பின்தொடர்வன… கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

அன்பின் ஜெயமோகன்

வணக்கம்,

நான் உங்கள் புனைவுகளை தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வருகிறேன். அதிலிருக்கும், தீவிரமும், தேடலும் சில இரவுகளை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. அதனாலே உங்கள் புனைவுகள் மிக நெருக்கமாகவும் இருக்கின்றன. சமீபத்தில் வாசித்த பின் தொடரும் நிழலின் குரல் கொடுத்த நிம்மதியிழப்பு சற்று அதிகம் என்றே சொல்லலாம். நானே என் நிம்மதியிழப்பை சற்று கொந்தளிப்புடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். கொந்தளித்து வரும் மலை வெள்ளத்தை உற்று நோக்குவது போன்ற அனுபவம். சிடு சிடுப்பும் வெறுமையுமாக என்னை உணர்ந்த நாட்கள் அவை.

அர்த்தமே இல்லாத பெரும் தியாகங்களின் முன், கொத்து கொத்தாக மக்கள் இறந்த புதை மேட்டின் வண்டல்மீது நின்றிருப்பது போன்ற நினைவுகள் அலைக்கழித்தன. ஏன் என்றே தெரியவில்லை ஊரின் நினைவுகள், போர், மஞ்சள் வாசனையுடன் வந்த நண்பனின் அண்ணாவின் ’வித்துடல்’ திரும்ப திரும்ப நினைவில் பொங்கி மேல் எழுந்து வந்தபடி இருந்தது. இத்தனைக்கும் நண்பனின் அண்ணாவின் வித்துடலை சற்றே ஆர்வத்துடன், சிறு புன்னகையுடன் நோக்கியதாகவே நினைவில் தங்கியிருந்தது. அந்த ஆர்வம் பொங்கும் மனநிலையால் சற்றே குற்றவுணர்வும், வெட்கமும் பின்னாளில் வந்திருந்தது.

திரண்டிருந்த மக்கள் முன் – அலையில் மிதந்துவரும் தங்கப் பேழை போலத்தான் அண்ணனின் வித்துடல் மிதந்து  வந்தது. சுற்றிலும் மஞ்சல் வாசனை சூழ்ந்திருக்க பாடசாலை வழிபாட்டு மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. நானும் நண்பனும் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தோம். வித்துடலுக்கு ஒவ்வொருவரும் பூப்போட்டு அஞ்சலி செய்ய வரிசையில் நின்றிருந்தனர். அந்த மனநிலையே சற்றே குழப்பமும், கலங்கியதாகவுமே நினைவில் தங்யிருக்கிறது. ஆழ்ந்த சோகமோ, உயிரைப்பிழியும் அழுகையோ இல்லாத ஒருவகை இறுக்கம் இருந்ததை நினைவு கூர முடிகிறது. வித்துடல் வைக்கப்பட்டிருந்த திண்டு சற்றே உயர்ந்திருந்ததால் ஒற்றைக் காலில் மெல்லத் தவ்வியே செவ்வரத்தம் பூக்களைப் பெட்டியில் இட்டேன். வாடிக் கசங்கிய வெவ்வரட்தம் பூக்கள். ஒரு மின்னல் நொடி அண்ணணின் முகத்தைப் பார்த்தேன். சற்றே மேல் துருத்திய பற்கள். ஒடுங்கிய கன்னம் கருத்துக் கண்டியது போல இருந்தது. பூனை மீசைகள் மெல்ல சுருண்டிருந்தன.

அவரை தோட்டத்தில் அதிகமும் கண்டிருக்கிறேன். வெங்காயத்துக்கு தண்ணி கட்டிக் கொண்டு இருப்பதையும், இளங்குருத்தை நுள்ளிவிட்டு மரவள்ளி கொப்புக்களை ஒடித்து ஆட்டுக்குக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன். உப்பு பூத்ததுமாதிரியான மண்ணிற வரிகளுடன் வெள்ளைச் சட்டையுடன் பள்ளிக் கூடத்திலும் பார்த்திருக்கிறேன்.  சற்றே அடங்கிய சுபாவம். ஆனால நல்ல வலிமையான கைகள். ஈட்டி எறிவதில் அவரை மிஞ்ச பள்ளியில் அப்ப ஆரும் இருக்கவில்லை. உயரம்பாய்தலிலும் அப்படித்தான். எதோ காத்திலை நடந்து தாண்டுவது போல இருக்கும் அவர் உயரம் பாய்வது.

ஒரு முறை கோயிலில் வைத்து அவர் என்னிடம் கராம் சுண்டல் வாங்கி தந்து அதைச் செவ்வந்திச் ரீச்சரிடம் கொடுக்கச் சொன்னார். ரீச்சர் மற்றத் தொங்கலில் மணலில் அமர்ந்திருந்து ’கோஸ்டி’ பார்த்துக் கொண்டிருந்தார்.  ரீச்சரின்   மடியில் அவரது மகள் படுத்திருந்தாள். நான் நித்திரையில் சுருண்டு கிடந்தவர்களை ஒற்றைத் தாவலில் தாவி  ரீச்சரின்  பக்கம் சென்றேன். ரீச்சர் மார்பின் குறுக்காக போட்டிருந்த துண்டை இழுத்துவிட்டார். துண்டினுள் குழந்தை உதடு சப்பும் சத்தம்.  ரீச்சரிடம்   கராம் சுண்டலை நீட்டினேன். ஒரு நொடி அவரின் கண்ணில் மெல்லிய ஒளிவரியோடியதைப் பார்த்தேன். சிறு ஆர்வமும், சற்றுப் பெருமிதமுமாக கராம் சுண்டல் சரையை வாங்கினார். கராம் சுண்டலின் உறைப்பு பல நாடகள் நாவில் என் நாவில் இருந்தது.

இருவரையும் ஒன்றாக கோயில் மண்டபத்தில் பார்த்திருக்கிறேன். அண்ணன் தோடத்தில் நிற்கும் போது  ரீச்சர்   ஆட்டை அவிழ்த்துக் கொண்டு தோட்டம் செல்வார். நாயுருவிப் பற்றை மறைவிலிருந்து ரீச்சர் தனிய வருவதையும் அவரது பிட்டத்தில் செம்பாட்டு மண் ஒட்டியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் நான் பின்னாளில் தொகுத்துக் கொண்ட நிகழ்வுகளின் தொகுப்பா தெரியவில்லை. இப்படியாகத்தான் அந்த நாடகளை நினைவு கூர முடிகிறது. பின் ஒரு நாள் ரீச்சர்  தூக்கிட்டுக் கொண்டதும், அண்ணன் இயக்கத்துக்கு போனதும் இருந்த பரபரப்பும், ஆர்வமும் தூண்டாத உதிரி நினைவுகளாகிப் போயின ஆனால் அந்த நிகழ்வை நோக்க்கி அவர்கள் பின்னிய வலையின் சிறு சம்பவமுடிச்சும் நினைவில் வருகிறது. அலைக் கழிக்கிறது. பின் தொடரும் நிழலில் குரலுக்கும் இந்த குமிழியிடும் நினைவுகளுக்கும் சிறு  இணைப்பு இருப்பதாகப் படுகிறது. நண்பனுடன் உரையாடியபோது அவனிடம் அந்த சம்பவங்கள், அவனது அண்ணனின் வித்துடல் எல்லாம் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் என்னால் அவற்றை துல்லியமாக நினைவுகூர முடிகிறது. மனதில் ஆழத்தில் அவற்றை ஊற வைத்து எடுததுபோல அந்த நினைவுகளில் திளைக்கச் செய்கிறது.

நான் ஈழத்தில் இருந்து  புலம்பெயர்ந்த போது யுத்தம் முடிந்திருக்கவில்லை. அது உக்கிரமாகத் தொடங்குவதற்கான ஆர்வமும், குறுகுறுப்புமான சமாதான சூழலே அப்போது இருந்தது. சமாதனத்தின் காற்றில் போரின் விருப்பும் ஆர்வமுமே மிதந்து கொண்டிருந்ததை இப்போது உணர முடிகிறது. சமாதானத்துக்கான போர். போருக்கான சமாதானம் என்பது மாதிரியான தலையே வாலை விழுங்கும் சூழல்.   அப்போது அந்த நாட்கள் இவ்வளவும் கொந்தளிப்பும் உகிரமுமாக என்னில் வந்து இறங்கும் என நினைக்கவில்லை. அவை எதோ என்னோடு மிக நெருங்கிய நிகழ்வுகள் போல குமிழியிடுகின்றன. அதிலிருந்து விலகியோட ரெஸ்ரோரண்டில் இரண்டுநாள் படுத்தேன். குளிரில் போர்வையை விலக்கிக்கிவிட்டு, கணப்பை நிறுத்திவிட்டு குளிரின் கால்கள் உடலில் ஊர்வதை உற்றுப் பார்த்தபடி நடுங்கிக் கொண்டிருந்தேன்.

பின் ஒரு நாள் எதோ கனவு. சரியாக நினைவு கூர முடியவில்லை. பின் அந்த நாள் எழுந்திருந்தபோது எல்லாம் தெளிந்திருந்தாது. வெள்ளம் வடிந்து வண்டல் சேர்ந்தது போன்ற கிளர்ந்த மனம். காலை வெய்யிலில் நின்றிருப்பது போன்ற மினு மினுப்பான மனநிலை கூடியிருந்தது. அதன் பின்னர் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நொடி தோன்றியதால் எழுதுகிறேன். அதிகம் இப்படி யாருக்கும் எழுதியதில்லை என்பதால் கோர்வையாக எழுத முடியவில்லை, தத்தித் தத்தி சொற்கள் செல்வதாகப் படுகிறது மன்னித்தருள்க.

நன்றியுடன்

செ.க.சித்து

***

அன்புள்ள சித்து,

இலட்சியவாதம் என்பது வீணானதல்ல. அது வாழ்க்கையை பொருளுள்ளதாக ஆக்குகிறது. ஆனால் இலட்சியவாதம் ஒருபோதும் அதிகாரவிருப்புடன் இணைந்திருக்காது. திரளுணர்வுடன் இணைந்திருக்காது. எவரோ எதன் பொருட்டோ உருவாக்கும் உணர்ச்சி வெள்ளங்களில் அடித்துச் செல்லப்படுவது வெறும் மந்தையுணர்வே ஒழிய இலட்சியவாதம் அல்ல. இலட்சியவாதம் தனக்குத்தானே ஒருவன் கண்டடைவது. தன் தலையைக் கொடுக்க அவன் தேர்ந்தெடுக்கும் தெய்வம் அது. பின்தொடரும் நிழலின் குரலில் கிறிஸ்து வந்து அதைத்தான் சொல்கிறார் என நினைக்கிறேன்

ஜெ

பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் அறம்

கத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழல்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் பற்றி

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து

பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்

பின்தொடரும் நிழலின் குரல், காந்தி

பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

பின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு

பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…

பின்தொடரும் நிழலின் வினாக்கள்

நிழலின் குரல்களைப்பற்றி…

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்

முந்தைய கட்டுரைஆணவத்தின் தேவை
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம், மதிப்புரை