மொழிக்கு அப்பால்…
குழந்தைகளுக்கு மதம்
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
அன்புள்ள ஜெ
மதத்தை அளித்தல் பற்றி எழுதியிருந்தீர்கள்.[மொழிக்கு அப்பால்…]நீங்கள் சொன்னது நடைமுறை உண்மை. மதத்தை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கையளிக்க முடிகிறது. ஏனென்றால் மதம் உலகியலைச் சார்ந்திருக்கவில்லை. அது முழுக்கமுழுக்க அகவயமானது. முழுக்கமுழுக்க அந்தரங்கமானது. மொழி அப்படி அல்ல. அது உலகியல் நோக்கம் கொண்டது. வாழ்க்கையின் பொருட்டு மொழியை கற்கவேண்டும். அந்த மொழியே மனதை ஆக்கிரமித்திருக்கும். இன்னொரு மொழியை ரகசியமாக, தனிப்பட்டதாக பேணிக்கொள்ள முடியாது. அதற்கு மனதில் இடமில்லை.
இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தே சொல்கிறேன். ஒப்பீட்டுக்காக இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களை எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் மதத்தை குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். முறையாக மதத்தின் கொள்கைகளையும் சடங்குகளையும் சொல்லிக்கொடுத்து சர்ச்சுக்கும் மசூதிக்கும் கூட்டிச்செல்கிறார்கள். அக்குழந்தைகள் மதத்தை ஏற்று மதத்திற்குள் வாழ்கின்றன. பின்னாட்களில் வாழ்க்கையின் பல சிக்கல்களில் மதம் அவர்களுக்கு பெரிய அகத்துணையாக இருக்கிறது.
அதை எந்த முற்போக்கு, பகுத்தறிவுத் தரப்பும் எதிர்ப்பதில்லை. இஸ்லாமியர்களிலும் கிறிஸ்தவர்களிலும் மதமற்றவர்களை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை. பெரியாரியர்களின் நிகழ்ச்சிகளில் அல்லது இடதுசாரி கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். அது பெரியார் இந்துமதத்தை எதிர்த்தார் என்பதனால். தங்கள் மதத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த மேடைகளிலேயேகூட தெளிவாக தங்கள் நிலைபாட்டை முன்வைப்பார்கள். முற்போக்காளர்களும் பெரியாரியர்களும்தான் அவர்களுக்காக சமரசம் செய்து அந்த மதங்களை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்துக்கள் மதத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் மட்டும்தான் எல்லா சர்ச்சைகளும் வருகின்றன. இந்துக்களுக்கு மட்டுமே இந்தக் குழப்பங்களும் உள்ளன. அது மட்டும்தான் பிற்போக்கு என்று இங்கே பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ அதை நாமும் நம்ப ஆரம்பித்துவிட்டோம். நம் மதநம்பிக்கையை நாம் ஒளிக்கப் பழகிவிட்டோம். வெளியே கொஞ்சம் பாவனையாகவேனும் முற்போக்காகவும் திராவிடமாகவும் பாவனை செய்வோம். “என் பிள்ளைகளுக்கு மதத்தை அறிமுகமே செய்யவில்லை” என்பதை ஒரு பெருமையாகச் சொல்லிக் கொள்வோம். வெளிநாட்டில் அப்படிச் சொல்லிக் கொள்வது மிகப்பெரிய கௌரவம்.
என்ன சிக்கல் என்றால் மதத்தை எப்படிச் சொல்லிக்கொடுப்பது என்பதுதான். நாமறிந்த மதம் என்பது நம் பெற்றோர் நமக்குச் சொல்லித்தந்தது. அது ஆசாரம் மட்டும்தான். எது சாப்பிடவேண்டும், எது சாப்பிடக்கூடாது அதுதான் முக்கியம். சில பண்டிகைகள், சில பூஜைகள், சில புரணக்கதைகள். இதெல்லாம்தான் நாமறிந்த இந்து மதம். அதை நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அதெல்லாம் அவர்களுக்கே கேலியாகத் தெரிகிறது. அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க நம்மால் முடியவில்லை.
ஆசாரங்களிலெல்லாம் சாதி இருக்கிறது. இன்றைய சூழலில் சாதிப்பிரிவினைக்கே இடமில்லை. அது நம் குழந்தைகளை நாமே இரும்புக்கூண்டிலே அடைப்பதுபோல. நாம் அடைத்தாலும் அவர்கள் பறந்துவிடுவார்கள். நம்மை காட்டுமிராண்டியாக நினைப்பார்கள். பூசைகள் பண்டிகைகள் ஆகியவையும் இன்றைய காலகட்டத்துக்கு உரியவையாக இல்லை. உதாரணமாக சட்டைபோடாமல் பூஜை செய்ய என் பையனிடம் சொன்னால் அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. நம்முடைய புராணக்கதைகள் எல்லாமே தமாஷாக தெரிகின்றன. இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்டில் ஒரு பூஜை வைக்க முயன்று முடியாமல் போயிற்று. எவருக்கும் ஆர்வமில்லை.
அத்தனைக்கும் மேலே ஒன்று உள்ளது. இன்றைக்கு இந்தியாவில் மதவெறியும் சாதிவெறியும் வேறொரு எல்லையில் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு இருந்த எல்லா தயக்கங்களையும் மீறி ஊடகங்களில் தெம்பாக வந்து பேசுகிறார்கள். என் குழந்தைகள் இயல்பாகவே அவர்களை வெறுக்கிறார்கள். இளைஞர்களில் தொண்ணூறு சதவீதம்பேரும் முற்போக்காக லிபரலாகவே இருக்கத்தான் விரும்புவார்கள். மதவெறியையும் சாதி மேட்டிமைத்தனத்தையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் பேசும் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் இளைஞர்களிடம் கொண்டுசெல்ல முடியாது. அப்படிச் செய்வது மனிதவிரோதமான செயல்.
தெளிவாகவே கேட்கிறேன். இதைத்தாண்டி நான் எப்படி இந்துமதத்தை என் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்வது. இதையே தமிழில் எழுதமுடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் என் ஆதங்கத்தைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
என்.சூரியநாராயணன்
அன்புள்ள சூரியநாராயணன்,
மதத்தைக் கொண்டுசெல்லுதல் பற்றிய இந்த வினாவுக்கு வேறு வேறுவகையில் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கிறேன். முந்தைய கட்டுரைகளில் சொன்னதை மீண்டும் சுருக்கி இப்படிச் சொல்கிறேன். மதத்தை நமக்கு எப்படி அது வந்து சேர்கிறதோ அப்படியே மாற்றாமல் கொள்வது என்பது அப்படியே நிராகரிப்பதற்கு நிகரான மடமை.
மதம் என்பது அதன் மெய்யியல், அமைப்பு, ஆசாரம் என மூன்றாகப் பகுக்கப்பட வேண்டியது. அதன் மெய்யியலே உண்மையில் காலம் கடந்து நிலைகொள்ள வேண்டியது. அதுவே மதத்தின் உள்ளடக்கம். அமைப்பும் ஆசாரங்களும் அதன் கலங்களும் ஊர்திகளும் மட்டுமே. அவற்றை மதமென நினைக்கலாகாது. அவற்றை மதமென நினைப்பவர் அதன் மெய்மையை அறியாதவர்கள்.
மதத்தின் மெய்யியல் மூன்று கூறுகள் கொண்டது. ஆன்மிகம், தத்துவம், பண்பாட்டுக்கூறுகள். நாம் மதத்தில் இருந்து பெறவேண்டியவை இவையே. இவற்றை மட்டுமே நாம் கைமாறவேண்டும். இந்த மூன்றையும் நிலைநிறுத்த, சிந்திக்க தேவையானவை என்றால் மட்டுமே அமைப்புக்களையும் ஆசாரங்களையும் ஏற்கவேண்டும். அவை இன்றைய மானுட அறத்திற்கு எதிரானவையாக இருக்கலாகாது. இன்றைய சிந்தனைகளுக்கு பொருந்துவனவாக இருக்கவேண்டும்.
இதற்கு நாம் முதலில் மதத்தை சரியானபடி கற்று அறியவேண்டும். முதலில் பிழைப்புக்காக மதத்தை ஒட்டுமொத்தமாக உதறிச்சென்றுவிட்டு, அதன்பின் பிந்தியவேளையில் எதுவும் அறியாமல் மதத்தின் ஆசாரங்களையும் அமைப்புகளையும் வெற்று நம்பிக்கைகளையும் மட்டும் சென்று கவ்விக் கொள்வதே இன்று நடக்கிறது. அது வெளியே நவீன வாழ்க்கையும் உள்ளே தேங்கிய பழைமைவாதமும் கொண்ட விசித்திரமான கோமாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒருவரிடம் மதம் வெறும் பற்றாகவோ, குழுஅடையாளமாகவோ, சாதிவெறியின் புறவேடமாகவோ இருக்கும்போது அது அடிப்படைவாத அரசியலை நோக்கியே அவரை கொண்டு செல்கிறது. மதம் என்பது நாம் நம் பண்பாட்டின் தொடர்ச்சியை அடைய, நம் முந்தையோரின் சிந்தனைகளின் நீட்சியை உருவாக்க, நமது தனிப்பட்ட ஆன்மிக மீட்புக்காக நமக்குத் தேவைப்படுகிறது. மத அரசியலில் சிக்கிக்கொண்டவர்களுக்கு இவை எதுவும் முக்கியமல்ல. அவர்கள் மதத்தை கற்பதில்லை. ஆனால் மதத்தைக் காப்பாற்றுபவர்களாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள்.
அடுத்த தலைமுறை முன் அவர்கள் இந்த வெளிவேடங்களுடன் சென்று நின்றால் இழிவடைவார்கள். ஏனென்றால் அவர்கள் இவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் எவர் என அவர்களுக்குத் தெரியும்.
நாம் கற்றுக்கொள்வது, நாம் தெளிந்திருப்பதுதான் முதன்மையான தேவை. அப்போதுதான் நாம் அதை கொண்டுசெல்ல முடியும். நாம் வற்புறுத்த முடியாது. அடுத்த தலைமுறை அதன் வழிகளில் முன் செல்லும். நாம் அவர்களுக்கு அளிக்கவில்லை, வழிகாட்ட முடியாமலிருந்தோம் என்ற நிலை இருக்கலாகாது. அவ்வளவே நாம் செய்யக்கூடுவது.
பிள்ளையார் சதுர்த்தி பற்றி சொல்கிறேன். சமீபத்தில் ஒர் அமெரிக்க நண்பர் எனக்கு எழுதினார். அவருடைய பதிமூன்று வயது மகனுக்கு வினாயகர் வழிபாட்டை அறிமுகம் செய்ய முயன்றார். கொழுக்கட்டை செய்யச் சொன்னார். சாணியில் பிள்ளையாரை உருட்டி வைத்து அருகம்புல் சூட்டி வழிபடவேண்டும் என்றார்.
பிள்ளையார் பற்றி கேட்ட பையனிடம் பார்வதி தன் உடலின் அழுக்கை உருட்டி வைத்து குழந்தையாக ஆக்கியதையும், பார்வதி குளிப்பதை எட்டிப்பார்க்க வந்த சிவனை பிள்ளையார் தடுத்ததையும், சிவன் பிள்ளையாரின் தலையை கிள்ளியபின் யானைத்தலையை வெட்டி அங்கே பொருத்தியதையும் சொல்லி “அந்தக்காலத்திலேயே நம்மூரில் உறுப்புமாற்ற அறுவை சிகிழ்ச்சை இருந்திருக்கிறது” என்றும் சொல்லி வைத்தார். பையனுக்கு குமட்டலே வந்துவிட்டது. இவர் சோகமாக எனக்கு எழுதினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் இதேபோல கேரளத்தில் ஒரு பதினைந்துவயது பெண்குழந்தை என்னிடம் கேட்டது. அவளுக்கு அவள் தந்தை சொன்ன விளக்கங்கள் மேல் ஒவ்வாமை. நான் சுவாரசியமாக பேச ஆரம்பித்தேன். எங்களுடைய வடகிழக்கு மாநிலப் பயணத்தை பற்றிச் சொன்னேன், அங்கே திரிபுரா மாநிலத்தில், அடர்ந்த காட்டுக்குள் உனக்கோட்டி என்னும் ஊரிலிருக்கும் பாறைச்செதுக்குச் சிலைகளை இணையத்தில் இருந்து காட்டினேன்.[https://www.jeyamohan.in/71940/]
அந்தச் சிலைகள் கிபி ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. பழங்குடிகளின் கலை அது என நன்றாகவே தெரியும். ஆப்ரிக்கச் சிலைகள் போலவே தோன்றும். ஆனால் சிவனுக்குரிய தலம் அது. ஒரு பாறை சிவனின் மாபெரும் தலையாக ஆக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அருவி வழிகிறது.
அங்கிருக்கும் ஏராளமான யானைத்தலைச் சிலைகளை காட்டினேன். கல்லில் பெரிய அளவில் செதுக்கப்பட்டவை. அவையெல்லாம் என்ன என்றேன். அவையெல்லாம் விதவிதமான பிள்ளையார் சிலைகள் என்றாள். “இல்லை, இவையெல்லாம் சிவனின் பூதகணங்கள். இவற்றைச் செதுக்கியவர்கள் இந்த பூதகணங்கள்தான் இந்த கோயிலைக் கட்டின என்கிறார்கள்” என்றேன். உனக்கோட்டியின் கதையைச் சொன்னேன். கோடிக்குக் குறைவாக என்று அந்த இடத்திற்கு பெயர்.
யானைத்தலை கொண்ட பூதகணங்கள் எவ்வாறு உருவாயின என விளக்கினேன். உலகம் முழுக்க தொன்மையான மதங்களிலும் பழங்குடி வழிபாடுகளிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் தலைகள் கொண்ட தெய்வங்கள் உள்ளன. “ஸ்பிங்க்ஸ்!“ என்று கூச்சலிட்டாள். “ஆமாம், குதிரைத்தலை கொண்டது செண்டோர். உலகம் முழுக்க அப்படி பல உருவங்கள் உள்ளன” என்று சொல்லி அந்த விக்கிப்பீடியா பதிவை காட்டினேன்
தமிழகத்தில் கீழ்வாலை என்ற ஊரில் இருபதாயிரமாண்டு பழமையான குகை ஓவியத்தில் பருந்துதலை கொண்ட மனிதனின் வடிவம் இருக்கிறது. அவன் அரசன் அல்லது பூசாரி போல இருக்கிறான். தமிழ்மொழிகூட உருவாகாத கற்காலத்தில் வரையப்பட்ட ஓவியம் அது. உலகம் முழுக்க குகை ஓவியங்களில் அத்தகைய வடிவங்கள் உள்ளன.
அந்த மரபு எப்படி உருவாகிறது? நாம் இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். பூசாரிகளும் அரசர்களும் சடங்குகளில் விலங்குத்தலைகளை பொருத்திக் கொள்வது உலகமெங்கும் பழங்குடிப் பண்பாடுகளில் உள்ள வழக்கம். கேரளத்திலும் வடகிழக்கிலும் இன்றும் இந்து வழிபாட்டுச் சடங்குகளில் அவ்வழக்கம் உள்ளது. ஆப்ரிக்காவிலும் உள்ளது.
உருவ வழிபாட்டின் ஒரு தொடக்கம் தெய்வமாக வேடமிட்ட மனிதர்களை வழிபடுவது. இன்றும் வடகேரள தெய்ய வழிபாடு அதன் நீட்சியாக உள்ளது. அந்த தெய்வ வேடங்கள் பின்னர் ஓவியங்களும் சிலைகளும் ஆக மாறின. இவ்வாறு பூசகர்களும் அரசர்களும் விலங்குத்தலைகளுடன் சடங்குகளில் தெய்வங்களாக தோன்றியதில் இருந்தே விலங்குத்தலை கொண்ட தெய்வஉருவங்கள் உருவாகியிருக்கலாம்.
இது வெறும் அச்சத்தால் உருவான ஒரு சடங்கு அல்ல. அப்படி ஆரம்பகால வெள்ளைக்கார [கிறிஸ்தவ] ஆய்வாளர்கள் சொன்னார்கள். இன்றைய நவீன மானுடவியல் அறிஞர்கள் அவ்வாறு சொல்வதில்லை. அது மிகச்சிக்கலான ஒரு குறியீட்டுச் செயல்பாடு என்றும் மானுட உள்ளத்தின் ஆழம் வெளிப்படும் விதம் என்றும் சொல்கிறார்கள். குளோட் லெவிஸ்ட்ராஸின் பெயரைச் சொல்லி அவரை வாசிக்கலாமென்று சொன்னேன்
எளிமையாகச் சொன்னால் அந்த விலங்கின் சிறப்பியல்பை இயற்கையில் உள்ள ஒரு தெய்வீகமான சக்தியாக காண்பதும் அதை குறியீடாக ஆக்கிக்கொள்வதும்தான் இது. ஒவ்வொரு விலங்கும் பழங்கால மூதாதையருக்கு இயற்கையின் ஓர் அபூர்வமான ஆற்றலின் அல்லது ரகசியத்தின் வெளிப்பாடு. பாம்பு ஓர் உதாரணம். அது கால்களற்றது, ஆனால் விரைவானது. பல்லோ நகமோ அற்றது, ஆனால் மிக அபாயமானது. இமைக்காத கண்கள் கொண்டது. எல்லா ஒலிகளையும் கேட்பது, ஆனால் செவிகள் இல்லாதது. ஆகவே உலகமெங்கும் அது குறியீடுதான்.
யானையும் அப்படி ஒரு மகத்தான குறியீடாகவே இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளது. பௌத்த, சமண மதங்களிலும் யானை முக்கியமான குறியீடுதான். யானை பற்றிய வர்ணனைகளிலேயே அது கவித்துவக் குறியீடாக இருப்பதைக் காணலாம். மேகரூபன் [மேகத்தின் வடிவம் கொண்டவன்] என யானை சொல்லப்படுகிறது. கிருஷ்ணசிலா [கரும்பாறை] என்றும் சொல்லப்படுகிறது. மிக மென்மையான உருவற்ற மேகமும் உறுதியான கற்பாறையுமாக ஒருங்கே தோன்றுவது. கைகொண்ட விலங்கு என்றபொருளில் தமிழில் அதை கைமா என்கிறார்கள்.
அவ்வாறு இந்தியாவின் தொல்மரபில் எருமைத்தலை, குதிரைத்தலை, மான்தலை கொண்ட தெய்வங்களும் அசுரர்களும் பலர் உள்ளனர். யானைத்தலை கொண்ட பூதங்களும் அசுரர்களும் உண்டு. சூரபதுமனின் தம்பி கூட யானைத்தலை கொண்டவன், கஜமுகன் என்று பெயர். சிவபெருமானின் பூதகணங்களில் பல யானைத்தலை கொண்டவை. இவ்வாறு இருந்த யானைத்தலை பூதங்களில் ஒன்றை கணங்களின் தலைவன் [கணபதி] என வழிபடலாயினர். அதுவே பிள்ளையார்.
இந்த மாற்றம் எப்போது நடந்திருக்கும்? நாம் பேசும் மொழிகள் எல்லாம் உருவாவதற்கு முன்பு. நாம் பழங்குடிகளாக வாழ்ந்த காலத்தில். அனேகமாகப் பெருங்கற்காலத்தில். தெய்வ உருவங்களின் தோற்றம் எப்போது என்று கணிக்கவே முடியாது. அவை எங்கோ எப்போதோ தோன்றி வெவ்வேறு வழிபாடுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலும் மேலும் அர்த்தம் ஏற்றப்பட்டு சென்றுகொண்டே இருக்கும்.
இந்தியாவின் எல்லா நிலங்களிலும், வடகிழக்கின் அடர்காடுகளில்கூட பிள்ளையார் சிலைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் நமக்கு கிடைக்கும் மிகத்தொன்மையான கற்சிலைகளே பிள்ளையார்தான். மிகத்தொடக்க காலத்தில் பிள்ளையார் இங்கே குகைகளில் செதுக்கப்பட்டுதான் வழிபடப்பட்டார். தேர்ச்சியற்ற புடைப்புச் சிற்பங்களாகவே பிள்ளையார் அன்றெல்லாம் காணக்கிடைக்கிறார். தோராயமாக காலம் கணிப்பவர்கள்கூட கிபி நான்காம் நூற்றாண்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அப்பிள்ளையார் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அவற்றில் வல்லம், பிள்ளையார்பட்டி போன்ற பல தொன்மையான பிள்ளையார் சிலைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். சிற்பக்கலையே தேர்ச்சிபெறாத காலகட்டத்தில் செதுக்கப்பட்டவை அவை என்று தெளிவாகத் தெரியும். ஆய்வாளர்களின் காலக்கணிப்புக்கும் முற்பட்டவை அவை என்பதே என் எண்ணம்.
இது நாம் ஊகிக்கக்கூடிய வரலாறு. இனி ஆன்மிகமாக இதற்கு என்ன பொருள்? நம்முடைய மூதாதை எவரோ இந்தப் பிரபஞ்சத்தில் எதையோ ஒன்றை தன் உள்ளுணர்வால் அறிந்தார். அந்த அறிவை நமக்குச் சொல்ல இந்த வடிவை அளித்தார். இந்த வடிவில்தான் அவர் அறிந்த அது உள்ளதா என்றால் அதை நாம் சாதாரணமாக அறிய முடியாது. ஆனால் மானுட உள்ளம் தன் உள்ளுணர்வால் பிரபஞ்சத்தின் சாரமாக நின்றிருக்கும் சிலவற்றை உணரமுடியும் என நாம் நம்பினால் அவ்வாறு உணர்ந்த அந்த பேருள்ளம் நமக்கு அளிக்கும் வடிவங்களை ஏற்றே ஆகவேண்டும்
இப்பிரபஞ்சத்தில் அவ்வாறு உணரப்பட்டது ஒன்று இருக்கிறது. அதை இப்படி நாம் உருவகிக்க ஆரம்பித்து பல்லாயிரமாண்டுகள் ஆகின்றன. அதன்பின் பல ஞானிகள் இவ்வடிவில் அதை வழிபட்டு, தியானித்து அதே அறிதலை தாங்களும் அடைந்திருக்கிறார்கள். அது நமக்கு தெளிவான ஒரு பாதை. அந்தப்பாதையை நாம் கடைப்பிடிக்கவேண்டும்.
எளிய கேள்வி, இன்றைய நவீன உலகில் வாழும் இளைஞனிடம் கேட்கப்படவேண்டியது. சென்று மறைந்த எளிமையான ‘பகுத்தறிவுக் காலகட்டத்தில்’ வாழும் பழைய உள்ளங்களுக்கு இந்தக் கேள்வி பொருளற்றது. அவர்கள் தங்கள் எளிய நிரூபணவாத தர்க்கமுறைமையால் உருவாக்கிக் கொண்ட சிறிய உலகில் வாழ்பவர்கள். நான் பேசுவது நவீன இயற்பியலை, உயிரியலை கொஞ்சமேனும் கற்ற இளைய உள்ளங்களைப் பற்றி.
மானுடகுலம் பல்லாயிரமாண்டுகளாக உணர்ந்தும், அறிந்தும் திரட்டியுள்ள இந்த மெய்மைகள் குறியீடுகளாகவும் ஆழ்படிமங்களாகவும் நம்மை வந்தடைந்துள்ளன. அவை நமக்கு வேண்டுமா வேண்டாமா? நியூயார்க்கிலோ டோக்கியோவிலோ உள்ள எளிமையான மோஸ்தர்களையும், சில்லறை அரசியலையும் ,எளிய நிரூபணவாத அறிவியலையும் மட்டுமே மானுடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா? தொழில்நுட்பத்தின் உற்பத்தியாளரும் நுகர்பவரும் மட்டுமாக நின்றுவிடுவது போதும் என நினைக்கிறாயா?
அல்லது, லாஸ்கஸிலும் [Lascaux] பிம்பேட்காவிலும் [https://www.jeyamohan.in/103309/] உள்ள பல்லாயிரமாண்டு தொன்மையான குகைஓவியங்களில் இருந்தும், ஈஸ்டர் தீவிலும் மணிப்பூரிலும் உள்ள பெருங்கற்ககளில் இருந்தும் இன்றுவரை நீளும் ஒரு பெரிய மரபின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறாயா? மனிதகுலம் திரட்டியிருக்கும் எல்லா அறிதல்களையும் நுண்ணுணர்வுகளையும் பெற்றுக்கொள்ள நினைக்கிறாயா?
ஆமென்றால் தொன்மையுடன் உன்னுடைய உறவை உணர்வுபூர்வமாக, ஆழுள்ளம் சார்ந்து அமைத்துக்கொள். மானுடத்தின் தொன்மையை வெறும் ஆய்வுப்பொருளாக வெளியே நின்று பார்த்து, தொகுத்தும் வகுத்தும் வைத்த அறிஞர்களின் காலம் முடிந்துவிட்டது. அந்தப்பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. அவர்கள் சென்றகாலத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய காலத்தின் சவால் என்பது அந்த தொன்மையின் பகுதியாக ஆவதுதான், அது இன்றே தொடங்கிவிட்டது. அச்சவாலையும் இன்று அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே பழங்குடி ஊர்களில் அவர்களுடன் ஒருவராக வாழ்கிறார்கள். மடாலயங்களில் ஊழ்கம் பயில்கிறார்கள்.
இந்தியர்களாகிய நாம் வெறும் தொழில்நுட்ப ஊழியர்களாக மட்டுமே இன்று நம்மை அமைத்துக் கொள்கிறோம். அதில் பெருமையும் அடைகிறோம். அது சென்ற தலைமுறையின் மனநிலை. அதிலிருந்து வெளியேறினாலொழிய இந்தியர்கள் சிந்தனையிலும் கற்பனையிலும் மெய்யான பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொள்ள முடியாது. நாம் மரபை அறிவது அல்ல முக்கியம், நாம் உணர்வதும், நம் ஆழம் மரபால் நிறைவதும்தான். அங்கிருந்தே புதியவை முளைக்க முடியும்.
அந்த பெண்ணிடம் நான் சொன்னேன். “பிள்ளையார் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது என்று யோசித்திருக்கிறாயா? எல்லா எளிய பக்திப்பாடல்களிலும் இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்படும். ஒன்று, பிள்ளையாரின் ஆனைவயிற்றில் அண்டங்கள் அனைத்தும் அடங்கும். இரண்டு அவர் ஓங்காரத்தின் வடிவம். யானையின் கரிய வயிற்றில் அண்டங்கள் அனைத்தும் அடங்கும் என்றால் உனக்கு என்ன தோன்றுகிறது”
“இருள்” என்று அவள் சொன்னாள். தமிழில் சொல்லத் தெரியவில்லை. “ஆமாம், அந்த முழுமையான இருளே யானை. யானையை இருளாகச் சொல்வது சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டிலுமே வழக்கம்” என்று நான் சொன்னேன் “யானையின் ஒலி ஓங்காரம் எனப்படுகிறது. ஓம் என அது முழங்குவதாக நம்புகிறார்கள். ஆகவே கேரளப் பழங்குடிகள் அதன் ஒலியை சின்னம்விளி [அடையாளத்தின் குரல்] என்றே சொல்கிறார்கள். ஓங்காரமாக முழங்கும் இருள் என அந்த உருவகம் பொருள் படுகிறது. எவ்வளவு பெரிய குறியீடு என்று கற்பனைசெய்துபார்.”
அதன் பின்னர்தான் அவள் என்னிடம் கேட்ட முதல் வினாவுக்குச் சென்றேன். அதுவரைச் சொன்னது உயர்நிலை தத்துவப்பொருள். தொன்மையான மதங்களில் உயர்தத்துவத்திற்கு இணையாகவே அடிநிலையில் இருந்து வரும் பழங்குடித்தன்மை கொண்ட அர்த்தங்களும் இருக்கும். இரண்டும் முக்கியமானவையே. இரு எல்லைகளையும் இணைப்பதே மெய்யான சிந்தனை.
அழுக்கை உருட்டி வைப்பதென்றால் என்ன? ஏன் சாணியுருளை? ஏன் அருகம்புல்? பிள்ளையார் இந்தியாவின் தொன்மையான பழங்குடி வழிபாடுளில் மண்ணின் அடையாளமாக கருதப்பட்டிருக்கலாம். பூதம் என்றாலே மண்தான். பிள்ளையார் தலைமைப்பூதம். அதாவது கணபதி. இந்தியா முழுக்க பூதவழிபாடு உண்டு. குமரிமாவட்டத்தில் அது இன்றும் மிக வலுவானது. சங்ககாலம் முதலே இங்கே பூதவழிபாடு இருந்திருக்கிறது. பல சங்ககால கவிஞர்களின் பெயர்கள் பூதம் சார்ந்தவை [உதாரணம் பூதன்சேந்தனார்] சிலப்பதிகாரத்தில் நகரங்களின் மையங்களில் சதுக்கப்பூதம் நிறுவப்பட்டிருந்த செய்தி உள்ளது
ஆரம்பத்தில் பூதம் வெறும் மண்குவியலாக நிறுவப்பட்டு வழிபடப்பட்டது. பின்னரே மண்ணை பிடித்து ஒரு கூம்புவடிவமாக ஆக்கி வழிபட்டனர். நாளடைவில் அதற்கு உருவம் அளிக்கப்பட்டது. [இன்று பல பூதங்கள் மாடசாமிகளாகவும் சங்கிலி பூதத்தான்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன]. பூதங்களின் பிற்கால உருவங்கள் யானைத்தலை தவிர்த்தால் வினாயகரின் உருவத்துக்கு மிக நெருக்கமானவை என்பதைக் காணலாம்.இதில் சுவாரசியமான சில கவித்துவக் குறிப்புகள் உண்டு. கேரளப்பழங்குடிகள் யானையை “மண்ணுசாமி”என்றும் “மண்ணன்” என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால் அது மண்ணை உடல்மேல் போட்டு மண்ணாலானதுபோலத்தான் காட்டில் தென்படும். அதன்மேலேயே சிறுசெடிகள் முளைத்திருக்கும். மண்வழிபாடும் யானை வழிபாடும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்ததே வினாயகர்.
பூதத்திற்கு எப்போதும் சோறுதான் படையலிடப்படுகிறது.மண்ணுக்கு உணவைப் படையலாக்கி வழிபடும் ஒரு முறையின் தொன்மையை, அதன் கவித்துவமான ஆழத்தை புரிந்துகொள்ள கொஞ்சம் நுண்ணுணர்வு இருந்தாலே போதும். மண்ன் என்றாலே அழுக்குதான். மண் உருண்டை, அழுக்கு உருண்டை, சாணியுருண்டை என்பதே அவருடைய வடிவமென பழங்குடிமரபு உருவகித்திருக்கலாம். அழுக்கு என்பதை எதிர்மறையாகப் பார்க்காமல் அதை மண்ணின் ஓரு அம்சமாக, வளத்தின் அடையாளமாக கண்ட தொல்மூதாதையரின் தரிசனம் அது. அன்னையின் அழுக்குதான் பிள்ளையார் என்ற கதையின் பொருள் இது. மண்ணுக்குப் புல்லை படையலிடுவதும் அதைப்போல மிகத்தொன்மையான ஒரு கவித்துவ உருவகம். புல்லே இங்கு அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. புல்லும் மண்ணும் தெய்வமெனக் கொண்ட ஒரு பெருமரபை நான் தொடர்கிறேன் என்றால் நான் தொன்மையானவன், அழிவற்றவன் என்றே பொருள்.
அந்தப் பெண்ணிடம் சொன்னேன். “உன் கனவில் பிள்ளையார் வருவாரென்றால் அதற்கு என்ன பொருள் என்று யோசித்துப்பார். ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மையான உன் கற்கால மூதாதையின் கனவும் உன் கனவும் ஒன்றாக இருக்கிறது. அது எத்தனைபெரிய வரம்! எவ்வளவு பெரிய வாய்ப்பு! அதை எளிய பகுத்தறிவுகள் அரசியல் சழக்குகளுக்காக தவறவிட்டாயென்றால் நீ இழப்பது எவ்வளவு பெரிய செல்வத்தை…”
“பிள்ளையாரை ஒர் அழகியல்வடிவமாக அணுகலாம். அவ்வடிவின் வரலாற்றுப் பரிணாமத்தை அறியலாம். நீ மேலும் அறிய விரும்பினால் தத்துவ வடிவமாக அணுகலாம். அதற்கும் அப்பால் செல்ல விரும்பினால் அவ்வடிவமாக இங்கே வெளிப்பட்ட அந்த சாரத்தை நோக்கியும் செல்லலாம்” என்றேன்.
நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டியது இந்த விரிவான வரலாற்றுச்சித்திரத்தை. அழகியல், தத்துவம், மெய்மை என விரியும் பல அடுக்குகளை. அது இன்றைய நவீனக்கல்வி அளிக்கும் வினாக்களுக்கான விடைகளை அளித்து அவர்களை மேலதிகமாகக் கொண்டுசெல்லும். தங்கள் மரபைப்பற்றி அவர்கள் பெருமிதம் அடையவேண்டும். அதன் நீட்சியென நின்றிருப்பதன் முக்கியத்துவம் பற்றி எவரேனும் கேட்டால் சொல்லத் தெரியவேண்டும். அப்போதுதான் அவர்களிடம் அது நிலைகொள்ளும், வளரும்.
ஜெ
தனிக்குரல்களின் வெளி
மொழியை பேணிக்கொள்ள…
நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்