தனிக்குரல்களின் வெளி

அன்புள்ள ஆசிரியர்க்கு,

இதுகுறித்து விரிவாக  பேச ஆள் இல்லாமல் கட்டுரை கணக்கில் எழுதிவிட்டேன். பொறுத்துக்கொள்ளவும்.

மக்களின் புறவய துன்பங்கள்– அரசியல், மதம், சாதி, மொழி, இனம், வணிகம் இவைகளாலானவை. என்னை மிகவும் அலைக்கழிக்கும்.

தலித்துக்கள், ஈழத்தமிழர், கருப்பினத்தவர், சிறுபான்மையினர், ஏழைகள், சுற்றுசூழல் என யார் படும் துன்பங்களும். ஆனால் இஸ்லாமியர் இன்று சந்திக்கும் இந்திய/உலகளாவிய புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள்தான் முதன்மையில் நின்று என்னை அலைக்கழிக்கின்றன. அவர்கள் என் மதத்தவர் எனும் மனப்பான்மையால் அல்ல. முஸ்லிம்களாக அவர்கள் செய்பவைக்கு, பெறுபவைக்கு, இழப்பவைக்கு நானும் பங்குகொள்பவன் என்பதனால்.

பிற புறக்கணிப்பு போல அல்லாமல், இஸ்லாமியர் சந்திக்கும் புறக்கணிப்புக்கு அவர்களே (புரிந்துகொள்ளாமல்) ஒரு கட்டத்தில் காரணமாய் இருக்கின்றனர் என்பதனால். கொரோனா வேகத்தில் ஒரு புற்றுநோயாக ‘அடிப்படைவாதம்’ இஸ்லாமியரை இன்று ஆட்கொண்டு வருகிறது. வரலாற்றில் இஸ்லாம் வன்முறையால் சிலபல இடங்களில் பரவினாலும், எத்தனையோ நிலங்களில் வணிகம், சூஃபித்துவம் வழியே அந்த கலாச்சாரத்தோடு உரையாடி ஒன்றாகி பரவியிருக்கிறது – உம்: தென்னிந்தியா, அக்பர் போன்றோர் காலத்து வடஇந்தியா, மாலி பேரரசைச் சுற்றிய ஆப்பிரிக்கா (பழங்குடி கலாச்சாரத்தை ஒடுக்காமல் உள்வாங்கி.. ஆனால் அங்கும் மாலி பேரரசு காலத்தில் ஒரு அடிப்படைவாதி கலகம் செய்திருப்பதாக படித்த நினைவு), இந்தோனேஷியா என.

இப்படிப்பட்ட ஒரு சகிப்புதன்மை கொண்ட அந்த இன்னொரு வரலாற்று முகம் இன்று உலக இஸ்லாமியரிடம் காணாமல் போய் வருகிறது. பிற மதத்தை நேரடியாக மறுப்பது,  மதத்தில் உள்ள பிற்போக்கு அம்சங்களை எதிர்க்க ஆளில்லாமல் இருப்பது என பல கூறுகள். இஸ்லாமியர் முழுவதுமாக பிற சமயத்தோரை விட்டு விலகியாதாகத் தென்படவில்லை. ஆனால் பிரிக்கும் நோக்கத்தை ஒளித்து வைத்து செயல்படும் வஹாபிய தலைவர்களை ஏற்று வருகின்றனர். மிகச்சிறிய உதாரணம், பிற சமய பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதன் கட்டுப்பாடுகள் முதல் பிற மதத்தோரின் மறுமை நிலை குறித்த நிலைப்பாடுகள். அது பிற மதத்தினரிடம் ஏற்படுத்தும் கசப்பு/வருத்தம். அது ஒரு எதிர் அடிப்படைவாதத்திற்கு தீனி போடுவது.

இந்த பிரச்சனையை நீங்களும் பல முறை பேசியிருக்கிறீர்கள். இதை கேட்டாலே இஸ்லாத்தை வசைபாடுவதாக நினைக்கிறார்கள் -”மார்க்கத்தை அப்படியே பின்பற்றினால் என்ன தவறு? இவர் போன்றோர் என்ன சதி தீட்டுகிறார்கள்” என்று…(நானும் நினைத்தேன்.. ஒரு காலம்). இந்த வஹாபிய-ஸலாஃபிச அடிப்படைவாத சிந்தனை, ஒவ்வொரு நாட்டு, மொழி, இன இஸ்லாமியர்களுக்கு தீவிரம் அதிகம்/குறைவு என மாறுபட்டு காணப்படுகிறது.

இனம், சாதி, மொழி புறக்கணிப்பு போல இஸ்லாமியர் தங்கள் மதத்தால் சந்திப்பது வெறும் மேட்டிமைவாத ஒடுக்குமுறை/புறக்கணிப்பு மட்டுமே இல்லை. பிற சமயங்கள் காலத்திற்கேற்றாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்வது போல இஸ்லாமியர் மதத்தில் மாற்றம் செய்யாமல் இருப்பது, இஸ்லாத்தை மாற்றம் செய்வது “பித்அத்”(தீய ஒரு புதுமை) என்று கூறி ஏழாம் நூற்றாண்டுக்கு பொருந்திய ஆனால் ஜனநாயக யுகத்துக்கு பொருந்தாத சிலபல கூறுகளை  (சமூகங்கள் கூட்டாக, சம உரிமையோடு வாழும் நவயுகத்திலும்) இன்னும் தக்க வைத்துக்கொண்டு இருப்பது  இஸ்லாமியர் சந்திக்கும் புறக்கணிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

சராசரி மக்களின் மனக்கசப்பை தாண்டி அடிப்படைவாதம் எனும் அந்தக் காரணம் இஸ்லாமியர் மீது ஏவப்படும், அவர்கள் பற்றி சராசரி மக்கள் மனதில் பரப்பப்படும் காழ்ப்புகளுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாத்தின் வெறுப்பாளர்களால் [பெரும்பாலும் உலகமெங்குமுள்ள இஸ்லாமியர் அல்லாத வலதுசாரிகளால்] குற்றஉணர்ச்சி எதுவுமின்றி பயன்படுத்தப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டு, மக்கா மாநகரில் உள்ள பெண்குழந்தைகளை உயிரோடு புதைக்கும் மூடநம்பிக்கைகள், இனவாதம், சிலை வழிபாடு இவை மீது நம்பிக்கை இழந்து நபிகள் (ஸல்), அப்போதிருந்த கிறிஸ்தவம், யூத மதம், அரபு நாட்டார் மதக்கூறுகள் இவற்றைக் மனதில் கொண்டு தனிமையில் அந்த மக்களுக்காக தியானித்ததில் ஏற்பட்ட மதம் இஸ்லாம்.

1) அது அவரது ஆழுள்ளத்தில் ஆன்மீகமாக இறையருளாய் பெரும் ஒரு நிலையான  உண்மையாய் உதித்ததோ..

அல்லது

2) நபியின்  முழு நினைவுடன் ஒரு  சமூகப்புரட்சி இயக்கமாக அரபுலகை ஒரு  இறைதேசமாக ஒன்றிணைக்க அதே வேளையில் எளிமையான ஒழுக்கமான ஆன்மீக வாழ்வு முறையை சொல்லிக்கொடுக்க எழுந்ததோ… அது ஆன்மீக பக்தியாளர்களும், பகுத்தறிவாளர்களும் தேர்ந்தெடுத்து நம்பவோ, ஆராயவோ வேண்டியது.

தானுண்டு தன் தொழுகை உண்டு என்று தனிமனிதனாக இருப்பவர் 1) வது பார்வையை கொண்டிருப்பது  தவறில்லை.

1) வது பார்வையை நவயுக ஆட்சி அரசியலுக்கு புகுத்தினால்… அது பிறருக்கும் முஸ்லிம்கள் தமக்கும் ஏற்படுத்தும் இழப்புகளை பார்த்து வருகிறோம்…

[1) பார்வையை கூட அதனுடன் ஒத்த/மாறுபடுகிற பிற மதக்கொள்கைகளுடன் உரையாடி ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதே.. மாட்டோம் என்றால் தன் சமயத்தின்  பரிணாம வளர்ச்சி, தன் கலாச்சாரத்தின் நிறம் கூடுதல் தடைபடுகிறது.. அவ்வளவு தான்]

2) வது பார்வை தான் அரசியலில், சமூகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் எந்த ஒரு  ஜனநாயகயுக முஸ்லிமும் கொள்ள வேண்டியது… (தனி மனிதனாக அல்ல பொது மனிதனாக)

அந்த 2) வது பார்வையே இஸ்லாமிய சீர்திருத்தம் நிகழ தேவை. (கூடவே “அல்லாஹ் பேரன்பன்… உயிர்களுக்கு துன்பம் விளைவிப்பது தவிர ஒரு காலத்து சட்டத்துடன் முரண்பட்டாலே தண்டிக்க மாட்டான் எனும் நம்பிக்கையும்)

குர்ஆன், சுன்னாஹ் முன்மொழிந்த சமூக அமைப்பு அதற்கு முன்பிருந்த அமைப்பை விட நன்றாக இருந்தது. மேலும் அன்றைய இஸ்லாம் ஒரு theocratic தேசமாக இருந்தது. குறைநிறைகளுடன் அந்த காலத்துக்கு சரிப்பட்டு வந்தது. ஆனால் அன்றைய முஸ்லிம்கள் மதப்பிரக்ஞை உள்ளவர்களாகவே தேங்கி விடாமல் உலக வரலாற்றில் ஒரு நீண்ட அறிவு, தத்துவம், கலையிலக்கிய செயல்பாட்டின் முன்னெடுப்பாளர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட மறக்கப்பட்ட கிரேக்க, ரோமனிய அறிவுச்செல்வங்களை அரபு-பாரசீக யூத, கிறிஸ்தவர்கள் துணையுடன் மொழிபெயர்த்து உள்வாங்கி மேம்படுத்தியது, ஆட்சியாளர்களின் இந்திய ஆக்ரமிப்பின் மத்தியில் இந்து அறிஞர்களுடன் உரையாடி அறிவுத்துறையினை விரிவு செய்தது என மதங்கள் இணங்கி செயல்பட்ட “இஸ்லாமிய பொற்காலத்தின்” நாயகர்களாக “பாக்தாத் ஞானகளஞ்சியத்தின்” செல்வர்களாக இருந்தனர். மதமாக அது சூஃபித்துவம் எனும் தூய ஆன்மீக நோக்கை அன்று வார்த்தெடுத்தது.

அறிவியல் குறித்த பெருமிதம் போக.. மதம் கடந்த சூஃபித்துவ ஆன்மிகம், தத்துவங்கள் மற்றும் இசை உள்ளிட்ட சில கலைகள் இன்று ‘பித்அத் ‘(தீய புதுமை)  என்று வஹாபியர் கூறுவதை நம்பும் நிலை  முஸ்லிம்களுக்கு வந்துவிட்டது.

இணைய வெளியில், இஸ்லாத்தை  ஏதோ வாளேந்தி, பாலைவன கொடுந்தெய்வத்தை வணங்கி, கலாச்சாரங்களை அழிக்க மட்டுமே ஏற்படுத்தப்பட்ட cult ஆக காண்பித்து “வரலாறெங்கும் இஸ்லாம் ‘அழிவை மட்டுமே’ செய்திருக்கிறது.. இஸ்லாத்தை முற்றிலும் கைவிட்டால் தான் முஸ்லிம்கள் மனிதர்களாக ஆவார்கள், இல்லையென்றால் முஸ்லிம்கள் இரும்புக்கரம் கொண்டு மனித உரிமையற்று ஒடுக்கப்படுவது மிகச்சரி” எனும் பெருகி வரும் வலதுசாரிகளின் வடிகட்டிய வெறுப்பு சித்தரிப்பு ஒரு புறமிருக்க…

சிறுபான்மையினர் மீது பரிவு கொண்டு அல்லது அரசியல் காரணமாக வஹாபியம்  குறித்து பெரிதாக பேசாத இடதுசாரிகள் ஒரு புறமிருக்க..

மறுபுறமோ இஸ்லாமியர்களில் –ஆம் இஸ்லாம் ஒரு தீய வழி அதை நாங்கள் முற்றிலும் துறந்து வெளிவந்து விட்டோம் என ஒரு சாராரும்…

விமர்சனம் என்ற பெயரில் முழு நிராகரிப்பை பார்த்து வெறுத்து, வஹாபியமும் ஆட்கொண்டு-“இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருந்தும் முழு அமைதி மார்க்கம். (ஒளரங்கசீப் போன்ற) இஸ்லாமிய மன்னர்கள் வரலாற்றில் திரிக்கப் பட்டு தீயவர்களாக காட்டப்படுகிறார்கள்” அல்லது “அவர்கள் போன்றோர் செய்தது மிகச்சரி” என்றும் “இப்படி அதை இவர்கள் வெறுப்பதே அது உண்மை என்பதற்கு சான்று..” அதை வெறுப்போர் போக, “விமர்சிக்கும் கேள்வி கேட்கும் எவரும்’ காஃபிர்கள், மறுமையில் பதில் சொல்வீர்கள்” என ஒரு சாராரும் பல்வேறாக அகன்று பிரிந்து கிடக்கின்றனர்.

*ஏழாம் நூற்றாண்டில் எழுந்தநபிகால‘ துவக்க இஸ்லாம்இஸ்லாமிய பெருஞ்சமயத்தின் மையம் அல்ல. அது இஸ்லாத்தின் தொடக்கம் மட்டுமே..* 
என எந்த தீவிர ஆதரவு/மறுப்பு துருவங்களும் இந்த விஷயத்தை ஏற்க, உணர தயாராய் இல்லை. “மாறாமல் இருப்பதுதான் இஸ்லாத்தின் பெருமை. பிற்காலத்து தத்துவ ஞான பிதற்றல்கள் எல்லாம் பிற்சேர்க்கைகள். அதற்கு மார்க்கத்தில் இடம் கிடையாது” என நினைக்கும் மதத்தலைவர்களின் போக்கு இருக்கும் வரை இந்த உண்மையை  பெரும்பாலான முஸ்லிம்கள் உணர்வது மிகக் கடினம் (ஆகையால் பிற மதத்தோர்க்கும் கடினம்)

ஏழாம் நூற்றாண்டை தாண்டி இஸ்லாம் பல்வேறு சமய உரையாடல்கள் வழியே வளர்ச்சிகள் அடைந்தது. அது தேங்கி நின்று பிற்போக்குவாதம் பேசவில்லை. உதாரணம்: 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை செழித்த இஸ்லாமிய பொற்காலத்தில், அபு பக்ர் அல் ராஸி முதல் உமர் கய்யாம் வரை நீண்டு வந்தடைந்த ‘இஸ்லாமிய நாத்திகம்’ (நேரடி இறைமறுப்பு இல்லை எனினும் மதத்தை வேதங்களை நியாயமாக பகுத்தறிவுடன் கேள்விகேட்கும் நிலை முதல் இருத்தலிய நிராகரிப்பு கொள்கை வரை),  அத்வைதத்திற்கு நெருக்கமான ‘வஹ்தத் அல் வுஜுத்’  போன்ற இப்னு அரபியின் monist ஆன்மிக கொள்கைகள், இன்று சராசரி இஸ்லாமியர் ஏற்க மறுக்கும் பரிணாம வளர்ச்சி கொள்கைகளின் மிக அடிப்படை வடிவங்களை முன்வைத்த அல் ஜாஹிஸ்-ன் எழுத்துக்கள் என (இவையனைத்தும் அன்று சில சக அறிஞர்களால் மறுக்கப்பட்டாலும் அன்றைய அரசால் ஒடுக்கப்படவில்லை) ஒரு பெரும் சிந்தனை மரபு  எழுந்து வீழ்ந்து, இன்று வகாபிய பாதங்களின் கீழ் கண்ணில் படாமல் மூச்சு திணறிக்கொண்டு இருக்கின்றது.

வஹாபிய சித்தாந்தங்களின் தந்தை போன்ற, அன்று இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்ட இப்னு தய்மிய்யா போன்றோர் இன்று ஹீரோவாகி விட்ட நிலை.

இன்று இஸ்லாத்தை முற்றாக மறுத்து ஒதுக்கும் இஸ்லாமியர்களை விட இஸ்லாமிய மரபு மற்றும் துவக்க இஸ்லாத்தில் இருக்கும் நல்ல, முற்போக்கான விஷயங்களை ஆதரித்து பழைமையை, ஒவ்வாததை எதிர்ப்போர் குழப்பவாதிகள் என புறக்கணிக்கப் படுகின்றனர். கண்ணில் கூட படாது இருக்கின்றனர். நீங்கள் அறிமுகப் படுத்திய ஹெச்.ஜி. ரசூல் நினைவுக்கு வருகிறார்.

இஸ்லாத்தை முழுமுற்றாக மறுப்பது எளிதாதலால் நிறைய பேர் ex -muslims என ஒன்று கூடி அமைப்பாய் தன் குரலை வெளிகாட்ட முடிகிறது. இஸ்லாத்தை மறுத்தால் மரணதண்டனை (இந்த theocratic தேசத்தை கைவிட்டால் தேசதுரோகம்) எனும் சட்டங்கள் மத்திய கிழக்கு இஸ்லாமியரை இஸ்லாத்தை விட்டு தூர விலக வைத்திடுகிறது. இஸ்லாமிய அடையாளம் கொண்ட எதையும் அவர்கள் பயப்படும்/வெறுக்கும் மனநிலைக்கு இந்த வகாபியம் மிக முக்கியக் காரணம்.

சீர்திருத்தங்களுக்கு தடையாய் இருப்பதன் காரணங்கள்: குர்ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மையமாக இருப்பது, தன்னை முழு மதப்பிரக்ஞையுடன் தன்னை “இஸ்லாம்” எனக் கூறிக்கொள்வதும் ‘மார்க்கம் இத்தோடு நிறைவு பெற்றது’ என கூறுவதும், அதை எதிர்ப்பது பாவம் என்பதும், மறுமை நாள் குறித்த அதன் dramatic ஆன மறுப்பு, ஏற்பு மையப்படுத்திய சித்தரிப்பும், இவையனைத்தையும் விட முக்கிய காரணம், மக்களிடம் ஆன்மீக அடையாளமாக ஏற்கனவே வேரூன்றி இருக்கும்  நபிகள் (ஸல்) அவர்கள், குர்ஆன் போன்றவை அடிப்படைவாத தலைவர்களால் அரசியல் அடையாளமாக மீள்உருவாக்கம் செய்யப்படுவது. இயற்கையாகவே அந்த அடையாளங்களை அதைக்கொண்டே மதஅரசியல் படுத்துதல் வேண்டாத பழைமை விழுமியங்களையும் மேலே கொண்டுவந்து விடுகிறது.

இந்த மொத்தத்தையும் கொஞ்சமேனும் சிந்தித்து உணர இன்னொரு தடை : ஜாகிர் நாயக் போன்றோரின் “குர்ஆனில் அறிவியல் அதிசயங்கள், பிற மத நூல்கள் எப்படி இஸ்லாத்தை போதித்த பின்பு சதியால் மாற்றப்பட்டன” போன்ற மிகுகற்பனை கதைகள். அதன் அறிவார்ந்த மாயையிலிருந்து வெளிவர வஹாபியத்தின் தீவிரம் குறைந்த இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சையாவது கவினித்து தெளிவு பெற வேண்டும்!

ஒரு theocratic தேசத்தை முன்மொழியும் நூல் கண்டிப்பாக மேற்சொன்ன மத வரையரைகள் பேசியாக வேண்டும். அதைக்கொண்டு ஏழாம் நூற்றாண்டு அப்போது பெரும் ஒரு அரசியல் மாற்றம் & சமயப் புரட்சி ஏற்பட்டது. குர்ஆனை ஹதீஸ்களை இன்னும் மாற்றமில்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதிலிருந்தும், அப்படியே பொருள் கொள்வதிலிருந்தும், முஸ்லிம்கள் வெளிவர வேண்டும்.

என் புரிதல், நிலைப்பாடு இதுதான்:

பிற மதங்களை, கோட்பாடுகளை விமர்சிப்பது போல் ஒருவர் தன் மதத்தை விமர்சித்தால் அதை மூர்க்கமாக எதிர்க்காமல் அல்லது உள்ளூற வெறுக்காமல், மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான் அனைத்து மதங்கள் சென்றடையும் ஆன்மீக நிலைப்பாடு ஒன்றே என நம்புபவன்.

அல்லாஹ், பிரம்மம், சிவம், Kingdom of God, நாத்திகர் கூறும் Nothingness என அனைத்தையும் அறிவுக்கு, இருத்தலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கும் சொல் என  நம்புபவன். இறைவன், குர்ஆனில் சொல்வது போல் பிடரி நரம்பை விட நெருக்கமாக.. அதே சமயம் ஏழுவானம் வரை விரிந்து பரவியவன். இறைவன் ஒவ்வொரு உயிர்க்குள்ளேயும் அதே சமயம் அண்டம் எங்கும் விரிந்து இருக்கிறான். இஸ்லாம் என ஏழாம் நூற்றாண்டு ஏற்பட்ட theocratic தேச கூறுகளில் ஒற்றுமை விசைகளை மட்டும் தேர்ந்துதெடுத்துக் கொள்வேன்.

அதிலிருந்து முளைத்து.. ஆதரித்தும், முரண்பட்டும் வளர்ந்த அனைத்து மரபும் எனக்கு இஸ்லாம் தான். இஸ்லாம் அல்லாததும் மனித மரபாய் எனக்கு சொத்து தான். அத்தனையிலும் உள்ள பிழைகளை கேள்வி கேட்கவும் முரண்படுவும் கூட செய்வேன்.

நபிகளை, குர்ஆனை நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படியே பொருள் கொள்கிறோம். அதிகார வெறியுடன் நோக்கினால் தீவிரவாதிகளை உருவாக்கும் அதே “குர்ஆன் & ஹதீஸ்கள்” தான், திறந்த மென்மனதுடன் நோக்கியதால் மதம் கடந்த சூஃபிக்களையும் உருவாக்கியது. இன்றைய ஜனநாயக யுகத்திற்கு ஒத்துவரும் துவக்க இஸ்லாத்தின்  கூறுகளை மற்றும் தூய ஆன்மீகத்தை தக்கவைத்து, ஒத்துவராத அரசியல், சட்ட கூறுகளை விமர்சித்து இஸ்லாமியர் பேச வேண்டிய பெரும் கட்டாயம் இருக்கிறது.

இந்த கடிதத்தை எழுதி முடிக்கையில் நான் கண்டுகொண்டது இதுதான்:எனக்கு இன்னும் எழுதி வெளிப்படுத்த தெரியவில்லை. இந்த பிரச்சனையை இன்னும் ஆழமாகவும் ஆராய்ந்திருக்கவில்லை. வேறு பல அம்சங்கள் என் கண்ணில் படாமல் இதில் இருக்கிறது-அதை நான் பார்க்கவில்லை.

நான் இதுவரை சொல்லியதில் பிழைகள் இருக்கலாம். ஆனால் மதத்தை முழுவதுமாக ஏற்பதும், முழுதாக மறுப்பதும் தவறு எனும் தெளிவாவது இருக்கிறது. இவ்வளவு புரிதல் தாண்டி ஏதோ ஒரு போதாமை, குழப்பம் எஞ்சியிருக்கும் உணர்வு. என் பார்வையில் பிழைகள் இருந்தால் திருத்துங்கள். முதிராத பார்வைகள் இருந்தால் உரமிடுங்கள். போதாமை இருந்தால் நிறைவு செய்யுங்கள். இன்னும் புத்தகங்கள், மனிதர்களை பரிந்துரையுங்கள்.

இந்து மதத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்டு திருத்தும்  இந்துக்களைபோல், கிறிஸ்தவத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்கும் கிறிஸ்தவர்கள் போல், இஸ்லாத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்டு திருத்தி சீர்படுத்தும் இஸ்லாமியர்களின் குரல் அன்று  ஒலித்தது போல் இன்று ஓங்கி ஒலிப்பதற்க்கு என்ன செய்ய? அந்தக் குரல்களையும் அறிமுகப்படுத்துங்கள் தமிழ், இந்திய, உலக சூழலிலிருந்து.

எனக்கு என் மக்களிடம் உரையாட வேண்டும். (ஆமாம்.. பெரிய புரட்சியாளன்!!) எதை பேச.. எதை விட்டுவிட எனவும் தெரியவில்லை. தெரிந்துகொண்டதும் கம்மிதான் போல. சிறுபிள்ளை கேள்விதான் ஆயினும்: என்னைப்போல ஒரு முஸ்லிமாக நீங்கள் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

அவன் பார்த்துக்கொள்வான்.. எதிர்காலம் எப்படியும் சிறப்பாக தான் அமையும், நல்லதே நடக்கும் என இருப்பதா? அல்லது  நல்வழி படுத்த நினைத்து தன்னைக் கொண்டாடிய குறைஷியரின் எதிர்ப்பையே வாங்கி கட்டிக்கொண்டாலும் பொறுமை காத்து மக்களிடம் மக்காவில் 13 ஆண்டுகள் உரையாடிய நபிகளை (காந்தி வழியில்) பின்பற்றுவதா.

நான் ஓங்கி ஒலித்து பேச போகிறேனா என்றால் தெரியவில்லை. எதிர்காலம் எப்படி அமைகிறதோ… ஆனால் பேசுவேன்-  யாரிடமாவது அல்லது  எனக்குள் & இறைவனிடம் பிரார்த்தனையாகவாவது.

மதங்கள் பிரிவடையாளம் நீங்கி ஆன்மீக ஒற்றுமை கண்டு கலந்து ஒன்றி போகும் நாள் [மறுமையில் மட்டும்தான் வாய்ப்புண்டு என விதியிருப்பினும்]  ஏற்பட வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,
சஃபீர்

***

அன்புள்ள சஃபீர்,

என் பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. முன்பென்றால் நான் சொல்வது வேறொன்றாக இருக்கும். இன்று உங்களைப் போன்றவர்கள் என் மகனின் வயது கொண்டவர்கள். ஆகவே தந்தையின் நிலையில் நின்றல்லாமல் ஒன்றையும் சொல்ல முடியவில்லை. உங்கள் முழுப்பெயரை அல்லது படத்தை போடவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. கசப்புகளும் காழ்ப்புகளும் உங்கள் மதச்சூழலில் இருந்து வந்து கொட்டும். எதிர்த்திசையில் இருந்தும் அதே காழ்ப்புகள் வந்து பொழியும். அதைவிட முற்போக்காளர்கள் உங்களை தூற்றுவார்கள். இன்றைய சூழலில் வன்முறைகூட வரலாம். அதை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும், இளையவர்கள் அவர்களுக்குரிய இனிய வாழ்க்கையில் திளைக்கட்டுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நான் திரும்பத் திரும்பச் சொல்லும் உறுதியான ஒரு கருத்துச்சட்டகம் உண்டு. அது மொத்த மதச்சூழலையும் புரிந்துகொள்ள மிக உதவியானது. மதம் என்பது மூன்று அடுக்குகள் கொண்டது. மெய்யியல், ஆசாரம் , அமைப்பு.

மதத்தின் மெய்யியலில் மூன்று உள்ளடக்கங்கள் உண்டு. ஆன்மிகம், தத்துவம், பண்பாட்டுக்கூறுகள். ஆன்மிகம் என்பது முழுமைநோக்கு, ஆழ்நோக்கு. அதை அறிவைக்கடந்த ஒன்றாக, தூய உள்ளுணர்வின் மூலம் சென்றடையக்கூடிய ஒன்றாக நான் வகுத்துக்கொள்வேன். இறையனுபவம் என்பது அதுவே. மெய்மை என்றும் முழுதறிவு என்றும் அதைச் சொல்கிறோம்.

அந்த ஆன்மிக மெய்மையை அறிவாக ஆக்கும்பொருட்டு தத்துவம் உருவாகிவருகிறது. அடிப்படை வினாக்களாகவும், அவற்றை சென்றடையும் சிந்தனை அலகுகளாகவும், அறிதல்களை விளக்கும் தர்க்கங்களாகவும் அது செயல்படுகிறது.

அந்தத் தத்துவம் நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள செயல்பாடுகளை அடையாளங்களாகவும் குறியீடுகளாகவும் ஆக்கிக் கொள்கிறது. அதன் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கையில் அது செயல்வடிவமாக ஆகிறது. அதையே பண்பாட்டுக் கூறுகள் என்கிறோம்.

மதத்தின் மெய்யியலை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் நடைமுறையாக்குவதையே ஆசாரம் என்கிறோம். ஆசாரங்கள் வழியாகவே மதம் அன்றாடத்தில் வாழ்கிறது. அந்த ஆசாரங்களை நிகழ்த்தவும் நிலைநிறுத்தவும் அமைப்புகள் உருவாகி வருகின்றன. ஆலயங்கள், மசூதிகள், திருச்சபைகள், மடங்கள் எல்லாம் அத்தகைய அமைப்புகளே.

மதத்தை ஒட்டுமொத்தமாக ஏற்பது, ஒட்டுமொத்தமாக மறுப்பது இரண்டுமே அறிவார்ந்தவர் செய்யக்கூடியது அல்ல. ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் அதன் மெய்மையை நிராகரிக்கிறார்கள். அதன் தத்துவம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை நிராகரிக்கிறார்கள். அதன் தொன்மையான உள்ளுணர்வுத் தொடர்ச்சியை நிராகரிக்கிறார்கள். அவ்வாறு நிராகரித்தால் அதன்பின் மானுடகுலத்தின் இதுவரையிலான வரலாற்றுப் பரிணாமத்தில் இருந்து எதுவுமே நமக்குக் கிடைக்காது. உள்ளுணர்வுகளின் பதிவுகள், தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவை மதம் என்னும் வடிவில்தான் உள்ளன.

இன்றைய உள்ளுணர்வின் வெளிப்பாடுகள், தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் வேர்கள் அந்த தொன்மையின் தொடர்ச்சியில்தான் உள்ளன. இன்றிருக்கும் அறம், இன்றைய தத்துவ சிந்தனைகள், கலைகள் ஆக அனைத்துமே அவற்றின் நீட்சியாகவே வரமுடியும். நேற்றை வெட்டிவிட்டு இன்று ஒன்றையும் உருவாக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது.

ஒரு தனிமனிதனின் அகம் என்பதே பல ஆயிரமாண்டுகளாக உருவாகி வந்திருப்பதுதான். ஆழ்படிமங்களாக, பண்பாட்டுக்கூறுகளாக, மொழிக்கூறுகளாக அவனுள் அது உருவாகியிருக்கிறது. அவையனைத்தும் நேற்றுவரை மதங்களாகவே இருந்தன. மதம் என்னும் வடிவிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே மதத்தை துறப்பது எல்லாம் ஒரு வகையான பாவனைகள் மட்டுமே. இளமையின் முதிர்ச்சியின்மையில் அப்படி ஒருவர் பாவனை செய்வதை மன்னிக்கலாம்.

ஒட்டுமொத்தமாக மதத்தை துறக்கமுடியாது. அதிலிருந்து மெய்மை, தத்துவம், பண்பாடு மூன்றும் நமக்கு வேண்டும். அதேபோல மதத்தை ஒட்டுமொத்தமாக, அப்படியே ஏற்பதும் அது மாற்றமே அற்றது என நினைப்பதும் அபத்தமானது. மதம் என்பது அதன் மெய்மையும் தத்துவமும் பண்பாடும் மட்டும்தான். ஆசாரமும் அமைப்பும் மெய்யியலின்  ஊர்திகள்தான். அவை அந்தந்த காலகட்டத்திற்குரிய பாத்திரங்கள். காலம் மாறும்போது அவை மாற்றப்படவேண்டியவை. மாறாவிட்டால் உள்ளடக்கத்தை அவை தேங்கவைக்கும், திரிபடையச்செய்யும்.

திரும்பத் திரும்ப எல்லா ஞானிகளும் சொல்வது இதையே. சாராம்சத்தை வலியுறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கலத்தை, ஊர்தியை மாற்றிக்கொள்ளும்படிச் சொல்கிறார்கள். ஆனாலும் சாமானியர்களுக்கு அது எளிதல்ல. அவர்கள் கண்கூடாக காண்பது மதம்சார் அமைப்புகளை. அவர்கள் அறிந்து பழகியிருப்பது ஆசாரங்களை மட்டுமே. ஆகவே அவையே மதம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பால் சென்று மதத்தின் பண்பாட்டுக்கூறுகளை, தத்துவத்தை, மெய்மையை அடைய அவர்களால் எளிதில் இயல்வதில்லை.

ஆனால் சென்றகாலங்களில் ஞானிகளால் மெல்லமெல்ல எளிய மதநம்பிக்கையாளர்களைச் சென்றடைய முடிந்தது. சென்ற நூற்றாண்டு வரை மதம் வளர்ச்சியடைந்து மாற்றமடைந்து கொண்டேதான் இருந்தது. எந்த மதத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய ஞானிகளை பார்க்கலாம். தமிழகத்திலேயே தாயுமானவர் முதல் வள்ளலார் வரை ஒரு நிரை இந்துமதத்தில் உள்ளது. சதக்கத்துல்லா அப்பா முதல் பீர்முகமது அப்பா வரை ஒரு நிரை இஸ்லாமிய மதத்திலும் உள்ளது.

மதம் மாற்றத்தை மறுப்பதாக ஆனது நவீன காலகட்டத்தில்தான். மதவெறி என்றுமுண்டு. ஆனால் மத அடிப்படைவாதம் என்பது ஒரு நவீனகால கருத்துரு. மதப்பழமைவாதம் வேறு மத அடிப்படைவாதம் வேறு. இதை விரிவாக எழுதியிருக்கிறேன். மதப்பழமைவாதம் ஒரு தேங்கிப்போன நம்பிக்கை மட்டுமே. மதஅடிப்படைவாதம் என்பது நவீன மொழியில் பேசுவது, கற்றவர்களிடமிருந்து உருவாவது. அது முதன்மையாக மதத்தை ‘சீர்திருத்தும்’ பாவனை கொண்டது. அந்தச் சீர்திருத்தம் என்பது மதத்தின் நெகிழ்வுகளையும், ஜனநாயகப் பண்புகளையும், உள்விரிவுகளையும் அழித்து அதை ஒற்றைப்படையான இறுக்கமான அமைப்பாக ஆக்கும்பொருட்டு மட்டுமே.

மத அடிப்படைவாதம் எவ்வகையிலும் மதம்சார்ந்த இயக்கம் அல்ல. அது முழுக்க முழுக்க அதிகார நோக்கம் கொண்ட அரசியலியக்கம் மட்டுமே. நவீன ஜனநாயகம் உருவான பிறகுதான் அது உருவாகிறது. சொல்லப்போனால் அது நவீன ஜனநாயகத்தின் எதிர்விளைவு. ஜனநாயகத்தில் மக்களிடம் அதிகாரம் உள்ளது. மக்களைத் திரட்டுபவர் அதிகாரத்தை அடைவார். மக்களை திரட்ட இலட்சியக்கனவுகள், பொதுவான நோக்கங்கள், கூட்டுநலன்கள் ஆகியவை நேர்நிலை வழிகள். மொழி, இனம், மதம் ஆகிய பொது அடையாளங்களைப் பயன்படுத்தி வெறியை ஊட்டி எதிரிகளை கற்பித்து மக்களை ஒருங்கிணைப்பது எதிர்மறை வழி.

ஹிட்லரும் முஸோலினியும் இனவெறியை பயன்படுத்தினர். இனத்தின் இடத்தில் மதத்தை வைத்தால் அது மத அடிப்படைவாதம். அதன் நோக்கம் அரசியல், பொருளியல் அதிகாரத்தை அடைவது மட்டுமே. அது மதத்தை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும், மதத்தைச் சீர்திருத்துவதாக பாவனை செய்யும். ஆனால் அது மதத்தை பயன்படுத்துமே ஒழிய அதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிகாரத்திற்குத் தேவை என்றால் மத அடிப்படைவாதம் அந்த மதத்தையே அழிப்பதையும் கவலைகொள்ளாது. உதாரணம் தாலிபான். அவர்களுக்கு சீன ஆதரவு வேண்டும், உய்குர் இஸ்லாமியர் கூண்டோடு அழிந்தாலும் கவலை இல்லை.

மதத்தை அரசியலதிகாரமாக பயன்படுத்தும் அடிப்படைவாதிகளுக்கு மதத்தின் அமைப்புகளும் ஆசாரங்களும்தான் தேவை. ஏனென்றால் அவை வெளிப்படையான தூலமான அடையாளங்கள். அவர்கள் செய்வது அடையாள அரசியல். மதம் அந்த அடையாளங்களால் ஆன ஓர் அமைப்பு அல்ல. மதத்தின் மெய்மை எப்போதுமே அதிகாரக் கட்டமைப்புகளுக்கு அப்பால்தான் இருக்கும். அதன் தத்துவம் பண்பாடு இரண்டுமே சுதந்திரமானவை. ஆகவே மத அடிப்படைவாதிகள் எவராயினும் அந்த மதத்தின் மெய்மைக்கு எப்போதுமே எதிரானவர்கள். அவர்கள் மதத்தை ஆசாரமாகவும் அமைப்பாகவும் மட்டுமே நிலைநிறுத்திக்கொண்டு அதிகாரத்தின் அடித்தளமாக அவற்றை மாற்றவே முயல்கிறார்கள்.

அதிகார நோக்கு கொண்ட மதவாதம் மிகத்தீவிரமானது. அது மூன்று அடிப்படைகளில் செயல்படுகிறது. தங்கள் மக்களை எளிய அடையாளங்களின் அடிப்படையில் திரட்டுகிறது. அதே போல சில அடையாளங்களின் அடிப்படையில் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுக்கவைக்கிறது. தாங்களே ரட்சகர் என நினைக்கச் செய்கிறது. எல்லா மதங்களிலும் இதுவே வழி. அந்த தீவிரம் எளியோரை மிக எளிதாக ஈர்த்துக்கொள்கிறது. அவர்களுக்கு திரளுணர்வை, பாதுகாப்புணர்வை, போராட்ட உணர்வை உருவாக்குகிறது.

இஸ்லாமின் நவீனயுக வரலாற்றைப் பாருங்கள்.அது அடிப்படைவாதமாக ஆனது முழுக்க முழுக்க அதிகார அரசியலை இலக்காக்கிய நவீன இயக்கங்கள் வழியாகத்தான். இஸ்லாம் மதத்தின் மெய்யியலுக்கும் அந்த அடிப்படைவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாம் என்னும் அடையாளம் மக்களை தொகுத்து அதிகாரத்தை அடைவதற்கான கருவியாக ஆகியது. அவர்களுக்கு ஆன்மிகம், தத்துவம், பண்பாடு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. ஆசாரங்களும் அமைப்புகளும் மட்டுமே அவர்களுக்குத் தேவை.

இருநூறாண்டுகளில் கீழைஉலகமெங்கும் உருவான வெவ்வேறு அரசியலியக்கங்கள்தான் இஸ்லாமிய மதவெறியை உருவாக்கி நிலைநிறுத்தி அதை அதிகாரத்திற்கான படிகளாக ஆக்கிக்கொண்டன. வஹாபிய, சலாஃபிய இயக்கங்கள் அவற்றின் இன்றைய நீட்சிகள்தான். ‘நாம் x பிறர்’ என்பதே அவற்றின் இயக்கவியல். ஆகவே நாம் என்பதை வலுவான மாறாத அடையாளங்களுடன் வரையறை செய்துகொள்வது அவற்றின் வழி. பிறரை எதிர்த்தரப்பாக கட்டமைத்துக் கொள்ளும். பிறர்மேல் விலக்கம் அவற்றின் அடிப்படைச் செயல்முறை. அதை பிறர்மீதான அச்சம், காழ்ப்பு ஆக மாற்றிக்கொண்டே இருந்தாலொழிய அவை அதிகாரத்தை அடையமுடியாது.

ஆகவே எல்லாவகையான உரையாடல்களையும் அவை வெறுக்கும். உரையாட வருபவர் எவரானாலும் அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், ஏமாற்ற முயல்கிறார்கள் என்று சித்தரிக்கும். எல்லாவகையான சமரசப்போக்குகளையும்  துரோகம் என வரையறுக்கும் ஒத்துவாழ்தல், இசைந்துபோதல் என்பவை எல்லாம் அடிபணிதல், தோல்வியடைதல் என்று விளக்கும். தன்னை முன்வைத்து பிற அனைத்தையும் மறுத்தலே அவற்றின் வழி.

மத அடிப்படைவாதத்தின் சொல்லாடல்கள் மிக எளியவை. அவர்கள் தங்கள் மதத்தினரை பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிப்பார்கள். ஆழமான தன்னிரக்கத்தின் மொழியில் பேசுவார்கள். கூடவே தங்களை அசாதாரணமானவர்கள், தோற்கடிக்க முடியாதவர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வெற்றிபெற்றே ஆகவேண்டியவர்கள் என்றும் சித்தரித்துக் கொள்வார்கள். கழிவிரக்கமும் உயர்வுமனநிலையும் ஒரே இடத்தில் முயங்குவது அடிப்படைவாதத்தில் மட்டுமே.

அடிப்படைவாதத் தரப்புகளுக்கு பொதுஎதிரி மறுபக்கத்திலுள்ள அடிப்படைவாதி அல்ல. ஏனென்றால் அவர் இவரை வலுவாக்குபவர். அவர் வரையறுக்க எளிதானவர். ஆகவே உண்மையில் அவர் ரகசிய நண்பர். இஸ்லாமிய அடிப்படைவாதிக்கு இந்து அடிப்படைவாதியைப் போல உதவியான இன்னொருவர் இல்லை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான எதிரி சமரசத்தையும், உரையாடலையும் இணைவாழ்வையும் முன்வைப்பவர்தான்.

ஒருவரை ஒருவர் எதிர்க்கும் எல்லா அடிப்படைவாதத் தரப்புகளும் சேர்ந்து அவரையே முதல் எதிரியாக சித்தரிக்கும். அவர் விலைபோய்விட்டவர் என அவர் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படைவாதிகள் சொல்வார்கள். அவர் சூழ்ச்சிக்காரர் பசப்புக்காரர் என மாற்றுமதத்தினர் சொல்வார்கள். காந்தி வாழ்நாள் எல்லாம் அவ்வாறுதான் வசைபாடப்பட்டார். இறந்தபின் பன்மடங்கு வசைபாடப்படுகிறார். நடுநிலையில் இருப்பவர்கள் சிலுவையிலேற்றப்படும் காலம் இது. ஆனால் வேறுவழியில்லை, அவர்களிடமே தீர்வு உள்ளது.

இன்றைய சூழலில் எல்லா தரப்பிலும் அடிப்படைவாதம் இறுகிக்கொண்டே செல்கிறது. இதில் எவரை குற்றம்சாட்டினாலும் நீங்கள் அடுத்த தர்ப்பினராக ஆகிவிடுவீர்கள். அடிப்படைவாதத்தின் நுட்பமான ஆற்றல் இதுவே. அது எல்லா மறுப்புகளையும் ஐயங்களையும் எதிரிகளின் சூழ்ச்சியாகச் சித்தரிக்கிறது. ஆகவே அதனுடன் சற்று மாறுபட்டு விவாதித்தாலே நீங்கள் எதிரியோ எதிரியின் கையாலோ ஆகிவிடுவீர்கள். அவர்களை எதிர்க்க எதிர்க்க அவர்கள் வலுவடைவார்கள். எப்படி தர்க்கபூர்வமாக வாதிட்டாலும் சரி.

ஆகவே செய்யக்கூடுவது ஒன்றே. தொடர்ச்சியாக உரையாடல்வெளியை உருவாக்கிக்கொண்டே இருப்பது. பொதுக்களங்களை முன்வைத்துக் கொண்டே இருப்பது. ஒன்றையொன்று முரண்பட்டு வெறுக்கும் தரப்புகள் நடுவே ஒரு சந்திப்புப் பகுதியை கண்டடைவது. எல்லா தரப்பிலும் வாழவிரும்பும் எளியோரும், கற்றறிந்தவர்களும் சமரசத்தையே விரும்புவார்கள். அவர்களுக்கு இடம் உருவாக்கி அளிப்பது. அதற்கு எல்லா தரப்பிலுமுள்ள ஞானிகளை, அறிஞர்களை பயன்படுத்திக் கொள்வது. எவரையும் எதிக்காமல், எவருடனும் மோதாமல் இதை நேர்நிலைச் செயல்பாடாகச் செய்துகொண்டே இருப்பது.

இன்றைய அரசியல்களத்தில் மிகச்சோர்வூட்டுவது இந்துத்துவ அடிப்படைவாதமோ இஸ்லாமிய அடிப்படைவாதமோ அல்ல. இங்கே உண்மையில் அவற்றுக்கு எதிராகச் செயல்படும் சக்திகள் ஏதுமில்லை என்பதே வருந்தத் தக்கது. அடிப்படைவாதத்திற்கு எதிராக நிலைகொள்ள வேண்டியவை தாராளவாதமும் இடதுசாரிச் சிந்தனைகளும். ஆனால் இங்குள்ள தாராளவாதிகளும் இடதுசாரிகளுமே இன்று அடிப்படைவாதத்தை மறைமுகமாக வளர்ப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களின் இலட்சியவாதம் அற்ற வம்புப்பூசல் மனநிலையும், சில்லறை வாக்குகளுக்காகச் சோரம்போகும் நிலையுமே உண்மையில் அடிப்படைவாதங்களை எதிர்ப்பில்லாதவையாக வளர்க்கின்றன.

இங்கே இந்துத்துவ அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என சொல்லும் தாராளவாதிகளும் இடதுசாரிகளும் செய்யவேண்டியது என்ன? மதத்தின் ஆன்மிகம், தத்துவம், பண்பாடு ஆகியவற்றுக்கும் அதன் ஆசாரங்களையும் அமைப்பையும் பயன்படுத்திக்கொண்டு வளரும் அடிப்படைவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி நிலைநாட்டவேண்டும். மதம் வேறு மத அடிப்படைவாதம் வேறு என்பதை கூவிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் மத அடிப்படைவாதம் தன்னை மதம் என்றே சொல்லிக்கொள்ளும். மதத்தைக் காக்கவே செயல்படுவதாக காட்டிக்கொள்ளும். மதநம்பிக்கையாளர்கள் அனைவரையும் அடிப்படைவாதிகளாக ஆக்க முயலும். அதை எதிர்கொள்ள ஒரே வழி இந்த வேறுபாட்டை நிறுவுவதுதான்.

ஆனால் இவர்கள் செய்வதென்ன? மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மதத்தை எதிர்க்கிறார்கள். மதத்தை எதிர்ப்பது பிழை அல்ல. அதற்குச் சிந்தனையில் ஓர் இடம் உண்டு. அது ஒரு இன்றியமையாத தரப்பு. ஆனால் மதவாதத்தை எதிர்க்கும்பொருட்டு மதத்தை எதிர்ப்பது மதவாதிகள் தங்கள் மதம் தாக்கி அழிக்கப்படுவதாகச் சொல்லும் வாதத்துக்குத்தான் வலுச் சேர்க்கும். அவர்களின் அரசியலுக்கு நேரடியாகவே உதவும். மதத்தை ஆய்வுநோக்கில் அணுகுவதும், பகுத்தறிவுநோக்கில் எதிர்ப்பதுமே மத எதிர்ப்பாளர்கள் செய்யவேண்டியது. மதச்செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவது, மதநம்பிக்கையை இழிவுசெய்வது, மத அடையாளங்களை சிதைப்பது, மதக்கொள்கைகளை திரிப்பது எல்லாம் மத எதிர்ப்பு அல்ல. மதவாத அரசியலுக்கு நீரூற்றுவதுதான்.

இந்தியச் சூழலில் தொடர்ச்சியாக இந்த மதஇழிவுபடுத்தலையே இங்குள்ள தாராளவாதிகளும் இடதுசாரிகளும் செய்துவருகிறார்கள். ஒரு கட்டத்தில் அது ஒரு நிறுவனச் செயல்பாடுபோலவே நடந்தது என்பதே கசப்பூட்டும் உண்மை. ஏனென்றால் இந்துமதம் உறுதியான நிறுவன அமைப்பு கொண்டது அல்ல. அது ஒற்றைச்சக்தியாக திரட்டப்படவில்லை. ஆகவே இழிவுபடுத்தல்கள், திரிபுகளை எதிர்க்க அதனால் முடியவில்லை. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் வலுவான நிறுவன அமைப்பு கொண்டவையாக இருந்தன. அவற்றின்மீதான சிறு விமர்சனமும் அமைப்புரீதியாக எதிர்கொள்ளப்பட்டது. ஆகவே இந்திய அறிவுச்சூழலில் இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி வரலாற்றுரீதியான சிறு விமர்சனம்கூட பதிவாகவில்லை. அதோடு இந்தியச் சட்டங்களும் சிறுபான்மை நலன்களைப் பாதுகாப்பது என்னும் கோணத்தில் அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கின்றன.

இன்னொன்று, மதமாற்ற நோக்குடன் இந்தியாவுக்குள் வரும் பெரும் நிதி. அது கல்வித்துறை வழியாக அறிவுச்சூழலுக்குள் பெய்யப்பட்டது. அது உருவாக்கிய விளைவுகள் மிகமிக மோசமானவை. இந்து மதம் மீதான வசைகள், அவமதிப்புகளுக்கு அறிவுத்தளத்தில் வெகுமதிகள் இருந்தன. அவையே தாராளவாத முற்போக்குச் செயல்பாடுகள் என கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டன. அப்படி ஓர் அரைநூற்றாண்டு இங்கே கடந்திருக்கிறது. இந்த மாபெரும் சிறுமையின், வரலாற்றுப் பிழையின் விளைவே இன்றுள்ள இந்துத்துவ அடிப்படைவாத அரசியல். இன்று ஒவ்வொரு சராசரி இந்துவுக்கும் இந்திய தாராளவாதிகள், இடதுசாரிகள் மேல் இக்கசப்பு உள்ளது. இவர்கள் இந்துமதத்தை மட்டுமே இழிவுசெய்பவர்கள் என்னும் வரியைச் சொல்லாதவர்கள் மிகமிகக்குறைவு.

இந்த வரலாற்றுப்பிழையை சீரமைக்க வேண்டிய காலம் இது. இன்று இந்துமதம் வேறு இந்துமத அடிப்படைவாத அரசியல் வேறு என தாராளவாதிகள் நிறுவவேண்டும். இந்து அடிப்படைவாதத்தை தாக்கும்போது அது மதஎதிர்ப்பாக ஆகாமல் பார்க்கவேண்டும். மறுபக்கம் அதேபோல எல்லா அடிப்படைவாதங்களையும் எதிர்க்கவேண்டும். அது ஒரு கொள்கை நிலைபாடாக இருக்கவேண்டும். ஆனால் என்ன நிகழ்கிறது? தாராளவாதிகளும் இடதுசாரிகளும் இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்துமதத்தை இழிவுசெய்கிறார்கள். அதை இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு அவர்களின் மேடைகளில் சென்று நின்று செய்கிறார்கள். இதைவிட அடிப்படைவாதத்துக்கு நெய்யூற்றி எரியவிடும் செயல் வேறேதாவது உண்டா?

இங்கே விவேகத்தின் மொழியில் பேசும் தாராளவாத, இடதுசாரிக் குரல்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. இதுவே இன்றைய அரசியலின்  பேரிழப்பு. இன்று இரு வகையான குரல்களே தாராளவாத இடதுசாரி தரப்பிலிருந்து எழுகின்றன. ஒன்று, செயற்கையான மேட்டிமைவாதம் பேசும் ஒரு தரப்பு. ஆங்கில ஊடகங்களில் நிறைந்திருப்பவர்கள். அத்தனை ஊடகங்களையும் ஆக்ரமித்திருக்கும் அற்பவம்பாளர்கள், தெருச்சழக்காளர்கள் இன்னொரு தரப்பு. மேட்டிமைபேசும் தரப்புக்கு சுயசிந்தனை இல்லை, அறநிலைபாடும் இல்லை, அவர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மட்டுமே முக்கியம். விளைவாக எந்தவகையான அடிப்படைவாதத்திற்கும் இன்று ஆக்கப்பூர்வமான எதிர்ப்பே இல்லை. இருப்பது அடிப்படைவாதிகள் விரும்புகிற, அவர்களை வளரச்செய்கிற போலி எதிர்ப்பு மட்டுமே.

இந்தியாவில் நான் எதிர்பார்ப்பது மதவாத அரசியலின் பொறியில் சென்று சிக்காமல் பொருளியல் வளர்ச்சியை, பண்பாட்டு உரையாடலை மட்டுமே முன்வைக்கும் ஓர் அரசியலியக்கத்தை. எதிர்ப்பு அடிப்படைவாதத்தை வளர்க்கும், எங்களை எதிர்க்கிறார்கள் என்பதுதானே அவர்களின் அரசியலே. மாற்றுகளை முன்வைப்பதே அதை எதிர்ப்பதற்கான வழி. இந்தியாவில் இன்றைய சூழலில் இந்து -இஸ்லாமிய உரையாடலுக்கான எத்தனை மேடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும், எத்தனை களங்கள் உருவாகியிருக்க வேண்டும், எத்தனை குரல்கள் ஒலித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதுமில்லை. இவர்களை எதிர்க்க அவர்களுடன் சேர்ந்துகொள்ளும் அரசியலே உள்ளது. இது ஓர் வரலாற்று இக்கட்டு.

இச்சூழலில் நாம் செய்யக்கூடுவது என்ன? எந்த அறிவியக்கவாதியும் செய்யவேண்டியது ஒன்றே. திரும்பத்திரும்ப உரையாடலின், சமரசத்தின் வழியை முன்வைப்பது. நீங்களே பாருங்கள், ‘நடுநிலைநக்கிகள்’ என வசைபாடப்படுபவர்கள் உரையாடலையும் சமரசத்தையும் முன்வைப்பவர்கள்தான். எங்கும் நடுநிலையாளர்களை பலிகொடுத்த பின்னரே குருதி சிந்தப்படுகிறது.

இஸ்லாமியர்கள் இன்று செய்துகொண்டிருக்கும் பிழைகள் என்னென்ன? மத அமைப்பையும் மத ஆசாரங்களையும் மட்டுமே மதம் என நினைப்பது. அதையன்றி எதையுமே அறியாமலிருப்பது. மத அமைப்பை நடத்துபவர்களிடம் மதத்தின் முற்றதிகாரத்தை அளித்துவிடுவது. அதன் வழியாக சமூகத்தின் மொத்த அதிகாரத்தையே அவர்களிடம் அளித்துவிடுவது. மதத்தின் ஆன்மிக, தத்துவ, பண்பாட்டுச் சாரத்தைச் சொல்லி அதன் அமைப்பு, ஆசாரங்களிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டும் மெய்யியலாளர்கள் எவருமே கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்த மதஆதிக்கம் உடனடியாக அரசியல்சார்ந்த ஆதிக்கமாக மாற்றப்படுகிறது. அதன்பின் அந்த ஆதிக்கவாதிகள் பேசுவது எதுவோ அதுவே அந்த மதத்தின் குரல் என ஆகிவிடுகிறது. அவர்கள் இரண்டு குரல்களில் பேசுகிறார்கள். ஒன்று, மற்ற மதத்தவரை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். மற்றமதத்தை வெல்வோம் அழிப்போம் என வஞ்சினம் உரைக்கிறார்கள். உலகையே கைப்பற்றுவோம் என முழக்கமிடுகிறார்கள். கூடவே அவர்களே இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, இஸ்லாமியர் அழிகிறார்கள் என்றும் பேசுகிறார்கள். தன்மூப்பு தன்னிரக்கம் இரண்டுமே மாறிமாறி முன்வைக்கப்படுகின்றன.

இன்றைய சூழலில் எந்த மதமும் இன்னொரு மதத்தை எதிர்த்தும் இழித்தும் பேசுவதென்பது மிகப்பெரிய அழிவுச்செயல்பாடுதான். தனது தரப்பை முன்வைக்கலாம். ஆனால் தொடைதட்டுவது வஞ்சினம் உரைப்பது கொக்கரிப்பது எல்லாமே அழிவுக்கு கொண்டுசெல்வன. அவ்வாறு செய்பவர் எந்த மதத்தவர் ஆனாலும் அந்த மதத்திற்கு நல்லது செய்யவில்லை. இஸ்லாமியர் சென்ற சில ஆண்டுகளில் தமிழகத்தில் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் இந்து அடையாளங்களை இழித்தும் பழித்தும் அவர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மிக ஆழமான கசப்பை இந்துக்களிடம் உருவாக்கியிருக்கின்றன. நடுநிலை இஸ்லாமியர் இதை உணர்ந்தாகவேண்டும்.

இங்குள்ள போலிநாத்திகர்கள், மதமறுப்பாளர்களின் மேடையில் தோன்றுவதை, அவர்களை தங்கள் மேடையில் ஏற்றுவதை இஸ்லாமியர் செய்யும்வரை அவர்கள்மேல் ஆழ்ந்த அவநம்பிக்கையும் கசப்பும்தான் எஞ்சும். அதை இந்துத்துவ அரசியல் தனக்காகப் பயன்படுத்திக்கொண்டு வளரும். ஒருவர் மதமறுப்பாளர் என்றால் அவரிடம் இஸ்லாமியருக்கு என்ன உறவு இருக்கமுடியும்? இஸ்லாமியரின் மேடையில், இஸ்லாமியர் அமர்ந்த மேடையில் ஒருவர் இந்துமதத்தை இழித்துப் பேசுகிறார் என்றால் அதன் விளைவு என்ன? இஸ்லாமியரின் குரலாகவே அது கொள்ளப்படும். அது மதவெறுப்பாக விளக்கப்படும். அதுதான் இங்கே நிகழ்கிறது.

இன்றைய சூழலில்  விவேகம் கொண்ட ஓர் இஸ்லாமியர் செய்யக்கூடுவன சில உள்ளன. இஸ்லாமின் ஆன்மிக, தத்துவ, பண்பாட்டுக்கூறுகளை முன்வைப்பது. அதன் அமைப்போ ஆசாரமோ அல்ல உண்மையான இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பது. மதத்தை அரசியலதிகாரத்திற்கான கருவியாக ஆக்கிக்கொள்பவர்களை அடையாளம் காட்டுவது. மதவாதம் என்பது மதச்செயல்பாடு அல்ல, வெறும் அரசியல் செயல்பாடு மட்டுமே என தெளிவுபடுத்திக் கொண்டே இருப்பது. எவ்வகையிலும் இன்னொரு மதத்திற்கு எதிரான காழ்ப்புகளை, எதிர்ப்புகளை ஏற்கவோ ஊக்குவிக்கவோ செய்யாமலிருப்பது. அது அழிவைநோக்கிக் கொண்டு செல்வது என்பதை மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருப்பது. இஸ்லாமிய மதவெறி சார்ந்த எக்குரலுக்கும் எதிர்க்குரல் ஒன்று இஸ்லாமிலேயே உள்ளது என்று வெளிப்படுத்துவது.

செய்யக்கூடாதவை என்ன? மதங்களுக்கிடையேயான உரையாடலை பொதுவெளியில் நிகழ்த்தலாகாது. அந்த உரையாடல் மதப்பற்று கொண்டோர் செய்யக்கூடியது அல்ல அது. மதம்கடந்த மெய்மையை உணர்ந்த அறிவோர் உரையாடவேண்டிய தளம் அது. நித்ய சைதன்ய யதிக்கும் அப்துல் சமத் சமதானிக்கும் நடுவே உரையாடல் நடக்கலாம். முகநூலில் சழக்குபேசுபவர்கள் நடுவே அவ்விவாதம் நிகழலாகாது. அத்தகைய விவாதங்கள் அனைத்தையும் தவிர்த்தாகவேண்டும்.

எதிர்ப்புச் செயல்பாடுகள் பொருளற்றவை. எவரையும் எதையும் எதிர்த்து எதையும் சொல்ல வேண்டியதில்லை. இன்றைய சூழலில் இந்துமதச்சூழலில் எதிர்ப்புச்செயல்பாடுக்கு, கண்டனச் செயல்பாடுகளுக்கு ஓர் இடம் உள்ளது. ஆகவே நான் மத அடிப்படைவாதம், மத ஆசாரவெறி ஆகியவற்றுக்கு எதிராக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவுசெய்கிறேன். இன்றைய இஸ்லாமியச் சூழலில் அதற்கு இடமில்லை. இஸ்லாமியர் தங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற தன்னிரக்கம், தாங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்னும் மேட்டிமைத்தனம் இரண்டிலும் சிக்கியிருக்கிறார்கள். ஆகவே எது நேர்நிலையாக சொல்லப்படவேண்டுமோ அதை மட்டுமே சொல்லவேண்டும். அதையும் மென்மையான, தர்க்கரீதியான மொழியில் சொல்லவேண்டும். எதிர்க்கப்பட்டால் மறுப்பு தெரிவிக்கக்கூடாது. விவாதமே கூடாது. சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

அதுதான் இன்னொருவகையில் இந்துக்களிடமும் நான் சொல்வேன். இந்துத்துவம் என்பது அரசியல். அதற்கு இந்துமதத்தின் அமைப்புகளும் அடையாளங்களும் மட்டுமே தேவை. அதை எதிர்க்கும் வழி என்பது இந்துமெய்மையை, இந்து தத்துவத்தை, இந்துப் பண்பாட்டை முன்வைப்பதுதான். அது வேறு என நிலைநாட்டுவதுதான். எந்நிலையிலும் சமரசத்தின் உரையாடலின் வெளி ஒன்றை உருவாக்கி நிலைநாட்டிக்கொண்டே இருக்க முயல்வதுதான். இந்தக் காலகட்டம் அழிவுகளின்றி கடந்துசெல்லட்டும். வருந்தலைமுறையினர் இந்த வெறிகளுக்கு அப்பால் நின்றிருப்பார்கள் என நம்புவோம்.

ஜெ

சவரக்கத்திமுனைப் பாதை

இந்துமதமும் ஆசாரவாதமும்

அடிப்படைவாதம் பற்றி…

ஃபாஸிசம், தாராளவாதம்

காந்தி, கிலாஃபத், தேசியம்

முந்தைய கட்டுரைஅந்தக்குரல்
அடுத்த கட்டுரைநூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்