இரு கதைகள், கடிதங்கள்

மன்மதன்

அன்புள்ள ஜெ

நலம். நலமறிய விழைகிறேன்.

மிக நீண்ட நாட்கள் சென்று உங்களுக்கு எழுத தோன்றியது. நண்பர்களுடனான ஒரு சமூக வலைதள உரையாடலில் உங்கள் மன்மதன் சிறுகதையைப் பற்றி விதந்தோத ஒரு தருணம் கிட்டியது. நண்பர் வில்லிபுத்தூர் கோவிலில் தான் கண்ட சிற்பங்களை பகிர்ந்திருந்தார். மன்மதன் சிற்பம். கரும்பு வில்லேந்தி, “தப்பிக்கவாடா பாக்க” என்ற முறுவல் கமழ மலர்க்கணை  தொடுக்க ஆயத்தமாவது போன்றதொரு தோரணையில். தாங்கள் எழுதிய அதே வியாஹ்ர பாவம். புலிப்பதுங்கல்.

நண்பரும் அந்தக் கதையை படித்திருந்தார். கிருஷ்ணனின் ஆற்றாமை அழிந்து ராஜு தான் மன்மதன்களின் உச்சம் என்றுணரும் பெருந்தருணம் உங்கள் எழுத்தின் பிரம்மாண்டத்தில் எழுந்ததை அப்படி பேசினோம்.

குறவன் இடைக்கச்சை சல்லடத்து மணிகள் மூன்று பிரி நூற்கட்டால் கோர்க்கப்பட்டிருந்த நுண்ணழகை அறிந்த ஒருவனை விட மல்லியால் வேறு யாரை காதலித்திருக்க முடியும்.

இறுதியாக நான் உங்கள் கதையின் இணைப்பை பகிர்ந்து இவ்வாறு சொல்லியிருந்தேன். இந்தக் கதையைப் படித்து விட்டு உங்களால் எந்தவொரு சிற்பத்தையும் வழக்கமாகக் கடப்பது போல் கடந்து செல்ல இயலாது என்று.

மிக்க நன்றி.

என்றும் அன்புடன்

சங்கர் கிருஷ்ணன்
புதுச்சேரி.

பழையமுகம்

அன்புள்ள ஜெ,

இரண்டு கதைகள் அவை வெளிவந்தபோது என்னால் அவ்வளவாக ரசிக்கப்படாதவை. ஒன்று மன்மதன். இன்னொன்று பழைய முகம். மன்மதன் கதையில் உள்ள அந்த ‘பார்வை’ ஒரு அபாரமான உருவகம். விரலில் அவன் பார்வை இருக்கிறது. மன்மதன் அனங்கன். அவனுக்கு உடல் கிடையாது. ரதி மட்டும்தான் அவனைப் பார்க்கமுடியும். ஆனால் கண்ணில்லாதவனும் பார்க்கமுடியும். அனங்கனை பார்க்க ஊனவிழி இல்லாமலிருந்தால்தானே நல்லது? மன்மதனின் விரல்களில் மல்லிகைப்பூ வைத்திருப்பதைப்பற்றிச் சொல்வான். அந்த மென்மையை விரலை கண்ணாக்கியவனே உணரமுடியும்.

பழையமுகம் கதையில் அந்த பழைய நடிகையும் அவளுடைய பழைய ரசிகனும் பரிமாறிக்கொள்ளும் பாடல்கள். அவை எல்லாமே கற்பனைப்பாடல்கள். ஆனால் அறுபதுகளின் மூட் அவற்றில் உள்ளது.

இப்போதைய வாசிப்பில் அந்தப் பாடல்களின் வரிகளை நான் தனியாகக் கவனித்தேன். ”நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா !” என்பது முதல்பாட்டு. ”காலங்கள் மாறலாம் கனவுகள் மாறுமா? ராகங்கள் மாறலாம் பாடல்கள் மாறுமா?” அந்தப்பாடல்களில் ஒரு கற்பனையான கொண்டாட்டமான நெகிழ்வான உலகம் இருக்கிறது.”ஆயிரம் மலர்கள் மலர்ந்ததே! ஆனந்தம் எங்கும் நிறைந்ததே! கண்ணும் கண்ணும் கனவு காணும் நாளல்லவா?” எல்லா பாடல்களும் மிகமிக இனியநினைவாக உள்ளன.

முடியும்போது “ராமன் வில்லறியும் ஜானகி நெஞ்சத்தினை” என்னும்பாடல். கடைசியாக “கற்பூரம் கரையும் காற்றிலே எப்போதும் இருக்கும் ராகமே” என்ற பாடல். ஒரு உச்சம். ஒரு சப்ளைம். அதை பகிர்ந்துகொள்கிறார்கள். மலைமேல் ஏறி அங்கே உச்சியில் நின்றுவிட்டு மௌனமாக கீழிறங்குவதுபோல. அந்த கீழ்மையும் துக்கமும் இருந்தாலும் அப்படி ஒரு மானசிக்கமாக பொன்னுலகம் அவர்களுக்கு இருக்கிறது என்பது எவ்வளவு மகத்தான விஷயம்!

எம். ஜானகிராமன்

ஜெயமோகன் நூல்கள் வாங்க

வடிவமைப்பு- கீதா செந்தில்குமார்

முந்தைய கட்டுரைபிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா
அடுத்த கட்டுரைசரித்திரக்கதைகள், கடிதங்கள்