இலங்கை முகாம்கள், கடிதம்

தேசமற்றவர்கள்

தேசமற்றவர்கள் – கடிதம்

ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்

ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். உங்கள் உணர்வுகள், பதிவுகள், தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவிப்புகள் நிறைவளித்தது. முதல்வருக்கு அன்பு நன்றிகள்.

முதல்வர் அறிவிப்புக் குறித்து மறுவாழ்வு முகாம் உறவுகளிடம் அவர்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளக் கேட்டேன். யுகவதனி ‘இருட்டுக்குள்ள இருந்தோம். வெளிச்சம் வந்த மாதிரி இருக்குப்பா’நண்பர் சிங்கப்பூர் குணசேகரனும் அவ்விதம் உணர்ந்ததாகவேச் சொன்னார்.

அரசின் அறிவிப்புகளுள் ஒன்றான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்கும் மறுவாழ்வு முகாம் மாணாக்கர்கள் முதல் ஐம்பது பேருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டண செலவினங்களை அரசே ஏற்கும் எனும் அறிவிப்பு கேட்டவுடன் சகோதரர் எஸ்.கே.பி. கருணாவை மானசீகமாக அணைத்துக் கொண்டேன்.

2015 ஆண்டு மே 5 ஆம் தேதி சேகர் மறைவுக்குப் பின் சில நாட்களில் நடந்த ஊட்டி முகாமில் அரங்கா, கருணாவின் எண் கொடுத்து பேச சொன்னார். முகாம் இறுதி நாளன்று பேருந்தில் திரும்பும் போது காளிப்ரசாத் அறிமுகம் கிடைத்தது. சென்னை திரும்பி கருணாவை தொடர்புக் கொண்டேன். அவ்வாரம் சென்னை வருவதாகவும் நேரில் சந்திக்கலாம் எனவும் சொன்னார்.

மாலை நேரம் அவரை சந்தித்தவுடன் ‘சொல்லுங்க’ என்று அனைத்தையும் கேட்டு… உடனே ‘அவங்க கூட இருக்கறது நம்ம கடமைங்க. நான் சீட் தர்றேன்… அழைச்சுட்டு வாங்க உங்க நம்பரை சேவ் பண்ணித்தான் வச்சிருக்கேன்…’ அவ்வளவுதான். அடுத்த முறை ‘வெண்முரசு’ விழாவின் போது சென்னை கன்னிமரா அரங்கில் சந்தித்தேன்… ‘வாங்கபசங்கள அழைச்சுட்டு வாங்க…’ தொடர்ந்து மூன்று ஆண்டுகள்ஒரு முறை கூட மறுதலித்ததில்லை…

ஒவ்வொரு முறை மாணாக்கர்கள், பெற்றோர்களுடன் அவரது கேபினில் சந்திக்கும் போதும் அவர்களுடன் அன்போடு உணர்வுபூர்வமாக அவர் பேசிக் கொள்வதை உடனமர்ந்து கவனித்திருக்கிறேன். அவர்கள் கல்வியில் வளம் பெற வேண்டும் எனும் அவரது விருப்பத்தை குழந்தைகளிடம் போல பகிர்ந்துக் கொள்வார். அவர்களும் அவரது உணர்வுகள் புரிந்து தேர்ச்சிப் பெற்று, இன்று பணியில் இருக்கின்றனர். கிளம்பத் தயாராகும் போது ‘கண்டிப்பா சாப்ட்டுத் தான் போகணும்’ என கல்லூரி உணவு விடுதிக்கு அனுப்பி வைப்பார் அகதியர் குறித்த துயரமும், அன்பும், அரவணைப்பும். அத்தனை மாணாக்கர், பெற்றோர் அனைவரது அன்பையும்  நன்றியையும் சகோதரர் கருணாவிற்கு சமர்பிக்கின்றேன்.

அரசின் கவனத்திற்குள் அவர்கள் வந்தது மகிழ்ச்சியே என்பதற்கப்பால் பவானி சாகர் முகாம் தலைவர் நடராஜன் ஐயா பகிர்ந்துக் கொண்ட அவர்களது அடிப்படையான உணர்வுகளை உங்களிடம் தொகுத்துப் பகிர்ந்துக் கொள்கிறேன். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் வந்த அகதிகள் சார்ந்த குறைந்தபட்ச என் உணர்வுகளை அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக பகுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

1983 இறுதி தொடங்கி மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம் வரையிலான முதற்காலம். அவரது மரணம் துவங்கி 2009 மே மூன்றாம் வாரம் வரையிலான இரண்டாம் காலம். 2009 மே மாதத்திற்குப் பின் சமகாலம் வரை. வருந்தி வந்த உறவுகளை அன்போடு அரவணைத்த முதற்காலம், தொடர்ந்து ஏறக்குறைய 18 ஆண்டுகள் கடும் கட்டுப்பாடு, நெருக்கடிகள். அனைத்தையும் எதிர்கொண்டு ‘தற்போதைய தமிழக அரசு செய்யவில்லையெனில். இனி ஒரு போதும் ஒன்றும் நடக்கப் போவதில்லை’ எனும் ஒளிக்கீற்று உருவானது.

தமிழக முகாம்கள் அனைத்தும் மறுவாழ்வுத் துறை நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. காவல் உளவுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாதம் ஒருமுறை வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரி வழி அவர்களுக்கான மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. அச்சமயம் முகாம் சார்ந்த ஒவ்வொருவரும் நேரில் வர வேண்டும். வெளியிடங்களுக்கு கல்வி மற்றும் பணி சார்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் நேரில் வந்தாக வேண்டும். கோழிவிளை, களியக்காவிளை முகாமினர் சென்னையில் கல்வி மற்றும் பணியில் இருந்தாலும் உரிய நாளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருவதென்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பகிர்ந்துக் கொண்டார். இந்நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசு மாற்று ஏற்பாடு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.

இரு சக்கர மூன்று சக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டாலும் அவர்கள் பெயரில் பதிவு செய்ய இயலாது. ‘ஊர்காரங்க’ பெயரில் தான் பதிவு பெற்றாக வேண்டும். அவ்வாறு பதிவு செய்து முழுப் பணமும் கட்டிய பின்பு வாகனத்தை இழந்தவர்கள் இருக்கின்றார்கள். இன்றைய சூழலில் வாகனங்கள் அத்தியாவசிய பட்டியலில் உள்ளது. முகாம்கள் ஊருக்கு வெளியே அமைந்துள்ளதால் வாகனத் தேவையும் உள்ளது. எனது வழக்குரைஞர் நண்பர்கள் இருவரிடம் இது குறித்துக் கேட்டேன். வாகன பதிவிற்கு குடியுரிமை அவசியம் ஆனால் தற்காலிகமாக எனும் அடிப்படையில் மாநில அரசு இது குறித்து முடிவெடுக்க இயலும் என்றனர்.

முகாம்களில் கழிவறை வசதிகள் பெரும்பாலும் இல்லை. அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இப்பணியை முன்னெடுக்க முடியும் என்கின்றனர். அரசு அனுமதித்தால் வாய்ப்புள்ளவர்கள் அவர்களாகவே கட்டிக் கொள்ள முன்வருவர் என்றார். முன்பு முகாமினர்க்கும் ‘ஊர்காரங்’களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் காவல்துறை இருவர்க்கும் பொதுவாக நடந்துக் கொள்ளும் நிலை தற்போது சற்று மாறியுள்ளது என்றார். ‘முகாமினர் பெருங்குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. எளிய தவறுகளுக்கு கிடைக்கும் பாரபட்சமான நீதி அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்கிறது’ என்கிறார். முன்பு பிரச்சனை குறித்து முகாம் தலைவரிடம் கூறி அவருடன் காவல்துறை அல்லது மறுவாழ்வுத் துறை செல்லும் வழமை மாறியுள்ளதை குறிப்பிட்டார். இளைய தலைமுறையினர் ‘ நாமளே பார்த்துக்கலாம்’ எனும் மனநிலையில் கும்பலாக எதிர்கொள்வது அச்சமூட்டுவதாக பகிர்ந்துக் கொண்டார்.

முத்துராமன்
முத்துராமன்

உங்கள் பதிவு வெளியான ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பின்பு பவானி சாகர் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வந்ததை பகிர்ந்துக் கொண்டார். உரிய அமைச்சர் அல்லது முதல்வர் ஒருமுறை வந்தால் தங்கள் சூழல்களையும் நெருக்கடிகளையும் உணர்ந்து தீர்க்க இயலும் இந்த அரசின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். நேற்று முந்தினம் தமிழ் இந்து தினசரி பேட்டி எடுத்ததாகவும் வரும் ஞாயிறன்று கட்டுரை வெளியாகும் எனத் தெரிவித்ததாகவும் சொன்னார். ‘ஊர்காரங்க’ – நம் சமுகம் – அரூபமாக கவனங்கொள்ளும் இடைவெளி குறைந்தால், மறைந்தால் அவர்கள் நிம்மதியாக மூச்சிழுத்து 1983 -1991 முதற்கால கட்ட அரவணைப்பு கூடிய ‘மறுவாழ்வு’ வாழ இயலும் என்றே நம்புகிறேன்.

அவர்கள் அன்பையும் நன்றியையும் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.

எக்கணத்துளியிலும்
அன்புடனும் நன்றியுடனும்

முத்துராமன்

***

அகதி வாழ்வு

அகதிகள் ஒரு கடிதம்

இலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்
அடுத்த கட்டுரைராவுத்தர் மாமாவின் கணக்கு