நாக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நலம் தானே?
அருண்மொழியும் குழந்தைகளும் சௌக்கியமென்றே நம்புகிறேன்.
ஒருவாரமாகவே எழுத‌ நினைத்திருந்த இந்த மடல் உங்களின் ‘நாக்கு’  அறிவியல் புனைகதையைக் குறித்து என் இளைய மகன் ராகவ் (வயது 16) சொன்னதைஉங்களுக்குச் சொல்லத்தான்.

தேர்வு காலங்களில் (மட்டும்) ஏதேனும் தமிழில் வாசிக்கச் சொன்னால்கேட்பான். ஆனால், அவனுக்குப் பிடித்த மாதிரி வாசிக்கக் கொடுப்பதே எனக்கானசவாலாக எப்போதும் இருக்கும். ஃபான்டஸி, அறிவியல், தொழில் நுட்ப விஷயங்கள்
ஆகியவற்றையே வாசிப்பவன். அதிகம் போனால், சூழலியல் மற்றும் விளையாட்டுபோன்றவற்றையே வாசிப்பான். எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்.

இம்முறை நான் அவனுக்கு உங்களுடைய ‘நாக்கு’ கதையைக் கொடுத்தேன். இரண்டுவிஷயங்களை அவன் ஆச்சரியத்துடன் சொன்னான். தமிழில் இவ்வாறானஒரிஜினாலிடியுடனான ஆக்கம் இருக்கும் என்றே தான் நினைத்ததில்லை என்றும்
தமிழில் தான் வாசித்த வரையில் (மிகவும் குறைவு தான்) ‘நாக்கு’ தன்னைமிகவும் கவர்ந்திருக்கிறது என்றும் கூறினான். நுட்பமாக ரசித்ததையெல்லாம்சொன்னான்.

அதன் பிறகு, உங்களைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டான். சொன்னேன்.களின் வலைத் தளத்தைக் காட்டினேன். அப்போது, ஐயோ, இவ்வளவு இருக்கிறதா?நீயே தேர்ந்தெடுத்து எனக்குப் பிடித்தமானதென்று தோன்றுவதை மட்டும்சொன்னால் படித்துப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறான்.

ராகவ் இப்போது ஓ லெவெல் எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிக்கொண்டிருக்கிறான். இன்னும் நாலைந்து தினங்களில் முடியப் போகிறது. அவன்தமிழை இரண்டாம் பாடமாகப் படிப்பவன். சிந்திப்பதெல்லாம் ஆங்கிலத்தில்தான்.  நான் தமிழில் பேசப்பேச அவன் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பான். மாற்ற
முயன்று தோற்றுப்பொய் விட்டுவிட்டேன். சென்ற வாரத்தில் அவன் தன்தமிழ்ப்பாடத்தின் இரண்டு தாள்களையும் (உயர் தமிழ்) எழுதினான். இரண்டாவதுதாளில் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியைப் படித்து கேள்விகளுக்குவிடையளிப்பதும், சின்னச்சின்ன இலக்கணக் கூறுகளும், சுருக்கி வரைதல்போன்றவையும் இருக்கும்.  முதல் தாளில் ஒரு கட்டுரையும் ஒரு கடிதமோ உரையோ
உரையாடலோ தேர்ந்தெடுத்து எழுதுவார்கள். இதை எழுதும் போது ராகவ்ஆங்கிலத்தில் சிந்தித்து ஒவ்வொரு வாக்கியத்தையும் தமிழாக்கி பின்னர்எழுதுவான். ஆகவே, அதிக நேரமெடுப்பான். அவனுடைய கட்டுரைகளில் பெரும்பாலும்எழுத்துப்பிழைகள் இருப்பதில்லை என்றாலும் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய
அமைப்பை ஒத்திருக்கும், மாண்டரின் மொழியின் வாக்கிய அமைப்பை ஒட்டிஉள்ளூரில் பேசப்படும் ஆங்கிலம் போல.

இந்த‌த் தேர்வுக்குப் பிற‌கு ராக‌வ் (பெரிய‌வ‌ன் கிருஷ்ணாவைப் போல‌)த‌மிழில் எதையும் வாசிப்ப‌தையே நிறுத்தி விடுவான். இவ‌னையும் நான்இடையிடையே எதையேனும் காட்டி வாசிக்க‌ச் சொல்லி, ம‌ற‌க்காம‌லிருக்கிறானான்று சோதிப்பேனென்று நினைக்கிறேன். இவ‌ர்க‌ளிருவ‌ரும் அவ‌ர்க‌ள்
பெரிய‌வ‌ர்க‌ளாகி த‌ங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு (ஒரு பாட‌மாக‌வேனும்) த‌மிழ்க‌ற்பிப்பார்க‌ள் என்றே என‌க்குத் தோன்ற‌வில்லை. ஏனெனில், சிங்கப்பூரில்இல்லாமல் இவ‌ர்க‌ள் எழுதப்படிக்க அறிந்துகொள்ளும் அளவிற்குக் கூடதமிழ்ப்புழக்கம் இல்லாத வேறு நாட்டில் தானே வ‌சிப்பார்க‌ள்.

ஆங்கிலத்தில் சிந்திக்கும், ஆங்கில வாசிப்பு மட்டுமே பிடிக்கும்
இளையர்களுக்கு ‘லங்கா தகனம்’ அல்லது ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை ரிலேட்செய்துகொள்வதில் சிரமம் இருக்கிறது. ஆனால், ‘நாக்கு’ போன்ற கதைகள்அவர்களுக்குப் புரிகிறது. ஆகவே, பிடிக்கவும் பிடிக்கிறது.இவ்விளையர்களைத் தமிழின் பக்கம் ஈர்ப்ப‌தற்கு அறிவியல் புனைவுகளால்எளிதில் முடியும் என்றே தோன்றுகிறது. அவர்களிடையே தமிழ் வாசிப்பை
அதிகரிக்கவும் கூட இதன்மூலம் முடியும் போலிருக்கிற‌து.

அறிவிய‌ல் புனைவுக‌ள் த‌மிழில் நிறைய‌ வ‌ந்தால் த‌மிழை அடுத்த‌
த‌லைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் கூடுத‌ல் வெற்றிஉறுதியாகும் என்றே என‌க்குத் தோன்றுகிற‌து.

இதன் தொடர்பாக உங்கள் கருத்துக்களை அறிய‌ ஆவ‌ல்.

அன்புட‌ன்,

ஜெயந்தி ச‌ங்க‌ர்
அன்புள்ள ஜெயந்தி

நலம்தானே?நானும் குழந்தைகளும் அருண்மொழியும் நலம். கடிதமெழுத தாமதம். மன்னிக்கவும்.

நாக்கு கதையைப்பற்றிச் சொன்னீர்கள். அத்தகைய கதைகள் அடுத்த தலைமுறையினரை கவரும் என்பதை நானும் ஊகித்தேன். அறிவியல் கதைகளை எழுதும்போது என்னுடைய எல்லைகளை உணர்ந்துதான் எழுதினேன். நான் அறிவியலாளன் அல்ல. எனக்கு ஆர்வமுள்ள அறிவியல் தளங்கள் மிகவும் குறைவு. ஆனால் இந்தியாவில் இருந்து மட்டுமே எழுதத்தக்க அறிவியல்கதைகள் சில உண்டு. அவற்றைஎ ழுதலாமே என்று எண்ணினேன். பேசுபொருள் சார்ந்த இந்தியத்தன்மையை அம்ட்டும் நான் சொல்லவில்லை, பேசும் கோணம் சார்ந்த இந்தியத்தன்மையையும்தான். எதிர்காலத்தில் அத்தகைய எழுத்துக்கள் நிறையவே அவ்ரலாமென எண்ணுகிறேன்.

நம் அடுத்த தலைமுறைக்கான எழுத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாம் உலக ஞானத்தையெல்லாம் தமிழில் எழுதவில்லை என்றால் அடுத்த தலைமுறை அவற்றை தேடி வெளியே சென்று விடுவார்கள். அந்த நோக்கில் பார்த்தால் மிகக்குறைவாகவே தரமான எழுத்து தமிழில் வருகிறது என்று எண்ணுகிறேன். அரசியல் பொருளியல் அறிவியல் தளங்களில் வரும் தமிழ் எழுத்துக்கள் மேலோட்டமானவை. ஆங்கில இதழ்களில் வாசிப்பவற்றை மீண்டும் எழுத முற்படுபவை. இதுவே இளைய தலைமுறையை விலக்குகிறது.

இரண்டாவதாக, நமக்கே உரிய விஷயங்களை நாம் எழுதும்போது அந்த எழுத்தை அடுத்த தலைமுறை புறக்கணிக்க முடியாது போகிறது. உலகெல்லாம் சென்று எதை வாசித்தாலும் தமிழகத்தையும் இங்குள்ள மக்களையும் அறியவேண்டுமானால் தமிழில்தானே வாசித்தாகவேண்டியிருக்கிரது. உங்கள் மகன்கள் தமிழ்நாடுமீது என்றேனும் ஆர்வம் கோண்டால் தமிழுக்கு வந்தாகவேண்டுமே. இந்த தளத்தில் தமிழில் நல்ல ஆக்கங்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. தமிழை புறக்கணிக்கமுடியாது

சுருக்கமாகச் சொல்லப்போனால் படைப்பிலக்கியம் மட்டுமே இன்று தமிழில் பேசுவதற்கான தேவையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. அந்தபப்டைப்பிலக்கியம் இளையோர் இளைஞர் போன்ற அனைவருக்கும் உரித்தாக வளரவேண்டியதன் இன்றியமையாமையை நான் ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடியே இருக்கிறேன். பேய்க்கதை அறிவியல்கதை என நான் முயல்வதற்குக் காரணம் எல்லா வகை எழுத்தும் தேவையாகும் என்பதுடன் எல்லா வகைமையிலும் மானுட வாழ்க்கையைச் சொல்ல முடியும் என்பதும் காரணமாகும்

இன்று உலகம் முழுக்க பரந்து விரியும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தமிழை உதறிவிடுவார்கள் என்பதே உண்மை. இப்போதே புலம்பெயர்ந்த ஈழத்தவர்களில் பெரும்பகுதியினர் தமிழை விட்டு விலகி விட்டார்கள். அடுத்த தலைமுறையினர் வாழ்வாதாரத்துக்காக, வளர்ந்த சூழல் காரணமாக  அந்தந்த மொழிகளில் ஈடுபட்டு வாழ்வார்கள். ஆனால் அவரக்ளில் சிலருக்கேனும் பண்பாட்டு வேர்களைப்பற்றிய ஆர்வம் உருவாகுமென்றால் தமிழைக் கண்டடைவார்கள்.

அதுமட்டுமே இன்று எதிர்பார்க்கத்தக்கது

ஜெ


Have a nice Day!
With best of my regards,

முந்தைய கட்டுரைவன்னி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்