பயிற்சிகள் உதவியானவையா?

அண்ணா வணக்கம்

நான் Teaching Character and Creating positive classroom என்ற ஆன்லைன் பாடத்தை coursera என்ற இணையதளம் மூலம்படித்து கொண்டிருக்கிறேன். இதை பற்றி என் நண்பனிடம் பேசி கொண்டிருக்கும்போது அவன் கேரக்டர் என்பது பிறப்பால் வருவது அதை ஆன்லைன் கிளாஸ் மூலம் மாற்றமுடியாது என்றான்.  நான் அதற்கு இந்த வகுப்பின் மூலம் குறைந்தபட்சம் என் வரம்பையாவது (limitations) தெரிந்து கொள்வேன் என்றேன்.  உனக்கு நாற்பது வயதை நெருங்கி கொண்டிருப்பதால் பெரிதாக ஒன்றையும் மாற்றிவிட முடியாது என்றான்.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் நான் முன்பு இருந்தது போல் stiff ஆக இல்லை மிகவும் flexible ஆக தான் இருக்கிறேன் என்றேன். அந்த பிளேக்சிபிலிட்டி அனுபவத்தால் வருவது அதையும் கேரக்டர் மாற்றத்தையும் குழப்பிக்கொள்ளவேண்டாம் என்கிறான் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ஜெ.

அன்புடன்

பன்னீர் செல்வம் ஈஸ்வரன் 

***

அன்புள்ள பன்னீர்செல்வம்

அப்படியெல்லாம் எதையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கொஞ்சநாளுக்கு முன்புவரை அப்படியெல்லாம் எதையும் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

என்னிடமே “ஆன்மிகமான எதையுமே இன்னொருத்தரிடமிருந்து கத்துக்க முடியாது சார். குருங்கிறதெல்லாம் சும்மா” என்று ஒருவர் சொன்னார். நான் எரிச்சலடைந்து “அதை கொஞ்சமாவது எதையாவது கற்று வைச்சிருக்கிற ஒருத்தர் சொல்லணும். நீங்க சொல்லக்கூடாது” என்றேன்.

கற்றுக்கொள்ளக் கூடிய எல்லா வழிகளும் பயனுள்ளவையே. அவற்றை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அது. வகுப்புகள், பயிற்சிகள், நேரடிச்செயல்பாடுகள் எல்லாமே அந்தந்த அளவுக்கு உதவிகரமானவை. இந்த ஆன்லைன் வகுப்பை விட உதவியான வேறு கல்விமுறை இருந்தால் இதை முடித்துவிட்டு அங்கு செல்லலாம்.

எந்த தொழிலிலும் அதன் அடிப்படைகள் எங்கேனும் கற்பிக்கப்படுகின்றன என்றால் ஓடிப்போய் கற்றுக்கொள்வது அவசியம். உண்மையில் நாம் அன்றாடம் செய்யும் செயல்களைக்கூட முறையாக கற்றுக்கொள்வது நல்லது. நான் தொலைபேசித்துறையில் வேலை செய்யும்போது தொலைபேசியில் பேசுவது எப்படி என்றே வகுப்பு எடுப்பார்கள். இன்றைக்குக் கூட செல்பேசியில் பேசுபவர்களுக்கு பேச்சு நடுவே ஓசையில்லாமல் சும்மா இருக்கக்கூடாது என்னும் அடிப்படைச் செய்தி தெரியாது.

மிகச்சாதாரண விஷயங்கள்கூட நம்மில் பலருக்கு தெரியாது. ஒரு பஃபெயில் சாப்பிடத் தெரியாது. வலதுகையால் சாப்பிட்டுவிட்டு அதே கையால் அகப்பையை எடுத்து  மேலும் பரிமாறிக் கொள்வார்கள். முற்றிலும் புதியவர் வீட்டுக்குச் சென்றால் என்ன பேசவேண்டும் என்று தெரியாது. ஒருவர் சொல்லிக் கொடுத்தால் பத்துநிமிடத்தில் திருத்திக் கொள்ளத்தக்க பிழைகள். ஆனால் நம்மை அறியாமல் நம் வாழ்க்கையையே அழித்துக் கொண்டிருக்கும் அவை.

இதெல்லாம் பட்டு அறிந்துகொள்ளலாம் தான். ஆனால் அதற்கு நெடுங்காலமாகும். நீண்ட அனுபவங்கள் தேவைப்படும். அந்த அனுபவங்களின் கசப்பான விளைவுகளும் இருக்கும். அத்தனை அனுபவங்கள் இந்த நவீன காலகட்டத்தில் எவருக்கும் அமையாது.

ஆகவே எதையும் முறையாக கற்றுக்கொள்ள நான் தயங்க மாட்டேன். வேட்டி கட்ட பயிற்சி அளிக்கும் ஒரு வகுப்பு இருந்தால் கூட அந்தவகையில் உதவியானதுதான் என்றே நினைப்பேன். மிகச் சிரமப்பட்டு, மிகச்சிக்கலான அனுபவங்கள் வழியாக கற்றுக்கொள்ளும் விஷயங்களை மிக எளிதாக சில மணி நேரங்களில் கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இவை இன்னொருவரின் அனுபவங்களின் வழியாக கற்றுக்கொள்ளப்பட்டவை. அவை நமக்கு அளிக்கப்படுகின்றன.

அறிவுஜீவிகள் சுயமுன்னேற்ற நூல்களை நையாண்டி செய்வதுண்டு. ஆனால் அந்நூல்கள் ஒருவன் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே வாழ்க்கையின் பல அடிப்படைப் பாடங்களை கற்றுக்கொள்ளச் செய்கின்றன. அந்நூல்களை கற்றவர்களுக்கும் கற்காதவர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

இத்தகைய பயிற்சிகள் ஆளுமையை மாற்றுமா? கண்டிப்பாக மாற்றும். நம்பவே முடியாத அளவுக்கு பெரும் மாறுதல்களை மிக எளிய பயிற்சிகள் அளித்துவிடும். எல்லா வயதிலும் அந்த மாற்றம் நிகழும். அறுபது வயதானவர்களுக்கு அறுபது வயதுக்குமேல் உடலை எப்படி கையாள்வது என்ற பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். தவறுதலாக எடைதூக்கி முதுகெலும்பு பாதிக்கப்பட்ட இருவரிடம் இன்று ஒரேநாளில் பேச நேர்ந்தது

ஆளுமை என்பது  நம் அடிப்படை இயல்புதான். ஆனால் அதன் வெளிப்பாட்டை நாம் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய இயல்புகளை நாமே அவதானித்தாலே அவை மாற ஆரம்பித்துவிடும். ஒரு நிபுணர் சொல்லித்தந்தால் மிக எளிதாக நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். எப்படி நிற்பது, கைகுலுக்குவது, முகமன் சொல்வது என்று ஒரு பயிற்சியை ஒருவர் பெற்றார் என்றால் அவர் மக்களை எதிர்கொள்ளும் முறையே மாறிவிடும். பிறர் அவருடன் பழகுவது மாறும்போது அதற்கேற்ப அவரும் மாறிக்கொண்டே இருப்பார். இந்த மாறுதல்கள் நிகழ்வதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

அக்கல்வி முழுமையானதா என்றால் இல்லை என்றே சொல்வேன். அக்கல்வி மட்டுமே போதுமா என்றாலும் இல்லை என்பதே என் பதில். எதிலும் கற்றுக்கொள்ளக் கூடிய தளமும் தானாகவே அறியவேண்டிய தளமும் உண்டு. ஆனால் அப்படி கற்றுக்கொள்ளக் கூடிய தளம் நாம் நினைப்பதை விட மிகமிக பெரியது.

ஜெ

பா.ராகவன் பயிற்சி அளிக்கும் இணையதளம்

அன்புள்ள ஜெ

பா.ராகவன் அவர்கள் தொடங்கியிருக்கும் எழுத்துப்பட்டறை ஓர் இணையதளம். Bukpet-WriteRoom. இதன் வழியாக ஒருவர் எழுத்தாளர் ஆக முடியுமா? எழுதுவதை இப்படி கற்றுக்கொடுக்க முடியுமா?

எம்.ஆர். செந்தில்வேல்

***

அன்புள்ள செந்தில்,

இலக்கியம், கலைகள் ஆகியவற்றில் கற்றுக்கொள்ளத் தக்க தளம் ஒன்று உண்டு. அதை முறையாக கற்றுக்கொள்வதே நல்லது. எந்தக் கல்வியும் அதற்குரிய கட்டுப்பாடான பயிற்சி வழியாகவே நிகழமுடியும். இன்று உலகம் முழுக்க உரைநடை எழுதுவதற்கும், புனைவு எழுதுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் அவ்வாறு ஒரு பயிற்சியைப் பெறாமல் எழுதுபவர்கள் மிகக்குறைவு

அப்பயிற்சி இல்லாமல் எழுத முடியுமா? முடியும். ஆனால் ஓர் எளிய பயிற்சி முறையால் சாதாரணமாக களையக்கூடிய பிழைகள் சிலசமயம் கடைசிவரை நீடிக்கும். மிகச்சாதாரணமாக தாண்டிவிடக்கூடிய ஒரு தடையை மலையை தோண்டி அப்பாலிட்டுவிட்டு தாண்ட வேண்டியிருக்கும். மிகமிக அற்பமான பிழைகளால் பெரிய பெரிய சாத்தியக்கூறுகள் மறைந்துவிடக்கூடும்.

நம்மைப் பற்றிய ஒன்றை நாமே அறிவதில்லை. அதை ஒருவர் சொன்னதுமே நாம் அறிந்து கொள்கிறோம். அக்கணமே அப்பிழை நம்மிலிருந்து அகன்றும் விடுகிறது. இதை நான் அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன். நான் என் ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து பல ஆண்டுக்காலம் பழகிப்பயிலும் வாய்ப்பைப் பெற்றவன்., அவ்வாய்ப்பு இந்த தலைமுறையில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த வகையான வகுப்புகள் அதை ஈடுசெய்கின்றன.

இன்றைக்கு எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க படைப்பை எழுதியவர்களைப் பற்றிக்கூட வாசகர்களிடையே பெரிய புகார்களும் ஒவ்வாமைகளும் உள்ளன. சொற்றொடர்ப் பிழைகள், அடிப்படையான வடிவப்பிழைகள் சார்ந்த போதாமைகள் அவை. ஏனென்றால் இன்று நம் கல்விமுறையில் மொழிக்கல்வி மிகப் பின்தங்கியதாக உள்ளது. அப்போதாமைகளை மிக எளிதாக பயிற்சியால் களைய முடியும். அதையே உலகமெங்கும் செய்கிறார்கள்.

இப்படிச் சொல்கிறேன். வயலின் வாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியும். லால்குடி ஜெயராமனாகவோ ஏ.கன்யாகுமரியாகவோ ஆவது உங்களுடைய சொந்தத் திறமையால், படைப்பூக்கத்தால், அர்ப்பணிப்பால் நிகழ்வது. லால்குடி ஜெயராமன் கூட முதலில் எளிய வயலின் மாணவனாகக் கற்றுக்கொண்டு அதன்பின்னரே தன் படைப்பூக்கம் சார்ந்து மேலதிகமாக வெளிப்பட ஆரம்பித்திருப்பார்.

இந்தவகையான பயிற்சிகளில் அளிக்கப்படுவது ஒரு சராசரி அறிதலைத்தான். ஒரு தரப்படுத்தப்பட்ட தளத்தையே நமக்கு அளிக்கிறார்கள். அந்த  ‘ஸ்டேண்டேர்ட்’ அளவுக்கு கீழே நாம் நின்றிருந்தால் அங்கே செல்வது வளர்ச்சி. அதன்பின் நம் படைப்புத்திறனால் நம் தனித்தன்மையால் அந்த தரச்சராசரியை நாம் கடந்துசெல்லலாம். நமக்குரிய இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஆபரணம், கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை