யோக அறிமுகம்

சத்யானந்த யோக மையம்

நீண்ட நடைதவிர நான் எந்த உடற்பயிற்சியையும் மேற்கொள்வதில்லை. என்ன சிக்கல் என்றால் என்னால் எனக்கு அதற்கு உள்ளத்தை அளிக்கமுடியாது. என் உள்ளம் எப்போதும் தனக்குரிய பயிற்சிகளில் இருக்கிறது. நடை என்றால் உள்ளத்தை அதன் இயல்புக்கு விட்டுவிடமுடியும்.

ஆனால் உள்ளம் என்பது உடலுக்கு அப்பாலிருப்பது அல்ல. உள்ளம் உடலின் ஒரு வெளிப்பாடு என்பதை நான் ஏற்கவில்லை. நேர்மாறாக உடல் உள்ளத்தின் வெளிப்பாடு என நினைக்கிறேன். உள்ளம் நீண்ட பாய்ச்சல்களை நிகழ்த்துகையில் உடல் உடனெழுவதற்குத் திணறுகிறது. உடன் உள்ளத்தை தாங்கிக் கொள்வதில்லை. உடல் உள்ளத்திற்கு தடையும் ஆகிறது.

அது இயல்புதான். ஏனென்றால் உடல் தொடர்ந்து நொய்ந்து கொண்டே செல்லும் ஒன்று. உள்ளமோ தொடர்ந்து கூர்ந்து திரண்டு மேலெழுந்து கொண்டிருப்பது. அந்த இருதிசைப்பயணங்களை கூட்டி இணக்கிக் கொண்டு செல்வதென்பது பெரும் அறைகூவல்தான்.

எளிய நடைமுறைச் சிக்கல்களே உள்ளன. நீண்டநேரம் அமந்து எழுதினால் முதுகெலும்பு வலிகொள்கிறது. கழுத்து இறுக்கமாகிவிடுகிறது. உணர்வுக் கொந்தளிப்புகளை, அகஎழுச்சிகளை, ஆழ்ந்த பரவசங்களை அடைந்தபின் திரும்பி தூக்கத்திற்குள் செல்லமுடிவதில்லை. தூக்கமின்மை உணவு செரிப்பதை தடுத்து பசியை இல்லாமலாக்குகிறது, கண்களைக் களைப்படையச் செய்கிறது. ஒன்றுதொட்டு ஒன்று என சிக்கல்கள்.

அதிலும் ஊழ்கம், கல்வி என எச்செயலை தீவிரமாகச் செய்பவர்களும் முதுகுவலி என்னும் ஊழ்வடிவை எதிர்கொண்டே ஆகவேண்டும். மரபான முறைகளில் யோகப்பயிற்சிகளை ஊழ்கப்பயிற்சியுடன் இணைத்திருந்தது இதனால்தான். இன்றும் அதற்கான தேவை உள்ளது.

எனக்கு வெண்முரசு நாட்களில் முதுகுவலி, கழுத்துவலி சிக்கல்கள் இருந்தன. சிறிய பயிற்சிகள் வழியாக அவற்றை சரிசெய்துகொண்டேன். நண்பர் ஷாகுல் ஹமீது முதலில் சிலவற்றைக் கற்றுத்தந்தார். பின்னர் சௌந்தர்ராஜன்.

குருஜி என எங்கள் நண்பர் வட்டாரத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் சௌந்தர் சென்னையில் சத்யானந்த யோகமையம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். அங்குதான் ஏழாண்டுகளாக வெண்முரசு விவாதக்கூட்டம் நடந்து வருகிறது. பிகார் சத்யானந்த யோகநிலையத்தின் மரபில் வந்தவர். இலக்கியவாசகர்.

என் நண்பர்கள் பலருடைய உடல்நலச் சிக்கல்களை, அதன் விளைவான உளச்சிக்கல்களை சௌந்தர் அளித்த பயிற்சிகள் தீர்த்து வைத்திருக்கின்றன. அவர் எதையும் மிகையாக்குவதில்லை. மனிதர்களின் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு கற்பிக்கும் கனிவு கொண்டவர்.

சௌந்தர் இப்போது தொடர்ச்சியாக பொதிகை டிவியில் யோக அறிமுக வகுப்புகளை நடத்திவருகிறார். சரியாக, முறையாக அறிமுகம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவியான நிகழ்ச்சி அது.

http://www.satyamtraditionalyoga.com/

https://barnasalai.blogspot.com/

இடம்: Sathyam Traditional  Yoga -Chennai

11/15, South Perumal Koil Lane

Near Murugan temple

Vadapalani       – Chennai- 26

9952965505

Location Map:-

https://goo.gl/maps/kvgAAQ2PW2PUSwsA9


வெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்

சன்னதத்தில் பங்கெடுத்தல்-சௌந்தர்

லடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்

ஓநாயும் புல்லும்- சௌந்தர்

அசடன் வாசிப்பு- சௌந்தர்

வண்ணமும் மென்மையும்…. சௌந்தர்

ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், கடிதங்கள்-16
அடுத்த கட்டுரைசிங்கத்துடன் பொருதுபவன்