தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள அ…

உங்கள் கடிதத்தை நான் வெளியூரில் ஒரு இணையநிலையத்தில் வாசித்தேன். அப்போது அதை முழுதாக வாசிக்கவில்லை. பின்னர் வாசித்துவிட்டு விரிவாகவே எழுதவேண்டுமென எண்ணினேன். நடுவே அலைச்சல். ஆகவே எழுதமுடியாமல் போய்விட்டது. இத்தனை தாமதமானதற்கு மன்னிக்கவும்.

*

உங்கள் கடிதத்தில் உள்ள மையமான விஷயங்களை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன். நீங்கள் சிறுவயது முதல்  அறிந்த ஆண்களில் முக்கியமானவர் இருவர். ஒன்று உங்கள் அப்பா. இன்னொன்று உங்கள் கணவர்.  உங்கள் தந்தையின் குரூரத்தைக் கண்டு வளர்ந்த உங்களுக்கு கணவரின் குரூரம் ஏற்றுக்கொள்ள முடிவதாக இல்லை. விவாகரத்து என்பதை இன்னும் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அலைக்கழிப்புகள் உங்களை துரத்துகின்றன. உங்கள் தந்தை, உங்கள் [முன்னாள்] கணவர் ஆகிய இருவரின்  இயல்பு மீதுள்ள உங்கள் திகைப்புதான் உங்களை இப்போது வதைக்கிறது.

அவர்களின் குரூரம், தன்முனைப்பு ஆகியவை உங்களை தாக்கியிருக்கும் விதம் எனக்குப்புரிகிறது. அதிலும் உங்கள் தந்தை உங்கள் மீது கொண்டிருக்கும் பெரும் பாசத்துக்கும் அவரது குரூரத்துக்கும் இடையேயான முரண்பாடு புரிந்துகொள்ள சிரமமானதாக உள்ளது உங்களுக்கு. எளிமையான சூத்திரங்களின்படி எளிதில் விளக்கிவிடமுடியாத விஷயம்தான் இது.

அதன் மையமான கேள்விக்கு அல்லது திகைப்புக்கு நான் என் அனுபவம் சார்ந்தே தெளிவான ஒரு பதிலை சொல்ல முடியும் – “ஆணின் அடிப்படையில் உள்ள தீமை”. சற்று குரூரமான, நேரடியான உண்மை இது.

ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறேன்.

அதை இவ்வாறு விளக்குகிறேன். ஆண் என்று நாம் சொல்லும் இந்த பாலினம் இயற்கையால் உருவாக்கப்பட்டது. வேட்டையாடித்தின்னவும் தன் இனக்குழுவைப் பாதுகாக்கவும் அதற்கு இயற்கை ஆணையிட்டிருக்கிறது. அதற்கான வலிமையான எலும்புகள் தசைகள் அதற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அதற்கு தாக்கும் தன்மையை மூளையில் நிலைநிறுத்தும் ஹார்மோன் அமைப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாகவே சினம், வன்முறையில் மகிழும் குரூரம் ஆகியவை அதற்குள் உள்ளன.

சினம் என்று நாம் சொல்வது வெறும் ஒரு மனவெளிப்பாடு மட்டுமல்ல. அது தாக்குதலுக்காக தன் சக்திகளை திரட்டிக்கொள்ளவும் தன்னை மறந்து தீவிரமாக தாக்கவும் உயிர்களுக்கு உதவக்கூடிய ஓர் ஆயுதம். சினம் கொண்ட விலங்கு வெல்கிறது. குரூரம் அதை வலிமையானதாக ஆக்குகிறது. எல்லா மிருகங்களுக்கும் சினம் ஒரு பெரும் ஆயுதம்.

நான் குரங்குகளை கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவற்றின் இயல்புகள் அடிப்படையில் மானுடர்களுக்கும் பொருந்துவதை கண்டிருக்கிறேன். தாட்டான் எனப்படும் ஆண்குரங்கு பெரும்பாலான நேரம் உக்கிரமான சினத்துடன்தான் இருக்கிறது. அதிலிருந்து வன்முறை வெளிப்பட்டபடியே இருக்கிறது. அருகே செல்லும் பிற குரங்குகளை எல்லாம் அது தாக்குகிறது. குட்டிகளைக்கூட அது கொஞ்சுவதில்லை. ‘ஆண்மை’ என்பதே கோபமும் வன்முறையுமாகத்தான் அதில் வெளிப்பாடு கொள்கிறது.

அதன் பாலுறவுமுறையை கவனித்து ஆச்சரியமடைந்து விரிவாக டைரியில் எழுதியிருக்கிறேன். உக்கிரமாக ஒரு கர்ஜனை புரிந்து, இருகைகளையும் தூக்கி வெறியுடன் துள்ளி, தன்னைத்தானே சுற்றிவந்து, பல்லைக்காட்டி சீறுகிறது. அப்போது பிற குரங்குகள் எல்லாமே சிதறி ஓடுகின்றன. தகுதியான பெண்குரங்குகள் ஒன்றிரண்டு அஞ்சியபடியே அதை நோக்கி வருகின்றன. அதில் ஒன்று நடுங்கியபடி வந்து அக்குரங்கின் முன்னால் அமர்ந்துகொள்கிறது. கிட்டத்தட்ட கொலைவெறியுடன் தாட்டான் குரங்கு பெண்ணைப் புணர்கிறது. நிறைய சமயங்களில் அது பெண்குரங்கை கடித்தும் நகங்களால் கிழித்தும் அலறச்செய்கிறது. வன்புணர்ச்சி முடிந்ததும் பெண்குரங்கு ரத்தம் வழிய கதறியபடி ஓடுகிறது. சிலசமயம் புணர்ச்சி முடிந்ததும் பெண்குரங்கை ஆண்குரங்கு கடித்துக் குதறுவதும், அபூர்வமாக கொன்றுவிடுவதும் உண்டு.

இப்படித்தான் மனித இனத்திலும் ஆண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய கிராமங்களில் இன்றும் கணிசமான ஆண்கள் அந்த தாட்டான் குரங்கைப்போலத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக என்னுடையதுபோன்ற போரைத்தொழிலாக்கிய சாதிகளில் சினமும் வன்முறையும் நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகின்றன. சிறுவயது முதலே வளர்த்து எடுக்கப்பட்டு வருகின்றன. வன்முறையும் சினமும்தான் நம் மரபில் வீரம் என்று நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றன இல்லையா? இன்றும் நம் திரைப்படங்களில் அதுவே மீண்டும் மீண்டும் சித்தரிக்கப்படுகிறது. நம் கதாநாயகர்களின் முகங்கள் எல்லாமே உச்சகட்ட சினத்தில் வெறித்து உறைந்த படங்களாகவே நகரமெங்கும் நிறைந்திருக்கின்றன.

ஆணுக்குள் உறையும் அடிப்படைத் தீமை என்பது இந்த விலங்கியல்புதான். வன்முறையை அவன் மனம் இயல்பாகவே நாடுகிறது. வதைப்பதில் அவனுக்கு விளக்கமுடியாத இன்பம் உள்ளது. கோபம் கொள்ளும்போது அவனுள் அதை பெருக்கி பெருக்கி உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் ஹார்மோன்கள் ஊற்றெடுக்கின்றன. சினத்தை அவனால் கட்டுப்படுத்த முடிவதில்லை. பலசமயம் அவனை சினம் கட்டற்ற பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறது. சிறையில் கொலைசெய்த கைதிகளை சந்தித்திருக்கிறேன். அவர்கள் இருவகை. முதல்வகையினர் சினம் தலைக்கேறி வன்முறையை நிகழ்த்தியவர்கள். ஏன் அப்படிச்செய்தோமென அவர்களால் விளக்கவே முடிவதில்லை. இரண்டாவது வகையினர் வன்முறையை உள்ளூர ரசிப்பவர்கள்.

இந்த வன்முறைத்தன்மையில் இருந்து மேலும் இரு மனநிலைகள் ஆணிடம் உருவாகின்றன. ஒன்று அகந்தை. இன்னொன்று சுயமைய நோக்கு. தன் வலிமையை எப்போதும் உணரும் ஆண், தன்னை வலிமையானவனாக மட்டுமே எண்ண விரும்பும் ஆண், மெல்ல அகந்தையை வளர்த்துக்கொள்கிறான். உண்மையில் ”நான் ஆண்” என்ற உணர்வை பதின் பருவத்தில் பையன்கள் அடையும்போது அகந்தையும் உருவாகி வருவதைக் காணலாம். தெருவில் பொது இடங்களில் வீட்டில் பையன்களைப் பார்க்கும்போது அந்த அகந்தை அவர்களின் உடல்மொழியில் வெளிப்படுவதை நேரடியாகவே காணலாம். அலட்சியமான பேச்சு, கிண்டல்கள், உடல் வலிமையைக் காட்டும் முயற்சிகள்…

அது நம்மால் பலசமயம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும்  அக்காக்களையும் அம்மாக்களையும் ஆழமாக அது புண்படுத்தும் தருணங்கள் உண்டு. திடீரென பையன் தன்னை ஒரு வெறும்பெண்ணாக -கீழானவளாக – நடத்த ஆரம்பிப்பதை அம்மா உணர்கிறாள். அவளால் அதை உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை.  அதேபோல பையன் ஆணாக ஆகும்போது அப்பா என்னும் தாட்டான் குரங்கு தனக்குச் சவால்விடும் இன்னொரு தாட்டான் குரங்கை மந்தைக்குள் கண்டுகொள்கிறது.

நான் என்னும் எண்ணம், உலகையே தன் கீழ் நிறுத்தும் முனைப்பு என அந்த  அகந்தை பலவகைகளில் செயல்படுகிறது. என்னுடையது என்று உணரும் விஷயங்களின் காப்பாளனாகவும் புரவலனாகவும் ஆண் தன்னை உணர்கிறான். வெல்லப்பட வேண்டிய விஷயங்களைப்பொறுத்தவரை அவன் தாக்குபவனாக இருக்கிறான். தனக்குக் கீழே இருப்பவர்கள் தன் அதிகாரத்தை மீறுவதைப் பார்க்கும்போது அவன் தண்டிப்பவனாக ஆகிறான்.

ஆணின் சுயமைய நோக்கு பெரும்பாலும் பெண்களால் புரிந்துகொள்ளப்படமுடிவதாக இல்லை. இயல்பாகவே ஆண் தன்னைத்தவிர பிறரைப்பற்றி அக்கறைப்படுவதே இல்லை. பல மிருக இனங்களில் ஆண்மிருகம் தன்னையும் மந்தையையும் காப்பதைத்தவிர எவ்வகையிலும் அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப்படுவதில்லை. நம்முடைய பழங்குடிச் சமூகங்களில் முன்பெல்லாம் தகப்பன் முற்றிலும் சுயநலமியாகவே இருந்திருக்கிறான்.

உங்கள் தந்தையைப்பற்றிச் சொன்னீர்கள். அவரது நேர்மை. உதவும் தன்மை. அரவணைக்கும்தன்மை. கூடவே வன்முறை. அவற்றுக்குள் முரண்பாடே இல்லை. அவையெல்லாமே நம் மரபில் ‘ஆண்மை’ என்று சொல்லிக்கொடுக்கப்பட்டவை அல்லவா? பெண்ணை கனிந்து கொஞ்சும் ஆண் அவள் தன்னை மதிக்கவில்லை என்ற ஐயம் கொண்டதுமே வெறிகொள்வது இதே மனநிலையினால்தான்.

இந்த அடிப்படை இயல்பு  உள்ளே உறையாத ஆணே கிடையாது. மிகச்சிலரே அதை தன்னைத்தானே கூர்ந்து கண்டு அறிந்து நேர்மையாக பதிவுசெய்திருக்கிறார்கள். முக்கியமான உதாரணம் காந்தி. தென்னாப்ரிக்காவில் தன் ஆசிரமத்தில் இருந்த கஸ்தூர்பா ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினரின் இருப்பிடத்தை துப்புரவுசெய்ய மறுத்தபோது ஆவேசம் கொள்ளும் காந்தி அவரை அடித்து தலைமுடியைப்பிடித்து இழுத்து வெளியே தள்ளுகிறார். பின்னர்  அப்போது தன்னில் செயல்பட்டது  தீண்டாமை ஒழிப்பு என்னும் லட்சியவாதமல்ல, பெண்ணை உடைமையாகக் காணும் ஆண்மை என்னும் தீமையே என்று உணர்கிறார்.

இந்த அடிப்படை இயல்பை தன் வளர்ப்பின் பண்பாடால், கல்வியால், தன்னைத்தானே கூர்ந்து கவனிக்கும் இயல்பால் வென்று மேலே செல்பவனே மேலான ஆண்மகனாக ஆகிறான். தன் சினம், வன்முறை, ஆதிக்கத்தன்மை ஆகியவற்றை அவன் கூர்ந்து கவனித்தாலே போதும், அவை அவனுக்கே வெட்கமானவையாக ஆகி கட்டுக்குள் வர ஆரம்பிக்கும். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. காரணம் ஆண்மை என்ற கருதுகோள் இங்கே ஏற்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றே நம் சூழல் சொல்லிக்கொடுக்கிறது. ஆகவே தாங்கள் அப்படி இருப்பது இயல்பானது என்று எண்ணும் ஆண்களே அதிகம்.

நேற்று பெண்களிடம் ஆண்களின் அந்த ஆதாரமான தீமையை தாங்கிக்கொள்ளும்படிச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. நம் அன்னையருக்கு ஆண்களின் வன்முறை பெரிய உளச்சிக்கலாக இருக்கவில்லை. உடல் சார்ந்த வலி மட்டுமே அவர்களுக்கு இருந்தது. அவமானங்களைக்கூட அவர்கள் தாங்கிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட பெண்குரங்குகளைப்போல.நேற்றைய பெண்கள் மிக இளம் வயதிலேயே மணம்புரியப்பட்டு ஒரு ஆணின் ஆளுமைக்குள் அவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு வளர்ந்து வந்தார்கள்.

இன்று பெண்களின் மனநிலை மாறி வருகிறது. அவர்கள் படித்து, பணியாற்றுகிறார்கள். அவர்களின் ஆளுமை உருவான பிறகே அவர்கள் மணம்புரிகிறார்கள். விருப்பு வெறுப்புகளும் கருத்துகளும் சுயமரியாதையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் ஆணின் தீமையை அப்படியே ஏற்க முடியாது. கூடாது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. மாறும் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு – மாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டுக்கொள்பவர்களுக்கு – வலி சற்றே அதிகம்.

உங்கள் அப்பாவும் சரி, முன்னாள் கணவரும் சரி, ஒரே வகையான ஆண்மை வார்ப்பில் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உறவுகளை மன்னித்தும் பொறுத்துக்கொண்டும் தாண்டிச்செல்லாவிட்டால் உறவுகளே இல்லை. ஏனென்றால் எல்லா உறவுகளும் செயற்கையானவை. மனிதர்கள் உள்ளூர தனிமையானவர்கள். உறவுகள் அத்தனிமையைப் போக்க நாம் நூற்றாண்டுகளாக உருவான மரபாலும் நம்பிக்கைகளாலும் படைத்துக்கொண்டவை. ஆனால் உறவுகள் சுமைகள் ஆகக்கூடாது. அதன் எல்லை ஒன்று உண்டு. அந்த எல்லையைக் கண்டபின் உறவுகளை சுமக்க வேண்டியதில்லை.  எந்த உறவையும். தாய்-பிள்ளை உறவைக்கூட.

ஆனால் அப்படி உறவைத் துறக்கும்போதும் நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும். உறவு என்பது செயற்கையானது. மானுடகுலம் உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பு அது. அதில் தெய்வீகமும் புனிதமும் ஒன்றும் இல்லை. மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முற்றிலும் தனியானவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன் மகிழ்ச்சியையும் தன் ஆன்மீக மீட்பையும் தானாகவே தன்னந்தனியாகவே கண்டுகொள்ள வேண்டும்.

நான் தெருவில் ஒரு நோயுற்ற நாயைப்பார்த்தேன். அந்தத் தனிமை என்னை துணுக்குறச்செய்தது. தன் வாழ்க்கையை அது தனியாகவே எதிர்கொள்கிறது. அதற்கு துணை என ஏதுமில்லை. அதனிடம் உடம்பு சரியில்லையா, சாப்பிட்டாயா என்றெல்லாம் எவருமே கேட்கப்போவதில்லை. அதுசெத்தால் யாரும் அழப்போவதில்லை. அந்தத் தனிமை அச்சமூட்டுவதுதான். ஆனால் அதுவே இயல்பானது என்று உணர்ந்தால் அது சாதாரணமாக ஆகிவிடும். தன்னுள் நிறைவை அடைய ஒருவர் கற்பதற்குப் பெயர்தான் ஆன்மீகம் என்பது.

இதிலிருந்து அடுத்த படிக்குச் செல்கிறேன். பெண்ணுக்குள் உறையும் தீமை என்ன? ஆணியல்புக்குரிய தீமையின் மறுபக்கம்தான் அது. அதை விரிவாகப்பேச இது இடமல்ல. சுருக்கமாக அந்தத் தீமை அவள் கருப்பையால் உருவாவது என்று சொல்லலாம். மிகச்சிறந்த விந்துவை ஏற்கும்பொருட்டு அவளுடைய கருப்பை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இயல்பிலேயே நிலையற்று தேடிச்செல்லும் தன்மை அவளுக்கு உள்ளது. பாதுகாப்புதேடும் தன்மை மனிதனைப்போன்ற மந்தைமிருகங்களில் உருவாகி இருக்கிறது. அத்துடன் வன்முறை கொண்ட ஆணின் முன் வன்முறையை ஏற்கும் மனநிலையாக அது அவளில் உருக்கொண்டிருக்கிறது.

இன்று அந்த மனநிலை ஒரு மனச்சிக்கலாகவே பெண்களில் வளர்ந்திருக்கிறது. தன்னிரக்கத்தை  உருவாக்கி பெருக்கிக் கொள்ளுதல் என்று அதைச் சொல்லலாம். நான் வாசகியராக, தோழியராகச் சந்திக்கும் பெண்களில் எந்த நிலையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த இயல்பு இல்லாதவர்களே இல்லை. தன்னை வருத்திக்கொண்டு அந்த வருத்தத்தை ஒரு தலைகீழ் மகிழ்ச்சியாக அனுபவித்தல். சிறிய துயரங்களைக்கூட மேலும் மேலும் கற்பனைமூலம் வளர்த்தெடுத்தல்.

இந்தத் தருணத்தில் அந்த இயல்பு உங்களிடம் இருக்கக் கூடாது என்று சொல்லவிரும்புகிறேன்.  நீங்களே உங்களுக்குள் சென்று அதை கூர்ந்து கவனியுங்கள். ஆணோ பெண்ணோ மனிதர்கள் தனித்தவர்கள். ஆகவே தனித்து நிற்பதற்கான வலிமையே அடிப்படைத்தேவை. அதுவே வாழ்க்கையை உருவாக்கும். எவரும் எவரையும் சார்ந்து இல்லை. துன்பங்களை உதறி முன்செல்லும் தீவிரத்தாலேயே நம் வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

நான் என் அனுபவத்தில் ஒன்றைச் சொல்கிறேனே. ஒரு சட்டையைக் கழற்றுவது போல துக்கங்களைக் கழற்றி வீச முடியும். அப்படி கழற்றமுடியும் என நாம் எண்ண வேண்டும். கழற்றிவிட்டு முன்னே செல்கிறோம் என்று நம்ப முடியும். இதோ நான் முன்னே செல்கிறேன், அடுத்த கணத்துக்கு, அடுத்த காலகட்டத்துக்கு, அடுத்த இடத்துக்கு  என நாம் உணரவேண்டும். சென்றவற்றின் மீது நமக்கு ஏதும் பொறுப்பு இல்லை. நம் பொறுப்பு வரும் காலத்தின் மீதுதான்.

மானுட வாழ்க்கை அதிவேகத்தில் முன்னே சென்றுகொண்டே இருக்கிறது. ஒரு கணம்கூட நீடிப்பதில்லை. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் பழங்கதையாகும். இந்தச் சட்டையை நீங்கள் கழற்றினாலும் இல்லாவிட்டாலும் அது நைந்து பழையதாகி மறையும். நீங்களே கழற்றினால் நீங்கள் விரைவில் விடுபடுவீர்கள். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றவர்கள் அல்ல. மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டவர்கள்தான்.

இவற்றில் இருந்து விடுபட்ட பின் ஒன்றை மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள், மனிதர்கள் தனியானவர்கள். பிரபஞ்சத்தில் அவர்களுக்கு அவர்கள் அல்லாமல் துணை ஏதுமில்லை. அப்படி உணர்ந்து தனித்து நிற்கும் ஆன்ம வல்லமையை உருவாக்கிக் கொண்டு விட்டால் தேவைக்கு ஏற்ப இனிய அழகிய துணைகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். காதல், திருமணம், குழந்தைகள், நண்பர்கள்…ஏன் செல்லப்பிராணிகள் வரை… ஆனால் எதையும் சாராமல் இருப்பவர்களாலேயே சிறந்த உறவுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்தத் தன்னம்பிக்கையை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் மீண்டும் சிறந்த மண உறவை நீங்கள் உருவாக்கிக்கொள்ள முடியும். விரைவில். மண உறவு என்பது நீங்கள் சாய்ந்து நிற்பதற்கான ஊன்றுகோல் என்பதனால் அல்ல. அது சிறந்த இனிய தருணங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதனால். அன்றாட வாழ்க்கையின் சலிப்பை வெல்ல அதன் இனிமைகளும் கடமைகளும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்றன என்பதனால். மணவாழ்க்கையை விட மேலான ஒரு பெரும் வாழ்க்கை இருந்தாலொழிய மணவாழ்க்கையை துறக்க முடியாது.

ஒருவேளை இதுவே ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். நம்முடைய மேலோட்டமான நம்பிக்கைகளால் நாம் மனித உறவுகளை மிகைப்படுத்துவதை விட்டுவிட்டு உறவுகளை தெளிவான பகல் ஒளியில் பார்ப்பதற்கு இது உங்களுக்கு  உதவலாம். ஆகவே பாசாங்குகள் இல்லாத  மிகைப்படுத்தல் இல்லாத நல்ல யதார்த்தமான உறவொன்றை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். நானறிந்த பல நண்பர்கள் விஷயத்தில் அதுவே நடந்திருக்கிறது.

உற்சாகமான ஒரு எதிர்காலம் உங்களுக்கு உருவாகட்டும். மிகச்சிறந்தவை அமையட்டும். ஆனால் அப்போதும் ஒன்றை சொல்லிக்கொள்வேன். வாழ்க்கை பிறருக்காக அல்ல. சாராம்சத்தில் அது நமக்காக மட்டுமே. ஆகவே முதலில் உங்கள் பெயருடன் உள்ள அந்த வாலை விலக்குங்கள். நீங்கள் நீங்கள் மட்டுமே.

நீங்கள் முதிர்ந்து தொண்டுகிழவியாக ஆகும்போது இந்தப் பிரிவு கசப்பு இதெல்லாம்  அபத்தமான வேடிக்கையாக ஆகி சிரிப்பு மூட்டும். ஆனால் நான் சொல்லிய ஒரு விஷயம் அப்போது தெளிவாக கண்முன் நிற்கும். ஒருவரது மகிழ்ச்சியும் ஆன்மீக மீட்பும் அவரால் தானாகவே கண்டடையப்படவேண்டியவை மட்டுமே.

அன்புடன்

ஜெ

[மறுபிரசுரம். முதல்பிரசுரம் – 2010]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28