டேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா

மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது ஒரு மகாகலைஞனின் படைப்புக்கு நிகரான கலைப்படைப்பாக நிற்கும் என்பதை டேவிட் அட்டன்பரோ கதைசொல்லும் இயற்கை ஆவணப்படங்களே எனக்குக் கற்பித்தன.

அதன் உச்சமாக சமீபத்தில் ‘Dynasties’ (வம்சங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் இடம்பெற்றது. இந்தத்தொடர் இந்தியாவில் SonyLIV தளத்தில் காணக்கிடைக்கிறது.

இத்தொடரை ‘எபிக்’ என்று மட்டுமே சொல்ல முடியும். போரும் அமைதியும், மோபி டிக், வெண்முரசு போன்ற ஆக்கங்களின் வழி அடையப்பெறும் உணர்வுகளற்ற உச்சத்தை இதில் பெற்றேன்.  இயற்கையின் காவிய ஒழுங்கமைதியை ஆழமாக என்னில் உணரச்செய்தது இத்தொடர்.

இந்தத்தொடரின் முதல் திரைப்படம் ‘பெயிண்டட் வுல்வ்ஸ்’ (Painted Wolves). ஆப்பிரிக்க வனப்பகுதியில், சான்சீபி நதியை ஒட்டிய நிலங்களில் நிகழ்வது.

பெயிண்டட் வுல்வ்ஸ் எனப்படும் அருகிவரும் ஆப்பிரிக்க காட்டுநாய் இனத்தில் உலகத்திலேயே மொத்தம் 6600 விலங்குகளே மிச்சமிருக்கின்றன. அவற்றில் 280 ‘டெய்ட்’ என்ற ஒற்றைகாட்டுநாய் மூதச்சியின் கொடிவழியிலிருந்து தோன்றியவை.

டெய்ட் சான்சீபி நதிக்கரையை ஒட்டிய அவளது பாரம்பரிய நிலத்தில் அவளுடைய குழுவுடன் வேட்டையாடி வசிக்கிறாள். கிழக்கே சிங்கங்களின் ப்ரைட்லான்டும் பின்னால் கழுதைப்புலிகளின் தேசமும் அவள் நிலத்தைச் சூழ்ந்துள்ளன. படம் தொடங்கும்போது டெய்ட் மெல்ல அதிகாரம் இழந்துகொண்டிருக்கிறாள்.

அவள் நிலத்துக்கு மேற்கே உள்ள புதியநிலப்பகுதியை ஆள்பவள் பிளாக்டிப். பிளாக்டிப் டெயிட்டுடைய சொந்த மகள். வளர்ந்து தனக்கென ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவியானவள். அவளது குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிளாக்டிப் தன்னுடைய எல்லைகளை விரிவாக்க எண்ணி, தன்னுடைய குழுவுடன் டெய்ட்டின் நிலத்தை ஆக்ரமிக்க வருகிறாள்.

காட்டுநாய்க்குழுக்கள் மோதுகின்றன. திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத டெய்ட் கடுமையான யுத்தத்திற்கு பின் தன் குழுவுடன் பின்வாங்குகிறாள். பிளாக்டிப் வெற்றிகரமாக புதிய நிலத்தில் தன் குழுவை ஸ்தாபிக்கிறாள். பின்வாங்கும் டெய்ட் சிங்கங்களின் தேசத்திற்குள் தன் குழுவுடன் செல்கிறாள்.

காட்டுநாய்களின் குழுவில் தலைவி மட்டுமே குட்டி ஈன்பது வழக்கம். மற்ற சகோதரிகளும், மகள்களும், பேத்திகளும் அந்த குட்டிகளை காக்கும் பொறுப்பை கொண்டவை. பிளாக்டிப் ஐந்து குட்டிகளை ஈனுகிறாள். ஆனால் கழுதைப்புலிகள் அவர்களின் எல்லைகளிலேயே காத்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் கோடையும் வறட்சியும் சேர்கிறது. பிளாக்டிப் குழு உணவு கிடைக்காமல் தங்களைவிட அளவில் பெரியவையும் ஆபத்தானவையுமான பபூன் குரங்குகளை கூட்டமாக சுற்றி வளைத்து வேட்டையாடுகின்றன.

சிங்கநாட்டுக்குள் பின்வாங்கும் டெய்ட் அனுபவமுள்ள மூதச்சி. அவள் தலைமையில் அவளது குழு கடுமையான வெப்பகாலத்தை சிங்கநாட்டில் ஓரு குழு உறுப்பினரைக் கூட இழக்காமல், ஒரு வறண்ட ஆற்றுப்படுகையில் தலைமறைவாக  பதுங்கி வாழ்ந்து கடந்துவிடுகிறது. தன் குழு சுற்றும் பாதுகாக்க ஒரு வளைக்குள் டெய்ட் அவளது எட்டாவது ஈற்றில் இருகுட்டிகளை ஈனுகிறாள்.

வெப்பம் மூத்து பஞ்சம் தொடங்கிவிடுகிறது. யானைகள் மழைக்காலத்தில் வைத்த காலடிகள் கோடைச் சூட்டில் வெந்து ஆபத்தான குழிகளாக காட்டுத்தரை முழுவதும் பரவியிருக்கின்றன. அந்நிலத்தில் மானை துரத்தி சென்று வேட்டையாடுவது மிகவும் ஆபத்தானது. தவறான ஒரு அடிகூட காலை முறித்து நடக்கமுடியாமல் செய்துவிடும். அப்படியும் டெய்ட் வெற்றிகரமாக தன் குழுவுடன் வேட்டையாடுகிறாள். ஆனால் அதை முழுதாக உண்ணத்துவங்கும் முன்னேயே சிங்கங்கள் அபகரித்துக்கொள்கின்றன. டெய்ட்டின் சகோதரிக்கு காலில் பலமாக அடிபடுகிறது. நடக்க முடியாத அவளை குழு ஒன்றாக சேர்ந்து பார்த்துக்கொள்கிறது.

டெய்ட்டின் குழுவில் அவளது இளைய மகள் டாம்மி சாதுர்யமாக அன்னையின் குட்டிகளை காக்கிறாள். ஒருமுறை சிங்கங்களுக்கும் காட்டுநாய்களுக்குமான போரில் டாம்மி மட்டும் இரு குட்டிகளுடன் தனியாக போராடுகிறாள், சிங்கங்கள் அவளை நெருங்கும் தருணம் ஒரு அற்புதம் நடக்கிறது. மயிரிழையில் குட்டிகளுடன் தப்பிக்கிறாள்.

பிளாக்டிப் தான் ஆக்கிரமித்த டெய்ட்டின் நிலத்தில் தன் குழுவின் துணையோடு வாடையால் விரிவாக அடையாளப்படுத்துகிறாள். அப்போது ஓரிடத்தில் அவளுக்கு டெய்ட்டின் வாசம் கிடைக்கிறது. அங்கே டெய்ட் வந்து போனது தெரியவருகிறது.

பிளாக்டிப் வெறி கொள்கிறாள். உடனே எல்லையை அடையாளப்படுத்தும் தன் குழுக்களை திரட்டி தன் அன்னையை முழுவதுமாக தோற்கடித்து அழிக்க அவளை தேடித் துரத்திக்கொண்டு சிங்கநாட்டிற்குள் வருகிறாள்.

அது அவள் முன்பின் கண்டிராத நிலம். காட்டுநாய்கள் அமாவாசை நாளில் ஒருபோதும் இரவில் பயணம் செய்வதில்லை. ஆனால் பிளாக்டிப் குழுவில் உள்ள தனது குட்டிகளையும் பொருட்படுத்தாமல் இரவிலும், நிற்காமல் பின் தொடர்ந்து செல்கிறாள்.

இரவில் கழுதைப்புலிகள் அவர்களை சுற்றி வளைக்கின்றன. காட்டுநாய்கள் எதிர்த்து போரிடுகின்றன. போரின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் பிளாக்டிப் தன் குட்டிகளிலிருந்து பிரிகிறாள். கணப்பொழுதில் கழுதைப்புலிகள் அவள் கண் முன்னே குட்டிகளை கிழித்துக் கொல்கின்றன.

மறுநாள் முழுவதும் பிளாக்டிப் குழு ஒரு குரலும் எழாமல் தலைகுனிந்தபடியே மேலும் தொடர்கின்றனர். பிளாக்டிப் மட்டும் மூர்க்கமாக முன்னே செல்கிறாள். கடைசியாக ஓர் ஆற்றை கடக்கும் போது குழுவின் மூத்த நாய் ஒன்றை முதலை ஒன்று கடித்திழுத்து கொண்டு செல்கிறது. கரையில் நின்று செய்வதறியாது திகைக்கிறது குழு, துள்ளியும் சுழன்றும் அவை கரையில் நின்று ஓலமிடுகின்றன.

பிளாக்டிப்புக்கு கணநேரத்தில் அனைத்தும் தெளிகிறது. அவர்கள் நிலைமையுணர்ந்து பின்வாங்கி ஓடத் துவங்குகிறார்கள். இரவும் பகலுமாக நில்லாமல் ஓடி பல மைல்கள் கடந்து தங்கள் சொந்த நிலத்தை அடைகின்றனர்.

மழை வருகிறது. பஞ்சம் முடிகிறது. சிங்கநாட்டைத் தாண்டிய பாரம்பரிய நிலம் எல்லாமே டெய்ட்டின் வம்சத்துக்கு என்று ஆகிறது. அவளுடைய குழு வென்ற நிலத்தில் குடிபுகுவதற்காக புறப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் டெய்ட் சிங்கநாட்டிலேயே இருந்துவிடுகிறாள். அவளுக்கு வயதாகிறது, இனி அவளால் திரும்பச்செல்ல முடியாது என்று அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய இணை நாயும் அவளுடன் தங்கிவிடுகிறான். அவர்கள் அங்கேயே சிங்கங்களுக்கு இரையாகி மறைந்திருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் ஊகிக்கிறார்கள். ஆனால் யாருக்கும் அறுதியாகத் தெரியவில்லை. அதுவரை இருந்தவள் இல்லாமலாகிறாள், அவ்வளவுதான் (டெய்ட்டின் மறைவு)

டெய்ட்டின் குழு தலைவியில்லாமல் சொந்த நிலத்துக்கு திரும்பச் செல்கிறது.  செல்லும் வழியில் அவர்கள் சில உதிரி ஆண் நாய்களை சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் இதுவரை பதிவுசெய்யப்படாத ஒரு வினோதமான சடங்கு நடக்கிறது. காட்டுநாய்கள் சேர்ந்து சுற்றி ஊளையிட்டபடி நடனமிடும் அந்த சடங்கின் முடிவில் இளையவளான டாம்மி தலைவியாக தேர்ந்தெடுக்க படுகிறாள்.

டாம்மி அவளது முதல் ஈற்றில் ஏழு குட்டிகளை ஈனுகிறாள். மழைச் செழிப்பில் அவள் வம்சம் வளர்கிறது. எல்லைக்கு மறுபக்கம் பிளாக்டிப்பின் வம்சமும் பெருகுகிறது. இம்முறை அவளுக்கு பத்து குட்டிகள் பிறக்கின்றன. வழவழப்பான மூக்குகளுடன் எல்லைக்கு இருபுறமும் புத்தும்புது காட்டுநாய்க்குட்டிகள் காட்டில் துள்ளிக் கடித்து விளையாடுகின்றன.

*

ஒரு பெரு நாவலை வாசிக்கும் விரிவை நிறைவை தரக்கூடிய கதை இது. பிளாக்டிப் ஒரு சத்யவதியாக எனக்குத் தோன்றினாள். காவிய உணர்வு வெளிபட்ட இடங்கள் பல இருந்தன. டெய்ட்டின் குட்டிகள் காப்பாற்றப்படும் அற்புதக்கணம். பபூன் குரங்கின் குட்டியை காட்டுநாய்கள் திசைத்திருப்பிக் கவர்ந்துவிடும்போது, அதுவரை வெறியுடன் போரிட்ட ஆல்ஃபா குரங்கு நடந்தது புரியாமல் அப்படியே அமர்ந்து ஓலமிடும் இடம். டெய்ட் அவள் வென்றநிலத்துக்கு குழுவோடு திரும்பாமல் அமையும் இடம். இவற்றைத்தாண்டி சில விலங்குகள் தங்கள் இருப்பின் வழியாகவே  காட்டின் அர்த்தத்தை ஆழப்படுத்துகின்றன. மான்கள் காட்டின் எச்சரிக்கையை. சிங்கம் காட்டின் இரக்கமின்மையை. யானை காட்டின் காலாதீதத்தை.

ஆனால் இது திரைப்படம் என்பதால் இதன் முதன்மை அனுபவம் காட்சி. கண்ணில் மட்டுமே திறக்கக்கூடிய அனுபவங்கள் வழியாக இதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக அமைந்தது.

காட்டுநாய்க்குட்டிகள் பிறக்கின்றன. மண்ணுக்கு அடியில், குழிகளில், பொந்துகளில். கண்திறந்து அவற்றை அம்மா வெளியே கூட்டி வருகிறாள். ஒளி கூச முழித்துப் முழித்துப் பார்க்கின்றன. திடீரென்று அவற்றின் கண்களில் விரிவு. அருகே, மடிப்பு மடிப்பாக கனத்த உடல். காற்றைக் குத்தும் தந்தங்கள். வளையும் துதிக்கை. குட்டியின் தலையும் அதன்கூடவே உயர்கிறது. தான் இருக்கும் காடு எத்தகையது என்று கண்டுவிடுகிறது.

இன்னொரு உதாரணம். பிளாக்டிப் பின்வாங்கும் இடம். அதுவரை கொண்டுவந்த துணிவெல்லாம் இழந்து காட்டுநாய்கள் வாலைத் திருப்பிக்கொண்டு வந்தவழியெல்லாம் ஓடுகின்றன. கண்ணை மேலே கொண்டுபோய் அவர்கள் ஓடுவதைக் காட்டுகிறார்கள் படப்பிடிப்பாளர்கள். அத்தனை மாதக்காலம் இஞ்ச் இஞ்சாக கைப்பற்றிய நிலத்தை ஒரே கோட்டில் கடந்து ஓடுகின்றன அவை. அந்திச்சூரிய வெளிச்சத்தில் அவர்களுடைய ஓடும் நிழல்கள் பூதாகரமாக பக்கவாட்டில் விழுகின்றன.

ஆனால் இவற்றுக்கு மேலாகவும் பாதித்த காட்சிகளென்றால் நேரடியான உயிரின், உடலின் சூட்டையும் அவசரத்தையும் துடிப்பையும் உணரச்செய்த காட்சிகள். காட்டுநாய் ஓடும்போது அதன் கண்ணில் பசியும் குறிக்கோளும் ஒருசேரத் தெரிகிறது. இழுத்துக்கட்டியது போன்ற தசைகளின் அசைவு ஒவ்வொரு பாய்ச்சலிலும் ஒரு வில்லாக உடல் மாறுவதைக் காட்டுகிறது. காட்டில் சில விலங்குகள் வேகமானவை. மான்களைப்போல. சில விலங்குகள் ஆர்ப்பாட்டமில்லாதவை. யானைப்போல, முதலையைப்போல. ஆனால் எல்லா விலங்குகளும் உடலே கவனமானவை. பல விலங்குகள் கலந்து நிற்கும் காட்சிகளில் இதைப்பார்க்கலாம். காட்டுநாய்கள் சிங்கத்தைப் பார்த்து சிதறுகின்றன. சிங்கம் எந்தக்கவலையும் இல்லாததாக அதன் பாட்டுக்கு நடுவே நடந்துகொண்டிருக்கிறது. யானைகள் ஓரமாக நின்று புல்லை மெல்லுகின்றன. பறவைகள் அப்பால் நிற்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் முழுமையாக கண்விழித்திருக்கிறது. அந்த விழிப்பின் சரடே காட்டை இணைக்கும் உயிர்.

விலங்குகளின் உடல் பிளந்து சதையும் நிணமும் பொத்திச் சிந்துகிறது. பிடிபடும் கணம் ஒவ்வொரு உடலும் உச்சக்கட்ட உயிராசையில் துடிக்கிறது. பெரும்பாலும் மெல்லிய காலாலேயே விலங்குகள் பிடிபடுகின்றன. காலை ஒன்றும் கழுத்தை ஒன்றும் உடலுக்கடியில் உள்ள மெத்தான பகுதியை இன்னொன்றும் பிடித்து இழுக்க வேட்டைவிலங்குகின் உயிர் ஒவ்வொரு திசையிலும் இழுக்கப்பட்டு ஒரு திமிறல் திமிறி அடங்கி மறைகிறது. அதிலும் குட்டிகள் பிடிபடும்போது உயிர் இறக்கையுள்ள பறவையாக அவற்றின் சின்ன உடலில் படபடவென்று அடித்துக்கொள்கிறது. உயிர் என்பது இத்தனை நொய்மையானதா என்று எண்ணச்செய்கிறது.

ஆனால் இந்தப்படம் நெடுக ஒன்று நிகழ்ந்தது. குட்டிகள் முதன்முதலில் பிடிபடும்போது அடைந்த பதைபதைப்பு படம் வளரவளர இல்லாமலானது. ஒவ்வொன்றும் உண்கிறது. உண்ணப்படுகிறது. சொந்த ரத்தத்தை நக்குகிறது. இரையின் ரத்தத்தை நக்குகிறது. பங்காளியின் ரத்தத்தையும் நக்குகிறது. காட்டுக்குள் ஓடுகிறது ரத்தம். காட்டின் ஊற்று அது. காட்டின் கனிகளின் சாறு.

காட்டுவிலங்குகள் அத்தனை இயல்பாக அதன் அறத்துடன் – காட்டின் தர்மத்துடன் – பொருந்தி வாழ முடிகிறது. ஒரு விலங்கால் விலங்காக இருப்பதன் வழியாகவே அசாத்தியமான பெருந்தன்மையை, மகத்துவத்தை, ராஜகம்பீரத்தை, அடையமுடிகிறது.

மனிதனுக்கு அறமென்ன என்று மனிதன் தான் விலங்கல்ல என்று நிச்சயித்த காலம் தொட்டு தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கும் ஒன்று. அறங்களை சிந்தித்து விவாதித்து வகுக்க நினைத்த எத்தனையோ சான்றோர்களால் நமக்குக் கலாச்சாரம் புகுத்தப்பட்டது. கலாச்சாரம் வளர வளர நாம் விலங்குகளின் சஞ்சலமற்ற தூய உலகிலிருந்து அன்னியப்பட்டுப் போனோம். எந்த ஒரு விலங்கும் தன் சுற்றத்துடன் சரியாக பொருந்திப்போகையில் சுதந்திரமாக தன் தர்மத்தை நிறைவேற்றி வாழ்கிறது. மனிதன் அப்படியொரு மனிதவிலங்காக வாழ்வது எப்படி?

தைத்திரீய உபநிஷத் ரத்தச்சதைக்குள் மூச்சையும் மூச்சுக்குள் மனதையும் மனத்துக்குள் புத்தியையும் புத்திக்குள் பிரம்மானந்தத்தின் நிறைவையும் வைக்கிறது. அந்த உச்சத்தை சொல்லி முடித்தப்பிறகு, பித்தேறிய ஒரு ரிஷி  முன்னால் வந்து இவ்வாறாகக் கூத்தாடுகிறான். இந்தத்தொடரை பார்த்து முடித்த இரவின் மௌனத்தில் இந்த வரிகள் மெல்ல உள்ளத்தில் எழுந்தன.

“நான் அன்னம்! நான் அன்னம்! நான் அன்னம்!
நான் உண்ணப்படுபவன்! நான் உண்ணப்படுபவன்! உண்ணப்படுபவன் நானே!
நான் பாடல்களை இயற்றுபவன்! நான் பாடல்களை இயற்றுபவன்! பாடல்களை இயற்றுபவன் நான்!
நான் அறங்களின் முதல்மைந்தன்! தெய்வங்களுக்கு முன்னால் தோன்றியவன்! அமுதத்தின் மூலவன்.

என்னை கொடுப்பவன் என்னை இங்கே நிலைக்கச்செய்பவன்.
நான் அன்னம், உண்பவனையும் உண்பேன்.
இவ்வுலகத்தை முழுவதையும் வென்றுவிட்டேன் நான்
அதன் மகிமையில் சூரியனைப்போன்றது என் ஒளி”

சுசித்ரா

முந்தைய கட்டுரைஞானி- கடிதம்
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்