இலக்கிய நிதிவசூல்கள்

இன்று என் நட்புக்குழுமத்தில் விவாதித்துக்கொண்டிருந்தபோது இயல்பாக ஒரு பேசுபொருள் எழுந்துவந்தது. பண உதவி மற்றும் நிதி கேட்பவர்கள் பற்றி. உடனே ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். எனக்கு இங்கே என்ன நிகழ்கிறது என ஒரு பொதுச் சித்திரம் உண்டு. ஆனால் இன்று கேட்டவை திகைப்பூட்டின.

இலக்கியவாதிகளில் சாரு நிவேதிதா பற்றித்தான் பொதுவாக பணம் கேட்கிறார் என்னும் குற்றச்சாட்டு உண்டு. அவரை ஏளனம் செய்பவர்களும் ஏராளம். ஆனால் அவர் கேட்பது வெளிப்படையாக. அவருடைய வாசகர்கள், அவர்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் அனுப்புகிறார்கள். அவர் சார்ந்த எதுவுமே ரகசியம் அல்ல. அப்பட்டமாக முச்சந்தியில் நின்றிருக்கும் மனிதர். அவர் நிதிகேட்பது முற்றிலும் நேர்மையான ஒரு செயல்.

ஆனால் பல எழுத்தாளர்கள் இங்கே வாசகர்கள் என அறிமுகம் ஆகிறவர்களை மின்னஞ்சல் வழியாக தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு நிதி உதவிகள் கேட்கிறார்கள். கடன் கேட்டுப் பெறுபவர்கள் அதை திருப்பி அளிப்பதில்லை. அளிக்கமுடியாத நிலை இருந்தால் தாங்கள் இலக்கியத்துக்காகவே வாழ்வதாகவும், தவம் செய்வதாகவும், கடும் துயரில் இருப்பதாகவும் சொல்லி ஆழமான குற்றவுணர்வை உருவாக்குகிறார்கள். இளம் வாசகர்கள் அந்த குற்றவுணர்வால் வசைகளை வாங்கிக்கொண்டு பணம் அனுப்புகிறார்கள். கொஞ்சம் பழகியவர்களுக்கு என்ன ஏது என்று தெரியும்.

சில சிற்றிதழாளர்கள் முகநூலில் உள்டப்பிக்கு வந்து இதழ் நடத்தவும், விழாக்கள் நடத்தவும் வேறுபலவற்றுக்குமென நிதி கோருகிறார்கள். கிட்டத்தட்ட உணர்ச்சிகர மிரட்டல். கொடுக்காவிட்டால் வசைபாடல்.

பெரும்பாலும் என் இணையதளத்தில் வாசகர்களாக அறிமுகமாகிறவர்கள்தான் இதற்கு இரையாகிறார்கள். நான் இதை அஞ்சியே மின்னஞ்சல் அளிப்பதில்லை. ஆனால் பெயர்களை முகநூலில் அல்லது இன்ஸ்டகிராமில் தேடி கண்டடைந்து தொடர்புகொள்கிறார்கள். வெளிநாட்டு வாசகர்கள் என்றால் இன்னும் தீவிரமான வேட்டை நடக்கிறது. வெளிநாட்டு வாசகர்களுக்கு அவர்கள் அங்கே வசதியாக இருப்பதனால் இங்கே இலக்கியத்துக்கு ஏதும் செய்வதில்லை என்னும் குற்றவுணர்ச்சி இருக்கிறது. இவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வாறு நிதி கோருபவர்கள் எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், எங்கே எவ்வளவு பெற்றுக்கொள்கிறார்கள் என எதுவுமே நமக்குத் தெரியாது. அவர்கள் அந்நிதியை சரியாகச் செலவழிக்கிறார்களா என்று அறிய வழியே கிடையாது. உண்மையில் இங்கே வறுமையிலிருக்கும் பல முக்கியமான படைப்பாளிகளுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. இந்த நிதி முழுக்க இணையவெளியில் வசூல்வேட்டையாடும் போலிகளால் கைப்பற்றப்படுகிறது.

பலர் புலம்பியபோது ஒன்று தோன்றியது. உண்மையில் பிழை நிதி அளிப்பவரிடம்தான். சரியான மனிதருக்கு, தேவையான இடத்துக்கு நிதியை அளிக்கவேண்டியது கொடுப்பவரின் கடமை. அவ்வாறு தேடி கண்டடையச் சோம்பல்பட்டு ஒன்றுக்கு நான்குமுறை கேட்பவர், உணர்ச்சிகர மிரட்டல் விடுப்பவர், கடன் என்று கேட்பவருக்கு பணத்தை அளிப்பது அளிப்பவரின் அறியாமையையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது. முக்கியமான பல நிதிவசூல்களுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்ப யோசிப்பவர் ஒருவர் தன்னிடம் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு புகழ்ந்து, கெஞ்சி, மிரட்டி கேட்டால் பெருந்தொகையை அள்ளிக்கொடுக்கிறார் என்றால் அவரை எப்படி எடுத்துக்கொள்வது?

என்னுடைய வாசகர்கள் பலர் தங்கள் அனுபவத்தைச் சொல்லிவிட்டமையால் நான் இதை பொதுவெளியில் வைக்கிறேன்.

அ.ஓர் எழுத்தாளருக்கு நிதியுதவி அளிப்பதென்றால் அவரை நன்கறிந்து, அவர்மேல் உள்ள மதிப்பால் அளியுங்கள். அவருடைய தகுதியை, தேவையை விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். திரும்பத்திரும்பக் கேட்டதனால் கொடுத்தேன், பரிதாபமாகக் கேட்டதனால் கொடுத்தேன் என்றீர்கள் என்றால் அது நீங்கள் செய்யும் பெரும்பிழை. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் பொதுவாக அப்படி எல்லாரிடமும் போய் கேட்பதில்லை.

ஆ.எந்த அமைப்புக்காவது நிதி அளிக்கவேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை அந்த அமைப்பு அந்த நிதிவசூலை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்பது. எவ்வளவு வசூலாயிற்று, அதை என்ன செய்தோம் என்றும் அறிவிக்க வேண்டும். முழுக் கணக்கையும் பொதுவாக அறிவிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அதனால் சிக்கல் வரலாம். ஆனால் நிதியளித்தவர் தனிப்பட்ட முறையில் கேட்டால் கணக்குகளை அனுப்பியாக வேண்டும். அவர்கள் செய்யும் செயல் முக்கியமானதாக, வெளிப்படையானதாக இருக்கவேண்டும்.

இ.நிதிவசூல் ஒருபோதும் தனிப்பட்டமுறையில் செய்யப்படலாகாது. தனிப்பட்டமுறையில் நிதி கோரப்படுகிறது என்றால் அது மோசடியே. அவ்வாறு கோருபவருக்கும் உங்களுக்கும் நெருக்கமும் நம்பிக்கையும் இருந்தால் அது உங்கள் தனிவிவகாரம்.

ஈ. இங்கே இலக்கியத் தியாகிகள், இலக்கியக் களவீரர்கள், இலக்கியத் தலைமறைவுப் போராளிகள் என ஒரு வேஷம் திடீரென்று மதிப்பு பெற ஆரம்பித்திருக்கிறது. அப்படி எந்தத் தோற்றம் உங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதன் உண்மையான மதிப்பு என்ன, சம்பந்தப்பட்டவரின் பங்களிப்பென்ன, இடமென்ன என்று விசாரித்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். அது உங்களால் இயலாதென்றால் பேசாமலிருங்கள்.

ஈ.நிதி அளிப்பது ஓர் இலக்கியச் செயல்பாடு. ஒரு பொதுச்செயல்பாடு. அதை முடிந்தால் முடிந்த அளவுக்குச் செய்யலாம். அது நட்புணர்வுடன் இயல்பாக இருக்கட்டும். முடியாவிட்டால் குற்றவுணர்ச்சி அடையவேண்டியதில்லை.

கடைசியாக, என் நண்பர் அல்லது தெரிந்தவர் என்ற அடையாளத்துடன் வருபவரோ அல்லது என் இணையதளத்தில் பெயரைத் தேடி உங்களை வந்தடையும் ஒருவரோ நிதி கோரி, நீங்களும் அதை அளித்தால் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. எனக்காக அதை அளித்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ
அடுத்த கட்டுரைமொழியை பேணிக்கொள்ள…