அந்தக்குரல்

நாற்பத்தைந்து ஆண்டுகளாகின்றது இந்தப்படத்தை திரையில் பார்த்து. இந்தப்பாட்டு ஒரு காலத்தில் கொஞ்சம் பிடித்திருந்தது. அதன்பின்னர் மறந்துவிட்டேன். எப்போதாவது அரைகுறையாக காதில் விழும். நாங்களெல்லாம் சட்டென்று இளையராஜா அலையால் அடித்துச்செல்லப்பட்டவர்கள். எழுபத்தெட்டுக்குப்பின் இந்தப்பாட்டையெல்லாம் விட்டு மனம் விலகிவிட்டது. ஆகவே காதில்விழுந்தாலும் கவனிப்பதில்லை.

இப்போது சட்டென்று ஓர் ஆர்வத்தில் யூடியூபில் இதைக் கேட்டேன். கடந்தகால ஏக்கமாக இருக்கலாம், இனியதாக ஒலித்தது. முக்கியமாக இப்போது கவனித்தது ஜெயலலிதாவின் இனிய குரல். தேர்ந்த பாடகிக்குரிய குரல். இயல்பான உணர்ச்சிகரமும் இனிமையும் கொண்டிருக்கிறது. ஏன் ஜெயலலிதா தொடர்ந்து பாடவில்லை என்று தெரியவில்லை. நானறிய ஓரிரு பாடல்களே பாடியிருக்கிறார்.

அன்றெல்லாம் எல்லா பாட்டும் சுசீலாதான். அவ்வப்போதுதான் வாணி ஜெயராம், எல். ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி. சுசீலாவின் குரல் உண்மையில் அன்றெல்லாம் அவ்வளவு சலித்துவிட்டிருந்தது எங்களுக்கு. எம்.எஸ்.விஸ்வநாதன் அலுத்துப்போய் நாங்களெல்லாம் இளையராஜா பக்கம் சென்றதற்கு டி.எம்.எஸ்- சுசீலா குரலே திரும்பத்திரும்ப ஒலித்ததுதான் முக்கியமான காரணம் என நினைக்கிறேன். இருவருக்குமே ஓங்கிச் சுழலும் நாதஸ்வரக்குரல். பாட்டுகளும் அதற்கேற்பத்தான் இருக்கும்.

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கேட்ட எல்லா பாட்டும் ஒரே பாட்டுபோல ஒலித்தன என இப்போது என் நினைவு சொல்கிறது. உண்மையில் யூடியூப் வந்தபின் பழைய பாட்டுக்களைக் கேட்கையில்தான் அப்படியொன்றும் ஒரேமாதிரி டியூன் இல்லை என்ற எண்ணம் வருகிறது. மெட்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பல வகைகளில் விரிந்திருக்கிறார். டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும்தான் ஒரே மாதிரி பாடி எங்களைப்போன்ற சிறுவர்களை ஓட ஓடத் துரத்தியிருக்கிறார்கள்.

இன்றும் தனிப்பட்ட முறையில் எனக்கு டி.எம்.எஸ் குரல் பிடிக்காது. சிவந்தமண் படத்திலுள்ள ’பார்வை யுவராணி கண்ணோவியம்’ போன்ற சில அபூர்வமான பாடல்கள் அவற்றின் மெட்டுக்காக மட்டும் பிடிக்கும். டிஎம்எஸ் குரல் இல்லாமல் அதைக் கேட்கவேண்டும் என்றால் எவராவது கருவியிசையாக வாசித்திருக்கவேண்டும். அதற்காக யூடியூபில் தேடியிருக்கிறேன். டி.எம்.எஸின் எந்த பாட்டானாலும் கருவியிசை வடிவில் இருக்கிறதா என்றுதான் தேடுவேன். நெடுங்காலம் சுசீலா மீதும் அந்த ஒவ்வாமை இருந்தது. சுசீலாவின் மலையாளப்பாட்டுக்கள்தான் பிடிக்கும். தமிழில் இருக்கும் சுருதிசுத்தமான கணீர்த்தன்மை இல்லாமல் சாதாரணமாகவே மலையாளத்தில் அவரை பாடவைத்திருப்பார்கள்.

எனக்கு பிடிக்காதது அவர்களின் பிழை அல்ல. என் மாமா ஒருவர் உயிரே போனாலும் பன்ரொட்டி சாப்பிட மாட்டார். அவர் ஏழாண்டுக்காலம் ஹாஸ்டலில் தினமும் பன்ரொட்டி- அஸ்கா சக்கரைதான் சாப்பிட்டார். அப்போது உருவான ஒவ்வாமை. சட்டென்று ஜானகியின் மென்குரல் அன்னக்கிளி முதல் ஒலிக்க ஆரம்பித்தபோது அந்த வேறுபாடே அவ்வளவு பெரிய பரவசத்தை அளித்தது. அதன்பின் இளையராஜா கொண்டுவந்த புதுக்குரல்கள். ஜென்ஸி, எஸ்.பி.ஷைலஜா குரல்கள் எல்லாம் பிசிறற்ற கணீர்க்குரல்கள் அல்ல. சாதாரணமாக கேட்கும் குரல்கள். மென்மையான உடைசலோசைகள், கம்முதல்கள் எல்லாம் கொண்டவை. அந்த வேறுபாடு அன்று உருவாக்கிய பெரும் பரவசத்தை இன்றுள்ளவர்கள் உணர முடியாது. ஒரு காலத்தில் போஸ்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை என்று போட்டிருந்தாலே நாங்கள் சின்னப்பயல்கள் உள்ளே போகமாட்டோம். போனாலும் பாடல்போடும்போது எழுந்து “பாட்ட ஆஃப் பண்ணுடா!” என்று ஆர்ப்பாட்டம் செய்வோம். அவ்வளவு சலிப்பு.

ஆனால் இன்று இந்தப்பாடல் இனியதாக இருக்கிறது. இன்று எனக்கு அக்காலத்தைய பல பாடல்கள் கனவை எழுப்புவனவாக உள்ளன. திரும்பத்திரும்ப ஒரே குரல்களை பயன்படுத்தியதற்குப் பதிலாக ஜெயலலிதாவைப்போல புதியகுரல்களை எம்.எஸ்.வி பயன்படுத்தியிருக்கலாமே என்னும் ஆதங்கம் ஏற்படுகிறது.

முந்தைய கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைதனிக்குரல்களின் வெளி