செப்டெம்பரின் இசை

கம் செப்டெம்பர் படம் எம்.எஸ் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோரால் பலமுறை பார்க்கப்பட்ட பெருமை கொண்டது. ஜீனா லோலாபிரிகிடா என்னும் அழகிக்காக.  பரவசத்துடன் எம்.எஸ் சொன்னார். “ஆட்டுக்குட்டி மாதிரி துள்ளிட்டு இருப்பா”. அந்தக் காலத்தில் வந்துகொண்டிருந்த வழக்கமான போர்ப்படங்களில் இருந்து மாறுபட்டது. ரொமாண்டிக் காமடி. அதற்கு முன் அவர்களை கொள்ளை கொள்ள ரோமன் ஹாலிடே என்னும் படம் வந்திருந்தது. ஆட்ரி ஹெப்பர்ன் என்னும் அழகியோடு.

கம் செப்டெம்பர் திருவனந்தபுரத்தில் ஒரு மாதம் ஓடியபடம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்து மீண்டும் மீண்டும் ஓடியது.  “அதிலே நமக்கு இங்க பழக்கமே இல்லாத ஒரு உலகம் இருந்தது. நமக்கு  இங்க எல்லா அகவாழ்க்கையும் இருட்டிலேதான். கற்பனையிலேதான். அதிலே ரொமான்ஸோட ஒரு கொண்டாட்டம் இருந்தது” என்றார் சுந்தர ராமசாமி. “அதிலே ஒரு டியூன் உண்டு. அற்புதமான டியூன் அது. படம் போடுறதுக்கு முன்னாடி அதை ஸ்பீக்கர்லே போடுவான். அப்பவே அந்த மூட் உண்டாயிரும்”

நான் கம் செப்டெம்பரை 1985 செப்டம்பரில் மங்களூரில் பார்த்தேன். பரவசமாக சுந்தர ராமசாமியை அழைத்து “அற்புதமான டியூன் சார். ஜீனா லோலாபிரிகிடா பழசாயிட்டாங்க. டியூன் அப்டியே பிறந்து வந்தது மாதிரி இருக்கு” என்றேன். சுந்தர ராமசாமி சிரிக்கும் ஒலி தொலைபேசியில் அற்புதமாக ஒலிக்கும்.

பாபி டாரின்

கம் செப்டெம்பரின் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜே. சால்ட்டர் [Hans J. Salter] ஆனால் அதன் தலைப்பிசைக்கு இசையமைத்தவர் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான பாபி டாரின். புகழுடன் இருக்கையிலேயே தன் முப்பத்தேழாவது வயதில் இதயநோயால் பாபி டாரின் மறைந்தார்.

கம் செப்டெம்பரின் இசைத்துணுக்கை கேட்காதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இலங்கை வானொலி உட்பட சில வானொலிகளில் இடைவெளியை நிரப்பும் இசையாக அது ஒலித்திருக்கிறது. அதன் நூற்றுக்கணக்கான திரிபுகளும் மருவுகளும் விளம்பரங்களில் இசைத்துணுக்குகளாக ஒலித்திருக்கின்றன. பாபி நிறைய பாடியிருக்கலாம். ஆனால் இந்த ஒரு இசைக்கீற்றை எதிர்காலத்திற்காக விட்டுச் சென்றார். ஒரு கவிதை மட்டும் எழுதி இலக்கியத்தில் வாழ்பவர்களைப்போல. இது அவருடைய கையொப்பம்.

இந்த செப்டெம்பர் தொடக்கத்தில் சிங்கப்பூர் நண்பர் சித்ரா ரமேஷ் இந்த தீம் மீயூசிக்கை வாட்ஸப் வழியாக அனுப்பியிருந்தார். குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று முதல் பனித்துளி உடலில் விழும் அனுபவத்தைப் பெறுவது போலிருந்தது. அன்று முழுக்க மயக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன். நடனத்திற்கு உகந்த மெட்டு. இரண்டு மென்மையான அசைவுகள் ஓரு விரைவான அசைவு என எவரும் ஆடிவிடலாம். நெடுங்காலம் மும்பை டிஸ்கொதேக்களில் இதுதான் ஓடியது என்று திரைநண்பர் சொன்னார்.

பலவகையிலும் இங்கே இதை நகலெடுத்திருக்கிறார்கள். நான் படத்திற்காக ஜெயலலிதா ஆடும் ‘வந்தால் என்னோடு’ நல்ல நகல். கொஞ்சம் முன்னால் சென்றிருக்கிறார்கள். அத்துடன் தொடர்பே இல்லாமல் ஒரு முகப்பு இசை கொடுத்திருக்கிறார்கள். அது ஒரு பேய்ப்பாடலின் தன்மையுடன் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் இந்தியக் கற்பனை விளையாடியிருக்கிறது. அதன் இந்தி வடிவம் ராஜா என்ற படத்தில். அது மிகசுமாரான நகல்தான்.

இந்த இசையுடன் இணைந்து எழும் பல நினைவுகள். கம் செப்டெம்பர்தான் அன்பே வா என்ற பெயரில் தமிழில் தழுவி எடுக்கப்பட்டது. இந்தியிலும் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் கம் செப்டெம்பர் எடுக்கப்பட்டுள்ளது. கம் செப்டெம்பரில் நடித்த ராக் ஹட்ஸன் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த முதல் பிரபலம். எண்பதுகளில் அவரே அதை அறிவித்துக்கொண்டார். அவர் ஓரினச்சேர்க்கையாளர்.

இணையம் முழுக்க கம்செப்டெம்பரின் வெவ்வேறு வடிவங்களை வெவ்வேறு இசைக்கலைஞர்கள் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசித்து வலையேற்றியிருக்கிறார்கள். எத்தனைமுறை கேட்டாலும் அந்த குமிழியிடும் பகுதி ஓர் உற்சாகத்தை உருவாக்கத்தான் செய்கிறது

இந்தி சினிமாவில் கம்செப்டெம்பரின் செல்வாக்கு 

முந்தைய கட்டுரைகாந்தள்
அடுத்த கட்டுரைஇ.பாவுக்கு விருது