மகிழ்ச்சியும் பொறுப்பும்

TOWARDS HAPPINESS 2 BY RANJIT SINGH KURMI

குழந்தைகள் தேவையா?

அன்புள்ள ஜெ,

முகநூலில் வெண்முரசை பற்றி ஒரு குழுமத்தில் போடப்பட்டிருந்த பதிவுக்கு கீழே, அது Waste of time, அதை படிக்கும் நேரத்தில் வேறு ஏதேனும் செய்து பணம் ஈட்டலாம் என கமெண்ட் போட்டிருந்தார். ஆனால் பணம் கூட தராத ஒன்றை வாசிப்பின்பம் தரும் என்பதை அவருக்கு புரியவைக்க முடியாது.

இதே பாணியில் தான் குழந்தைகள் வேண்டாம் என்பதற்கான காரணங்களை யுடியூப் கமெண்ட்களில் பார்க்க முடிகின்றன. ‘குழந்தை வளர்ப்பதில் அப்படி என்ன இன்பம் இருக்கிறது’ ‘குழந்தைக்கு செலவழிக்கும் நேரத்தில் வேறு பயனுள்ள காரியங்களை செய்யலாமே’ ‘குழந்தையை வளர்ப்பதற்கு பதில் நாயை வளர்த்துகொள்ளலாமே’

இவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் இஷ்டமில்லை என்பதைவிட பெற்றோர் எனும் பொறுப்பை ஏற்பதிலேயே தயக்கம் இருக்கிறது என தோன்றுகிறது.

நன்றி

சண்முகசுந்தரபாண்டியன் த

Happiness 2 By Jai Srivastava , Pune

அன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,

நான் அடிக்கடி மலையேற்றம், தொல்லியல் ஊர்களுக்குப் பயணம் என அலைந்துகொண்டிருப்பவன். என்னிடம் அக்காலம் முதலே ‘சாமானியர்’ கேட்கும் கேள்வி என்பது “அதனாலே என்ன லாபம்?” என்பது.

ஆரம்பத்தில் எரிச்சலாக வரும். லாபம் என்ற அந்த சொல் ஒருமாதிரி அருவருப்பூட்டும். அவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க முடியாது என்று தெரியும். ஆகவே கடுகடுப்பாக ஏதாவது சொல்வேன்.

சிலசமயம் நல்ல மனநிலையில் இருந்தால் “சர்க்காரிலே இருந்து கிராண்ட் கிடைக்கும்ங்க.. ஒரு டிரிப்புக்கு இவ்ளவுன்னு குடுப்பான்” என்பேன்.

உடனே ஆர்வம் கொண்டு “போய்ட்டு வந்தா நமக்கு கையிலே என்ன நிக்கும்?”என்பார்கள்.

நான் பெரிய ஒரு தொகையைச் சொல்வேன். “கிலோமீட்டருக்கு நாப்பத்தஞ்சு ரூபா குடுப்பாங்க சார். வவுச்சர் குடுத்தா போரும்”

பரபரப்பாகிவிடுவார்கள். “அப்டியா? தெரியாமப்போச்சே! எப்டி அப்ளை பண்றது?” என்று கேட்பார்கள்.

மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்பேன். அப்படி விண்ணப்பித்த பலரை எனக்குத்தெரியும். ஒருவர் ஏழு நினைவூட்டல் கடிதங்கள்கூட அனுப்பியிருக்கிறார்.

அந்த கசப்பு இப்போது இல்லை. பாவம், அவர்கள் அவ்வாறுதான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வாறுதான் உள்ளம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. அவர்களின் பேச்சில் அடிக்கடி வரும் சொற்றொடரைப் பாருங்கள். “இதனாலே பத்து பைசாவுக்கு பிரயோசனம் உண்டா?”.பைசாவாக பிரயோசனம் இல்லாத செயலைச் செய்யவே அவர்களால் இயலாது.

அதேபோல இன்னொரு வரி “நாம நம்ம பொழைப்பைப் பாப்போம்”. பிழைத்தல் என்றால் வாழ்தல் அல்ல.விதியின் கண்ணியில் சிக்காமல் அதன் பிழையினூடாக கடந்து அப்பால் சென்றுவிடுதல். அதாவது தப்பிப்பிழைத்தல்.

நமக்கு வாழ்தலென்றாலே பிழைத்தல் என்று சொல்லித் தரப்பட்டுள்ளது. நம் குடும்பங்களில் இருந்து நாம் பெறும் வாழ்க்கைக்கல்வி என்பது அதுதான். அதுதான் இங்கே இயல்பான உளநிலை. பொதுவான வாழ்க்கைத்தரிசனம். மிகமிகச்சிலரே இயல்பாக அவர்களுக்குள் உள்ள தேடலாலோ, சூழலில் இருந்து பெற்ற அறிதலாலோ, அந்த எல்லையை கடந்து வருபவர்கள்.

அந்த மனநிலை இங்கே உருவாகி வந்ததற்கு மிக நீண்ட வரலாற்றுப்பின்புலம் உண்டு. பெரும்பஞ்சங்கள், நோய்கள், போர்ச்சூழல்கள். அலைக்கழிந்து போராடித் தாக்குப்பிடித்த அடித்தளத்து மக்களின் அன்றாட அனுபவத்தில் இருந்து உருவான ஒரு வாழ்க்கைப் பார்வை அது.

அந்த உளவியலில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது எதிர்காலம் பற்றிய பதற்றம், எதிர்பாராமை பற்றிய அச்சம். ஆகவே மிகமிகத் தேவையான செலவுகளை மட்டும் செய்து எஞ்சியதைச் சேமித்துக்கொண்டே இருப்பார்கள். பைசா பைசாவாக யோசிப்பார்கள். அதைத்தவிர எண்ணமே இருக்காது. வாழ்க்கையே நாளைக்காகத்தான், இன்று என்பதே இருக்காது.

அவர்களுக்கு வாழ்வென்பது பணத்தால் மட்டுமே மதிப்பிடத்தக்கது. தன் அடையாளம் என்பது பணம். ஒருவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்று பாருங்கள். தன் வேலையைச் சொல்வார். தன் பொருளாதார நிலையை அடுத்தபடியாக. பொருளியல்ரீதியாக வலிமையுடன் இருக்கும் உறவினர்களை அடுத்தபடியாக. அவ்வளவுதான் அவர் அறிந்த வாழ்க்கை. நினைவறிந்த நாள்முதல் கட்டை சாயும் வரை அவர் போராடுவதே அதற்காகத்தான்.

அவர் அறிந்த இன்பம் என்றால் முதன்மையாக உணவுதான். அதைப்பற்றிப் பேசினால் சட்டென்று உற்சாகமாகிவிடுவார்கள்.  அடுத்தபடியாக தங்களுக்குச் சமானமானவர்கள் என நினைப்பவர்களுடன் உடை, வீடு போன்றவற்றில் போட்டிபோடுவதும் வெல்வதும். சின்னச்சின்ன சவால்களில் எதிரிகளை மட்டம் தட்டியதன் கதைகளை சொல்வார்கள், அவையே அவர்கள் அறிந்த மகிழ்ச்சி. அவ்வளவேதான்.

நாம் இப்போதுதான் மெல்லமெல்ல நடுத்தர வாழ்க்கைக்கு வந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு தலைமுறை இந்த பாதுகாப்பை அடைந்தபின்னர்தான் நமது பதற்றங்கள் நீங்கும். அதன்பின்னர்தான் நாம் மகிழ்ச்சி என்றால் என்ன என்று யோசிக்க ஆரம்பிப்போம். மகிழ்ச்சியாக இருப்பதொன்றும் பிழையல்ல என்ற எண்ணம் வரும். நமது மகிழ்ச்சியை நாம் தேடிக்கொள்ளவேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

இன்று கொஞ்சம் மகிழ்ந்தாலே நமக்கு குற்றவுணர்வு வந்துவிடுகிறது. நம் சுற்றம் அந்தக் குற்றவுணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. “இங்கபாரு, உனக்கு பிள்ளைங்க இருக்கு. உனக்கு இதெல்லாம் எதுக்கு? அதுகளுக்கு நாளைக்கு ஒரு நல்லது நடக்கணும்… அதுக்குண்டான வழிய பாரு” என்று நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

“நான்லாம் மனசறிஞ்சு ஒரு நல்ல  டீ குடிச்சதில்லீங்க. குடும்பத்துக்காகவே வாழ்ந்தேன்.” என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கலாம். அது உயர்வான வாழ்க்கை என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ரயிலில் தவறாமல் சிலர் என்னிடம் அதைச் சொல்வார்கள். அது ஒரு வகை பூச்சிபுழு வாழ்க்கை என அவர்கள் உணர இன்னும் சில தலைமுறை ஆகும்.

சொல்லப்போனால், இங்கே சுற்றுலா செல்வதும் வெளியே சாப்பிடுவதும், தனக்காக சில பொருட்களை வாங்கிக்கொள்வதும் எல்லாம்கூட சென்ற முப்பதாண்டுகளில் உருவான மனநிலைகள். அதாவது நரசிம்மராவின்  சீர்திருத்தங்கள் உருவாக்கிய பொருளியல் வளர்ச்சியின் விளைவாக உருவானவை. நூற்றாண்டுப் பழமைகொண்ட நம் பதற்றங்கள் கொஞ்சம் குறைந்தன. [இன்று நம் ஆட்சியாளர்கள் மீண்டும் அந்தப்பதற்றத்தை நிறுவி விட்டிருக்கிறார்கள்]

ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் பொறுப்பு இருக்கிறது. தன் மகிழ்ச்சியை தானே தேடி கண்டடைய, முயன்று வளர்த்துக்கொள்ள அவர் கடமைப்பட்டிருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சிறு தருணத்தைக்கூட தவற விட மானுடருக்கு உரிமை இல்லை. அது ஓர் ஒப்பந்தம், இயற்கையுடன் மானுடன் செய்துகொண்டது. அதை மீறுவது ஒரு துரோகம்.

ஆனால் இங்கே நாம் மகிழ்ச்சி தானாக நிகழவேண்டுமென நினைக்கிறோம். அதுவே நம்மில் வந்தமர்ந்து நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆனால் துக்கத்தின் சிறு விதை இருந்தால்கூட அதை பேணி வளர்த்து, மரமாக்கி, காடாக்கிக் கொள்வோம். ஒரு வாய்ப்பைக்கூட தவறவிடமாட்டோம். அதற்காகத் தேடிக்கொண்டே இருப்போம்.

அதற்காகவே வஞ்சங்களை, போட்டிகளை வளர்த்துக் கொள்வோம். எதிரிகளை உருவாக்கிக் கொள்வோம். எப்போதுமே அவர்களை நினைத்து எரிந்துகொண்டிருப்போம். கசப்புகள் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருப்போம். தனிவாழ்க்கையில் எதிரிகள் போதவில்லை என்றால் சமூகவலைத் தளங்களுக்குச் சென்று அங்கே ‘கருத்தியல்’ எதிரிகளை தேடிக் கண்டடைந்து கரித்துக் கொட்டி வெறுப்பிலாடுவோம். அதெல்லாம் உருப்படியான வேலை என்று நம்பவும் செய்வோம்.

மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மை மட்டுமே சார்ந்தது. இன்னொருவர் அளிப்பது அல்ல.  மகிழ்ச்சிக்காக எவரையும், எதையும் நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. எவர் தனிமையில், தானாகவே மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் வாழ்கிறார்.

கலை, இலக்கியம் ஆகியவை அத்தகைய அந்தரங்க மகிழ்ச்சிகள். படைப்புச் செயல்பாடு எதுவும் மகிழ்ச்சியே. சேவை என்பது மகிழ்வூட்டுவது. மகிழ்ச்சியைப் பற்றிப் பேசிய அனைத்து ஞானியருமே கைகளால் எதையாவது செய்யுங்கள், மகிழ்ச்சிக்கு அது ஒரு பெரிய பாதை என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு கூடை பின்னுவது, ஒரு செடியை வளர்ப்பது, ஒரு பசுவை வளர்ப்பது- எதுவானாலும்.செயல்போல் நிறைவு வேறில்லை.

அந்த மகிழ்ச்சியை உணர்ந்தவர் எவரும் அது பணத்தால் அமைவதல்ல என அறிந்திருப்பார்கள். அதை அடைய மூன்று படிநிலைகள் உண்டு

அ.தன்னை அவதானித்தல். தனக்கு உண்மையில் எது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கண்டுபிடித்தல். வாசிப்பு, இசை, எழுத்து, பயணம், கைத்தொழில்கள், தோட்டம் உருவாக்குதல் எதுவாகவும் இருக்கலாம்.

சமீபத்தில் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் சொன்னார். அவர் ஒரு பசுக்கன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். அது அத்தனை தூரம் தன்னை மகிழ்விக்கும் என்று, தன்னை அன்றாடவாழ்க்கையில் அவ்வளவு நிறைவடையச்செய்யும் என்று அவர் எண்ணியிருக்கவே இல்லை. ”இத்தனைநாள் இதை இழந்துவிட்டேனே” என்றார். ”எல்லா தத்துவச் சிக்கலும் சரியாயிட்டது” என்று சிரித்தார்

ஆ. தன்னை வடிவமைத்தல். தனக்கு மகிழ்வளிப்பதை செய்வதற்குரிய சூழலையும் அதற்கான உளநிலையையும் உருவாக்கிக் கொள்ளுதல். அதற்காக முயல்தல். அதன்பொருட்டு நேரத்தை வசதிகளை கண்டடைதல்

இ. மகிழ்ச்சியை பேணுதல். தொடர்ந்து திட்டமிட்டு அதைப் பெருக்கிக்கொண்டே இருத்தல்.

மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்கான தத்துவக் காரணங்களைச் சொல்பவர்கள் பலர் உண்டு. நான் நாற்பதாண்டுகளாக அவர்களில் பெரும்பாலும் எல்லா வகைமாதிரிகளையும் கண்டிருக்கிறேன். அவர்கள் தன்னகங்காரம் கொண்டவர்கள், தனக்குத்தானே நடிப்பவர்கள், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். அந்தப் பாவனைகள் வழியாக அவர்கள் தாங்கள் மிகமுக்கியமானவர்கள் என்று உணர்கிறார்கள். பிரபஞ்சதுக்கத்தின் அத்தனை விசையையும் தாங்கும் அச்சுக்கல் என எண்ணிக்கொள்கிறார்கள்.

மகிழ்ச்சியாக இருக்க முதன்மைத்தேவை நாம் இங்கே அவ்வளவொன்றும் முக்கியமானவர்கள் அல்ல என்னும் அறிதல். நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும், ஆனால் நாம் இங்கே எதற்கும் பொறுப்பு அல்ல. நம் தலைமேல் எதுவும் இல்லை. நம் இருத்தலென்பது நமக்கு மட்டுமே முக்கியம். நம்மை எவரும் பெரிதாக ஒன்றும் கருத்தில்கொள்வதில்லை.

ஒருவர் மெய்யாகவே துக்கத்தின் உச்சியை அடைந்தால் அங்கே இந்த உண்மை கண்முன் மலை போல நின்றிருக்கக் காண்பார். அக்கணமே விடுதலை அடைவார். நான் அவ்விடுதலையை அடைந்தேன்.

துக்கத்தைக்கொண்டே தனக்கான அடையாளத்தை தேடிக்கொள்பவர் ஒருவகையான நடிகர். பெரும்பாலும் புத்திசாலியான நடிகர். அவர் தனக்குத்தானே விவாதித்து நிறைய சொற்களைச் சேர்த்து வைத்திருப்பார். அவரிடம் பேச முடியாது. அவர் மெய்யான துக்கங்களை அடையவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், அது அவருக்கு மெய்யான இன்பம் என்ன என்றும் காட்டும்.

இரு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று, நோய். உடலில் உருவாகும் நோயும் அதன் வதையும் நம்மை மீறியவை. அவற்றுக்கு எதிராக நாம் நம் ஆன்மவல்லமையை குவிக்கலாம். ஓர் எல்லைவரை அவற்றைக் கடந்துவரவும் முடியும். ஆனாலும் அது தூலமானது, மாற்றமுடியாது. அது ஊழ். ஊழை எதிர்கொள்வதொன்றே உயிர்களுக்கு வழி.

இன்னொன்று, உளச்சோர்வுநிலை. அதுவும் நோய்தான். அது ஒரு சுழல். அது துயரில் மகிழும் தலைகீழ் மனநிலையை உருவாக்குகிறது. உளச்சோர்வு நோய் கொண்டவர்கள் அதை பெருக்கிக்கொள்ளவே முயல்வார்கள். வெளியேறும் வழிகளை உள்ளிருந்து அவர்களே மூடிவிடுவார்கள்.

உளச்சோர்வுநோய் கொண்டவர்கள் அதற்கு வெவ்வேறு தத்துவ விளக்கங்களை அளிப்பார்கள். வாழ்க்கைப்பின்னணியைச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாமே நோயின் வெளிப்பாடுகள்தான். நோய் நோயேதான், வேறொன்றுமில்லை. மூளையின் ரசாயனங்களின் சிக்கலால்தான் பெரும்பாலும் உளச்சோர்வுநோய் உருவாகிறது. அரிதாக சிலவகை குற்றவுணர்ச்சிகளால்.

குற்றவுணர்ச்சியின் விளைவான உளச்சோர்வுநோயை அக்குற்றவுணர்ச்சிச்சூழலை விட்டு முற்றாக வெளியேறுதல், முற்றாக உள்ளத்தில் இருந்து அகற்றுதல் வழியாக கடக்கலாம். மூளைரசாயனச் சிக்கல்களுக்கு மருத்துவ உதவிதான் தேவை. எளிய பயிற்சிகள், சாதாரண மருந்துகளே மீட்டுவிடும் என்பதை திரும்பத் திரும்ப காண்கிறேன்.

குடும்பம்,குழந்தை ஆகியவற்றை ஏற்பதும் மறுப்பதும் ஒருவரின் தெரிவு. ஒருவர் குழந்தை வேண்டாம் என்கிறார் என்றால் அவர் அதைவிட கூடுதலான மகிழ்ச்சியை அடையும் வழியை கண்டடைந்திருக்கவேண்டும். மேலும் நிறைவு அவருக்கு நிகழ்ந்திருக்கவேண்டும். அவ்வாறென்றால் அது சரிதான்.

மகிழ்ச்சியே அளவுகோல். மகிழ்ச்சியில் உலகியல் மகிழ்ச்சி ஆன்மிக மகிழ்ச்சி என வேறுபாடில்லை. மகிழ்ச்சி தன்னளவிலேயே ஆன்மிகமானது. ஏனென்றால் ஒருவர் பிரபஞ்சம் என தன்னைச் சூழ்ந்திருக்கும் பிரம்மாண்டத்தில் இருந்து அள்ளி அள்ளி தன்னுள் நிறைத்துக்கொள்வது அது. அதுவே பிரம்மம். அதுவாதல் என வேதாந்தம் சொல்வது அதைத்தான்.

ஜெ  

பிழைத்தல், இருத்தல், வாழ்தல்

பிழைத்தல், இருத்தல்,வாழ்தல்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇன்றைய கலைவெற்றிகள், எதிர்வினை
அடுத்த கட்டுரைபிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா