கலைக்கணம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது கலைக்கணம் படித்தேன்.

தனது மரபின் மீது அதீத அபிமானம் கொண்ட ஒரு சிறுவன் வளர்ந்து ஆளானபின்பு அதனை ஆசையுடன் திரும்பிப் பார்க்கும் ஒரு மன நிலையில் எழுதி இருக்கிறீர்கள். . அதிலும் கடைசிப்பாராவில் சேக்ஸ்பியரும், காளிதாசனும் வாழ்க்கையை அனுபவித்தறிந்த எம் முன்னோர்கள் முன்பு ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்ல எவ்வளவுதூரம் இந்த கதகளியும் பிற கிராமப்புற கலைகளும்  உங்கள் வாழ்வில் பின்னிப்பினைந்திருக்க வேண்டும் ???

அருமையான, நெகிழ்வான கட்டுரை.  

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயகுமார்
 என் மரபின் மீது நான் கொண்டுள்ள பிடிப்பு என்பது எனக்கு ஒரு தளை அல்ல. மரங்களுக்கு வேர்கள் தளை அல்ல. என் குமரிமாவட்ட நிலம் இங்குள்ள மக்களின் மொழி கலைகள் எல்லாமே என்னை ஆழமாக கவர்ந்திருக்கின்றன. இதில் இருதே என் எழுத்துக்கான சாராம்சத்தை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அலக்ஸாண்டர் குப்ரின் ஒரு மகத்தான எழுத்தாளர். போல்ஷெவிக் புரட்சியை கண்டு அதை ஏற்க முடியாமல் ஐரோப்பாவுக்கு தப்பி ஓடினார். ஆனால் ஐரோப்பாவில் வாழ்ந்த 20 வருடங்களில் ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. ‘என் தாய்நாட்டுக்காக ஏங்குகிறேன், என் மக்களைக் காண்பதற்காக விழைகிறேன்’ என்று வருந்தினார். ஸ்டாலினிடம் மன்னிப்பு கோரி ஊருக்கு திரும்பினார். ஸ்டாலின் கட்டளைபப்டி எல்லாவற்றையும்ச் எய்தார். இங்கும் எதையும் எழுத முடியவில்லை. மௌனமாக இறந்தார்
 
எழுத்தாளர்கள் பெரும்பாலும் மண்ணில் முளைக்கும் தாவரங்கள். இடம்பெயர முடியாதவர்கள்
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களை இந்த கதைக்காக பாராட்ட போவதில்லை. எதை எடுத்துகொண்டாலும் அதை கண் முன்னே மிக நுட்பமாகவும் விரிவாகவும் விவரிக்கும் உங்கள் திறனுக்கு முன் கதகளி மட்டும் விலக்கா என்ன? ஆனால் நான் பேச வந்தது இந்த கட்டுரையின் கடைசி வரிகளை பற்றி…அதை நான் தங்களின் ஒட்டு மொத்த உணர்சிகளின் வெளிப்பாடாகவே உணர்கிறேன். அதில் இருக்கும் தங்களின் பெருமைக்குரிய வரிகளை மொத்தமும் என்னால் உள்வாங்கி கொள்ள முடிகிறது.

கலை வடிவம் என்பது எப்பொழுதும் மனித உணர்சிகளை வெளிபடுத்தும் ஒரு களமாகவே இருந்திருக்கிறது. எங்கேயும் எப்பொழுதும் பாசாங்கு நிறைந்த இந்த உலகில் உண்மையானது உணர்ச்சிகள் மட்டுமே. அந்த சுட்டெரிக்கும் உண்மையின் வெளிச்சத்தில் மக்கள் தங்களை இனம் கண்டுகொள்கிறார்கள்.அது அவரவர் ரசனையயை பொறுத்து கதகளியாகவோ ஓவியமாகவோ பரதமாகவோ இருக்கிறது. ஏன் அவரவர் தகுதிக்கேற்ற சினிமாவாக கூட இருக்கலாம்.

மேலை நாட்டின் கலை வடிவம் என்பது நமக்கு சிறிது அந்நியப்பட்டு போனதின் காரணம் அதனூடெ மெல்லியதாய் ஊடுருவி இருக்கும் அவர்களின் கலாச்சாரமே. அவர்களின் ஆபராவை(OPERA) பார்த்து இன்றளவும் வாய் விட்டு அழும் ரசிகர்கள் உள்ளார்கள்.

மிக அருமையான படைப்பு. வாழ்துக்கள்.

அன்புடன்
சுஜா
அன்புள்ல சுஜா

தாமதமான கடிதம் . மன்னிக்கவும்.

பெரும்பாலும் உணவும் கலையும் மண்சார்ந்தவை. மண்ணுடன் ஈடுபாடு கொண்டு உள்ளே செல்லும்தோறும் சுவைகூடுபவை. ஆகவேதான் சொந்த மண்ணின் இசை, கலைகளை ரசிக்கமுடியாமல் ஐரோப்பிய இசை, கலைகளை விதந்தோதுபவர்கள்மேல் எனக்கு அவநம்பிக்கையும் சற்றே இளக்காரமும் உள்ளது.

கலைகள் ஒரு மண்ணில் நெடுங்காமலாக மெல்லமெல்ல உருவாகி வளர்பவை. ஒரு கலை இன்னொன்றாக உருவெடுக்கிறது. ஒரு செவ்வியல் கலை என்பது அச்சமூகத்தின் பண்பாட்டு வரலாற்ரையே சொல்லக்கூடியது. உதாரணமாக கதகளி என்றால் அது தெய்யம் போன்ற பழங்குடிக்கலையின் சாரம் கொண்டது. மனிதர்கள் தெய்வ வேடம் போட்டு வழிபடப்படுவதை நாம் சங்ககாலம் முதல் காண்கிறோம். அதுவே தெய்யம் கலை. பின்னர் ராமனாட்டம் கிருஷ்ணனாட்டம் போன்ற கலைகள் . அதில் சம்ஸ்கிருத நாடகங்களின் செல்வாக்கு. அதன்பின் இச்லாமிய உடைகள் நகைகள் மற்றும் மேடைக்கலைகள். பின்பு போர்ச்சுகீஸிய நாடகம். இவ்வளவு பாதிப்பும் சேர்ந்துதான் கதகளி உருவாகிரது. அதநுடன் நான் என்னை தொடர்பு படுத்தும்போது அந்த பெரிய வரலாற்றின் நீட்சியாக ஆகிறேன். அது ஒரு பெரிய பொக்கிஷம் அல்லவா எனக்கு?

ஆப்பராவை நாம் பார்ப்பது போல அல்ல, அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் பார்ப்பது. அவருக்கு அது அவரது மொத்த பண்பாடே உருவம் கொண்டு கண்முன் வந்தது போல
ஜெ

 

கலைக்கணம்

முந்தைய கட்டுரைகிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 1