ஆசிரியருக்கு வணக்கம்,
இன்றைய இலக்கிய சூழலில் விஷ்ணுபுரம் விருது மிக மதிப்பு வாய்ந்தது. இவ்வாண்டு விருபெறும் மூத்த கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை அழைத்தேன்.
“ஒரு கவிதை சொல்லணும்” என்றேன்.
“சொல்லுங்கோ”
பொருநைவண்டல் பூராவும்
புதுமைபித்தன்
காவேரித் தீரம்
கு.ப.ரா.,
அந்த கொங்குச்சீமைக்கு
ஆர்.சண்முகசுந்தரம்
கரிசலுக்கொரு
கி.ராஜநாராயணன்
விக்ரமாதித்யனை
வகைபடுத்து பார்ப்போம் .
அண்ணாச்சி சப்தமாக சிரித்தார்.
பின்னர் தான் என் பெயர் சொல்லி அறிமுகபடுத்திவிட்டு வாழ்த்து சொன்னேன்.
“நாமோ ஒருக்கா சந்திசிருக்கோம்” என்றேன்
“அப்படியா”
“ஜெயமோகன் அவருக்க வீட்டுல ஒரு புத்தாண்டுக்கு நீங்கோ வந்தப்போ பாத்தோம்”
“அப்படியா, நினைவுல இல்ல, உங்களுக்கு எங்க வேல”
“கப்பல்ல,இப்பம் வந்து ஒரு வாரம் ஆச்சி”
“கப்பல் உள்நாடா,வெளிநாடுக்கு போவுமா” என கேட்டவர் எனது சொந்த ஊர் எது என கேட்டுவிட்டு.மீண்டும் சப்தமாக சிரித்தார்.
“நான் மணவாளக்குறிச்சி கிராமத்துக்கு வந்துருக்கேன் பழைய அபூர்வ புத்தகங்களை சேகரிக்கும் போது அந்த ஊரில் உள்ள ஒரு ஆசிரியர் ஒருவர் அழைத்து இரு புத்தகங்கள் தந்தார்.அந்த கிராமம் இந்தியாவில் சிறந்த கிராமம் என தேர்ந்தெடுக்கபட்டது”.எனவும் நினைவு கூர்ந்தார்.
“சரி ஐயா திருநெல்வேலி பக்கம் வந்தா உங்கள பாக்க வாறன்”
“நான் இப்போ தென்காசியில இல்லா இருக்கேன்” மீண்டும் சிரிப்பு.
“அப்போ அங்க வந்து பாக்கேன்”
“லீவு எப்ப முடியும்”
“உங்களுக்கு விருத தந்த பொறவுதான் போவேன்”அதற்கும் சிரித்தார்.
அண்ணாச்சி மிக உற்சாகமாக இருக்கிறார்.
“தொடர்பில் இருங்கள்” என சொன்னார்.
வழக்கம்போல் தகுதியான எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்காத ஒரு மூத்த கவிஞருக்கு விஷ்ணுபுரம் விருது உங்கள் வாசகர் வட்டத்தால் அளிப்பது பெருமகிழ்ச்சி. அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
விருது விழாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஷாகுல் ஹமீது.
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நலம் தானே?
‘கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது’, பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இளையதலைமுறையினர் பலரை இவ்விருது அடையாளப்படுத்தியிருக்கிறது. கவிஞருக்கு
அண்ணாச்சி வெண்முரசு சொல்லும் ஆதன் அழிசியின் பாணன் வழி வந்தவர் அல்லவா. அவரின் வரிகளை வாசிக்கையில், எவருக்கும் அஞ்சாத நேர்மையின் வார்த்தைகளை, தூய சிவ நடனத்தின் ருத்ர நாதங்களாகவே
பின்னணியில் ஒலிக்கும். நீர்வீழ்ச்சியென்று அருவியை சொல்லிவிட்டாலே நெஞ்சு பதறும் நாடோடி.
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.
————————–
ரத்தத்தில்
—————-
ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
————————-
இரு கவிதைகளிலும் அப்பட்டமான சுடும் உண்மைகள்.
அவர் சொன்னவாறே சத்தியமான நிதர்சனங்கள். அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மது மேசையின் மேலே ஊழித் தாண்டவம் புரியும் காட்சிகளாகவே மனதில் விரிகிறது.
நகரம்
———–
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
எளிய சொல்லாடலில் ஒரு யுகத்திற்கான தரிசனம். நேரடியான,
பூடகங்களைக் கொண்டிராத, அப்பட்டமாகத் தலையிலறையும்
சொற்பிரயோகங்கள்.
சிறுபுற்களுக்கென இல்லாது சிற்றுயிர்களையும்
காத்து ஓம்புவதுதானே ஒரு பேரருவி..!!
வாழ்க கவிஞர்…!!
அன்புடன்,
இ. பிரதீப் ராஜ்குமார்