சரித்திரக்கதைகள், கடிதங்கள்

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]
சவக்கோட்டை மர்மம் – சிறுகதை
பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை

வணக்கம் ஜெ,

நடந்தவை, நடப்பவையிலிருந்து நடக்ககூடுபவைக்கு செல்லும் பாதைகளே சாத்தியங்கள். அப்பாதைகளில் பயணிப்பவன் கனவுலகில் பயணிக்கிறான். தரையில் நடந்து கொண்டிருப்பவன் அடுத்த அடியை காற்றில் வைத்து மேகத்துடன் பறந்து செல்கிறான்; விரலிடுக்கில் பின்னும் கம்பளம் பறந்து பொங்கி விரிவது போல. சரித்திரக்கதைகள் என பெயரிட்டிருந்தாலும் இவை ஒருவகையில் மேஜிக்கல் ரியலிச கதைகள்.

டோல்கீன், யீட்ஸ் போன்றோர் அவ்வுலகை Faerie என அழைக்கின்றனர். டோல்கீன் On Fairy Stories என்ற கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்: The realm of fairy-story is wide and deep and high and filled with many things: all manner of beasts and birds are found there; shoreless seas and stars uncounted; beauty that is an enchantment, and an ever-present peril; both joy and sorrow as sharp as swords. In that realm a man may, perhaps, count himself fortunate to have wandered, but its very richness and strangeness tie the tongue of a traveller who would report them. And while he is there it is dangerous for him to ask too many questions, lest the gates should be shut and the keys be lost.

இச்சரித்திரக்கதைகள் போர்கஸின் சில கதைகளை நினைவுறுத்துகின்றன. அவிழ்க்க இயலாது போன்ற முடிச்சுகளை ஆசிரியன் தரலாம், வாசகனும் அதை விரும்புவான். ஆனால் அம்முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் ஆசிரியனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும், அது அந்த கதை மூலமே வாசகன் அறியக்கூடுவதாகவும் இருக்க வேண்டும்; இல்லையேல் அது வெறும் ஆடும் வரை ஆடி பின் மறக்க கூடிய விளையாட்டு மட்டும் தான். போர்கஸ் போன்ற மேலைநாட்டு எழுத்தாளர்களிடம் ஒரு  வலுவான விரிவான தத்துவ அடித்தளம் இல்லை என்பது என் எண்ணம். இந்தியர்களாக நமக்கு சிறு வயது முதலே அது வளர்கிறது. இச்சிறுகதைகளில் Faerie-யின் வெளிச்ச கீற்றுகள் மின்னுகின்றன, அவை உச்சம் கொள்வது விஷ்ணுபுரம் என்னும் பெருங்கனவில்.

நன்றி.

ஸ்ரீராம்

அன்புள்ள ஜெ,

மூன்று சரித்திரக்கதைகள் வெளிவந்த காலத்திலேயே நான் அதை வாசித்திருக்கிறேன். பின்னாளில் நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம் உள்ளிட்ட நாவல்களின் தொடக்கம் அதுதான். வரலாறு என்பது ஒரு பெரிய கதையாடல் என்னும் உணர்வு, அதைவைத்துக்கொண்டு விளையாடலாம் என்னும் உணர்வு இரண்டும் கலந்தவை அக்கதைகள். அந்த மூன்றுகதைகளிலுமே வரலாற்றை ஒரு பரமபத விளையாட்டாகத்தான் உருவகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

போர்ஹெஸ் போன்றவர்கள் இந்த பாணியில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் பலர் இவ்வகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழில் நம் வரலாறு இன்றைக்கு சாதிய வரலாறுகளாக ஊடறுக்கப்படுகிறது. உபவரலாறுகள் பல உள்ளே செயல்படுகின்றன. இன்றைக்கு வரலாறாக உருவகம் பண்ணப்பட்டிருப்பவை எல்லாமே ஒருவகையான கதைகள் என்று சொல்லப்படும் சூழலில் இக்கதைகள் பெரிய முக்கியத்துவத்தை அடைகின்றன. இவ்வகை கதைகள் நிறைய வெளிவருமென்றால் நல்லது.

ஆர்.கிருஷ்ணராஜ்

முந்தைய கட்டுரைஇரு கதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசமரசம் உலாவும் இடம்?