எண்ணைவித்துக்கள், ஒரு கடிதம்

குரியன்

பசுமைக் கொள்ளை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

’பசுமைக் கொள்ளை’, கட்டுரை படித்தேன். சரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலான தரவுகளைத் தரவே இந்தக் கடிதம்.

1980 களில், இந்தியா, உலக அரங்கில் ‘இந்து வளர்ச்சி விகிதம்’, எனக் கேலி செய்யப்பட்ட 3% வளர்ச்சியை விட்டு, 6% என மிக வேகமாக வளரத் தொடங்கியது. வேகமாக வளரத் தொடங்கும் எந்தப் பொருளாதாரத்துக்கும் அடிப்படைத் தேவை எரிபொருள். அதுதான் பொருளாதார இஞ்சினை இயக்கும் சக்தி.  அந்தக் காலகட்டத்தில் ஈரானுக்கும், ஈராக்குக்கும் நடந்த பத்தாண்டு காலத் தொடர் போர் எரிபொருள் விலைகளை வெகுவாக உயர்த்தியது. இது அந்நியச் செலாவணிச் சிக்கலை ஏற்படுத்தியது.

அந்நியச் செலாவணியைக் கோரும் செலவுகள் எவை எவையென ஆராய்ந்த போது, ஒரு முக்கியமான தகவல் வெளிப்பட்டது. பெட்ரோல் இறக்குமதிக்கு அடுத்தபடியாக, அதிகமாக இறக்குமதியாவது சமையல் எண்ணெய் என்பதுதான் அது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்தால், இந்த இறக்குமதியைக் குறைக்கலாம் என அரசு யோசித்தது. அப்போது தேசிய பால்வள நிறுவனம், எண்ணெய் வித்துக்கள் துறையில் இறங்கிச் சில முன்னெடுப்புக்களைச் செய்தது.  எனவே, ஒன்றிய அரசு, டாக்டர். குரியனை அழைத்து, எண்ணெய் வித்துக்கள் திட்டத்தை முன்னெடுக்கச் சொன்னது. அதே சமயத்தில் தனியார் துறையையும் அழைத்து, இதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

தேசிய பால் வள நிறுவனம், இத் திட்டத்தை, ஒரு தளங்களில் முன்னெடுத்தது. முதலாவது தளம்,  சந்தை இடையீடல் (Market Intervention Operation). முதலாம் ஆண்டில், இதற்காக 900 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் நோக்கம் என்னவென்றால், உழவர்களின் உற்பத்தி சந்தைக்கு வருகையில், சந்தை விலை வெகுவாக விழும். அந்தச் சமயத்தில், தேசிய பால்வள நிறுவனம், சந்தையில் இறங்கி, எண்ணெய் வித்துக்களை, எண்ணெயைக் கொள்முதல் செய்யும். சில மாதங்களுக்குப் பின்னர், எண்ணெய் வித்துக்கள் வரவு நிற்க, சந்தை விலை அதிகரிக்கும்.  உழவர்களின் உற்பத்தி சந்தைக்கு வருகையில், அரசு பெருமளவில் கொள்முதலில் இறங்கினால், உற்பத்தி விலை வீழ்ச்சி தடுக்கப்படும். சில மாதங்கள் கழித்து, உற்பத்தி வரத்து குறைந்து விலை ஏறுகையில், தேசிய பால்வள நிறுவனம், தன்னிடமுள்ள எண்ணெய் வித்துக்களை, எண்ணெயைப் பொதுச் சந்தையில் விற்கும். இதனால், விலையேற்றம் அதிகமாக இருக்காது. இது ஓடும் நதியை அணை கட்டித் தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளும் ஒரு பொதுநலத் திட்டம் போன்றதுதான். உற்பத்தியாளர், நுகர்வோர் இருவருக்கும் பயனளிக்கும் திட்டம்.

இன்னொரு தளத்தில், எண்ணெய் வித்துக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் ராஜஸ்தான் (கடுகெண்ணெய்), குஜராத், மராத்தியம், ஆந்திரம்,  கர்நாடகம், ஒரிசா, தமிழ்நாடு (கடலை எண்ணெய்) மாநிலங்களில், உழவர் உற்பத்திக் கூட்டுறவு வணிக நிறுவனங்களை அமுல் மாதிரியில் உருவாக்குவது.

விடுதலைக்கு முன்பும், விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் வரையிலும், இந்தியா எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு பெற்றிருந்தது. ஆனால், 70 களில், சில வருடங்கள் வறட்சியின் காரணமாக, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைய, சமூகத்தில் பெரும் அதிருப்தி நிலவியது. இந்திரா காந்திக்கு எதிரான ஜெயப்ரகாஷ் நாராயணின், ‘முழுப் புரட்சி’, என்னும் போராட்டத்தின், தொடக்கம், குஜராத் மாநிலத்தில், சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக, உயர்ந்த மாணவர் விடுதிக் கட்டணம்தான் எனில் நம்புவது கடினமாக இருக்கும்.  ‘அவசர நிலை’ சட்டத்தின் தொடக்கம் இதுதான். எனவே, அடுத்து வந்த ஜனதா கட்சி, வனஸ்பதி, பாமாயில் இறக்குமதி என விலை குறைவான இறக்குமதியை அனுமதித்தது. விலையேற்றம் என்னும் பிரச்சினையைச் சமாளிக்க.. ஆனால், அடுத்த 8-10 ஆண்டுகளில், அது அந்நியச் செலாவணிச் சிக்கலை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பின், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, சாம் பிட்ரோடாவுடன் இணைந்து,  தொழில்நுட்ப இயக்கங்கள் (Techonolgy Mission) தொடங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், தடுப்பூசிகள், குடிநீர், எண்ணெய் வித்துக்கள், அடிப்படைக் கல்வி, பால் என்னும் துறைகளில் தொடங்கப்பட்டது. இது இந்திய சமூகத்தில், பார தூரமான விளைவுகளை உருவாக்கியது.

எண்ணெய் வித்துக்களுக்கான திட்டம், தங்கத் தாரை (Operation Golden Flow) என அழைக்கப்பட்டது. தொடங்கிய ஐந்தாண்டுகளில், இந்தியாவின் இறக்குமதி குறைந்து, நின்று போனது. இந்த ஆண்டு (1990) நாம் இறக்குமதியை நிறுத்தி விட்டோம், என உழவர்களிடையே டாக்டர்.குரியன் முழங்கிய அந்தக் கூட்டத்தில், நான் ஒரு மாணவத் தன்னார்வலனாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆனால், அன்று அதன் முக்கியத்துவம் எனக்குப் புரியவில்லை.

அதன் பின்னர், இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கிறேன் என்னும் பெயரில், உலக வர்த்தக நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நரசிம்ம ராவ் அரசு. உலக வர்த்தக நிறுவனத்தின் ஷரத்துக்களில், இந்தியா 300% வரை இறக்குமதி வரி விதிக்கலாம் என இருந்தும், அமெரிக்கவின் சோயா பீன்ஸ எண்ணெய்க்கு 45% இறக்குமதி வரி என்னும் முதல் ஒப்பந்தம் செய்தது. இந்திய எண்ணெய் வித்துக்கள் துறையின் மீதான் முதல் அடி அது.. பின்னர், ப சிதம்பரத்தின் கனவு பட்ஜெட்டில், எல்லா எண்ணெய்க்கும் இறக்குமதி வரியை 20% எனக் குறைத்தார். குறைவான விலையில் பாமாயில் கொட்டத் தொடங்கியது. இதனால், மற்ற எண்ணெய்களுக்கான விலை குறைந்தது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி லாபமில்லா ஒன்றாக மாற, உழவர்கள் வேறு பயிரை நாடத் தொடங்கினர். இந்தியா இறக்குமதியை நம்பியிருக்கும் நாடாக மாறிப் போனது. இன்று நாம் உண்ணும் அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும் (பிஸ்கட், சிப்ஸ், நெடுஞ்சாலை உணவகங்கள்) பரம்பொருள் போல் இருப்பது பாமாயில்தான். இன்று இந்தியா 70% க்கும் அதிகமான தேவையை இறக்குமதி செய்கிறது

நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் பாமாயில் உற்பத்தி செய்யலாம் என ஒரு திட்டம் வந்தது. கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் போன்ற இடங்கள் சரியானவை  எனத் திட்டமிடப்பட்டு, தொடங்கப்பட்டன.. ஆனால், பாமாயில் தரும் எண்ணெய்ப்பனை மிக அதீத மழை பொழியும் சூழலில் வளர்வது. எனவே, அதுப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. பாமாயில் திட்டம் சீனாவிலும் வெற்றி பெறவில்லை.  ருச்சி சோயா என்னும் எண்ணெய் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிய ஒரு ஒட்டுண்ணித் தொழில் குழுமத்துக்கு உதவுவதற்காக, இந்தத் திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.  எண்ணெய்த் தொழில் மிகவும் வழுக்கும் ஒன்று. இதில் வழுக்கி விழுந்த நிறுவனங்கள் ஏராளம்.

இந்த வரலாற்றை தொடக்கம் முதல், இன்று வரை அலசும் ஒரு முழுமையான கட்டுரையை அமுலின் முன்னாள் மேலாண் இயக்குநரான வ்யாஸ் அவர்களும், கௌசிக் என்பவரும் இணைந்து எழுதிய கட்டுரைக்கான சுட்டியை இத்துடன் இணைத்துள்ளேன் ( இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக் – தமிழினி (tamizhini.in)). விருப்பமுள்ளவர்கள், சொடுக்கி முழுக் கட்டுரையை வாசிக்கலாம்

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

முந்தைய கட்டுரைஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15