மண்ணுள் உறைவது
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாட்டிலிருந்து வரும் கதைகளுக்கே ஒரு தனி ஃப்ளேவர் உள்ளது. அந்த மொழிநடை தமிழின் பொதுவான வட்டார வழக்குகளில் இருந்து விலகி நிற்கிறது. நாஞ்சில்நாடன், நீங்கள், தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் எழுத்திலுள்ள வட்டாரவழக்கு முதல்பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் கூர்ந்த வாசிப்பில் வேறுவேறாகவே இருக்கிறது. அதேபோலத்தான் சுஷில்குமாரின் நடை. நாஞ்சில்நாடனின் நடைபோல இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் நாலைந்து கதைகளை வாசிக்கையில் தனியான சுவை தெரிய ஆரம்பித்துவிட்டது.
தமிழகத்தின் மற்ற நிலத்திலுள்ள கதைகளுடன் ஒப்பிடுகையில் நாஞ்சில்நாட்டுக் கதைகளிலுள்ள சிறப்பம்சம் என்று எனக்குத் தோன்றுவது அங்கே உள்ள மாயம்தான். அதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் முன்னுரையில் என்று ஞாபகம். பேய்க்கதைகள் சிறுதெய்வங்களின் கதைகள் நிறைந்த நிலம் அது. அந்த மாயம்தான் நாஞ்சில்நாட்டுக் கதைகளின் சிறப்பம்சம். சுந்தர ராமசாமியே அதை ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியிருக்கிறார். தாமோதர ஆசான் ஒரு மகத்தான கதாபாத்திரம். சுந்தர ராமசாமி முதல் நீங்களும் நாஞ்சிலும் எழுதினாலும்கூட இன்னமும் கதைகள் மிஞ்சியிருக்கின்றன என்பதற்குச் சான்று சுஷில்குமாரின் கதைகள்.
மண்ணுள் உறைவது அந்த மாயம் கொண்ட கதை. நாம் பயன்படுத்தும் நீர் எல்லாம் மண்ணில் இருந்து வருகிறது. மண்ணுக்கே திரும்பிச் செல்கிறது. நாம் அழுக்காக்கி அளிக்கிறோம். அது தூய்மைப்படுத்தி திருப்பித்தருகிறது. நமது ஆழத்து அழுக்குகள் அங்கே தூய்மை செய்யப்படுகின்றன. ஆனால் மண்ணே தூய்மை செய்யமுடியாத அழுக்குகளும் உண்டு என தோன்றியது அந்தக்கதையை வாசிக்கும்போது.
ஆர். முருகானந்தம்
****
அன்புள்ள ஜெ
மண்ணுள் உறைவது என்பது மண்ணாலான உடலுள் உறைவது. அங்கு சுரக்கும் கிணற்றின் ஊற்றுநீர் என்பது நம் மனதின் அன்புணர்ச்சியே ஆகும். அந்நீர் வற்றுகையில் நடை பிணமென்றான வாழ்க்கை. அவர்கள் தேடும் ஊற்று தங்கள் ஆணவத்தால் அறியாமையால் தொலைத்த அவ்வூற்றை தான்.
அகழ்ந்தெடுக்கப்படும் அனைவரின் ஆழங்களும் வகுத்துசொல்ல முடியாதவை. புவியில் ஒவ்வொரு உறவும் மற்றொரு உறவுடன் பிணைந்துள்ளவை. அந்த கிணற்றின் துர்நாற்றம் அத்தையின் வருகையை உவக்காத குடும்பத்தின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். கணவர் இல்லாத அம்மா அத்தை தேடிப்பிடித்து அன்பு கொள்வது குடும்பத்தில் தன் மீது காட்டப்படும் கரிசனத்திற்கு மறுபக்கமும் கூட.
மாமாவை ஏற்றுகொள்ளும் தாத்தா மயங்கி சரிவது, தந்தைக்கும் மகனுக்கும் இடை நடக்கும் ஆடல். தன்னை மீறிய மகனை தண்டிக்க விரும்பும் தாத்தாவிற்குள்ளிருக்கும் ஆணும், தன் பெண்ணே அவனை அழைத்து வந்து முன்நிறுத்துகையில் தனக்குள் வெட்கும் ஆணாக கனியும் தந்தையுமாக உள்ள தாத்தா. தன்னுள்ளே கொதிக்கும் நஞ்சால் மயங்கி சரிந்து மறைகிறார்.
தந்தையை இழந்த கசப்பை ஆணாக நின்று அத்தையின் மேல் கொட்டியதால் தானே எப்போதும் அவளிடமிருந்து மாமாவுக்கு அந்த கெடுசொற்கள். முதல்முறை காதல் கொண்ட அந்த கன்னியாக மாமாவை ஏற்றுகொள்ளும் அவள், பெண்ணாக அவ்வெறுப்பை நீலனிடம் ஏற்றிகொள்கிறாள் போலும். அதே சமயம் அன்னையாக பாலூட்ட முடியாது கண்ணீர் வடிக்கிறாள். அவள் அடிவாங்கி நீலாவுக்கு பாலூட்டும் நாளுக்கு பிறகு அம்மா செய்ததை போல பாலூற்றி வழிபடுவது தன் குற்றவுணர்வினால் போலும். அதற்கு முன் நீலாவுக்கு பாலுட்டாமல் இருப்பது தன் மகனை இழந்த அன்னையாக, அவளுள் வாழும் காதல் கன்னிக்கு கொடுக்கும் பதில் என நினைக்கிறேன். இறுதியாக அவள் தன் தவறை முழுமையாக ஏற்கையில் எந்த குழந்தையும் அன்பில் குறை வைப்பதில்லை என புரிந்து கொள்கையில் நீலனின் பாலை கண்டுகொள்கிறாள்.
அம்மாவுக்கும் அத்தைக்குமான உறவு அக்கை தங்கையாக, அதன் உள்ளோடும் அம்மையும் மகளுமாக பிணைப்பும் கண்ணறியா பிணக்கும் கொண்டுள்ளது. கதைசொல்லி அம்மாவை சந்திக்கையில் அவள் ஆசுவாசமடைவது நமக்கு ஒரு மகன் உள்ளான் என்பதால் போலும். அடுத்த நாளில் இருந்து அம்மா மீண்டும் பாலூற்றுவது ஏதோ ஒரு வகையில் தானும் நீலனின் இறப்புக்கு காரணம் என நினைப்பதாலா? அத்தை அம்மாவை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லும் உளநிலைக்கு செல்வது தான் அம்மா போர் போட சொல்லுவதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். அவள் ஆழம் அறிகிறது அது வழியென்று. ஆனால் எல்லோர் மனமும் மேல்நிலையில் அது நோக்கி அச்சமும் கசப்பும் கொண்டுள்ளதே அந்த பதினைந்து நிமிட கெடு நாற்றம். நீலாவின் கண்ணீர் பலவருட துன்பமொன்று நீங்குவதன் வெளிப்பாடென நினைக்கிறேன்.
இத்தனைக்கும் பிறகும் அந்த உறவுகளின் ஊடுபாவுகளை எவராலாவது முற்றாக வகுத்துவிட முடியுமென்று தோன்றவில்லை.
அன்புடன்
சக்திவேல்