கனவிலே எழுந்தது…

1970 ல் எனக்கு எட்டு வயதாக இருந்தபோது அருமனை கிருஷ்ணப்பிரியா என்னும் ஓலைக்கொட்டகையில் அம்மாவுடன் சென்று சிவந்த மண் படம் பார்த்தேன். கதையெல்லாம் புரியவில்லை. பாடல்களில் வாய்பிளந்து அமர்ந்திருந்தேன். பிறகு தூங்கிவிட்டேன். கிளைமாக்ஸில் சிவாஜி ஒரு பலூனில் ஏறிப்பறக்கும் காட்சியும் சண்டையும் வந்தபோது அம்மா எழுப்பிவிட்டாள்.

பார்த்தவை சினிமாவாக அல்ல, பெருங்கனவாக நினைவில் நின்றுவிட்டன. ஐரோப்பாவின் தொல்லியல் சின்னங்கள், மாபெரும் மாளிகைகள், பனிவெளிகள், ஆறுகள், மலர்த்தோட்டங்கள். நான் அவற்றைப் பார்க்கவில்லை, அந்த கனவுக்குள் சென்றுகொண்டிருந்தேன். மிகப்பிரம்மாண்டமான மற்றொரு உலகம்.

அதன்பின் சென்ற ஐம்பதாண்டுகளில் எத்தனையோ முறை சிவந்த மண் படத்தை பார்த்துவிட்டேன். யூடியூப் வந்தபின்னர் எப்படியும் மாதமொருமுறை பார்த்துவிடுவேன். சிவாஜியும் காஞ்சனாவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் இன்றில்லை. அந்தநிலமும் அவ்வண்ணம் இன்றில்லை. ஆனால் அக்கனவு அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.

இன்றுபார்க்கையில் இயக்குநர் ஸ்ரீதரின் ஆற்றல் என்ன என்று தெரிகிறது. மிகக்குறைவான படப்பிடிப்புக் குழுவினருடன் சென்றிருக்கிறார்கள். அன்று அன்னியச்செலவாணியை அரசு அளந்துதான் அளிக்கும். ஆகவே ஆடம்பரமாக எடுக்க நினைத்தாலும் முடியாது. ஸூம் லென்ஸ் மட்டுமே கொண்டுசென்றிருக்கிறார்கள். டிராலி, கிரேன் கூட இல்லை. காமிரா பெரும்பாலும் நிலைக்கால்களில் நின்று திரும்பியிருக்கிறது.

ஆனால் அந்த எல்லைக்குள் அற்புதமான காட்சிக்கோவைகளை உருவாக்கியிருக்கிறார். எதைக்காட்டவேண்டும், ஏன் காட்டவேண்டும் என்னும் காட்சியூடகப்புரிதல் கொண்ட இயக்குநர் என அவரை அடையாளம் காட்டுவன அவை. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் உல்லாசப்பறவைகள் என்னும் படத்தில் ஐரோப்பா காட்டப்பட்டது. எவ்வளவு அசட்டுத்தனமான காட்சிக்கோவைகள் என்று அதைப்பார்த்தால் தெரியும்.

ஸ்ரீதர் காட்சியின் பிரம்மாண்டம், கதைமாந்தரின் துளித்தன்மை என்னும் இரட்டைத்தன்மையை நோக்கியே காட்சிக்கோவைகளை அமைத்திருக்கிறார். சிவாஜி- காஞ்சனாவில் இருந்து விரிந்து விரிந்து கொலோசியத்தின் மாபெரும் கட்டமைப்பைக் காட்டுகிறது காட்சி. அல்லது மாபெரும் கட்டிடத்தில் இருந்து அண்மைக்குச் சென்று அவர்கள் இருவரையும் காட்டுகிறது.

அருமனை என்னும் சிறு ஊர். அன்று சினிமாகூட அரிது. உலகமே வேறெங்கோ இருந்தது. தொட்டிமீன் என வாழ்க்கை. என்றோ ஒருநாள் இந்த நிலங்களுக்குச் செல்லக்கூடுமென்று எண்ணியதே இல்லை. உச்சகட்ட பகற்கனவிலே கூட. ஆனால் செல்ல நேர்ந்தது. இருமுறை. மூன்றாவது ஐரோப்பியப் பயணம் திட்டமிட்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது.

2018 செப்டெம்பரில் பாரீசில் நுழைந்ததுமே என் மனதுக்குள் லால லலல லாலா கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின்வரும் இசைவிரிவாகத்தான் மொத்த ஐரோப்பியக் காட்சியும். பயணம் முழுக்க சிவந்தமண் இசை. அதைப்பற்றி பேசப்போய் அருண்மொழி கடுப்பானாள். ஆகவே நான் எனக்குள்ளேயே ஓடவிட்டுக்கொண்டிருந்தேன்.

கொலோசியம், ஈஃபில் கோபுரம் எல்லாம் அதேபோல. அதே போல தொங்கும்காரில் பயணம். சுவிட்சர்லாந்தில் அதேபோல பனிமலைகளின் கீழே சென்றேன். கனவுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது இன்னொரு மாபெரும் நிலம்

முந்தைய கட்டுரைநீலம் கடலூர் சீனு உரை, கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்