ஒரு நாளின் டைரி
செப்டெம்பர் முழுக்க என்ன செய்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டால் பெரும்பாலான நேரம் சும்மா இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கலந்துகட்டி படித்தேன் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ட்யூராங்கோ, மாடஸ்டி பிளேய்ஸ் காமிக் நூல்கள். Arthur Machen, Robert Graves எழுதிய பேய்க்கதைகள்.
நிறைய பாட்டுகள் கேட்டேன். வழக்கமான நஸ்டால்ஜியாதான். அதற்குமேல் ஆழமாக இசைகேட்டால் இலகுவாக இருக்க முடிவதில்லை. அதன்பின் ஊரைச் சுற்றி காலை மாலைநடை. தொலைபேசி உரையாடல்கள். பெரிதாக எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. என்ன ஒரு சுகம்! ஒரு யோக நிலை.
செப்டெம்பர் எட்டாம் தேதி நண்பர் அருள் திருமணம். பெண் ஓசூர் பக்கம். திற்பரப்பு அருவி அருகே ஒரு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி. காலையிலேயே நானும் அருண்மொழியும் கிளம்பி பத்மநாபபுரம் சென்று கே.பி.வினோதை அழைத்துக்கொண்டு சென்றோம். நான் வெள்ளைவேட்டி சட்டை. வேட்டிசட்டை அணிவது இன்று ஒரு ‘லக்சுரி’ சொந்தக்காரில் செல்பவர்களுக்கு வசதியானது.
அங்கே ஜெயராம் வந்திருந்தார். அவருடன் திருமணத்திற்குச் சென்று முதலில் சிற்றுண்டியை சாப்பிட்டோம். ஒழிமுறி படத்தில் போலீஸ்காரராக நடித்தவர் அங்கே கோயில், கல்யாண மண்டபம் இரண்டுக்கும் பொறுப்பாளர். அவர் உபசரித்தார்.
கொரோனா காரணமாக மிகச்சிறிய அளவில் திருமணம் நடந்தது. முப்பதுபேருக்குள்தான் இருக்கும் விருந்தினர்கள். அருள் அஜிதனின் நண்பன். அஜிதன் சென்னையில் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் திருமண நிச்சயத்திற்குச் சென்றதனால் இங்கே வரமுடியவில்லை. ஆகவேதான் நான் போகவேண்டியிருந்தது.
எனக்கு திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் பெரிய ஒவ்வாமை உண்டு. போகவேண்டுமே என நினைத்தாலே ஒரு பாரம்போல ஆகிவிடும். கூடுமானவரை சொந்தக்காரர்களின் மணநிகழ்வுகளை தவிர்த்துவிடுவேன். சினிமா வேலைகள் நிறைய இருக்கையில் மணநிகழ்வுகளுக்கு போகவும் முடிவதில்லை. அருண்மொழி திருமண நிகழ்வுகளை விரும்புபவள். அவள் வருவது அனைவருக்கும் பிடிக்கும்.
மழைக்காலம், மலையில் மழை அறுபடாது நின்றிருப்பதனால் அருவியில் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. பெருமுழக்கத்துடன் அறைந்து நிலத்தை அதிரச்செய்து வெள்ளிச்சுடர் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது அருவி. அருகே போகமுடியாது. அருவி இன்னும் திறக்கவில்லை. கோயிலுக்கு அருகே நின்று அருவியை பார்த்தோம்
திற்பரப்பு மகாதேவர் கோயில் என் நினைவில் பலவிதமாக படிந்திருப்பது. நாலைந்து கதைகள் அக்கோயில் பற்றியே எழுதியிருக்கிறேன். மலையாளப் பாணியில் கல்லில் கட்டப்பட்டது. சிவன் இங்கே கிராதமூர்த்தியாக வழிபடப்படுகிறார். [காட்டாளன்] பழைய காலத்தில் காளாமுகர்களின் தாந்த்ரீக வழிபாடு இருந்திருக்கிறது.
உள்ளே சென்று வழிபட்டுவிட்டு திரும்பினோம். வந்ததுமே படுத்து ஒரு நீள்துயில். குமரிமாவட்டத்தில் காரில் சென்றாலே எனக்கு தலைசுழலும். ரங்கராட்டினத்தில் சுழன்றதுபோல. சாலைகளை சுழற்றிச் சுழற்றி போட்டிருப்பார்கள். அதோடு மொத்தச் சாலைகளும் பல்வேறு வீட்டுமுகப்புகள் அடுக்களைகள் வழியாகவே செல்லும். சாலையை ஒட்டி வீட்டைக் கட்டுவது குமரிமாவட்டத்தின் உளச்சிக்கலளில் ஒன்று.
இங்கே காரில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் உறுப்பு பிரேக்தான். கார்கள் பிரேக் டேன்ஸ் ஆடுகின்றன என்றே சொல்லலாம். பிரேக் அழுத்தங்கள் முழுக்க என் தேய்ந்த கழுத்தெலும்பில்தான் அழுத்தம் அளிக்கும். தூங்கி எழுந்து ஒரு சுற்று நடை சென்று வந்து ஒரு காமிக்ஸ் வாசித்தபோது ஒருநாள் நிறைவுற்றது. ஆகா!
ஒன்பதாம் தேதி என் அண்ணாவின் மகளுக்கு திருமணத்திற்கு ‘நாள்கொடுப்பு’ சடங்கு. அக்காலத்தில் திருமணநாளை ஓலையில் எழுதி கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆண்கள் மட்டும் மணமகன் வீட்டில் இருந்து வரவேண்டும். அதிகம்போனால் பத்துபேர். பெண்வீட்டில் ஒரு பத்துபேர். ஒரு சடங்குதான், விழா அல்ல.
காலையில் எழுந்து வேட்டி கட்டி வெள்ளைச்சட்டை போட்டு மீண்டும் ஒரு பயணம். முன்பு தக்கலை வரைக்குமான சாலையில் வலப்பக்கம் வேளிமலைகள் பசுமையாக எழுந்திருப்பதை பார்த்தபடியே செல்வது ஒரு பெரிய அனுபவம். இன்று மலை ஆங்காங்கேதான் கண்ணுக்கு தென்படுகிறது. முழுக்க கட்டிடங்கள்.
அண்ணாவின் வீட்டில் எளிமையாக சடங்கு முடிந்தது. காலையுணவு அங்கேதான். மணமகன் வீட்டிலிருந்து வந்தவர்களை எனக்கு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் தெரியும். நாங்கள் முழுக்கோடு என்னும் ஊரில் அணியாட்டுவீடு என்னும் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்கள்தான் பக்கத்து வீட்டுக்காரர்கள். ராஜம். லலிதா என இரு அக்காக்கள். பிரேமி என இளையவள். லாளி என அழைக்கும் லலிதா அக்காவின் மகன்தான் மணமகன்.
அக்காலத்தில் அக்காக்களின் அடிப்பொடிகளாக திகழ்ந்தோம். அடிவாங்கியும் திரிந்தோம். பெண்கொடுக்கும் சம்பந்திகளை பையன் வீட்டு பெண்கள் வாடா போடா என அன்பாக அழைக்கும் சூழல். பேசிக்கொண்டிருந்தோம். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டபோது சினிமாவில் செய்வதென்ன என தோராயமாக விளக்கினேன். மணி ரத்னம், சங்கர், கௌதம் மேனன் எவர் பெயரும் எவருக்கும் சரியாக தெரிந்திருக்கவில்லை. சரி ஃபகத் ஃபாஸில் பெயரைச் சொன்னால் அவர் பெயரும் எந்த மணியையும் அடிக்கவில்லை.
பெண்களுக்கு சீரியல். ஆண்களுக்கு கட்டிடம், நிலம், சொந்தக்காரர்களின் விழாக்கள் வியாஜ்ஜியங்கள். ஆயிரமாண்டுகளாக இரண்டு தாலுக்காக்களுக்குள்ளேயே திரண்டு முழுமைபெற்ற வாழ்க்கை. இதை நான் ஏற்கனவே முங்கிக்குளிவாழ்க்கை என வரையறை செய்திருந்தேன்.
திரும்பி வந்து மீண்டும் ஒரு தூக்கம். மீண்டும் ஒரு காமிக்ஸ். மண்டையில் ஒரு காற்றோட்டம். வீட்டை காலி செய்யும்போது எல்லா பொருட்களையும் வெளியே எடுத்துவிட்டபின் ஒரு காற்றோட்டம் இருக்குமே அது.