சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு

அன்புள்ள ஜெ

நேற்று (11/09/2021) புனைவுக் களியாட்டு தொகுப்பின் நூறாவது கதையான வரம் கதையை சுக்கிரி குழுமத்தில் வாசித்து உரையாடி நிறைவு செய்தோம். 2020 ஏப்ரல் ஆரம்பத்திலேயே ஓரிரு நட்பார்ந்த உரையாடல்களுக்குப் பிறகு உடனேயே ஆனையில்லா கதையை எடுத்து உரையாட ஆரம்பித்தோம். [உங்கள் வாசகர்கள் நேர்சந்திப்பில் மாத்திரம் அல்ல, ஸூம் முதலான மெய்நிகர் சந்திப்புகளிலும் ராணுவ ஒழுங்கோடு இருப்போம் என்பதை முதல் உரையாடலிலிருந்தே நிரூபித்து வந்திருக்கிறோம் !!]. கதையைத் தாண்டி உரையாடல் வெளியில் செல்லும்போதோ, அல்லது இந்த இடத்தில் மட்டுறுத்தல் தேவை என்ற நிலை உருவாகும்போதோ தயங்காமல் உறுதியாக அதேசமயம் நட்புணர்வோடு அவை செய்யப்பட்டு வெகுவிரைவிலேயே பயனுள்ள ஒரு உரையாடல் களமாக இது மாறியது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு என இதை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் நீளும் வகையிலான உரையாடல் என ஆரம்பித்தது, விரைவிலேயே பங்குபெற்றோர் அதிகரித்ததாலும் உரையாடல் சுவையேறியதாகவும் ஆனதால் இரண்டரை, மூன்று மணி நேரம் என நீண்டது. முதலில் ஒவ்வொரு வாரமும் இரண்டு கதைகள் என உரையாட ஆரம்பித்தோம். இருபத்தி ஐந்து கதைகளைத் தாண்டும்போது, ஒவ்வொரு வாரமும் ஒரு கதை போதும் என முடிவெடுத்தோம். நீங்கள் பங்குபெறும் பிற ஸூம் சந்திப்புகள், ஆளுமைகளுடனான விஷ்ணுபுர ஸூம் கலந்துரையாடல்கள் தவிர வேறு எதற்கும் இந்த வாராந்திர உரையாடல்கள் தள்ளிவைக்கப்படவில்லை. விஜயராகவன் ஸார், பழனி ஜோதி, மதுசூதனன் சம்பத், ராஜேஷ் ஆகியோர் இவ்வார நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் மட்டுறுத்தியும் வருகின்றனர். கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து பின்னர் அதன்மீதான உரையாடல்கள், கேள்விகள், விவாதங்களை முன்வைப்பது என்னும் வடிவத்தை இவ்வுரையாடல்கள் கொண்டுள்ளன.

குழுமத்திற்கு என்ன பெயர் வைப்பது என ஆரம்பித்து, புனைவுக் களியாட்டின் “இடம்” கதையில் தோன்றி “சூழ்திரு” கதையில் பெயர்பெற்ற குரங்கின் பெயரான சுக்கிரி என்பதையே சூட்டினோம். குழும உறுப்பினர்களின் இயல்புக்கேற்ற பெயரைத்தான் குழுமம் தானே சூடிக்கொள்கிறது என்பதை நாங்களும் நிரூபிக்கிறோம். மெய்நிகர் சந்திப்பு என்பதால் வெளிநாட்டிலுள்ள நண்பர்கள் இதில் கலந்துகொள்வது சாத்தியமானது. நானும் ஒன்றரை வருடங்கள் வெளிநாட்டிலிருந்து பின்னர் இதில் கலந்துகொண்டேன் என்பதால் இச்சந்திப்புகள் கொடுத்த நிம்மதியை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது. உண்மையிலேயே உலகின் எல்லா மூலையிலிருந்தும் கலந்துகொண்டு உரையாடினார்கள். ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நள்ளிரவுவரை விழித்திருந்து கலந்துகொண்டார்கள் என்றால், அமெரிக்காவில் தங்களின் அதிகாலை நேரத்தில் வந்து உரையாடினார்கள். நிலத்திலிருந்து கலந்துகொண்டவர்கள் போதாதென்று நீரில் பயணித்துக் கொண்டிருந்த ஷாகுலும் இணையம் அனுமதிக்கும்போதெல்லாம் வந்து கலந்துகொண்டார். பயணத்தின்போது காரை சாலையோரத்தில் நிறுத்தி கலந்துகொண்ட பழனிஜோதி, காரை ஓட்டிக்கொண்டே விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பயணத்தை முடித்த சூட்டோடு பேசவந்த ராஜேஷ், வடஇந்தியாவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டே கிடைத்த இடைவெளியில் கலந்துகொண்டு 2ஜி நெட்வொர்க்கிலும் ஸூம் வேலை செய்யும் என நிரூபித்த கோகுல், திருவண்ணாமலையில் தனது குடிலிலிருந்து பங்குபெறும் ஆனந்த் ஸ்வாமி அவர்கள், தனது வேலைப்பளுவிற்கு நடுவிலும் முடிந்தபோதெல்லாம் இங்கு வந்து கலந்துகொள்ளும் சந்தோஷ் லாவோசி, ரமேஷ் அண்ணா முதலானோர் என விதவிதமான பங்கேற்புகளால் இந்த ஒன்றரை வருடமும் சந்திப்புகள் நிரம்பியிருந்தன.

உரையாடலுக்கென சந்தித்துக் கொண்டவர்கள் வெகுவிரைவிலேயே இறுக்கமான ஒரு நண்பர் வட்டம் எனவும் ஆனோம். தனிப்பட்ட நட்புகளும் உருவானது. ஷாகுல் நீரிலிருந்து நிலத்திற்கு வந்துவிட்டதால், நண்பர்கள் குழுவாக சேர்ந்து இக்கதைகள் நிகழ்ந்த இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற திட்டமிருக்கிறது. அதுவும் கூடிய சீக்கிரமே நிகழும் என நினைக்கிறேன்.

இக்குழும நண்பர்கள் இக்காலகட்டத்தில் உருவாக்கும் தங்களது படைப்புகளை பகிரும் ஒரு தளம் எனவும் இக்குழுமம் ஆனது. ஷாகுல் தங்களது வெண்முரசால் உந்தப்பட்டு, தனது கப்பல்பணி தொடர்பான விவரங்களையும் அன்றன்றைய வேலைகுறித்த தகவல்களையும் கட்டுரையாக பகிர்வேன் என அறிவித்து அவ்வாறே தினமும் இக்குழுமத்தில் எழுதி பகிர ஆரம்பித்தார். அவற்றுக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கி அவற்றை பதிவுசெய்ய ஆரம்பித்தோம். இதுவரை எழுபதிற்கும் மேலான பதிவுகளை எழுதியிருக்கிறார். அவற்றில் பல வெகு ஆழமானவை. சிறந்த வாசிப்பை கொடுப்பவை. நாங்களறியாத ஒரு புதிய உலகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்துபவை. நண்பர் செந்தில்வேல் தினமும் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லி அந்த வீடியோவை யூட்யூபில் வலையேற்றி வருகிறார். தற்போது முன்னூறாவது குறளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவைதவிர குழும நண்பர்கள் தமது ரசனை சார்ந்த பதிவுகளை பகிர்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நானுமே உந்தப்பட்டு ஒரு சிறிய தொடர் ஒன்றை இக்குழுமத்திற்கு எழுதிப் பகிர்ந்தேன்.

எல்லா குழுமங்களையும் போல முதலில் வாட்ஸாப்பில் ஒரு குழுவை உருவாக்கி நட்பையும் உரையாடலையும் பேணிக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் தீவிரமான உரையாடல்கள் வாட்ஸாப்பிலும் நிகழத் தொடங்க, கோகுலின் யோசனையை ஏற்று குழுமத்தை வாட்ஸாப்பிலிருந்து ஸ்லாக் என்னும் செயலிக்கு மாற்றினோம். இம்மென்பொருளில் ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியே சேனல்கள் உருவாக்கி உரையாடலாம் என்ற வசதியிருப்பதால் இவ்வகை உரையாடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. வாரவாரம் விவாதிக்கும் கதைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சேனல் என்பதுபோக கதாநாயகி, குமரித்துறைவி போன்ற தங்களது பிற படைப்புகளுக்கும் தனிச் சேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுஷில்குமாரின் மூங்கில் தொகுப்பிற்கும் அவ்வாறே தனிச்சேனலை உருவாக்கி உரையாடினோம். வாட்ஸாப்பிலிருந்து ஸ்லாக்கிற்கு மாறிய வகையில் உரையாடல் இன்னமும் செறிவானதாக மாறியிருக்கிறது.

முழுக்கவே அரசியல் பற்றி பேசாத ஒரு குழுமமாக இது இருந்து வந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதனாலேயேதான் இந்த நட்புச்சூழல் சாத்தியமாகியிருக்கிறது என நினைக்கிறேன். அரசியலையும் பேசலாம், நாம் அந்தளவு முதிர்ச்சியானவர்கள்தான் என்ற எண்ணம் அவ்வப்போது எங்களிடையே எழுந்து வந்தாலும், எதற்கும் இருக்கட்டும் என அதை விலக்கியே வைத்தோம். அது நிச்சயம் பலனளித்திருக்கிறது என்று சொல்வோம். கதை பற்றிய உரையாடல்களைத் தவிர ஸ்லாக்கிலும் வாட்ஸாப்பிலும் பகிரப்பட்டவை என்று பார்த்தால், இசைக்கோவைகள், கதைகளின் சம்பவங்களை நினைவூட்டும்படி வெளியில் நிகழ்ந்த சில நிகழ்வுகள், பிற படைப்புகளுக்கான லிங்க்குகள் என விரல் விட்டு எண்ணிவிடும்படியான தலைப்புகளிலேயே உள்ளன. இந்த நோயச்ச காலகட்டத்தைத் தாண்டிவர இது மிகவும் உதவியாக இருந்தது. உண்மையில் கொரோனா பற்றியும்கூட வெகு அரிதாகவே இக்குழுமத்தில் பேசப்பட்டுள்ளது! ஆரம்பத்தில் சிற்சில மட்டுறுத்தல்களுக்குப் பிறகு வெகு எளிதாக இந்தத் தரம் என்பது குழும நண்பர்களின் இயல்பு என்றே மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இயல்பாக வெளிப்படும் தளமாக இது அமைந்துள்ளது.

இதுபோன்ற ஒரு மனநிலையையும் சூழலையும் நிமித்தத்தையும் உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.

[email protected]

முந்தைய கட்டுரைகல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் வாழ்க்கை