கரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை
அன்புள்ள ஜெ,
மனித உடலில் உயிர் எங்கே உள்ளதென்று காண முயன்றால், இருதயத் துடிப்பை பல்வேறு இடங்களில் உணரமுடியும். ஆனால் தர்க்கப்பூர்வமான விஷயங்களைத் தள்ளிவைத்துப் பார்த்தால் நம் அகம், படபடக்கும் பார்வையிலோ, மனம் வெளிப்படும் சொல்லிலோ உயிரை முன்பே கண்டடைந்திருக்கும்.
இதே போன்று கலைகளிலும், கலைப் படைப்புகளிலும் உயிர் கொள்ளும் நொடி அல்லது தருணம் எப்போது நிகழ்கிறதென்று யோசித்துப் பார்த்தால், நம் மனம் அதைப் புரிந்து கொண்டு கை சுட்டி காட்டும் முன்பே நம் அகம் அதைத் தொட்டிருக்கும்.
அருணாம்மாவின் கரமசோவ் சகோதரர்கள் உரையில் பல இடங்களில், அந்த உயிர்ப்புத்தன்மை கூர்ந்த அவதானிப்புகளாக, ஆழ்ந்த ஒப்பிடல்கள் வழியாக நடந்தாலும், அந்த உரையின் உயிர் அவர்களின் சிந்தனை ஓட்டத்தின் நேர்மையான வெளிப்பாட்டில் உள்ளதென்று உணர்கிறேன். பொதுவாகப் பயின்று பேசப்படும் உரைகளில் வெளிப்படும் இது, அவர்களின் பேச்சியில் தன்னியல்பாகவே நிகழ்ந்திருக்கிறது.
எனக்கு அவர்களின் உரையில் பிடித்த விஷயங்கள் –
அ.ஒவ்வொரு படைப்பையும் முழுவதுமாக உள்வாங்கி, தனதாக்கிக்கொண்டு அவர்களின் அனுபவத்தைப் பகிர்தல்.
இந்த உரையில் அவர்கள் தெளிவாக வரையறுத்துக் கொண்டு பேசத் துவங்கினார்கள். பொதுவாக தஸ்தயேவ்ஸ்கியும் அவரது படைப்பும் எந்த பார்வையில் பார்க்கப் படுகிறது, தான் எந்த பார்வையில் அவரது படைப்புக்களை அணுகுகிறார்கள் எனத் துவங்கி, டால்ஸ்டாய்க்கும் தஸ்தயேவ்ஸ்கிக்கும் உள்ள ஒற்றுமைகள், நாவலாசிரியர் கையாளும் கேள்விகள் என இறுதியில் தானே இவான் ஆக மாறி விசாரணை நாடகத்தைக் கண் முன் நிகழ்த்திவிடுகிறார்.
ஆ.இந்திய மரபின் கருவிகளை வைத்து, மேலை தத்துவத்தின் புள்ளிகளை ஆராய்தல்
தந்தை கொலையைத் தத்துவார்த்தமாகப் பார்ப்பதைப் பற்றிக் கூறிவிட்டு, அது இந்திய மரபில் ஒரு பாவம், அதற்கான உதாரணங்களை அளித்தது. பாதர் ஜோசிமா இவானிடம் பூமியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதையும், அவரின் மரணத்திற்குப் பிறகு இவான் பூமியைத் தழுவி முத்தமிடும் காட்சியைப் புத்தரின் பூமிஸ்பரிசமுத்திரை உடன் ஒப்பிட்டது. சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களை ஆராய்ந்தது, மற்றும் எந்த கதாபாத்திரத்தையும் முழுதாக தீயவன் அல்லது நல்ல கதாபாத்திரம் என்று பார்க்காமல், நன்மைகளையும் தீமைகளையும் ஊடு பாவாக அணுகும் கோணம் அனைத்தும் அவர்களின் சிந்தனையில் இந்திய மரபின் வேரிலிருந்து வந்தவையாக இருந்தது.
இ.சோம்ஸ்கி – பூக்கோ உரையாடலை விளக்கி மைய்ய கேள்வியுடன் ஒப்பிடுதல்
சோம்ஸ்கி – பூக்கோ உரையாடலைக் கூறும் போது இது விலகலாக தோன்றும் ஆனால் இல்லை என்று கூறிவிட்டு அந்த உரையாடலை விளக்குகிறார். இறுதியில் நாவலில் எழும் முக்கியமான கேள்வியுடன் அந்த உரையாடலை, அவர் உரையில் கூறிய பாவம், குற்றவுணர்வு, நீதி உணர்வு, அறவுணர்வு ஆகியவற்றை ஒரே கன்னியால் இணைத்துவிடுகிறார்.
மட்டுமில்லாமல், கிராண்ட் இன்ங்குசிட்டர் நாடகத்தைக் கண் முன் நிகழ்த்திக் காண்பித்தது அதில் எந்த ஆண்டு, எந்த ஊர் என்பதையெல்லாம் கூறியது, அவர்களின் உரை வழியாகவே அவர் கரமசோவ் சகோதரர்கள் நாவலுடன் சென்ற தொலைவைக் காண்பித்து, அந்த அனுபவத்தை எனக்கும் அளித்துவிட்டார்.
அவர்களின் தொடர்ந்த உரையாடலை எதிர் நோக்குகிறேன்.
அன்புடன்,
நிக்கிதா