ஓர் இளம் நண்பர் என்னைச் சந்திக்கவேண்டும் என்றே வந்திருந்தார். இஸ்லாமியர். இங்கே ஆளூர் பக்கம் ஏதோ திருமணம், அதற்காக திருநெல்வேலியில் இருந்து வந்தவர் என்னை விசாரித்து வந்துவிட்டார். முன்னர் எனக்கு அவரை தெரியாது. நண்பர் என ஏன் சொல்கிறேன் என்றால் அவர் என் வாசகர் அல்ல. அறம் தொகுதியின் ஓரிரு கதைகள் மட்டும்தான் பவா செல்லத்துரை சொல்லி கேட்டிருக்கிறார். இணையதளத்தை அவ்வப்போது பார்ப்பதாகச் சொன்னார்.
அவர் பதறிக்கொண்டிருந்தார். பலர் அப்படி இருப்பதுண்டு. ஆகவே இயல்பாக பேச்சுக்கொடுத்தேன். அவருடைய சூழல், வேலை ஆகியவற்றைப் பற்றி கேட்டேன். வியாபாரம் செய்கிறார். இளம்வயதுதான், ஆனால் மணமாகி குழந்தைகள் இருக்கின்றன
சட்டென்று சொற்களை சேர்த்துக்கொண்டு “உங்களை எனக்கு சுத்தமா புடிக்காது சார்” என்றார்.
“ஓகோ” என்றேன். “அப்டீன்னா எதுக்கு பாக்கவந்தீங்க?”
“சும்மா” என்றார் “பாத்துட்டு போகலாமேன்னு தோணிச்சு.”
நான் சற்று ஆர்வம்கொண்டேன். ஏன் பிடிக்கவில்லை என்று கேட்கவில்லை. அவரே சொல்வார் என தெரியும்.
“நீங்க பொம்புளைங்களைப்பத்தி கேவலமா பேசுறீங்க. அவங்க இலக்கியம்லாம் படைக்கக்கூடாதுன்னு சொல்றீங்க.”
“அப்டியா? நான் எங்க அப்டி சொல்லியிருக்கேன்?”
“சொல்லியிருக்கீங்க” என்று திக்கினார். முகம் வியர்வையுடன் படிக்காமல் வந்த பள்ளிக்குழந்தைபோல இருந்தது.
“இதோ பாருங்க, ஒரு குற்றச்சாட்டைச் சொல்றீங்க. நீங்கதானே ஆதாரம் குடுக்கணும்… இல்லை அதுக்கு நான் ஆதாரம் குடுக்கணுமா?”
“அப்டீன்னு பொம்புளைங்க சொல்றாங்க.”
“எந்தப் பொம்புளைங்க?”
“நெறையபேர்”
“என்னுடைய இணையதளத்திலேதான் இப்ப நிறைய பெண்கள் எழுதறாங்க. பல பெண்எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கேன். தமிழிலே எழுதுற எல்லா முக்கியமான பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் விரிவா எழுதியிருக்கேன். நான் எப்டி பொம்புளைங்க எழுதக்கூடாதுன்னு சொல்வேன்னு நீங்க நினைக்கலையா?”
“நீங்க பொம்புளைங்களுக்கு எதிரானவர்னு பலபேரு சொல்றாங்க.”
வழக்கமாக இந்தவகையானவர்களை ஐந்தே நிமிடத்தில் மென்மையாகப் பேசி அனுப்பிவிடுவேன். அன்றைக்கு எழுத எண்ணியது சரியாக வரவில்லை. பொழுதுபோகாத நிலை. ஆகவே இது எதுவரை போகும் என்று பார்க்கலாமென முடிவுசெய்தேன்.
“நல்லா யோசிச்சுப்பாருங்க, நான் எனக்கு நல்லா எழுதுறாங்கன்னு தோணுறவங்களைப் பத்தித்தான் பாராட்டி எழுத முடியும் இல்லியா? அப்டி நாலஞ்சுபேர்தான் இருக்கமுடியும். ஆனா எதையாவது எழுதுற பெண்கள் நூறுபேர் இருப்பாங்க. அவங்களுக்கு என் மேலே கோபம் இருக்கலாம் இல்லியா? அத்தனை பேரையும் நான் பாராட்டினா நீங்க ஏத்துக்கிடுவீங்களா?”
”பொம்புளைங்க தப்பான வழியிலே போய் எழுத சான்ஸ் தேடுறதா நீங்க எழுதினீங்க.”
“அப்டி எழுதினா என் தளத்திலே இத்தனை பெண்கள் ஏன் எழுதறாங்க? அவங்களுக்கு ரோஷம் இல்லியா?”
அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
நான் விளக்கினேன் “பத்து வருசம் முன்னாடி நான் சொன்னது இதுதான். பரவலா அறியப்படுற பல பெண்கள் தங்களை முன்வைக்கிற அளவுக்கு படைப்புகளை முன்வைக்கலை. ஊடகங்களிலே தொடர்ச்சியா பேட்டிகள், கட்டுரைகள் வழியா அவங்க ஒரு பிம்பத்தை முன்வைக்கிறாங்க. சமூகச் செயல்பாட்டாளர்ங்கிற பிம்பம், கலகக்காரர்ங்கிற பிம்பம் இதையெல்லாம் முன்வைச்சு படைப்பாளியா அறியப்படுறாங்க. அவங்க படைப்புகள் அந்த அளவுக்கு இல்லை. படைப்பாளியா அவங்க வெளிப்படணும். இவ்ளவுதான் நான் சொன்னது.”
நான் சொன்னேன். “அதுகூட அப்ப இருந்த சில முகங்களைப் பத்தி. அவங்க யாரும் இப்ப கவனத்திலே இல்ல. யாராலேயும் தொடர்ந்து எழுதி நிலைகொள்ள முடியலை. ஏன்னா அப்ப இருந்த ஊடகங்கள் இப்ப இல்லை. இப்ப இருக்கிற வாசகர்களுக்கு அவங்க என்ன எழுதியிருக்காங்கங்கிறதுதான் முக்கியம்… எழுத்திலே அவங்க தேறலை. நான் சொன்னதுதான் காலத்திலே உறுதியாகியிருக்கு.”
அவர் அசைந்து அமர்ந்தார். நடுங்கும் விரல்கள், நடுங்கும் உதடுகள், தடுமாறும் விழிகள். “நீங்க எழுத்தாளர்களை எல்லாம் அவமானப்படுத்துறவர். செத்துப்போன எழுத்தாளர்களை அவமானப்படுத்திறீங்க.”
நான் புன்னகையுடன் “தமிழிலே எழுதிய எல்லா முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும் மிகவிரிவான விமர்சனங்கள் எழுதியிருக்கேன். பல எழுத்தாளர்களைப் பற்றி என்னைத்தவிர யாருமே ஒருவரிகூட எழுதினதில்லை. என் தலைமுறையிலே எழுதிட்டிருக்கிற எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் விரிவா எழுதியிருக்கேன். இளம் எழுத்தாளர்களை பற்றி எழுதியிருக்கேன். அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செஞ்சிருக்கேன். எல்லாமே புத்தகங்களா வந்திருக்கு”
அவர் எதையும் அறிந்ததில்லை என்று கண்களில் இருந்து தெரிந்தது.
“தமிழிலே எழுத்தாளர்களோட முழுமையான விரிவான பேட்டிகளை எடுத்திருக்கேன். சிலரோட முழுமையான பேட்டிகள் முதல்முறையா நான் எடுத்ததுதான். எழுத்தாளர்களோட படங்களை அட்டையிலே போட்டு வந்த முதல் இலக்கியஇதழ் என்னோடதுதான். சொல்புதிதுன்னு பேரு. பல எழுத்தாளர்களுக்கு விழாக்கள் எடுத்திருக்கேன். அவங்களைப்பற்றி கருத்தரங்குகள் நடத்தியிருக்கேன். மலர்கள் போட்டிருக்கேன். இப்ப எழுத்தாளர்களுக்கு விருதுகள் கொடுக்கிறோம். ஆவணப்படங்கள் எடுக்கிறோம். புத்தகங்கள் போடுறோம்.”
நான் சொன்னேன் “நான் எழுத வந்த ஆண்டிலே இருந்து இந்த முப்பதாண்டுகளிலே இன்னொரு எழுத்தாளரைக் கொண்டாடுறதுக்கு விழாவோ கூட்டமோ நடத்தாத ஒரே ஒரு ஆண்டுகூட இருந்ததில்லை. எனக்காகவோ என் நூல்களுக்காகவோ ஒரு கூட்டம்கூட நான் ஏற்பாடு செய்ததில்லை. இனிமேல் செய்யப்போறதுமில்லை. நான் செய்தது எல்லாமே தமிழிலே யாரெல்லாம் முக்கியமோ அவங்களுக்காகத்தான்.”
அவர் மறுப்பதுபோல தலையசைத்தார்.
“சரி சொல்லுங்க, தமிழிலே இதையெல்லாம் என்னைத்தவிர வேறு யாராவது செய்திருக்காங்களா? சரி, தமிழிலக்கிய வரலாற்றிலேயே இன்னொரு எழுத்தாளர் செஞ்சிருக்காங்களா? இன்னொரு எழுத்தாளருக்காக எதையாவது செய்த வேறு ஏதாவது ஒரு எழுத்தாளரோட பெயரை கொஞ்சம் சொல்லமுடியுமா?”
அவர் என்னை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
“பட்டியல் வேணுமானா தரேன்” என்றேன்.
அவர் என்ன என்று புரியாமல் தலையசைத்தார்.
“இப்பவும் எழுத்தாளர்களுக்கான நிதியுதவிகள் வரை செஞ்சிட்டிருக்கோம். இப்ப ஒரு எழுத்தாளருக்கு விருது கிடைச்சா அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்குடுக்க எந்த பத்திரிகையாளரும் முதலிலே கேட்கிறது எங்கிட்டதான். நான் உறுதியா எழுதுவேன்னு அவங்களுக்கு தெரியும். இங்க ஒரு எழுத்தாளரோட பாராட்டுவிழாவுக்கு இன்னொரு எழுத்தாளர் போகமாட்டார். நான் எந்த தயக்கும் இல்லாம போவேன். இப்பகூட இமையம் சாகித்ய அக்காதமி விருது வாங்கினதுக்கான பாராட்டுவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு போகப்போறேன்” என்றேன்.
“இவ்வளவுக்கு அவர் என் மேலே நல்லெண்ணம் உள்ளவர் கிடையாது. இதுவரை பலமுறை என்னை திட்டி மட்டும்தான் எழுதியிருக்கார். அது அவரோட நிலைபாடு. எனக்கு அவர் முக்கியமான எழுத்தாளர்ங்கிற எண்ணம் இருக்கு. அவரோட நூல்களைப்பற்றி விரிவா எழுதியிருக்கேன். அவ்ளவுதான் என்னோட நிலைபாடு…சொல்லுங்க, நான் எந்த எழுத்தாளரை அவமானப்படுத்தினேன்?”
“நீங்க சுகுமாரனை திட்டினீங்க” என்று அவர் சொன்னார்.
“ஆமா, ஆனா அவரைப்பற்றி தமிழிலேயே கூடுதலா பாராட்டி எழுதினவன் நான்தான். பல கட்டுரைகள். அவரோட ஒரு தனிப்பட்ட சிறுமை எனக்கு கோபம் வரவழைச்சது. அதனாலே ஒரு வரி சொன்னேன். அதுக்கு மன்னிப்பும் கேட்டுகிட்டேன். சரி, அப்றம்?”
”நீங்க மனுஷ்யபுத்திரன் ஊனமுற்றவர்னு எழுதினீங்க.”
“எங்க எழுதினேன்?”
“நீங்க எழுதினீங்க” என்று உரத்தகுரலில் சொன்னார்.
“சொல்லுங்க, எங்க?”
“பலபேரு சொல்றாங்க.”
“முப்பதாண்டுகளா நான் அவரோட கவிதைகளைப் பற்றி எழுதிட்டிருக்கேன். அவர் சின்னப்பையனா இருந்த காலம் முதல் அவரை வாசிச்சு முன்வைச்சிட்டிருக்கிற விமர்சகன் நான். அவரை அவர் தலைமுறையிலே தமிழிலே பெரிய கவிஞர்னு விடாம இந்த நாள் வரைச் சொல்லிட்டிருக்கிறவன் நான்.”
“அப்டியா?”
“அவரோட கவிதைகளைப் பாராட்டி விரிவா ஆராய்ஞ்சு ஒரு கட்டுரை எழுதினேன். அவரோட ஆரம்ப கவிதைகளிலே அவரோட உடற்குறை பற்றிய தன்னிரக்கம் இருக்கு. அவர் தன் உடல்குறையை முன்வைச்சு எழுதியிருக்கார். அந்த கவிதைகளிலே இருக்கிற அந்த தன்னிரக்கம் பின்னாடி எல்லாவகை ஒடுக்கப்பட்டவர்களோடயும் அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு விரிவான மனநிலையா மாறிட்டுது. அந்த மாற்றம் நடந்தபிறகுதான் அவரோட கவிதைகள் இன்னும் ஆழமா ஆச்சுன்னு எழுதியிருக்கேன். அதைத்தான் திரிச்சு இப்டி சொல்றாங்க.”
“ஓ” என்றார். அதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை.
“அவர் உடற்குறை உள்ளவர்ங்கிறதை பற்றி வேறு என்ன சொல்லியிருக்கேன், எங்க சொல்லியிருக்கேன்? சொல்லுங்க…”
“இல்ல, மத்தவங்க சொல்லித்தான் தெரியும்”
“சரி, படிச்சுப்பாருங்க. எல்லாமே என் இணையதளத்திலே இருக்கு.”
அவர் “நீங்க பாப்ரி மசூதி இடிப்பை ஆதரிச்சீங்க” என்றார்.
“இல்லை, நேர்மாறா நான் 1989 முதல் தொடர்ச்சியா பத்து கட்டுரைகளுக்குமேல் பாப்ரி மஸ்ஜித் விவகாரம் பத்தி கண்டிச்சு எழுதியிருக்கேன். தினமணியிலேயே ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்.”
“நீங்க கல்பூர்கி, கௌரி லங்கேஷ் கொலையை ஆதரிச்சு எழுதினீங்க.”
“அப்பட்டமான பொய். தெளிவா திட்டவட்டமா கடுமையா அதை கண்டிச்சு எழுதியிருக்கேன். ஒரு கட்டுரை இல்லை, பல கட்டுரைகள். ஒருமொழியிலே இல்லை, மூணுமொழியிலே. அந்தக் கொலையை இந்துத்துவ அமைப்புகள் செஞ்சிருக்கலாம்னு சொல்லி அவங்களைக் கண்டிச்சே எழுதியிருக்கேன். எல்லாமே என் இணையதளத்திலேயே இருக்கு. நீங்க படிக்கலாம்.”
அவர் திகைத்து அமர்ந்திருக்க, நான் தொடர்ந்தேன் “அதுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னாடி எம்.எஃப்.ஹுசெய்ன் இந்துத்துவர்களால் தாக்கப்பட்டப்ப அவரை ஆதரிச்சு பல கட்டுரைகள் எழுதியிருக்கேன். மூணுமொழிகளிலே. அவருக்கு வெண்முரசு நாவல்களிலே ஒண்ணை சமர்ப்பணம் செஞ்சிருக்கேன். எம்.எம்.பஷீருக்கு எதிரா இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தினப்ப தமிழிலேயும் மலையாளத்திலேயும் கண்டிச்சு எழுதியிருக்கேன். அந்நிலைபாட்டிலே மாற்றமே இல்லை…”
அவர் தன் நினைவில் தேடுகிறார் என்று தெரிந்தது. பிறகு “பெரியார் வைக்கம் போராட்டத்திலே கலந்துக்கவே இல்லைன்னு நீங்க அவதூறு எழுதினீங்க” என்றார்.
“வைக்கமும் காந்தியும்னு விரிவா எழுதியிருக்கேன். படிச்சிருக்கீங்களா.”
“இல்லை, அதப்பத்தி வந்த புக்கை படிச்சேன்.”
“நான் சொன்னது இதுதான். வைக்கம் போராட்டம்கிறது பல ஆண்டுகள் நடந்தது. காந்தி, நாராயணகுரு உட்பட பல பெரிய தலைவர்கள் அதிலே கலந்திட்டிருக்காங்க. அதை தொடங்கி நடத்தினவர் டி.கே.மாதவன். அவரோட வாழ்நாள் சாதனை அது. பல பத்திரிகைகளே அதுக்காக ஆரம்பிச்சாங்க. அதை தொடங்கி நடத்தி முடிச்சவங்க அந்தத் தலைவர்கள்தான். பெரியார் மூணுமாசம் மட்டும் அதிலே கலந்துகிட்டார், சிறைசென்றார். ஆனா அவர் அதை தொடங்கலை. தலைமைதாங்கி நடத்தலை.. அதை அவர் முடிச்சும் வைக்கலை” என்றேன்.
“ஆனா இங்க உள்ள வரலாறுகளிலே பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார்னு எழுதியிருக்காங்க. Periyar launched Vaikkom struggle னே எழுதியிருக்காங்க. நாம நடத்தின ஒரு போராட்டத்தைப் பற்றி மலையாளிகள் இப்டி எழுதினா நாம ஒத்துக்குவோமா? அங்கே தலைவர்கள் இல்லைன்னு பெரியாரை அழைச்சாங்கன்னு புத்தகங்களிலே எழுதியிருக்காங்க. அது இந்தியாவுக்கே முன்னோடியான அவ்ளவுபெரிய போராட்டத்தை தொடங்கி விடாப்பிடியா பல ஆண்டுகளா நடத்தி ஜெயிச்ச தலைவர்களை இழிவுபடுத்துறதுதானே? அப்டி செய்யலாமா? நம்ம தலைவர்களை அப்டி இழிவுசெய்ய நாம விட்டிருவோமா? நான் சொல்றது அவ்ளவுதான்.”
“நீங்க இலங்கையிலே படுகொலைகள் நடக்கலைன்னு சொன்னீங்க” என்று அவர் இன்னொருபக்கம் தாவினார்.
“இல்லை, சொல்லலை.”
“சொல்றதா பலபேர் சொல்றாங்க”
“சொல்லுங்க, நான் எங்க சொன்னேன்? ஆதாரம் காட்டுங்க.”
“பலபேர் எழுதியிருக்காங்க.”
“சரி, அவங்க காட்டுற ஆதாரம் என்ன?”
அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“இலங்கையிலே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாங்க அப்டீன்னுதான் நான் சொல்லியிருக்கேன். ஆனா இலங்கையிலே நடந்தது ஒரு உள்நாட்டுப்போர். அங்கே ஆயுதமேந்திய ஒரு அரசராணுவம் சிவிலியன்ஸை கொன்று இன அழித்தொழிப்பு செய்யலை.விடுதலைப்புலிகளும் ஆயுதமேந்திய ராணுவம்தான்.முதல் வன்முறையை தொடங்கியது புலிகள்தான். அவங்களும் சிங்களர்களை கொன்னிருக்காங்க. அது உலகம் முழுக்க தெரியும். அப்ப சர்வதேச அரங்கிலே சிங்கள அரசு தமிழர்களை இனப்படுகொலை பண்ணினாங்கன்னு சொன்னா அது எங்கயுமே எடுபடாது. மாறாக இலங்கை அரசு போர்நெறிகளை மீறி சாதாரணக் குடிமக்களை கொல்லுது, அது போர்க்குற்றம்னுதான் சொல்லணும். அப்பதான் உலகம் கவனிக்கும். ஏதாவது நல்லது நடக்கும். இதான் நான் சொன்னது.”
“இது நான் சொல்றது மட்டுமல்ல. இது எரிக் சோல்ஹைம் மாதிரி இலங்கையை கவனிக்கிற அத்தனை பேரும் சொல்றதுதான். இனப்படுகொலைன்னு சொல்லிக்கிட்டா நமக்குக் கொந்தளிப்பா இருக்கலாம். ஆனா உலகம் அதை ஏற்றுக்கொள்ளலைன்னா அதனால என்ன பயன்? இப்பவரை உலகத்தின் எந்த சபையும் அதை ஏத்துக்கலைங்கிறதுதான் உண்மை. போர்க்குற்றம்னு சொல்லியிருந்தா உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பிருந்தது. அதை தவறவிட்டாச்சு… ”
“அப்டியா?”
“தடம் இதழிலே வந்த பேட்டி அது. நீங்க படிச்சுப்பாக்கலாம். சரி, நான் சொன்னது இது. இதை ஒருத்தர் மறுக்கலாம். ஆனா படுகொலைகளே நடக்கலைன்னு நான் சொல்றதா நேர் தலைகீழா அதை ஏன் திரிக்கிறாங்க? அப்டி திரிக்கிறவங்களோட நோக்கம் என்ன?”
“இலங்கை எழுத்தாளர்களை பூச்சிமருந்து அடிச்சு கொல்லணும்னு நீங்க சொன்னீங்களே.”
நான் சிரித்துவிட்டேன் “தமிழ்நாட்டிலே இலங்கைத்தமிழ் எழுத்துக்களைப் பற்றி விரிவா ஆராய்ஞ்சு அனேகமா அத்தனை பேரை பற்றியும் கட்டுரை எழுதி புத்தகங்களா போட்ட இன்னொரு விமர்சகரோட பேரைச் சொல்லுங்க.”
அவர் “நீங்க எழுதியிருக்கீங்களா?” என்றார்.
“பல புத்தகங்களா நான் எழுதினதெல்லாம் கிடைக்குது… நான் கவனிக்காத ஒரு நல்ல ஈழ எழுத்தாளரோட பெயரை நீங்க சொல்லுங்க.”
“அப்ப ஏன் பூச்சிமருந்து அடிக்கணும்னு சொன்னீங்க?”
“இலங்கையிலே இருக்கிற நல்ல கவிஞர் நாலைஞ்சுபேரோட பெயரைச் சொன்னேன். மு.பொன்னம்பலம்னு ஒருத்தர் கிட்டத்தட்ட அம்பது அறுபது கவிஞர்களோட பெயர்களைச் சொல்லி அத்தனைபேரும் நல்ல கவிஞர்கள்னு சொன்னார். அப்டி ஒரு பட்டியல்போட்ட அதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன?”
“தமிழ்நாட்டின் தலைசிறந்த நடிகர்கள்னு சிவாஜி, கமல், நாசர்னு ஆரம்பிச்சு நூறுபேரை மொத்தமாப் பட்டியல்போட்டா ஏத்துக்கிடுவீங்களா?”
“அதெப்டி?”
”அது சிவாஜிக்கும் கமலுக்கும் அவமானம்தானே?”
“ஆமா”
“அதைத்தான் சொன்னேன். அப்டி அம்பது நூறுன்னு கவிஞர்கள் இருக்கக்கூடாது, அது களை மாதிரி. களைக்கு பூச்சிமருந்து அடிக்கலாம்னு வேடிக்கையாச் சொன்னேன்”
நீண்ட அமைதி. அவர் என் நூலகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
“அவ்ளவுதானா?” என்றேன்.
“கமலாதாஸ் அசிங்கமா இருக்காங்கன்னு நீங்க சொல்லலியா?”
”கமலாதாஸ் எனக்கு தனிப்பட்டமுறையில் நெருக்கமானவங்க. என் ஆசிரியர் நித்யசைதன்ய யதிக்கும் அவங்க நெருக்கம். நான் ஏன் அவங்களைப்பற்றி அப்டி சொல்லணும்?”
“நீங்க சொன்னதாச் சொன்னாங்களே”
“சரி, கமலாதாஸோட முதல் சிறுகதைதொகுதி எப்டி தமிழிலே வெளிவந்தது?”
“எப்டி?”
“என்னுடைய முன்னுரையோட, என் முயற்சியிலே, என் நண்பர் நிர்மால்யா மொழியாக்கத்திலே வந்தது. அப்ப கமலா தாஸ் உயிரோட இருந்தாங்க…”
“அப்ப ஏன் அப்டி சொன்னீங்க?”
“நான் என்ன சொன்னேன்னு தெரியுமா உங்களுக்கு?”
“அதப்பத்தி சிலர் சொன்னதை வாசிச்சேன்.”
“கமலாதாஸ் என் கதைன்னு ஒரு புத்தகம் எழுதினாங்க. அதில் அவங்களோட திருமணம் மீறிய பாலுறவைப்பற்றி எழுதினாங்க. அது புகழ்பெற்ற நூல். பின்னாடி அவங்களே அந்தப்புத்தகம் அவங்க பொய்யா கற்பனையிலே எழுதினதுன்னு சொன்னாங்க. அதனாலே அந்த புத்தகத்தை ஒரு புனைவாத்தான் எடுத்துக்கிடணும், அதைவைச்சு அவங்களை மதிப்பிடக்கூடாதுன்னு சொன்னேன். அவங்களை அந்த ஒரு புத்தகத்தை வைச்சு கொண்டாடி அவங்க ஒரு சுதந்திரப்பாலியல் கொண்ட பொம்புளைன்னு அடையாளப்படுத்துறவங்களுக்கான பதிலா அதைச் சொன்னேன்” என்றேன்.
“அவங்களை தத்தளிப்பும் அலைமோதலும் கொண்ட கலைஞராத்தான் எடுத்துக்கிடணும். அவங்க தெளிவான சிந்தனையும் நிலைபாடும் கொண்ட ஆக்டிவிஸ்ட் கிடையாது. இதான் நான் சொன்னது. இதை அவங்க இருக்கிறபோது அவங்களோட சிறுகதைத் தொகுதிக்கு எழுதின முன்னுரையிலேயே சொல்லியிருக்கேன். அவங்களே வாசிச்சிருக்காங்க…” என்று தொடர்ந்தேன்.
“அவங்களுக்கு தான் அழகா இல்லை, தன் குடும்பத்திலே மத்தவங்க அழகா இருக்காங்ககிற காம்ப்ளெக்ஸ் இருந்தது. அதனாலேயே அதீதமான நிலைபாடுகளை எடுக்கிறவங்களா இருந்தாங்க. அவங்க அதிதீவிர கிருஷ்ணபக்தையா ஆனாங்க. சட்டுன்னு இஸ்லாமுக்கு மாறினாங்க. பிறகு இஸ்லாமிலே இருந்து வெளியேறப்போறேன்னு சொன்னாங்க. அதெல்லாமே கலைஞரோட அந்த நிலையில்லாமைதான்… நான் சொன்னது அதுதான்.”
“அவங்க அசிங்கமா இருக்காங்கன்னு சொன்னது?”
“அது நான் சொன்னது இல்லை. அவங்களே அவங்களைப்பற்றிச் சொல்லிக்கிட்டது. நான் அவங்களோட அந்த தாழ்வு மனநிலையைத்தான் வாசகன் கவனிக்கணும்னு சொன்னேன்…”
அவர் தெளிவடைந்தாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் நடுக்கம் நின்றுவிட்டது.
சம்பந்தமே இல்லாமல் “தமிழை இங்கிலீஷ்லே எழுதணும்னு சொல்றீங்க, அது தமிழை அழிக்கிற முயற்சி” என்றார்.
“இந்தியமொழிகளை ரோமன்லிபியிலே எழுதணும்னு சொன்னவர் அம்பேத்கர்” என்றேன்.
அவர் அதற்கு பதில் சொல்லாமல் இன்னொரு பக்கம் தாவி “இஸ்லாமியர்கள் பக்கத்திலே வந்தாலே புடிக்கலைன்னு நீங்க சொன்னீங்களே?”
“எப்ப?”
“நீங்க சொன்னதா பலபேர் எழுதியிருக்காங்க”
“பாருங்க, இது பெரிய பழி. இதைச் சொல்ற நீங்க ஆதாரம் காட்டணும் இல்லியா? இப்ப நீங்க ஒரு திருடர்னு நான் சொன்னா கொதிச்சுப்போக மாட்டீங்களா? ஆதாரம் கேப்பீங்களா இல்லியா?”
“நெறைய ஆதாரம் இருக்கு”
“ஒரு ஆதாரம் சொல்லுங்க”
“…. எழுதியிருக்கார்”
“அவர் ஏதாவது ஆதாரம் குடுக்கிறாரா?”
“அவரு சொல்றது ஆதாரம்தானே?”
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “உங்களைப்பத்தி நான் சொல்றதை ஆதாரமா எடுத்துக்கிட்டு இன்னொருத்தர் உங்களை திருடர்னு சொன்னா ஏத்துக்குவீங்களா?”
“அப்ப நீங்க சொல்லலையா?”
”எனக்கு ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. சதக்கத்துல்லா ஹசனிங்கிற நண்பரோட சேர்ந்துதான் சொல்புதிது இதழையே நடத்தினேன். விஷ்ணுபுரம் அமைப்பிலேயே இஸ்லாமியர் உண்டு. குடும்பநண்பர்களா இஸ்லாமியர் உண்டு… எங்களோட எந்த விழா ஃபோட்டோவிலயும் நீங்க அதைப்பாக்கலாம். நான் இஸ்லாமிய தர்காக்களுக்கு போறதைப் பத்தி எழுதியிருக்கேன். என் வெண்முரசு நாவல்களில் ஒண்ணு ஓச்சிற உப்பாங்கிற சூஃபிக்கு சமர்ப்பணம் பண்ணியிருக்கு… அப்ப நான் எப்டி அப்டி சொல்லமுடியும்?”
“நீங்க அப்ப என்ன சொன்னீங்க?”
“நான் சொன்னது இதுதான். எந்தவகையிலும் அடிப்படைவாதிகளை என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமானாலும் அப்டித்தான். என்னை அழைச்சு பேசவைச்ச ஒரு அமைப்பு சில ஆண்டுகள் கழிச்சு அர்ஜுன் சம்பத்தை கூப்பிட்டபோது நான் கடுமையா எதிர்வினை ஆற்றினேன். அடிப்படைவாதத்தை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னேன். அப்ப அந்த விவாதத்திலேதான் இன்னொண்ணையும் சொன்னேன். ஒருமுறை ஒரு மேடையிலே இதேமாதிரி ஜவஹருல்லாகூட உக்காரவேண்டிய சூழல்னு தெரிஞ்சுது, நான் தவிர்த்திட்டேன். அவரைமாதிரி ஒரு அடிப்படைவாதிகூட அமர்வதை நினைச்சாலே நடுக்கமா இருந்ததுன்னு சொன்னேன். நான் சொன்னது இதுதான்.”
“அவரு இஸ்லாமியர்தானே?”
“அடிப்படைவாதிகூட சேரமுடியாதுன்னு நான் சொன்னதை முஸ்லீம்கூட சேரமுடியாதுன்னு யாரு மாத்தினது? முஸ்லீம்கள் எல்லாருமே அடிப்படைவாதிகள்னு சொல்றதுமாதிரிதானே அது?” என்றேன்.
அவர் பேசாமலே அமர்ந்திருந்தார்.
“யோசிச்சுப்பாருங்க. நான் சொல்றது எல்லாமே அச்சிலே, இணையதளத்திலே இருக்கு. யார் வேணும்னாலும் உடனே தேடி படிச்சுப்பாக்கலாம். என்னைப்பத்தி இங்க உலவுற எல்லா குற்றச்சாட்டுகளையும் சொல்லிட்டீங்க. எல்லாமே நான் சொன்னதை திரிச்சு, தப்பா அர்த்தம் கொடுத்து மத்தவங்க சொல்றது. நான் சொல்றதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. பலசமயம் நான் சொல்றதை நேர் எதிராகூடத் திரிச்சிருக்காங்க. நீங்க நான் சொன்ன எதையுமே படிக்கலை. என்னைப்பத்தி திரிச்சு சொல்லுற எல்லாத்தையும் தேடித்தேடி படிச்சு அபிப்பிராயம் உண்டு பண்ணியிருக்கீங்க…”
“அதெல்லாம் இல்லை” என்றார்.
”இதே பாணியிலே நான் மத்தவங்களைப்பத்தி வேணும்னே திரிச்சு அவங்க சொல்லாததை சொன்னதா எடுத்துக்கிட்டு பேசினா நீங்க ஏத்துக்கிடுவீங்களா? நான் எழுத்தாளர்களை திட்டுறேன்னு பொய் சொல்றாங்க. என்னை இவங்க திட்டுற இந்த ஆபாச மொழியிலே நான் எப்பவாவது யாரையாவது திட்டினா என்ன சொல்லுவீங்க? சரி, என்னை இந்த ஆபாசமொழியிலே திட்டுறவங்களைப் பத்தியாவது நான் திரும்பி ஏதாவது திட்டியிருக்கேனா?”
அவர் கண்கள் அலைமோதின. திணறிக்கொண்டிருந்தார்.
“சொல்லுங்க, வெறும் மோசடியாலே உங்களோட எல்லா அபிப்பிராயங்களையும் இன்னொருத்தர் உருவாக்கிறார்னா அவர்தானே உங்களை ஏமாத்துறவர்? தன்னொட தனிப்பட்ட காழ்ப்புகளை உங்கமேலே ஏத்தி உங்களை தூண்டிவிடுறார்னா அவர்தானே உங்களுக்கு எதிரி?”
சட்டென்று அவர் உரத்தகுரலில் “நீங்க அப்டியெல்லாம் மழுப்ப முடியாது. எல்லாத்தையும் சொல்லிட்டு அதை மழுப்பறீங்க… உங்களைப் பத்தி சொன்னாங்க. உங்களை வாசிக்கக்கூடாது. வாசிச்சா பேசிப்பேசி கன்வின்ஸ் பண்ணிடுவீங்கன்னு. நீங்க அபாயமான ஆள். எல்லாத்தையும் சமாளிச்சிருவீங்கன்னு சொன்னாங்க. சாத்தான் எல்லாத்தையும் சமாளிச்சிரும்னு சொன்னாங்க. இப்ப அப்டித்தான் பேசுறீங்க….” என்றார்.
நான் புன்னகைத்தேன். வேறென்ன செய்ய?
”நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்கிட முடியாது. நான் மறுபடி போய் எல்லாத்தையும் படிச்சுட்டு வாறேன். உங்க தர்க்கபுத்தியாலே என்னை மடக்கிட்டீங்க… அதெல்லாம் உங்களோட திறமைதான்.”
”சரி பாருங்க… மறுபடி பார்ப்போம்.”
அவர் எழுந்து சென்றபோது முகம் கசப்பில் நிறைந்திருந்தது. கண்களில் கண்ணீர்ப்படலம் போல ஈரம். தாடை இறுகியிருந்தது.
“ஒண்ணு சொல்லவா?” என்றேன். “நாம இப்ப பேசினதையேகூட நீங்க இங்கேருந்து போற வழியிலேயே திரிக்க ஆரம்பிப்பீங்க… நான் உங்களை அவமானப்படுத்தினதாக்கூட உங்க நண்பர்கள் கிட்ட போய்ச்சொல்வீங்க.”
அவர் கோபமாக ஏதோ சொல்வதுபோல உதட்டை அசைத்தார். ஆனால் சொல்லவில்லை.
“நான் நம்ம பேச்சை ரெக்காட் பண்ணியிருக்கேன்” என்று புன்னகைத்தேன்.
அவர் திகைத்தவர் போல பார்த்தார்.
“பயப்படாதீங்க. உங்க நண்பர்கள் நான் ரெக்கார்ட் பண்ணினதை காட்டினாக்கூட நீங்க சொல்றதைத்தான் நம்புவாங்க” என்றேன்.
அவர் வேகமாக நடந்தார். நான் ஒன்றும் ரெக்கார்ட் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கலாம். அவருக்கு மேற்கொண்டு ஊக்கத்துடன் செயலாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் இருந்திருக்கும், கொஞ்சம் உற்சாகமாகத் திரும்பிப் போயிருப்பார் என நினைத்துக்கொண்டேன். என்ன இருந்தாலும் வீடு தேடி வந்தவர்.