சூஃபி மரபு:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் எழுத்துகள் மீது ஆழமான நம்பிக்கை எனக்கு உண்டு. நீங்கள் கும்பகோணத்தில் பேசியதை கூர்ந்து கவனித்தேன். அதில் நீங்கள் சூ·பிகளைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். எனக்கு அதைப்பற்றி வேறு கருத்து உண்டு. இஸ்லாம் வாட்ச் என்ற இணையதளத்தில் வந்த இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். 

டாக்டர் ராமகிருஷ்ணன்
 
http://www.islam-watch.org/Ibrahim.Lone/Sufis-of-India-Villains-in-the-Guise-of-Saints.htm
அன்புள்ள  ராமகிருஷ்ணன்

சூ·பிசம் ஒரு மையம் கொண்ட இயக்கம் அல்ல. அதன் சிறப்பே அது மையமற்றது என்பதுதான். ஆகவே சூ·பிசம் எதைச்சொல்கிறது என்பதை ஒரே மையக்கருத்தாகச் சொல்லிவிட முடியாது. அது பல நூற்றாண்டுக்காலம் நீடித்த ஒரு பெரும் உரையாடல். அந்த உரையாடலின் பல்வேறு தளங்களை நாம் இந்திய மரபில் காணமுடியும். ஆரம்ப கால சூ·பிக்களில் பலர் இஸ்லாமிய தூய்மைவாதக்குரலை ஒலித்திருக்கிறார்கள். பல சூ·பிகள் ஆ·ப்கன் பாலைவனப்பழங்குடிகளின் பண்பாட்டுக்குரலாக ஒலித்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு உச்சத்தை அடைவதை நாம் பிற்கால சூ·பிகளில் காண்கிறோம். தக்கலை பீரப்பா வரை வரும்போது அந்த ஞானமரபு பெரும் வளர்ச்சியை அடைந்து கனிந்தது. அதை எளிமையாக ஓரிரு குரல்களை வைத்து நிராகரித்துவிட முடியாது.

மேலும் சூ·பிசம் ஒரு பொதுமக்கள் இயக்கம். நிறுவனம் அல்ல. மக்கள் எவரையெல்லாம் சூ·பிக்களாக காண்கிறார்கள் என்பது எப்போதும் சிக்கலானது. அற்புதங்கள் ஒரு அளவுகோலாக இருந்திருக்கின்றன. ஆகவே போர்வீரர்கள், பல்வேறு நாடோடிகள் சூ·பிக்களாக எண்ணபப்ட்டிருக்கிறார்கள். சூ·பிக்களை நாம் அவர்களின் செயல்களாலும் சொற்களாலும்தான் அளவிட வேண்டும்

இந்த எல்லா வரிகளும் சித்தர்களுக்கும் பொருந்தும்

ஜெ

 

00

வணக்கம் குரு.,


தங்களின் கும்பகோண உரை, மடாதிபதிகளிடமிருந்து சர்ச்சையான எதிர்வினைகளை எழுப்பியிருக்கும் என ஐயபடுகிறேன், குறிப்பாக பக்தி-விசுவாசம் குறித்து நீங்கள் விளக்கியது,அவர்களிடம் நிச்சயம் பல கேள்விகளை உள்ளூர ஏற்படுத்தியிருக்கும் என தோன்றுகிறது.

 

 

உங்கள் 3 கட்டுரைகளின் இறுதியிலும் மூவர்முதலிகள் முற்றத்தின் சார்பில் ஆற்றிய உரை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், நானும் இது “நாடார் சங்கம்” போல முதலியார்கள் சங்கம் என்றுதான்:-) வாசிக்கையில் நினைத்தேன், ஏன்? குரு, சாதிச்சங்களில் கலந்து கொண்டு இந்து ஞான மரபு குறித்து பேசுகிறார்கள் என்று குழம்பியது உண்மைதான், இதனால் தான் அன்று தொலைபேசி தொடர்புகொண்டேன் ஆனால் நீங்கள் சற்று பரபரப்புடன் பேசுவதை கவனித்துவிட்டு தான்நான் கடவுள்வெளியீடு எப்போது என்று பொதுவான (தமிழ் ரசிகர்களின்) கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு துண்டித்தேன். இன்று கும்பகோணம் கட்டுரையை படித்த பிறகு தான், எவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த கருத்தரங்கிள் உரையாற்றிது பற்றி தெரிந்து கொண்டேன்.

 

 

என் சிற்றரிவில் தோன்றிய ஆலோசனை, 3 கட்டுரைகளையும் வெளியிடுவதற்க்கு முன்னால், “கும்பகோணம்” கட்டுரையை வெளியிட்டு இருந்தால் என் போன்ற “மைனா மண்டை”  வாசகர்களுக்கு எளிதாக புரிந்து இருக்கும்.

ஆதீனங்களுடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா? ஒரே மேடையில் ஆதீனங்களுடன் உங்களை பார்த்ததில் “போதி”யின் ஞாபகம் வந்தது!!


பணிவன்புடன்

மகிழவன்.

 

88

 

அன்புள்ள ஜெ

சூ·பிக்களைப்பற்றி நீங்கள் சொன்ன விஷயங்களைக் கவனித்தேன். அவர்களை மூடநம்பிக்கையை வளர்த்தவர்கள் என்று ஒரு தரப்பு சொல்கிறது. இச்லாமிய வெறுப்பை உருவாக்கியவர்கள் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. அவர்களும் சித்தர்களும் ஒன்றே என்றும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

சாம் செல்வகுமார்

 

அன்புள்ள சாம்

 

உங்கள் கடிதம் மூன்று வினாக்களினால் ஆனது.

 

ஒன்று சூ·பிக்கள் மூடநம்பிக்கைகளை உருவாக்கவில்லை. அவர்களின் ஆன்மீகத்தை, அதில் உள்ள விடுபட்ட நிலையை, புரிந்துகொள்ள முடியாத எளிய மக்கள் அவர்களுடைய கற்பனைகளின் படி அவர்களை வகுத்துக்கொண்டார்கள். சூ·பி ஞானத்தின் பல்வேறு தளங்கள் குறியீட்டு மொழியில் உள்லவை. அவை நேரடிப்பொருளில் கொள்ளப்பட்டன.

 

இரண்டு இஸ்லாமிய அடிபப்டைவாத நோக்கை உருவாக்கிய சூ·பிகளும் சிலர் உள்ளனர். ஆனால் சூ·பி ஞானம் அந்த அடிப்படைகளைக் கொண்டது அல்ல.

 

சூ·பிக்களை அறிவதில் உள்ள சிக்கலையே இது காட்டுகிறது

மூன்று, சூ·பிக்கள் சித்தர்களுக்குச் சமானமானவர்கள். கட்டற்ற வாழ்க்கை, அமைப்புக்குள் சிக்காத ஆன்மீகம், தத்துவ நோக்கு என பல அடிப்படைகள் உண்டு. ஆனால் சித்தர்களிடம் மருத்துவம் ரசவாதம் போன்ற சில அறிவியல் கூறுகள் உண்டு. அவை சூ·பிகளிடம் இல்லை. சித்தர்களில் நாத்திகர்கள் உண்டு, சூ·பிக்களில் இல்லை

 

 

சித்தர்களும் சூ·பிக்களும் ஒரு அடிப்படை சூத்திரத்தைக் கொண்டே புரிந்துகொள்ளப்பட வேண்டும். சித்தர்களும் சூ·பிக்களும் ஏற்கனவே உருவாகியிருந்த ஒரு தரிசனத்தை, தத்துவத்தை, மதத்தை பின்பற்றியவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் போக்கில் தங்கள் ஞானத்தேடலை நிகழ்த்தியவர்கள். நெடுங்காலம் கழித்துத்தான் அவர்களின் சிந்தனைப்போக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவை தொகுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சித்தர் ஞானம், சூ·பி ஞானம் வகுக்கப்பட்டது. அப்படி வகுத்தறிந்த கொள்கையை பின்னோக்கி விரித்து எவர் சித்தர் எவர் சூ·பி என நாம் முடிவுசெய்கிறோம்.

ஜெ

 

நோய்:கடிதங்கள்

இண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்

ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்

திருவையாறு: மேலும் கடிதங்கள்1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

2.மறைந்து கிடப்பது என்ன?

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

 

முந்தைய கட்டுரைநான் கடவுள் சில கேள்விகள்.1
அடுத்த கட்டுரைநான் கடவுள் : சில கேள்விகள் 2