அண்ணா
பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி உங்கள் தளத்தில் தேடினேன். என் தேடலுக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கடிதம்.
யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது: ஸ்டாலின் வாழ்த்து
அன்புள்ள பன்னீர்செல்வம்,
பயணத்தில் இருந்தேன். உங்கள் கடிதம் கண்டுதான் நானும் செய்தியை அறிந்தேன்.சென்ற 2010 முதல் கேந்த்ர சாகித்ய அக்காதமி பாலசாகித்யபுரஸ்கார் விருதுகளை அளித்துவருகிறது. குழந்தை இலக்கியத்திற்கான விருது இது. அந்த துறை இலக்கிய வாசகர்களின் கவனிப்புக்கு வெளியே இருக்கிறது. ஆகவே அந்த விருதுகளும் இங்கே கவனிக்கப்படுவதில்லை.
மா.கமலவேலன், ம.இலெ.தங்கப்பா, கொ.மா.கோதண்டம், ரேவதி, இரா.நடராஜன்,செல்ல கணபதி, குழ.கதிரேசன், வேலு சரவணன், கிருங்கை சேதுபதி, தேவி நாச்சியப்பன் ஆகியோருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
நான் வாசித்தவரையில் ம.இலெ.தங்கப்பா ஓரு தமிழறிஞர் என முக்கியமானவர். மற்ற எவரையும் நான் பெரிதாக அறியவில்லை. யெஸ்.பாலபாரதி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி சார்ந்து செயல்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் பங்காற்றியிருக்கிறார் என்று தெரியும். மற்றபடி அவர் எழுதியவற்றை கவனித்ததில்லை. இந்த குழந்தையிலக்கிய விருதுகளின் தகுதி பற்றி அத்துறை சார்ந்தவர்களே சொல்லவேண்டும்.
யெஸ்.பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்.
ஜெ