இப்போதெல்லாம் நாம் யூடியூபில்தான் அதிகமாகப் பாட்டு கேட்கிறோம். முதன்மையான காரணம் அதன் பிரம்மாண்டமான பாடல்களஞ்சியம். அனேகமாக அதில் இல்லாததே இல்லை. ஏனென்றால் உலகமெங்கும் உள்ள நுகர்வோர் தான் அதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும். பலகோடி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொண்ட ஒரு நிறுவனம் அது. அத்துடன் அது மிக எளிதானது. எப்படித் தேடினாலும் பாடலை கண்டுபிடித்துவிடலாம். நானெல்லாம் தோராயமாக பாடல்வரிகளைப் போட்டே பாடலைச் சென்றடைவதுண்டு.
ஆனால் யூ டியூபில் பாட்டு கேட்பது எப்படி என்று மலையாள நடிகரான நண்பர் ஒருவர்தான் எனக்குச் சொல்லித்தந்தார். வழக்கமாக நாம் பாட்டு கேட்பது இரண்டு வழிகளில். சாதாரணமாக நினைவில் எழுந்து வரும் பாடல்களைக் கேட்போம். நினைவு ஒன்றில் இருந்து ஒன்றுக்குச் செல்லக்கூடும். அல்லது தொடர்ந்து யூடியூப் பரிந்துரைக்கும் பாடல்களைக் கேட்போம். இரண்டுமே எல்லைகள் கொண்டவை. நம் நினைவில் நாம் அதிகமாகக் கேட்கும் பாடல்கள்தான் வரும். யூடியூப் கொண்டிருக்கும் அல்காரிதம் நாம் பாட்டு கேட்கும் வரிசையை வைத்து பாடல்களை பரிந்துரைக்கும். அவற்றிலும் அறிந்த பாடல்களே வரும். அரிதாக சில புதியபாடல்கள் வரலாம். ஆனால் பொதுவாக ஒரு சின்னச் சுழலுக்குள்தான் சுற்றி வருவோம்.
இதைத் தவிர்க்க நண்பர் சொன்ன வழி இது. விக்கி பீடியாவில் ஏதேனும் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் என தேடவேண்டும். [ஆனால் ஆங்கில விக்கியிலேயே சரியான தகவல்கள் உள்ளன] உதாரணமாக 1974 என்று கொள்வோம். படங்களின் பட்டியல் வரும். அதில் உள்ள படங்களை சொடுக்கினால் அந்தப் படங்களுக்கான விக்கி பக்கம் வரும். அதில் பாடல்களின் பட்டியல் இருக்கும். அதில் நம் நினைவில் எழும் பாட்டு உண்டா என்று பார்க்கலாம். பெரும்பாலும் மங்கலான நினைவு எழும். அந்த வரியை வெட்டி யூடியூபில் ஒட்டி தேடி முதல் வரியை கேட்கலாம். நாம் கேட்டுமறந்த பாடல் நம்மை பரவசப்படுத்தியபடி வந்து நின்றிருக்கும். நம்புங்கள், நள்ளிரவில் அது ஒரு பேரனுபவம்
அல்லது பிடித்த பாடகர் அல்லது இசையமைப்பாளரின் பாடல் உண்டா என்று பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போதுதான் நாம் நமக்கு மிக நெருக்கமான பாடகர்கள், இசையமைப்பாளர்களின் பாடல்களிலேயே மிகப்பெரும்பகுதியை சென்ற பல ஆண்டுகளில் கேட்டிருக்கவில்லை என்று தெரியவரும்.அரிய பாடல்கள் எழுந்து வந்து நினைவைக் கொந்தளிக்கச் செய்யும்.
நண்பரின் வழி இன்னும் அரிது. அவர் மலையாளத்தில் வெளிவந்த அத்தனை படங்களின் அத்தனை பாடல்களையும் ஒருமுறையேனும் கேட்டிருக்கவேண்டும் என முயல்வார். ஆகவே சமகாலத்தில் இருந்து பின்னால் சென்று வரிசையாக கேட்டுக்கொண்டே செல்வார். ஒருநாளுக்கு பத்துப்பதினைந்து பாட்டு. அதில் பெரும்பகுதி சாதாரணமாகவே இருக்கும். ஆனால் சிலிர்க்கவைக்கும் ஆச்சரியத்துடன் மூளைக்காலத்தில் புதைந்துபோன ஓர் அரிய பாடல் சிக்கும். சிலசமயம் ஒருமுறைகூட கேட்டிராத பாடல்களை கேட்டு மெய்மறக்கநேரிடும்.
நாம் நினைப்பதைவிட பற்பல மடங்கு பெரியவை விக்கிப்பீடியாவும் யூடியூபும். அனேகமாக மண்ணிலுள்ள எல்லாமே அவற்றில் உள்ளன. உலகளவே அவை பெரிதாகிவிட்டன. நாம் அவற்றில் மிகச்சிறிய ஒரு பகுதியிலேயே சுற்றி வருகிறோம். என் வாசிப்பில் இன்று விக்கிப்பீடியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எதை வாசித்தாலும் உடனே விக்கிக்குச் செல்வது என் வழக்கம். விக்கிப்பீடியா வாசிப்பு போல இன்று வேறேதும் ஆர்வமூட்டுவதாக இல்லை. விக்கி உதவியுடன் பழைய ஐரோப்பியப் புனைவுகளை வாசிக்க நேர்வது ஒரு பெரிய உலகையே திறப்பது. அதன் பின் யுடூப் என்னும் வானத்தில் இரவு அலைந்து திரிதல். அறியா இறந்தகாலத்தில் எங்கோ சென்று இளைப்பாறல்.
“தங்கச்சிமிழ் போல் இதழோ” என்னும் இந்தப்பாடல் இன்றைய கொடை. நான் சிறுவயதில் அடிக்கடிக் கேட்ட பாடல். சௌந்தர்ராஜ அலையில் அன்றே காணாமல் போன பாட்டுதான். ஜெயச்சந்திரன் குரல் மலையாளிகளுக்குப் பிடிக்கும் என்பதனால் மட்டுமே என் அம்மாவாலும் அம்பிகா அக்காவாலும் கவனிக்கப்பட்டிருக்கலாம். நானே நாலைந்து முறைதான் கேட்டிருப்பேன். இன்று நினைவுகளுடன் வந்து இவ்விரவை நிறைக்கிறது.