பயிற்சிகள் உதவியானவையா?
அன்புள்ள ஜெ,
பயிற்சிகள் உதவியானவையா என்னும் கட்டுரை கண்டேன். நீங்கள் அத்தகைய பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? அவை உதவியானவை என நேரடியக உணர்ந்திருக்கிறீர்களா?
ராஜா சிவக்குமார்
அன்புள்ள ராஜா,
நான் ஒன்றைச் சொல்கிறேன் என்றால் அது பெரும்பாலும் என் சொந்த அனுபவம் அல்லது நான் கண்ட அனுபவமாகவே இருக்கும். நான் அனுபவங்களுக்காக என்னை திறந்துகொண்டவன். அனுபவங்களைத் தேடிச்செல்பவன்.
நான் பள்ளிப்பாடங்களுக்கு வெளியே தமிழை முறையாக கற்றவன். பழைய முறைப்படி ஆசிரியர் வீட்டுக்குச் சென்று பாடம் கேட்டிருக்கிறேன். அன்று தொடங்கிக் கற்பதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை. எல்லாமே உதவியாக இருந்துள்ளன. நான் சுயம்பு, ஏற்கனவே பெரியஆள் என்று எப்போதும் தயங்கியதில்லை. எந்தக்கூச்சமும் அடைந்தது இல்லை. என் தனித்திறன் என்ன என எனக்குத் தெரியும். அது மிக அசாதாரணமானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எந்தப் பயிற்சியையும் தவிர்த்ததில்லை.
என்னென்ன பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்? இளமையில் போர்க்கலை வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அது அக்கால குமரிமாவட்டத்து வழக்கம்.பின்னர் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நடத்திய பேச்சு – பொது உரையாடல் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கேதான் ஒரு ஸ்காட்டிஷ் கிறிஸ்தவப் போதகர் நவீனக் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித்தந்தார். உடலை ஒவ்வொரு நாளும் கண்ணாடியில் பார்க்கவேண்டும், தேமல் போன்றவை தெரிந்தால் தொடக்கத்திலேயே மருத்துவம் பார்க்கவேண்டும் என்று அவர் சொன்னது அன்று ஒரு திகைப்பூட்டும் அறிதலாக இருந்தது.
“வியர்வையுடன் ஓரு மூடிய அறைக்குள் நுழையவே கூடாது. வியர்வை ஆற ஐந்து நிமிடம் நின்றுவிட்டு நுழையுங்கள். இல்லையேல் முதல் கணத்திலேயே உங்கள் மேல் ஒவ்வாமையை உருவாக்கிக் கொள்வீர்கள். செருப்பு பழையதாக இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஓர் உள்ளுணர்வால் மனிதர்கள் பிறருடைய செருப்பை கவனிக்கிறார்கள்”. அந்த துரை மழலைத்தமிழில் பேசிய சொற்கள் அப்படியே நினைவிலிருக்கின்றன. எனக்கு அது நவீன உலகுக்குள் நான் நுழைவதற்கான முதல் காலடி.
“எந்நிலையிலும் இன்னொருவருடைய உடையைப் பற்றி எதிர்மறையாக ஏதும் சொல்லாதீர்கள். அவர்கள் மேல் உரிமை எடுத்துக்கொண்டு எதையும் கேட்காதீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் உணவு தேவையில்லை என்றால் அன்பாக மறுக்கலாம். ஆனால் அதன் தரம் பற்றிய குறையைச் சொல்லவே கூடாது. பலர் சாப்பிடும் இடத்தில் உணவின் சுவை, தரம் பற்றிய எதிர்மறைக் கருத்தைச் சொல்லாதீர்கள். அது கெட்டுப்போன உணவென்றால் மட்டும் சொல்லுங்கள். உங்களைவிடப் பெரியவர்களை நீங்கள் என நேராகச் சுட்டுவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்” இதெல்லாம் அவர் அன்று சொன்னபோது இந்தியப்பண்பாட்டையே மறுப்பதாக அமைந்தது.
முழுக்கோடு, மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ நிறுவனங்கள் அன்று மிக ஆக்கபூர்வமான அமைப்புகளாக இருந்தன. ஆண்டுதோறும் கோடைவிடுமுறையில் அவர்கள் நடத்தும் பயிற்சிவகுப்புகள் மிகப்பெரிய அளவில் ஆளுமைவளர்ச்சி அளிப்பவை. எனக்கு மின்சாரத்தின் அடிப்படைகளை அங்கேதான் சொல்லித்தந்தனர். ஃப்யூஸ் போட அங்கேதான் கற்றேன். ஸ்பானர், ஸ்க்ரூடிரைவர் போன்ற எட்டு கருவிகளை கையாள்வதற்குக் கற்றுத்தந்தனர்.
எண்பதுகளில் திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேராசிரியர் நாராயணபிள்ளை நடத்திய தமிழ் அடிப்படை இலக்கணப் பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அங்கே வேதசகாயகுமார் எனக்கு வகுப்பு எடுத்திருக்கிறார். கோழிக்கோடு பல்கலையில் சம்ஸ்கிருத அடிப்படைப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். ’ஆயிரம் சம்ஸ்கிருத வார்த்தைகள்’ என ஒரு பயிற்சி வகுப்பு மொழிகள் பற்றிய என்னுடைய பார்வையையே மாற்றியமைத்தது. கண்ணாடி மாற்றினால் சட்டென்று ஒரு தெளிவு வருமே அதுபோல. அதன்பின்னர்தான் பழைய மலையாள இலக்கியத்திற்குள்ளேயே நுழைய முடிந்தது.
முரளிதரன் மாஸ்டர் முன்னெடுப்பில், காசர்கோடு ஃபிலிம் சொசைட்டி சார்பில், விமர்சகர் சானந்தராஜ் நடத்திய சினிமா பார்ப்பதற்கான பயிற்சிமுகாம்கள் நான்கில் கலந்துகொண்டிருக்கிறேன். உலகசினிமாவின் வரலாற்று வரைபடமே அப்போதுதான் கிடைத்தது. ஒன்றில் ஜான் ஆபிரகாம் வந்து அமர்ந்திருந்தார். மூத்த மலையாள எழுத்தாளர்கள் நடத்த, மலையாள மனோரமா இதழ் ஒருங்கிணைத்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறைகள் இரண்டில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு பட்டறையில் வகுப்பு ஒன்றை நடத்தியவர் எம்.டி.வாசுதேவன் நாயர்.
நாகர்கோயிலிலும் திரிச்சூரிலும் கேரள சாகித்ய அக்காதமி நடத்திய மொழியாக்கப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். நாகர்கோயில் பட்டறையில் சுந்தர ராமசாமி வகுப்பு எடுத்தார். அதைப்பற்றி எழுதிய கட்டுரையில் அத்தகைய பட்டறைகளின் தேவை பற்றிச் சொல்லியிருக்கிறார்.
நாட்டார்கலைகளை ரசிப்பதற்கான பட்டறை ஒன்றை கேரள ஃபோக்லோர் அக்காடமி நடத்தியது. திருவந்தபுரம் வைலோப்பிள்ளி ஹாலில். அதில் கலந்துகொண்டேன். எனக்கு எம்.வி.தேவன் வகுப்பு நடத்தினார்.கேரள சங்கீத நாடக அக்காடமி நடத்திய நாடகரசனைப் பட்டறையில் பயிற்சியாளனாகப் பங்கெடுத்திருக்கிறேன். பயிற்சிக்காக ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். அது பின்னர் ’வெளி’ நாடக இதழில் வெளியானது. சிற்பக்கலை ரசனைக்காக டெல்லி அருங்காட்சியகம் நடத்திய ஒருநாள் பட்டறையில் கலந்துகொண்டிருக்கிறேன். கதகளி ரசனைக்காக கேரள கலாமண்டலம் நடத்திய இரண்டுநாள் பட்டறையில் கலந்துகொண்டிருக்கிறேன். அதில் வகுப்பெடுத்தவர் கலாமண்டலம் கோபி. ஊட்டி குருகுலத்திலும் கோபி ஒரு வகுப்பு நடத்தியிருக்கிறார், நவரசங்களைப் பற்றி மட்டும்.
காஸர்கோடு தொலைதொடர்பு தொழிற்சங்கம் நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அதிலொன்று மலையாள மேடைப்பேச்சுப் பயிற்சி. காசர்கோடு சூழியல் கழகம் நடத்திய செடிகளை அடையாளம் காணும்பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். ’நூறு பூச்சிகள்’ என்ற தலைப்பில் பூச்சிகளை இயற்கைச் சூழலில் அடையாளம் காணும் ஒரு பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். எளிய மலையேற்றப் பயிற்சி ஒன்றை எடுத்திருக்கிறேன்.
மருத்துவர் ஜீவா அவர்கள் ஊட்டியிலும் ஈரோட்டிலும் நடத்திய சூழியல் பயிற்சி அரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழில் எழுதத்தொடங்கிய பல இளம் படைப்பாளிகள் அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவை அவர்களின் எண்ணங்களில் மிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன.
தொலைபேசித்துறை ஒருங்கிணைத்த பல பயிற்சி வகுப்புகளில் ஆளுமைத்திறன், பொதுமக்களுடன் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் எவ்வகையிலோ உதவியானவையாகவே இருந்திருக்கின்றன. என் தயக்கங்களை போக்கியிருக்கின்றன. மிக முக்கியமான பாடம் என இன்று நினைப்பது, முற்றிலும் புதியவர்களைச் சந்திக்கையில் அவர்கள் தங்களை எளிதாக்கிக்கொள்ளும் பொருட்டு நேரம் அளிக்கவேண்டும். அதற்காக சில அன்றாட உலகியல் விஷயங்களை உரையாடவேண்டும் என்பது. “உங்க வீடு எங்க? என்ன வேலை பாக்கறீங்க?” என்பதுபோல.
ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய நேரத்தை திட்டமிடுவதற்கும் செயல்களை சீராக முடிப்பதற்குமான பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். புனைவு, புனைவல்லாத எழுத்து ஆகியவற்றுக்கான குறிப்புகளை தயாரிப்பது பற்றி அவர் அளித்த பயிற்சி என் வாழ்க்கையின் திருப்புமுனைகளில் ஒன்று. குறிப்புகளை முழுமையான சொற்றொடர்களில்தான் எழுதவேண்டும், உடைந்த சொற்றொடர்கள் பயனற்றவை என அவர் சொன்ன வரியை நான் திரும்பத்திரும்ப இன்றும் பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஊட்டி குருகுலத்தில் சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] ஒருங்கிணைக்க ஒரு ஜப்பானியர் நடத்திய மாக்ரோ பயாட்டிக்ஸ் [முழுமைவாழ்க்கை] பயிற்சி அரங்கும் முக்கியமானது [ மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை ]காய்கறிகளை வெட்டுவது சமைப்பது முதல் பாத்திரங்களை கழுவுவதுவரை கற்பிக்கப்பட்டன. மிக எளிமையான விஷயம், எண்ணைப் பிசுக்கேற்ற சமையல்பாத்திரங்களையும் டீக்கோப்பை போன்றவற்றையும் ஒரே சிங்கில் சேர்ந்து போடக்கூடாது, சேர்ந்து கழுவக்கூடாது. அது வேலையை இருமடங்கு பெரிதாக்கும். பாத்திரங்களை நான்கு வகையாக பிரித்தாலே பாத்திரம் கழுவும் வேலை எளிதாகிவிடும் [டீக்கோப்பைகள், சாப்பிடும் தட்டுகள், ஊறவைக்கவேண்டிய சமையல்தட்டுகள், எண்ணைப்பிசுக்கேறிய தட்டுகள் என நான்கு] இதைக்கூட ஒரு ஜப்பானிய நிபுணர் நமக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.
ஹிப்பி பின்னணி கொண்ட டெரெக் ஒரே ஒரு பக்கெட் நீரில் குளிப்பது, ஒரே பக்கெட் நீரில் மொத்த துணியையும் துவைப்பது, இரண்டே செட் ஆடையுடன் பயணம்செய்வது, மிகக்குறைவான பொருட்களுடன் பெட்டியை பேக் செய்வது, மிகக்குறைவான இடத்தில் தூங்குவது, ஜீன்ஸின் அழுக்கான பகுதிகளை மட்டும் துவைப்பது, உள்ளாடைகளில் அழுக்கான பகுதிகளை மட்டும் துவைப்பது, மிகக்குறைவான செலவில் வயிறுநிறையும் உணவை தெரிவுசெய்வது ஆகியவற்றுக்கு ஓர் இரண்டுநாள் பயிற்சி அளித்திருக்கிறார்.
அவர் சொன்ன ஒன்று உதாரணத்துக்காக. பல் தேய்க்க பிரஷ் இல்லையேல் என்ன செய்வது? கையால் பல்விளக்காதீர்கள். ஒரு சொரசொரப்பான துணியால் அழுத்தமாக மேலிருந்து கீழே இழுத்து துடைத்து துலக்கினால் தொண்ணூறு சதம் பல்விளக்குவதுபோல ஆகிவிடும். அன்று கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. ஆனால் பின்னர் அது மிகப்பெரிய வாழ்க்கைப்பாடம் என தெரிந்தது.
எல்லாமே பயிற்சிகளால் மிக எளிதாக அடையப்படத்தக்கவை. பயிற்சியால் அடையமுடியாத ஒன்றுக்காக மட்டுமே நாம் நம் தனியுழைப்பைச் செலுத்தவேண்டும். அதுவே வாழ்க்கையை வாழும் வழி. வாழ்க்கையில் வீணடிக்க நேரமே இல்லை.
நான் சிறுகதை எழுதும் பயிற்சிகள் அளித்திருக்கிறேன். அவற்றிலிருந்து சிறந்த எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் நான் பயிற்றுவித்த மாணவர்கள் எழுதிய 12 கதைகள் அடங்கிய தொகுதி வெளியாகியிருக்கிறது. எல்லாமே அவ்வெழுத்தாளர்களின் முதல் கதைகள். எல்லாருமே அதற்குமுன் எதுவுமே எழுதாதவர்கள். அவற்றில் ஐந்து கதைகள் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் ஆகாதவர்களுக்குக் கூட சிறுகதை வாசிக்கும் ரசனை அமைந்திருக்கும். அவர்கள் அதைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஈரோட்டில் தர்க்கபூர்வமாக விவாதிப்பது, பேசுவதற்கான ஒரு பயிற்சிவகுப்பை நடத்தினோம். இரண்டுநாட்களிலேயே சில அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தோம். கவிதை ரசனைக்காகவும், சிறுகதை எழுதுவதற்காகவும் தொடர்ந்து பயிற்சி அமர்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். கருவிலே திரு கொண்டவர்கள் தாங்கள் என்னும் எண்ணத்தையும், தேவையில்லா கூச்சத்தைவும் உதறி கலந்துகொள்பவர்கள் சிலரே. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு இங்கே திறந்திருக்கவேண்டும் என்பதே எண்ணம்.
உண்மையில் மேலும் பல பயிற்சிகளை அளிக்கலாம் என்னும் எண்ணம் உள்ளது. அதற்கான நிபுணர்களை அறிவேன். சிலவற்றை நானே அளிக்கமுடியும். தொழில்களுக்கு, வேலைக்கு, பொதுவெளிப்புழக்கத்துக்கு, சிந்தனைக்கு இன்றியமையாத பயிற்சிகள் அவை.
வெளிநாடுகளில் இத்தகைய பயிற்சிகள் ஏராளமாக உள்ளன. இங்கே இன்னும் முறைப்படி அவை கிடைப்பதில்லை. அறிவுஜீவிகளின் சுயம்புவாதமும், பொதுமக்களின் அசட்டுத்தனமான எதிர்மனநிலைகளும், கற்பவர்களின் தயக்கங்களும் பெரிய தடைகளாக உள்ளன.
அவற்றை எல்லாம் விட மோசமானது இங்கே கற்பவர்களிடம் உள்ள பொறுப்பின்மை. “என் மச்சான் கூட சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன் சார், ஒரு அமர்விலே மட்டும் கலந்துக்க முடியுமா?” என்று கூசாமல் கேட்பார்கள். அமர்வுகளுக்கு முன் செய்யவேண்டிய முன்பயிற்சிகளைச் செய்யாமல் வருவார்கள். வந்தபின் அரைக்கவனத்துடன் அமர்ந்திருப்பார்கள். எதையுமே கூர்ந்து கவனிக்க மாட்டார்கள், தீவிரமாகப் பயிலமாட்டார்கள். ஆனால் ஆசிரியர் அக்கல்வியை தனக்குள் செலுத்தவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இந்த மூளைச்சோம்பல் ஒரு தேசியகுணம். எல்லாமே தனக்கு தெரியும் என எண்ணி எல்லாவற்றுக்கும் எதிர்நிலை எடுத்து வாதிடுவது, நையாண்டி செய்வது நம்முடைய தேசிய மனநோய்.
என் அனுபவத்தில் இங்கே கல்லூரிகளில் நடத்தப்படும் பயிற்சிவகுப்புகள் எல்லாமே வீண்தான். மாணவர்கள் தேர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் ஒப்பேற்றிப் படித்தால்போதும் என்னும் மனநிலையிலேயே இருப்பார்கள். மறைந்த பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஆர்வம் காட்டியமையால் நான் மாணவர்களுக்கான ஒரே ஒரு பயிற்சி வகுப்பை திண்டுக்கல் காந்திகிராமத்தில் நடத்தினேன். அனைவருமே உயர்கல்வித்தகுதி கொண்ட பொறியியல் மாணவர்கள். ஆனால் என் கண்முன் நூற்றைம்பது மொக்கைகளின் கண்கள் விழித்திருக்கக் கண்டேன். தமிழகத்தில் எந்தக் கல்லூரியிலும் இனி எந்தப் பயிற்சியையும் நடத்தமாட்டேன் என்று முடிவுசெய்தேன். நாங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில்கூட கல்லூரி மாணவர் என்றால் கூடுமானவரை தவிர்த்துவிடுவோம். இயல்பாகவே அவர்கள் அகம் மூடிய முட்டாள்களாகவே இருப்பார்கள். அப்படியல்ல என்று அவர்களே நிரூபிக்கவேண்டும்.
நான் புரிந்துகொண்ட உண்மை இது. இங்கே இலவசமாக, அல்லது குறைந்த செலவில் அளிக்கப்படும் எதற்கும் மதிப்பில்லை. அத்தகைய பயிற்சிகளுக்கு வருபவர்கள் கற்றுக்கொள்வதுமில்லை. உண்மையான ஆர்வம்கொண்டு தகிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் அளிக்கலாம் – எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் அத்தகைய சிலருக்கு அவ்வாறு இடமளிப்பது உண்டு. பொதுவாக கற்பிக்கப்படும் எதற்கும் உயர்ந்த கட்டணம் வைக்கவேண்டும். அக்கட்டணத்தை அந்த நபரே கட்டவேண்டும், பெற்றோர் அல்லது நிறுவனம் கட்டக்கூடாது. அவ்வாறு உயர்ந்த கட்டணம் கட்டி கலந்துகொள்ளும் தொழில்நிறுவனம் சார்ந்த பயிற்சிகள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் நடத்தும் பயிற்சிகளிலேயே மக்கள் கொஞ்சமாவது முயற்சி எடுத்து, பொழுதை வீணடிக்காமல் எதையாவது கற்க முயல்கிறார்கள். இது நவீன வணிக யுகம். விலையற்ற எப்பொருளும் குப்பைதான்.
ஜெ