெ?” என்றுதானாம். குதிரை வண்டியில் ஏறி நேராக திருவட்டாறுக்கு வந்துவிட்டார். அப்போது ஆசான் கேசவனுக்கு பாகனாக ஆகிவிட்டிருந்தார். அலங்காரவண்டி வந்து கோயில் முற்றத்திலேயே நின்றதைக் கண்டதும் நான்கு பக்கமிருந்தும் காவல்காரர்களும் கோவில் சேவகர்களும் கூடினார்கள். “எவிடெ கேசவன்?” என்று இளைய தம்புரான் இறங்கியபடியே கேட்டார். முதலில் அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் உடையைப் பார்த்ததும் ஸ்ரீகாரியம் நம்பீசனுக்குப் புரிந்து விட்டது. அவர் கொச்சிக்காரர். மகாராஜாவை திருவனந்தபுரத்தில் முகம் காட்டக்கூடியவர். ஆனாலும் அவருக்கு வாய் எழவில்லை. “கேட்டது காதில விழுந்ததாடா? எங்கே கேசவன்?” அப்போதுதான் அச்சி காளிக்குட்டிக்கு எல்லாம் புரிந்தது.

“கேசவன் ஆனைய இப்பம்தான் நாயரு ஆத்துக்கு கூட்டிட்டுப் போனாரு…” என்றாள்.

இளையதம்புரான் கையில் வடிவாளுடன் வேகமாக ஆற்றை நோக்கிச் சென்றார். சட்டென்று தேனிக்கூட்டம் கலைந்ததுபோல ஒலி எழுந்தது.

“அய்யோ அது எளைய தம்புரானாக்குமே.”

“ஆனையவா கேக்குதாரு?”

“தம்புரான் ஆனைய மறக்கல்ல கேட்டியா?” ஸ்ரீகாரியம் நம்பீசன் “எல்லாரும்போயி ஜோலிகளை பாருங்கடே… எடி காளி, நீலி போடே எல்லாவரும்…. போடீ” என்று கூவினார்.

பின்னர் இளையதம்புரானுக்குப் பின்னால் ஆணிக்கால் சரள்கல்லில் பட்டு வலிக்க எம்பி எம்பி பாய்ந்து சென்றார் “வெட்டுக்கிளி போவுந்நே” என்று அச்சிகளில் யாரோ சொல்ல ஒரே சிரிப்பு. மிகமெல்ல வேறு ஒரு அச்சி ஏதோ கூற அதற்கு இன்னும் பயங்கரமான சிரிப்பொலி எழுந்தது.

இளையதம்புரான் படிகளில் இறங்கி ஆற்றுக்குள் வந்தபோது யானையை நீரில் குளிப்பாட்டி அதன் மத்தகத்தின் மீது ஏறி அமர்ந்து வந்து கொண்டிருந்தார் ஆசான். கேசவன் அப்போதே பெரிய யானையாக ஆகிவிட்டிருந்தது. யானைக்கொட்டிலில் கஜ கேஸரி என்று புகழ்பெற்ற கடுவாகுளம் நாராயணன் அப்போது இருந்தான். அவனுக்கு அப்போது எண்பது வயது. தலையெடுப்பில் அவனுக்கு இணை திருவிதாங்கூரிலேயே கிடையாது.

கேசவன் நாராயணனைவிட அரைக்கோல் உயரம் குறைவு. அவன் கொட்டிலில் சற்றேனும் பயப்படுவதும் மதிப்பதும் நாராயணனை மட்டும்தான். திமிர் ஏறிப் பிளிறியபடி மரங்களைச் சுற்றிப்பிடித்து அசைத்தும் கொம்புகளால் ஈரமண்ணைக் குத்தி உழுது மறித்தும் அவன் இளகி நிற்கும்போது நாராயணன் ‘ர்ர்ராங்?’ என்ற ஓர் ஒலி எழுப்பினால்போதும், கேசவன் செவி கோட்டி கவனித்து துதிக்கைச் சுருள் விரித்து பின்னுக்கு நகர்ந்து விடுவான். ஆனால் பகையுடன் நாராயணனை அவனுடைய கண் கவனித்தபடித்தான் இருக்கும். நாராயணன் இல்லாத இடத்தில் கேசவனின் நிற்பும் நடப்பும் தனித்திமிருடன் இருக்கும். கேசவனின் மேலே அமர்ந்து போகும்போது மேகங்களில் வழியாகச் செல்லும் கந்தவனைப்போல தோன்றும் என்று ஆசான் சொல்வார்.

இளையதம்புரானை வெகுதூரத்திலேயே கேசவன் பார்த்துவிட்டான். துதிக்கையைத் தூக்கி மூக்கு நுனியால் வாசனை பிடித்தபின் ‘பாங்’ என்று ஒலியெழுப்பியபடி ஆற்றுப் படுகையில் நாணல் களையும் புற்களையும் பிளந்தபடி அவரை நோக்கி ஓடிவந்தான். என்ன ஏது என்று புரியாமல் ஆசான் மேலே இருந்து “ஆனெ நில்கு… ஆனெ…” என்று கூவி துரட்டியால் அதன் காதை கொளுவி இழுத்தார். யானை அதைப் பொருட்படுத்தவே இல்லை. நேராக வந்து துதிக்கையால் இளையதம்புரானைச் சுற்றிப் பிடித்துத் தூக்கியது. அவரை அடையாளம் காணாத ஆசான் மேலே இருந்தபடி “ஆனை… விடு… ஆனை விடு” என்று கூவி அதன் மத்தகத்திலும் காதுகளிலும் மாறிமாறி வெறியுடன் அடித்தார். யானை வலிதாளாமல் தலையை ஆட்டியது.

இளையதம்புரான் யானையின் தந்தங்கள் மீது அமர்ந்து கொண்டு மேலே இருந்த ஆசானைப் பார்த்து கடும் கோபத்தில் சுளித்த முகத்துடன் கூவினார்

“நிறுத்தெடா நாயே…” ஆசான் உறைந்துபோனார். அவருக்கு மெல்ல அது யார் என்று புரிந்தது. அவரால் வாயை அசைக்கக்கூட முடியவில்லை…

“எறங்குடா… எறங்குடா கீழே” என்று இளையதம்புரான் கத்தினார். ஆசான் கண்களை விழித்து அப்படியே அமர்ந்திருந்தார்.

“சீ எறங்குடா நாயே” என்று கூவியபடி வடிவாளை உருவிக் கொண்டு இன்னொரு கொம்பில் கால் வைத்து எழுந்தார் இளையதம்புரான். ஆசான் கழுத்துக் கயிறில் இருந்த காலை விடுவித்துக் கொண்டு காதில் கால் வைத்து காது மடலைப் பிடித்துக் கொண்டு விழுவதுபோல இறங்கி கீழே குதித்து தடுமாறி மண்ணில் விழுந்தார்.

கொம்புகள் மீதுஅமர்ந்தபடி இளையதம்புரான் ஆணையிட்டார். “இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…” இரு கைகளும் மார்புகளை மூடி வாய்பொத்தி, குனிந்து நின்று ஆசான் மிகமெல்லிய குரலில் “அடியன். உத்தரவு” என்றார். அதன்பிறகு ஆறாட்டு எழுந்தருளல் இரண்டுக்கும் ஆதிகேசவனின் உற்சவத்திடம்புடன் குட்டிப்போத்திகள் மட்டும் கேசவன் மீது ஏறிக்கொள்வார்கள். நினைக்கும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் இருந்து கேநசவனைப் பார்க்க வரும் இளையதம்புரான் ஏறிக்கொண்டு ஆற்றுப் படுகையில் அலைவார். வேறு யாரும் அவன்மீது ஏறியதே இல்லை.

அந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. கேசவபுரம் அம்ம வீட்டு ஃபல்குனன் நாயர் ஒருமுறை திருவட்டாறுக்கு வந்தபோது கேசவனைப் பார்த்து வியந்து நின்று “இவன் வளர்ந்நு வடக்கன் குந்நு மாதிரி ஆயல்லோ” என்றார். நேராக அருகே வந்து மேலாடையை இடுப்பில் கட்டியபடி “எடே ஆனைய இருத்துக… ஒற்று கேறி நோக்கட்டே” என்றார். அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஆசான் விழித்தார்.

அவர் பெரிய தம்புரானுக்கு மிகவும் நெருக்கம் என்பது ஊருக்கே தெரியும். அவருடைய தங்கை கொச்சு காத்தியாயினித் தம்புராட்டிக்கு அப்போது பதினேழு வயது. பெரியதம்புரானுக்கு எழுத்திரண்டு. ஆனால் காத்தியாயினி தம்புராட்டிக்கு அவர் புடவை கொடுத்திருந்தார். தம்புராட்டியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவர் அம்மவீட்டுத் தோட்டத்தில் வலியமாமரத்தில் கட்டிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார் என்று ஊரில் பேச்சு உண்டு.

பல்குனன் நாயர் உரக்க “எந்தரெடா நிக்குந்நாய்? பந்தம் கண்ட பெருச்சாளி மாதிரி? எறக்குடா ஆனைய” என்றார்.

ஒன்றும் பேசாமல் திரும்பி ஆசான் கேசவனிடம் “ஆனை இருத்தே” என்றார். கேசவனின் செவிகள் நிலைத்தன.

“ஆனை இருத்தானே” என்றார் ஆசான். சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ஃபல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி “எந்தடா?” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் ஃபல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டுத் தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான். அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் காவலர்கள். ஆனால் பல்லக்குக்கு அருகே போவதற்குள் ஒரு வலிப்பு வந்து உயிர் போய்விட்டது. கேசவன் ஒன்றும் நிகழாதது போல ஓலையை பிய்த்து மென்றான். ஆசான் மார்பில் அடித்துக் கதறியபடி தரையில் அமர்ந்து விட்டார். ஸ்ரீகாரியக்காரர்களும் கோயில் அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். ஆசானைப் பிடித்து தரதரவென்று இழுத்துப்போய் கல்தூணில் கட்டி வைத்தார்கள்.

ஆசானை பத்மநாபபுரம் ஜெயிலுக்குக் கொண்டுபோய் சங்கிலி போட்டு கட்டி வைத்தார்கள். தினம் ஒரு பட்டைச் சோறும் ஒரு குவளைத் தண்ணீரும் மட்டும்தான். தினம் தோறும் சாட்டை அடியும் உண்டு. ஃபல்குனன் நாயரின் மாமா கேசவபுரம் கொச்சு கிருஷ்ணபிள்ளை திருவனந்தபுரம் அரண்மனைக்குப் போய் பெரிய தம்புரானைக் கண்டு வணங்கி தன் அனந்தரவன் கொல்லப்பட்டதைச் சொல்லிக் கதறி அழுதார்.

கோவில் யானைக்கு சீலமிருக்கும் என்று நம்பி ஏறப்போன தன் அனந்தரவன் மீது தவறே இல்லை என்றும் அவனை யானையும் பாகனுமாகச் சேர்ந்து கொன்றுவிட்டார்கள் என்றும் வாதாடினார். அவர் பேசுவதைக் கேட்ட மகாராஜா சிவந்து போய் உரக்க மூச்சுவிட்டு “டேய் நாணு…” என்ற பெரிய சர்வாதிக்காரரைக் கூப்பிட்டு “போயி அந்த ஆனைய காட்டடிக்கு விட்டு ஆனைக்காரனையும் கழுவிலேற்றிட்டு வாடா” என்று ஆணையிட்டார்.

ஆனால் சர்வாதிக்காரர் கிளம்புவதற்குள்ளேயே இளையதம்புரானுக்கு தகவல் போயிற்று. அவர் சர்வாதிக்காரரை தடுத்துவிட்டு நேராக தன் அம்மாமன் ஓய்வெடுத்த அறைக்குள் சென்றார். அங்கே அவரது அம்மா கிளிமானூர் கொட்டடாரத்தில் ராணி சேது பகவதிபாய் தம்புராட்டியும் இருந்தாள். கோபமாக உள்ளே வந்த இளையதம்புரான் “கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்?” என்றார். அந்த நாள்வரை மருமகனிடமிருந்து அப்படி ஒரு சொல்லும் பாவமும் கண்டிராத பெரிய தம்புரான் பொக்கை வாயை திறந்து அப்படியே அமர்ந்துவிட்டார்.

ராணி மட்டும் மகனிடம் “குட்டா! நீ சொல்லுந்நது எந்து? நோக்கிச் சொல்லெடுக்குக” என்றாள். “சொல்லும் பொருளும் அறிஞ்ஞே நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். ‘நான்’ சட்டென்று ‘நாம்’ ஆகியிருப்பதை பெரியதம்புரான் கவனித்தார் “குட்டா, நாம் கயறியால் நீ எந்து செய்யும்? நாம் திருவிதாங்கூரின் மகாராஜா அல்லயோ?” என்றார். இளைய தம்புரான் சற்று நேரம் பார்த்தபடி நின்றுவிட்டு ராணியிடம் “இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்” என்றார். “குட்டா, நீ என்னெ ஜெயிலில் அடைக்குகயாணோ?” என்று பெரிய தம்புரான் கூவியபடி எழுந்து நின்றார். “எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா” என்றபின் இளையதம்புரான் திரும்பி நடந்தார். மறுநாளே ஆசான் விடுதலை ஆகி திருவட்டாறுக்கு வந்து யானைக்குப் பாகனாக ஆனார். பிறகு எட்டு மாதம் கழித்துத்தான் நான் அவரிடம் வந்து சேர்ந்தேன். ஒன்பது மாதம் கழித்து பெரிய தம்புரான் நாடு நீங்கினார். இளையதம்புரான் கிரீடம் ஏற்றார்.

கிரீடதாரணச் சடங்குக்கு கேசவனைக் குளிப்பாட்டி பெரிய மலர்மாலை சூட்டி திருவட்டாறில் இருந்து நடக்கச் செய்து திருவனந்தபுரம் கொண்டு போனார்கள். போகும் வழிமுழுக்க ஆணும் பெண்ணுமாக பெரும் ஜனக்கூட்டம் இரு பக்கமும் கூடி நின்று கேசவனை தரிசனம் செய்தது. குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின் கரை கோவில்களில் இரவு தங்கி நாலாவது நாள்தான் திருவனந்தபுரம் சென்று சேர முடிந்தது. யானையைக் கண்ட மக்கள் ஆரவாரம் எழுப்பினார்கள். தரையில் விழுந்து அதை வணங்கினார்கள். நிறைய இடங்களில் கரும்பு, பழக்குலை, கருப்புகட்டி, வெல்லச்சோறு என்று அதற்குக் காணிக்கைகளுடன் வந்து நின்றார்கள். பொன்னுதம்புரானின் பட்டத்துயானை அது என்ற பேச்சு இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. பட்டத்துயானையின் பாகனாக ஒருநாள் ஆகமுடியும் என்ற கனவு கண்டேன்.

ஆனால் ஆசான்தான் அந்த எண்ணத்தைக் கலைத்தார். “லே மயிராண்டி, மயிரு மாதிரி சிந்திக்குதான் பாரு. இவன் ஆதிகேசவனுக்க ஆனையில்லா. இவனை எப்பிடி தம்புரான் எடுத்துக்கிடுவாரு?” அது உண்மைதான் என்று பட்டது. ஆனாலும் எங்கும் கேசவன் பட்டத்துயானையாகவே நடத்தப்பட்டான். நேமத்தில் கூடிய ஊர்மக்கள் செண்டை வெடி மேளம் மங்கலத்தாலம் பரிவட்டம் எல்லாம் கொண்டு எதிரே வந்து கேசவனை வரவேற்றார்கள்.

ஆசானுக்கும் எனக்கும் அருணாசலத்துக்கும் சால்வையும் பத்து சக்கரம் பணமும் தந்தார்கள். சிறிய ஊர்களில் யானைக்கு மாலையிடவோ வாழைக்குலை கொடுக்க வோ வந்தவர்களை ஆசான் “வெலகுடே… டேய் வெலகு… ஆனைக்கு வழிவிடு” என்று கூவி விரட்டினார். சுட்டிமுண்டும் கடுக்கனும் அணிந்த பெரிய நாயர் பிரமாணிகள்கூட ஆசானால் அதட்டப்பட்டதும் அஞ்சி விலகி நின்றார்கள். ஆசான் சிலரை நோக்கித் தன் கோலை ஓங்கவும் செய்தார்.

கேசவனுடைய கண்ணில் அவனுடைய கனத்த கரிய காலடிகளுக்குக் கீழே முட்டிமோதி ஓசையிட்ட பெருங்கூட்டம் பட்டதா இல்லையா என்றே தெரியவில்லை. அவன் தேர்போவதுபோல மெல்லக் குலுங்கி அசைந்து சென்றான். நிற்கத் தோன்றியபோது நின்றான். அவனுக்கு விருப்பமானதை வாங்கித் தின்றான்.

மத்தகத்தில் தெய்வத்தின் உற்சவத் திடம்பு ஏறியதும் யானைக்கு ஓரு போதை உருவாகும் என்று வாசுப்போத்தி கூறுவார். பிறகு அது ஒரு விலங்கு அல்ல. கந்தர்வனோ தேவனோ தான். விண்ணில் இருந்து கீழே வாழும் மனிதர்களைப் பார்க்கும் பாவனை அதற்கு கூடிவிடும். அதன் பின் பெருங்கூட்டம் அலையடித்தாலும் வெடிக்கட்டும் வாணக்கட்டும் அதிர்ந்தாலும் அது அவற்றை அறிவதேயில்லை.

அப்படித்தான் இருந்தது கேசவன். அதன் மத்தகத்தின் மீது யாருமில்லை. அதன் முதுகில் பெரிய வீராளிப்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. விலாவில் அந்தப் பட்டின் பொன் முலாம் பூசப்பட்ட மணிக்குஞ்சலங்கள் கிலுகிலுங்கித் தொங்கி ஆடின. நெற்றியில் பொன் உருகி வழிந்தது போல நெற்றிப்பட்டம். அதன் பெரிய பூக்குஞ்சலம் துதிக்கை மீது தொங்கி யானை நடக்கும் போது மெல்லப் புரண்டது. கழுத்தில் பொன்முலாம் பூசப்பட்ட வெள்ளி மணிகளால் ஆன பெரிய மாலை. காதுகளில் அசைவில் ஒலிக்கும் மணிக்குண்டல வரிசை. அதன் மத்தகத்தின் மீது பட்டு விரிப்பதற்குக்கூட மூங்கிலால் மேடை கட்டித்தான் ஏறுவோம்.

கேசவனின் வலதுபக்கத்து தந்தத்தைப் பிடித்தபடி கையில் வெள்ளிக்கோலுடன் நடந்து செல்வார் ஆசான். அவருக்குப் பின்னால் அருணாச்சலம் அண்ணன் செல்வார். நான் மறுபக்கம் பின்னங்காலை ஒட்டி நடந்து போவேன். யானையின் மருப்பின் மீது யாரோ இருப்பது போன்ற எண்ணம் எனக்கு எழுந்தபடியே இருக்கும். கூட்டத்தினருக்கும் இருப்பது போலவே எனக்குத் தோன்றும். கிழவிகளும் குழந்தைகளும் மேலே பார்த்து “ஒடய தம்புரானே… ரெட்சிக்கணும் பொன்னு தம்புரானே…” என்று கூவினார்கள்.

பிறகு எனக்கு ஒன்று தோன்றியது. கேசவனின் நடையும் பாவனையும்தான் அந்த எண்ணத்தை எல்லாரிடமும் உருவாக்குகின்றன என்று. கேசவன் மலையில் இருந்து ஒரு பெரும்பாறை மெல்ல சமவெளி நோக்கி உருள்வது போல திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். சில இடங்களில் ஆர்ப்பும் குரவையும் மங்கலமுமாக ஊர்மக்கள் அவனை எதிர்கொண்டபோது அவர்களைப் பார்க்காதவன் போல நிற்காமல் நேராகச் சென்று ஊர்மாடம்பிகளும், பாதமங்கலத்து தாசிகளும், செண்டைக்காரர்களும், வாத்தியக்காரர்களும் சிதறி ஓடி விலகிய வழியில் வேகம் குன்றாமல் கடந்து சென்றான்.

பின்பக்கம் அவர்கள் “தம்புரானே பொறுக்கணே… அடியங்ஙள் பிழை பொறுக்கணும். தம்புரானே…” என்று கூவியபடி மண்ணில் கேசவனின் பாதம் பதிந்த தடங்களைத் தொட்டு கும்பிட்டார்கள்.

பட்டாபிஷேகச் சடங்குக்காக அனந்தபுரியே கல்யாணக்களை கொண்டிருந்தது. கரமனை ஆற்றில் இறங்கிய கேசவனை நானும் அருணாச்சலமும் சேர்ந்து வேகமாகக் குளிப்பாட்டினோம். அப்போது நன்றாக விடிந்து கரமனை கோயிலில் இருந்து செண்டையும் கொம்பும் முழங்கின. பட்டாபிஷேகத்துக்காக நூற்றெட்டு சிறப்பு பூஜைகள் இருந்ததனால் ஒரே பிராமணர் கூட்டமாக இருந்தது. பெரும்பாலும் பரதேசப் பிராமணர்கள். அவர்களில் பாதிப்பேர் யானை குளிப்பதைப் பார்க்க குளிக்கடவுக்கு வந்து கூடிவிட்டார்கள்.

“இங்க ஆரும் நிக்கப்பிடாது… ம்ம். போங்க…. போகணும் பட்டரே… பல தவணை சொல்லியாச்சுல்லா” என்ற ஆசான் அவர்களைத் துரத்தியபடி யானையின் நகைகள் அருகே காவலிருந்தார். யானை குளித்து வந்ததும் அதை அருகே நின்ற புங்கமரத்தடியில் நிற்கச் செய்து நானும் அருணாசலம் அண்ணனுமாகச் சேர்ந்து அலங்காரம் செய்தோம். பொறுமையில்லாமல் காற்றில் திரைச்சீலை புடைத்து திமிறுவது போல கேசவன் திமிறினன். நெற்றிப்பட்டம் கட்டி முடிந்ததும் அதன் நிலைகொள்ளமையெல்லாம் மறைந்து கரும்பாறையின் அமைதி உருவாகிற்று.

அதுவரை பிள்ளைகுட்டிகளுடன் கூடிநின்று முண்டியடித்து யானையலங்காரம் பார்த்து சலபிலவென்று பேசிக்கொண்டிருந்த பரதேசப் பிராமணர்கள் அப்போது அப்படியே அமைதியாகி விட்டிருந்தார்கள். யானை மறைந்து அங்கே கந்தர்வன் தோன்றி விட்டிருந்தான். பட்டுத்துணிபோல தெருக்களில் வெயில் விழுந்து கிடந்தது. பட்டுக் கொடிகள் போல உயரத்தில் படபடத்து அலைபாய்ந்தது. சாலையெல்லாம் ஈரம். முந்தைய நாள் இரவு மழை பெய்தது என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் கட்டிடங்களும் கூரைகளும் ஈரமாக இருக்கவில்லை. காலை முதலே ஆற்றில் குளித்து விட்டுச் சென்றவர்கள் உடைகளில் இருந்து சொட்டிய ஈரம் அது.

எனக்கு புன்னகைதான் வந்தது. ராமர் பட்டாபிஷேகம் புராண வாசிப்பில்தான் அப்படிக் கேட்டிருக்கிறேன். தெருவில் சந்தனம் விழுந்து சேறாக மிதிபடும் என்று. தெருவில் கேசவனின் கொம்பைப் பிடித்து நடந்து சென்றபோது மெல்ல மெல்ல ஆசானின் தலை நிமிர்ந்தபடியே வந்தது. ஒரு கட்டத்தில் இடுப்பில் கட்டியிருந்த நேரிய சால்வையை எடுத்து தலையில் முண்டாசாகக் கட்டிக்கொண்டார்.

ஆரியசாலையை அடைந்தபோது யானைக்கு முன்னும் பின்னும் ஆள் சேர்ந்து ஒரு ஊர்வலமாகவே ஆகிவிட்டிருந்தது. செட்டிகள் அனைவரும் தெருவில் இறங்கி வேடிக்கை பார்த்தார்கள். அந்த நகரில் அன்று பலநூறு யானைகள் முகப்பட்டம் ஒளிர பட்டு குலுங்க நடந்து சென்றிருக்கும். முத்துப்பல்லக்கில் ஏறி தம்புராட்டிகள் சென்றிருப்பார்கள். ஏன் காயங்குளம், கொல்லம், சிறயின்கீழ், கிளிமானூர் அரண்மனை யானைகள்கூட அவ்வழியாகச் சென்றிருக்கலாம். ஆனால் தன் நடையிலேயே தன்னை நிறுவிக்கொண்டான் கேசவன்.

பட்டத்துயானை பட்டாபிஷேகக் கொலுவுக்கு பூரண அலங்காரத்துடன் செல்வதைப் போலிருந்தது அந்த ஊர்வலம்.நாங்கள் நேராக கிழக்கு  கோட்டை முகப்புக்குப் போனோம். பொதுவாக அரசப்பிரதிநிதிகள் போன்றவர்களே நேரடியாக கிழக்குக் கோட்டைக்குள் நுழைவார்கள். பிறர் மேற்கு வாசலில் நுழைந்து தெருக்கள் சுற்றி அரண்மனையின் வடக்குவாசல் முற்றத்திற்குத்தான் செல்ல வேண்டும். அங்குதான் பிரதான சர்வாதிக்கார் அலுவலகம் இருந்தது. பேஷ்காரையும் திவானையும் சந்திப்பதற்குக்கூட அவ்வழியாகத்தான் செல்ல வேண்டும்.

கிழக்குக் கோட்டை வாசலைக் கண்டபிறகுதான் எனக்கு நாங்கள் எங்கே வந்திருக்கிறோம் என்றே புரிந்தது. நான் யானையின் கால் வழியாக எட்டி அருணாச்சலம் அண்ணனை பார்த்தேன். அண்ணன் பதறிப் பயந்து போயிருப்பது தெரிந்தது. சாதாரணமாகவே வாய் திறப்பதில்லை இப்போது அப்படியே தன் உடலுக்குள் அவர் புதைந்து போய்விட்டது போலிருந்தது.

பழவங்காடி கணபதிக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு தலையில் சரிகை முண்டாசுடன் யானைக் கொம்பைப் பிடித்தபடி ஆசான் நேராக ராஜவாசலில் நடுவே நுழைந்தார். அவரது தோற்றம் கண்ட காவலர்கள் பேசாமல் நின்றுவிட்டார்கள். சலங்கைகளும் மணிகளும் மெல்லக் குலுங்கும் ஒலி மட்டும் எழ கேசவன் நிதானமாக நடந்து உள்ளே சென்றான். சில எட்டுகளில் பத்மதீர்த்தமும் பத்மநாபசாமி கோயிலின் கோபுரமும் தெரிந்தது.

படிக்கட்டுகளில் நம்பூதிரிகள் அமர்ந்திருந்தார்கள். சில பாத்ரமங்கலம் தாசிகள் கைகளில் உருளிகளும் விளக்குகளுமாக செம்பு, வெண்கலம், பீங்கான் நிறமுள்ள முலைகள் குலுங்கி அசைய இடுப்பில் சுட்டிக்கரை வேட்டி சரசரக்க பேசியபடிச் சென்று கொண்டிருந்தார்கள். எவரும் யானையை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அரண்மனை நோக்கித் திரும்பியதும் காவலர்கள் ஓடிவந்தார்கள்.

அரண்மனையின் பிரதான வாசலுக்கு வடக்கன் ரைரு நாயர்தான் காவல் என்பது ஊருக்கே தெரியும். வடக்கன். நல்ல ஆறரையடி உயரம். பிளந்து போட்ட மாந்தடியின் நிறம். தீயைப் போன்ற கண்கள். கப்படா மீசை. முதலில் இரு காவலர்கள் வந்தனர். “நில்லு… டேய் நில்லு” என்றார்கள். ஆசான் நிதானமாகத் திரும்பி “தம்ப்ரான் கல்பிச்சு இவ்விடம் அல்லயோடா பள்ளி எழுந்தருளியிட்டுள்ளது?” என்றார். அதற்கு அவர்கள் பதில் சொல்வதற்குள் கையில் தலைக்குமேல் இரும்புக்கூர் பளபளத்த ஈடடியை ஊன்றியபடி வடக்கன் ரைரு நாயர் வந்துவிட்டான்.

ஆசான் நிதானமாக மீண்டும் கேட்டார். அவன் “ஆரா?” என்றான். “நீயாடா ரைரு நாயர்? எடே, தம்புரான் தங்குந்நது இவ்விடமா?” என்று நிமிர்ந்து ரைரு நாயர் கண்களைப் பார்த்து கேட்டார். இதோ அவன் ஈட்டியை எடுத்து ஆசானின் நெஞ்சில் செருகப் போகிறான் என்று எண்ணி எனக்கு மூத்திரம் கனத்தது. கால்கள் மரக்கட்டைகள் போல மாறின. ரைரு நாயர் ஈட்டியை கைமாற்றிவிட்டு “தாங்கள் எவ்விடம்?” என்றான்.

“நான் திருவட்டார் கேசவன் ஆனை பாப்பான். திருமனஸ் என்னை அறியும்” என்றார் ஆசான். ரைரு நாயர் மரியாதையாக வாய் பொத்தி “ஓ…” என்று கூறி உள்ளே ஓடினான். ஆசான் யானையை கூட்டிக்கொண்டு நேராக அரண்மனையின் சுடுசெங்கல் பாவப்பட்ட விரிந்த கிழக்கு முற்றத்துக்குச் சென்றார். அங்கே யானையை முகவாசலில் நேராகத்திருப்பி நிறுத்தினார். சிவன் கோயில் முகப்பில் நந்தி நிற்பதுபோல. உள்ளிருந்து கொட்டாரம் சர்வாதிக்கார் சந்திரன்பிள்ளை அவர்களே முலைகள் குலுங்க மூச்சிரைக்க படிகளில் இறங்கி ஓடிவந்தார். பட்டுச் சால்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு இறங்கி வந்து வாயால் மூச்சுவிட்டபடி “ஆரா? ஆரு?” என்றார். அவரது கண்கள் ஆசானின் முண்டாசுக்கட்டிலேயே இருந்தன.

“அடியன். திருவட்டாறு கேசவன் ஆனையுடெ பாப்பான். திருமனசை முகம் காட்டணும்” என்றார் ஆசான். சர்வாதிக்கார் நம்ப முடியாமல் திரும்பி பின்னால் நின்ற கொட்டாரம் மேலாளன் சங்கரன் மாதவனைப் பார்த்தபின்பு “ஆரு? எந்து?” என்றார். அவரது கண்கள் சரடு கட்டி நிறுத்தியது போல ஆசானின் தலைப்பாகையிலேயே வந்து பதிந்தன. ஆசான் பொறுமையிழந்தவராக எங்களைப் பார்த்தார். அதற்குள் சங்கரன் மாதவன் உரத்தகுரலில் “எடேய் வடக்கே வாடா… வடக்கோட்டு வாடா அசத்தே” என்றார். ஆசான் கேசவனின் காதைப்பிடித்து ஒரு இழுப்பு இழுக்க யானை ‘டிரியாம்’ என்று பிளிறியது.

அதைக் கேட்டதும் மேலே அலங்கார உப்பரிகை நோக்கி ஓடிவரும் ஒலி மரத்தட்டுக்குக் கீழே கேட்டது. உப்பரிகைச் சாளரம் வழியாக இளையதம்புரான் எட்டிப்பார்த்து ‘ஆஹா. கேசவன். கேசவன் வந்நானே’ என்று கூவினார். மரப்படிகள் தடதடவென்று ஒலிக்க சிறுவன்போல பாய்ந்திறங்கி பெரிய கூடத்தைத் தாண்டிப் படிகளில் பாய்ந்திறங்கி கேசவனை அணுகி அவன் துதிக்கையைக் கட்டிப்படித்துக் கொண்டார். ஆசான் சங்கரன் மாதவனை ஒரு பார்வை பார்த்துவிடடு தலையில் இருந்து நேரியதை எடுத்து இடுப்பில் கட்டினார். “கள்ளக் கழுவேறீடே மோனே… எரப்பாளி… கருமாடா …கரும்பாறைக்குட்டா” என்று சொல்லி இளையதம்புரான் கேசவனின் துதிக்கையில் அறைந்து குத்தினார். கேசவன் தம்புரானை சுழற்றித் தூக்கி துதிக்கை மீது அமரச் செய்துகொண்டான். தம்புரான் உரக்கச் சிரித்தபடி அவன் இன்னொரு கொம்பில் காலை நீட்டினார்.

பின்னால் வந்த திவான் சதாசிவராயரும் பேஷ்கார் ராமனுண்ணி மேனனும் இருவாசல் நிலையருகே தயங்கி நின்றனர். “கேட்டோ சதாசிவ ராயரே, இவன் நம்முடெ களித்தோழன். இந்நாட்டில் நமுக்கு மந்திரிமார் உண்டு. ஸேவகன்மார் உண்டு. தாசிகள் உண்டு. பிரஜைகள் உண்டு. எந்நால் களித்தோழன் ஒருத்தன் மாத்ரமே உண்டு. அது இவன்… இந்தக் கேசவன். இவன் அல்லாதெ இந்நாட்டில் நமுக்கு ஸமானமாய் வேறெ ஆரும் இல்ல” என்றார்.

ஆசானிடம் “எந்தெடா நாயரே. எப்போ வந்நாய்?” என்று கேட்டு அவரது தலையை தட்டினார் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்ட ஆசான் புன்னகை செய்து “எல்லாம் அடியங்ஙளுக்கு தம்புரான் கிருப” என்றார். “நந்நாய் வரட்டே… டேய் ரைரு…”

ரைரு நாயர் “அடியன்” என்றார்.

“மிழிச்சு நில்காதே. ஒரு நல்ல கசவு முண்டும் நேரியதும் இவன் மார்க்கு கொடுக்கெடே. டேய் நாயரே நீ இந்நு ஸந்தியா நேரத்து நம்முடைய பட்டாபிஷேக பூஜைக்கு இந்த பட்டும் நேரியதும் உடுத்து வரணும். எந்நாடே” என்றார்.

“அடியன். அதை தம்புரான் திருமனசு திருக்கையால் தந்நால் அடியங்களுக்கு அதொரு ஆனந்தம்.”

பட்டும் நேரியதும் வாங்கியபோது எனக்கு நடப்பதெல்லாம் கனவா என்றிருந்தது. ஆரல்வாய்மொழிக் கோட்டையில் மறவர்களுடன் போராடிச் செத்த வீரனுடைய தந்தைக்கே திருவனந்தபுரம் வந்து பொன்னுதம்புரானைப் பார்த்து ஒரு நேரியது முண்டு வாங்கும் யோகம் இருக்காது. அறுபது வருஷம் வேதம் ஓதிய நம்பூதிரியும் பட்டரும்கூட அப்படி வந்து விடமுடியாது. ஒரு யானையின் வாலைப்பிடித்துக் கொண்டு எத்தனை தூரம் வந்துவிட்டிருக்கிறோம்.

தம்புரான் திரும்பி திவானிடம் “சதாசிவ ராயரே இந்நு ஸாயங்காலம் திருவட்டாறு கேஸவனின் கேறி நாம் நகர்வலம் நடத்தும்” என்றார். திவான் பேஷ்காரை திரும்பிப்பார்க்க, பேஷ்கார் ராமனுண்ணிமேனன் “அடியன்.அது ஐஸ்வரியம் நிறஞ்ஞ காழ்ச்சயாணு. எந்நால் பட்டத்து ஆனையில் கேறி நகர்வலம் வரணும் எந்நு சாஸ்திரம்” என்றார். “எந்நால் இவன் இனி நம்முடெ பட்டத்து ஆனை” என்றார். தம்புரான் “அடியன். அதினுள்ள சகல கஜலட்சணமும் உள்ளவன் இந்த திருவட்டார் கேஸவன். எந்நால் இவன் திருவட்டாறு ஆதிகேசவனுக்கு நடையிருத்திய ஆனை…” என்றார்

கோபத்தில் முகம் சிவந்து, “நாம் ஒந்நும் அறியுக வேண்ட. நாம் இவன் மீதெ மாத்ரமே போகும்…” என்றார் தம்புறரான் சிறுவனைப் போல. ஆசான் பவ்யமாக வணங்கி “பட்டத்து யானையுடே மிதே ஒந்நு கயறி இறங்ஙயியதினு பின்னீடு தம்புரான் திருமனசு கொண்டு கேசனுடெ மீதெ கேறுக நந்நு” என்றார்.

தம்புரான் முகம் மலர்ந்து “ஆ… அது நல்ல காரியம்… அவ்விதம் ஆகட்டே… ஒரு தவண நாம் பட்டத்து ஆனையில் கேறி இறங்கும். பின்னே நகர் வலம் இவனுடைமீதெ… நந்நாயி… நந்நாயி சீதரா…” என்றார். திவான், பேஷ்கார், சர்வாதிக்கார் முகங்களை நான் பார்த்தேன். காளி கோயில் பிரகாரங்களில் தீட்டப்பட்டிருக்கும் சுடலை தேவர்களின் முகங்கள் போல அவையெல்லாம் கொடூரமாக இருந்தன.

முந்தைய கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 1
அடுத்த கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 3